மரத்தால் உயிர்வாழும் காலமாறி
        மாத்திரையால் வாழுகிற காலமாச்சே.
உரத்தால் விளைகின்ற பயிர்மாறி
        உருக்குலைந்த வயலாக உருவாச்சே.

உணவையே மருந்தாக உண்கையிலே
        உடலாயுள் கூடியது உண்மைதான்,
உணவுக்குப் பதிலாக உயிரழிக்க
        உருவாக்கும் மருந்திங்கு வந்தாச்சே.

மன்பதையின் ஆயுளிங்குக் கூடக்கூட
        மருந்துகளின் எண்ணிக்கைக் கூடுதலாம்,
மனிதனாயுள் கூடுதற்கு வழியுமின்றி
        மருத்துவத்தின் செலவுதான் கூடிப்போச்சே.

உண்கின்ற உணவுகளின் மதிப்பைவிட
        உயர்மருந்தின் விலையதுவோ அதிகமாச்சே,
அண்மையிலே ஆராய்ச்சி செய்ததிலே
        அதுதானே உண்மையென தெளிவுமாச்சே.

வருங்காலம் மருந்தின்றி வாழ்வதற்கு
        வழியதனைக் காண்பதற்கு வேண்டுகிறேன்,
அரிதான மனிதவாழ்வு நிலைத்திருக்க
        அறிவியலை நாமிங்குக் பேணவேண்டும்.

உயிர்குடிக்கும் மாத்திரையைத் தூரவீசி
        உடல்நலமாய் வாழ்வதற்கு வழிகாண்போம்,
பயிர்வாழ மழைநீரும் வெப்பம்போல்
        பயன்கொடுக்கும் முறைதனையே கண்டுவாழ்வோம்.