அஞ்சலி
ஆயுதப்பு ரட்சியெலாம் அன்றும் இன்றும்
அகிலத்தில் மாற்றங்கள் செய்ய வில்லை,
காகிதப்பு ரட்சியால்தான் கணக்கிலா மாற்றம்
காண்கின்றோம் கண்கூடாய் குருதி யின்றி,
ஓய்வறியா உழைப்பாளி காகிதம் மனோவோ
உழைத்தபடி உயிர்விட்டார் என்றால் உண்மை
வாய்ப்பேச தான்முடியும் வாய்ப்போ இல்லை
வலுவிழந்த உறுப்புகளால் வலிந்து செய்ய.
மரபணுவின் கோளாறால் மாற்றம் வந்து
மனோபாரதி உடலுக்கோ மருந்து மின்றி
உறவென்றி ருக்கின்ற உறுப்புக ளெல்லாம்
உணர்வற்றுப் போனதாலே உறக்க மில்லை,
சிரமங்கள் பலவந்து பந்தி வைக்க
சீக்கிரமே நோயுற்று சிந்தை நொந்தார்,
வரவிருக்கும் நாட்களையெலாம் வாழ்ந்து தீர
வறுமையுடன் போராடி வாழ லானார்.
ஊனமுற்றார் உடலாலே என்று நாடு
உணர்த்துகின்ற போதினிலும் மனதில் என்றும்
ஊனமில்லா உழைப்பாளி அவர்போல் யாரும்
உலகத்தில் இலையென்று சொல்வோம் நாமே!
மானமிகு மனோபாரதி மறைய வில்லை
மகத்தான நூல்கள்வழி வாழு கின்றார்,
கானக்குயில் பாட்டாக அவரின் வாக்கு
காற்றோடு கலந்தபடி மூச்சால் பேசும்.
மாதங்கள் மூன்றினிலே மகிழத் தக்க
மகத்தான இருநூறு புத்த கங்கள்,
தோதாக முடித்துவிட்டு துயிலும் நீந்து
துணையான நட்புக்குத் துயரம் ஈந்தார்,
சேதாரம் அவருடலில் சிரமம் தந்தும்
சிறிதளவும் காட்டாது சினமும் கொள்ளார்,
ஆதாரம் இவர்வாழ்வை அகிலம் ஏற்கும்
அன்பர்நாம் கரங்குவிப்போம் நூலாய் வாழ்க!
2 Comments
செல்வகுமாரி · செப்டம்பர் 27, 2017 at 3 h 41 min
மனசு கனக்கிறது…
N.G.Retnam · அக்டோபர் 2, 2017 at 5 h 15 min
மனோவின் இழப்பு வுளரும் தமிழ் எழுத்தாளர்களுக்கு பேரிளப்பாகும். அவரைப் போல் ஒருவர் மீண்டும் பிறப்பது அரிது.
தமிழ் உள்ளவரை அவர் பெயர் வாழும்….!