தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா
காருக்குக் குறுக்கே வந்தவனை
வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு
அன்று மௌன விரதம் இருப்பது
நினைவு வந்தது
இரண்டாவது குலாப்ஜாமூன்
தொண்டைக்குள் இறங்கும்போது
அன்று உபவாச தீட்சை இருப்பது
நினைவு வந்தது
ஹாய்…குட் மார்னிங்.. மலர்ந்து சிரித்து
சக உத்யோகியை கை குலுக்கிய மறு
நிமிடம் அவள் மீது கோபத்தில்
நேற்று முதல் பேசாமல் இருப்பது
நினைவு வந்தது
நான் நோற்கும் விரதமெல்லாம்
ஒரு வாழ்நாள் தாமதமாவது ஏனோ
தோழி கேட்டாள்
விரதத்தில் ஏதோ குற்றம் போல
எங்களுக்கு ஏதாவது தானம் கொடு சரியாகும்
ஆம்… கொடுக்கலாம்தான்
ஆனால்
மௌன விரதத்தில் எதை தானம் கொடுப்பது
ஒரு சில நிசப்த மணித் துளிகள் தவிர!