குளிரும்.. மழையும் கைகோர்த்து..
அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன..
மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது..
பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்.. அவர் கணவருடன் பணிபுரியும் இளைஞரொருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு வெளியேறினார்..
தயாராகயிருந்த பால் பொடியில் போட்ட தேனீர் கோப்பையை தந்தாள்..
அவளும் பருகிய படி தொடங்கினாள்..
வந்துட்டுப்போனானே.. அவன் யாரு தெரியுமாயென்றாள்..
தெரியாதே யாருன்னு கேட்டேன்..
எங்கவூர் வெட்டியான் மவன்.. ஊருக்குள்ள உள்ளயே சேர்க்க மாட்டோம்.. இங்க பாரு யோகத்த.. ஊர்க்காரனுங்க கிட்ட கூட சொல்லிடக் கூடாது.. சண்டைக்கு வருவாங்க.. இவனல்லாம் கல்யாணத்துக்கு பத்ரிகை வெச்சுட்டுப் போறான்..
சொல்லிவிட்டு.. அந்த இளைஞர் குடித்த தேனீர் டம்ளரை தண்ணிரைக் கொட்டி கழுவி எடுத்து வைத்தாள்..
பத்து நிமிடம் முன்பு வந்து சென்ற இளைஞனை ஞாபகப்படுத்தி பார்த்தேன்.. நல்ல படிப்பு.. நல்ல வேலை.. விமானப் படை வீரர் உடையில் மிடுக்குடன் நுனி நாக்கில் ஆங்கிலமும்.. அச்சா அச்சாயென நடுவில் ஹிந்தியும் மரியாதையை கூட்டிய வேளையில்..
இப்படியொரு விமர்சனத்தை எதிர்பார்க்க வில்லை.. புறந்தள்ளப்பட்ட வகுப்பினர் முன்னேறிச் சென்றாலும்.. முன்னேறிய மனிதர்களின் மன நிலையின்னும் முழுவதுமாக மாறவில்லை..
இனி வரும் காலத்தில் மாறுமா..??
அதுவும் ஒரு நாள் மாறுமென்ற நம்பிக்கையில் இதையும் எனது டைரிக்குறிப்பில் எழுதி வைத்தேன்..