செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!
கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்! – செம்பொன்னார்!
அம்மையப்பன் தாள்போற்றும் அன்புடையர்! பாட்டரசர்
உம்பர் உவக்கும் உயிர்!
தொல்காப் பியர்கழகம் தோற்றிய நற்கவிஞர்!
ஒல்காப் புகழ்கண்ட உத்தமர்! – நல்லோர்கள்
செல்வழியே சென்றிடுவார்! செந்தமிழ்ப் பாட்டரசர்
சொல்லென்றும் வெல்லும் சுடர்ந்து!
செந்தமிழர் வாழ்வு செழித்தோங்கும்! சீர்மிகு
செந்தமிழ்க் காப்பியங்கள் செம்மையுறும்! – விந்தையெழில்
நன்மணியாய் மின்னும் வனப்பூறும்! பாட்டரசர்
பன்னூற்கள் கூட்டும் பயன்!
தொன்னூல் மரபியலில் தோய்ந்திட்டார்! நற்றமிழை
நன்னூல் வழியே நவில்கிறார்! – மின்னிடும்
இன்னூல் வடிக்கின்றார்! ஈடிலாப் பாட்டரசர்
பொன்னூல் அளிக்கும் புகழ்!
வண்ணமயில் கூத்தாடும் வான்மழை மண்சேரும்!
எண்ணமெழில் பூத்தாடும்! இன்னமுதாய்ப் – பண்ணூறும்
கண்ணன் கழற்போற்றிக் கண்குளிரும் பாட்டரசர்
மண்ணலம் காப்பார் மகிழ்ந்து!
இலக்கண நல்விருதை ஏற்றவராம்! நன்னூல்
இலக்கியம் வாழ்வியலாய் ஈந்தார்! – நிலைத்திடும்
மண்ணின் மொழிப்போர் மறவராம்! பாட்டரசர்
கண்ணின் ஒளியே கவி!
நற்றமிழ்ப் பாவலராம்! நம்மொழித் தொண்டராம்!
வற்றா வளர்தமிழின் மாகடலாம்! – பற்றுடனே
பொற்றமிழ் தேரோட்டிப் போற்றுகின்ற பாட்டரசர்
கற்றவர் போற்றும் கவி!
பொன்னாளாம்! பூக்கும் புகழ்நாளாம்! எண்ணம்போல்
மின்னும் பிறந்தநாள் மேன்மையுறும்! – அன்பூறும்
முத்தமிழால் வாழ்த்துகின்றேன் முன்னவரை! பாட்டரசர்
எத்திசையும் காண்க எழில்!
சீரோங்கும் வைணவச் செல்வர் குலம்வாழி!
பாரோங்கும் பைந்தமிழ்ப் பா..வாழி! – நீரோடும்
நட்பாலே நன்னெய்தல் நாடன் நலமிசைத்தேன்!
பட்டாகப் பாக்கள் படைத்து!
பாவலர் நெய்தல் நாடன்
01/07/2019