இரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன. கரைந்து போகும் பனித்துளியின் காதோரம் சேதி சொல்லி காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. சில்லென்று மேனியை மோதிக் கடக்கின்ற குளிர்ந்த காற்றின் ஈரப்பதனையும் காலைப் பொழுதின் ரம்மியமான சூழலையும் ரசிக்க முடியாதவளாய் சுற்றி வளைந்து செல்கின்ற மஸ்கெலிய மலைச் சாலையோரம் விறு விறுவென வேகமாய் நடந்து கொண்டிருந்தாள்.

பதின்ம வயதைத் தாண்டாத அந்தச் சிறுமி. அவளது அம்மம்மா நேற்று வாங்கித்தந்திருந்த புதிய சப்பாத்து கால்களைக் கடித்தது. எனினும் நேற்றையை விட இன்று நடையில் வேகம் கூடியிருந்தது.

தோளில் சுமந்திருக்கின்ற புத்தகப்பையின் ஓரமாய் கிழிந்திருக்கின்ற துவாரத்தின் வழியே கீழே விழுந்த பேனாவை குனிந்து எடுத்தவளின் காதுகளில் தூரத்தில் கேட்ட பாடசாலை மணி படார் என்று அறைய நடையினை இன்னும் வேகப்படுத்தினாள்..

வாற கிழம உனக்கு எப்பிடி எண்டாலும் புது புத்தகப்பை வாங்கித்தாறன்…” காலையில் பாடசாலைக்கு புறப்படும் போது அம்மம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவசியம் இந்த புத்தகப் பைய வாங்கோணுமா?.. வாங்கினா நலம் தான் ஆனா… சா.. வேணாம் வேணாம் இந்தமுற வேணாம்… கொஞ்ச நாளைக்குப்பிறகு வாங்குவம்.” “அம்மம்மா பாவம்.. அவோக்கு மருந்து வாங்காம எனக்கு வேற சப்பாத்து வாங்கித் தந்தவா புத்தகப்பைய பிறகு வாங்குவம்.” தனக்குத்தானே பல கேள்விகளையும் பதில்களையும் மாறி மாறிக் கொடுத்து ஓரங்க நாடகம் நடத்தியபடி நடந்து கொண்டிருந்தாள்.

சாமானிய மக்களின் வாழ்க்கையில் நிறைவேற்றப்பட வேண்டிய எத்தனையோ தேவைகள் இப்படித்தான் பல மனப்போராட்டங்களைச் சுமந்தபின்பே நத்தை வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. இன்னும் சில கற்பனைகளோடு கரைந்து வாழ்விழக்கின்றன.

இங்கும் அப்படித்தான் பாடசாலையை நோக்கிய அவளது பயணம் நேற்றையை விட இன்று வேகமாக இருந்தாலும், புதிய சப்பாத்தை அணிந்திருக்கின்ற போது மனதில் மகிழ்ச்சி தோன்ற வில்லை. பல சங்கடங்களும் நெருடலான மனதிற்கு உவப்பற்ற உணர்வுமே ஏற்பட்டுக்கொண்டிருந்தது.

நினைவு தெரிந்த சிறுபிள்ளைப் பிராயத்தில் இருந்து அவள் பார்த்து கேட்டு வாழ்ந்து பழகிய பல நிகழ்வுகள், இப்படியான மனோநிலையை ஏற்படுத்தியிருக்கலாம். நாட்டின் முக்கிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச் செய்யும் மலையக மக்களின் வாழ்க்கை முறை என்பது ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களை விட மாறுபட்டதாகவே இருந்து வருகின்றது.

புறக்கணித்தலின் பல வடிவங்களும் சுரண்டல்களும் இங்கே பல தளங்களில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. கொட்டும் மழையிலும் ஈரலிப்பிலும் தேகத்தைக் குத்தி விரியும் குளிரிலும் சதா தேயிலை மரங்களோடு போராடி தேயிலைக் கொழுந்துகளை சுமந்து வாழ்வதென்பது சுற்றுலாப் பயணிகளின் கண்களிற்கு உவப்பானதாக இருக்கலாம்.

ஆனால், உவர்கசியும் கண்களில் விரியும் ஓவ்வொரு தோட்டத் தொழிலாளியினதும் தேவைகள் காலத்தால் மட்டுப்படுத்தப் பட்டவை என்பது வெற்றுக் கண்களிற்குப் புலப்படாத ரகசியம். அருகில் மருத்துவ வசதிகூட இல்லாத தோட்டத்தின் லயத்து வீட்டில் பிரசவ வலி எற்பட்டு வைத்திய சாலைக்கு செல்லும் வழியில் தான் பிறந்த சமயத்தில் தன் தாய் இறந்திருக்கிறாள் என்ற சேதியினை அம்மம்மாவின் வாய்வழி கேட்டிருக்கிறாள்.

ஈரத்தில் கசிந்து சற்று அழிந்து போன புகைப்படத்தில் மங்கலாய் தெரிந்த அம்மாவை ஒரு முறை அவள் பார்த்திருக்கிறாள். எப்போதோ பார்த்த அந்த புகைப்படத்தை தவிர அவளது அனைத்து உறவுகளும் அம்மம்மாவே… வயது முதிர்ந்து முதுமையை எட்டிக்கொண்டிருக்கும் தனது அம்மம்மா நேற்று அயல் வீட்டு முத்தம்மாவிடம் புலம்பிக்கொண்டிருந்தது இவளிடம் பல கேள்விகளை உருவாக்கியிருந்தது.

மாறியும் மாறாத காய்ச்சலோடு கொழுந்து பறிக்கப் போகும் அம்மம்மா இருபது கிலோவிற்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டுமாம். காலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளையும் மீறி பறித்துச் சுமக்கின்ற கொழுந்துகளிற்கான கூலி வெறும் அறுநூறு ரூபாய் மட்டும்தான் சம்பளமா கொடுப்பாங்களாம்…

ஏன் இப்பிடி? இங்க மட்டுமா இப்பிடி?” “இலங்கைல எல்லாருக்குமே இப்பிடித்தான் சம்பளம் குடுப்பாங்களோ?” “அதில்லாம மாசம் மாசம் கட்சிக்கு எண்டு காசு குடுக்கோணுமாமே அதயும் சம்பளத்தில கழிப்பினமாமே.. என்ன இது? எதுக்கு இப்பிடி? “அம்மம்மாதான் எந்த கட்சியிலயும் இல்லயே.. அவ ஒரு கூட்டங்களுக்கும் போறதில்லயே பிறகு எதுக்கு இப்பிடி காசு கழிக்கினம்….” “பாவம் அவோக்கு மருந்து வாங்க காசு காணாது..” “அதுசரி காசு தான் கழிக்கினம் அதெதுக்கு இவய வச்சு வேலையை நிப்பாட்டி ஸ்ரைக் எல்லாம் பண்ணினம்? அப்பிடிச்செய்தா பாவம் அம்மம்மாக்கு தானே சம்பளம் வராது…” “என்ன இது…. ஏன் இப்பிடி?? “ ஓராயிரம் கேள்விகள் பதின்ம வயதை தாண்டாத அந்தச் சிறுமியின் மண்டையை குடைந்தது. அவளுக்கு விடை தெரியவில்லை.

நேற்று மாலை அம்மம்மாவுடன் தோட்டத்தில் கரட் புடுங்கியபடி நின்ற அவளையும் அம்மம்மாவையும் தோட்டத்தைப் பார்க்க வந்திருந்த வெள்ளைக்கார சுற்றுலாப் பயணி ஒருவர் “போட்டோ பிளீஸ்…” எனக் கேட்டார். “எனக்கு போட்டாதான் இப்ப இல்லாத குற….” முணு முணுத்தபடி தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்தபடி போட்டோவிற்கு நின்றாள் அம்மம்மா

எங்கட சனங்களுக்கு எப்பதான் விடிவு வரப்போகுதோ தெரியா…நீ படி அப்பதான் இது எல்லாத்தேம் வெல்லலாம்… படிப்பு மட்டும் தான் இப்ப எங்களுக்கு உதவும்.. இல்ல எண்டா என்ன மாதிரி நீயும் தேயிலகூடய தூக்கிக்கொண்டு இந்த குளிர்ல இப்பிடியேய….ம்…..ம்…..” நீண்ட பெருமூச்சை உதிர்த்தாள்….

சரி வா போவம்…என்ற படி அவளை அழைத்துச் சென்றாள். நேற்று நடந்த இந்த சம்பவங்கள் எல்லாம் சிறியவளின் மனதை சற்று கடினப் படுத்தியிருந்தன.

நடையின் வேகத்தை குறைத்து குனிந்து கால்களைப் பார்த்தாள். “அம்மம்மா வா…ங்கித்தந்த சப்பாத்து….” வார்த்தைகள் கனத்து வெளிவந்தன… குனிந்து சப்பாத்துக்களைக் கழட்டி கைகளில் எடுத்தாள்.

பாடசாலையை நோக்கி வேகமாக நடந்தாள். சாலைகளின் ஓரத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் வெளித்தெரியும் பாறைகள் கால்களை உரசியது. இருப்பினும் அந்தப்பிஞ்சு வேகமாய் நடந்தாள்.. ஸ்கூலுக்கு கிட்ட போய் போடுவம், அங்க தானே தேவ… அம்மம்மா பாவம்… இப்ப சப்பாத்து தேவேல்ல…

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »