1.
வளங்கள் பொங்குமா கடலிடை நிமிர்ந்து சிரிக்கிற நம்மட முத்து..
கமுகும், தெங்கும், ரப்பர், தேயிலை, மலையும், பள்ளத்தாக்கும்,
வான் முட்ட மரங்களும், காட்டாற்று வனப்பும்,
மணம் பரப்பும் சோலைகளும் நிறைந்ததெங்கட மண்ணு..
கோட்டைக்கொத்தளமுமகழியும், நீர்த்தேக்கங்கள் நிறைஞ்சு மிளிரும்,
ஓவியம் சிற்பங்களோட கொஞ்சிடுமழகு மனமுமயக்கிடும் கண்ணு..
2.
உயிரோட ஒறவாடும் மண்ணு மணத்த களவாட வந்து குதிச்சதந்த வெடிமருந்து வீச்சம்,
பெருஞ் சத்தத்தோட பொகைய ஊதி விடும் துப்பாக்கி சொண்டுகளும்,
பதைச்சுப் போகும்படி புதைஞ்சுசிரக் குடிச்சிடும் கண்ணிகளும்..
ரத்தக் கவுச்சே மூச்சிக் காத்திலத் தங்கிப் போன சோகம் ஆச்சே..
மேற்கல்வி முடக்கப்பட்டு, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு..
உள்நாட்டு அகதியாய் காட்டுக்குள்ளே மறைஞ்சு தொலைஞ்சவனானனன்..
3.
எளந்தாரிப் புள்ளைக இடிவுழுந்தாப்புலலா..
இஞ்சாருங்கோ..! வெளிக்கிட்டுப் போச்சொல்லுங்கோ..கதைச்சுப் போட்டு..
பொளக்கடையில கவுந்தழுதா அம்மை.. கரிப் பானைக்கு
வாயிருந்தா, கதறியழுவுமவ கண்ணீர காணுமது..
விறாந்தையிலே ஆடும் கதிரையிலே அசையாம ஒறஞ்சே அப்பா..
காம்ராவிலே அழுதழுதே கரைஞ்சே மாஞ்சு போனாளென் அக்கா..
4.
ஜோலிக்கும் வழியத்து.. கச்சைக்கும் சல்லியத்து..
அங்கால பொறநாட்டுக்கோடி பொழைக்க ஓர்மையோட..
காலமே விடியுமுன்னே கண்ணு தொறந்திருந்தும் மனச அடைச்சிகிட்டு
அம்மான் மகள் மேலென் ஆசையெல்லாம் மறச்சுகிட்டே..
கப்பலேறி இருந்து கிட்டேன், காடுகரை மறைஞ்சு போயும்..
கருத்தில மறையாம நினைவில் தாண்டவமா ஆடுதென் மண்ணு..
5.
ஏற்றமிறைக்கலியே.. ஏலோலோ கேக்கலியே..
கட்டுமரமேறலையே.. கடலோடித் திளைக்கலையே..
அக்கா சேலை கட்டி மனையமர்ந்தது பார்க்கலையே..
அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா பெரும்பயணம்
போனபோது தோள் தாங்க நானில்லையே..
என்னுசரம் வளந்த மகன் அப்பம்மா வாசம் அறியலியே..
6.
பச்ச மண்ணு மகளுக்கு வெத்திலை வாசம் தெரியலியே..
ஆப்பிள் செர்ரி மேப்பிள் பிளம் பீச் எல்லாம் முந்திரியாய் சுவைக்கலியே..
ஓட்ஸ்ஸும் கோதுமை பார்லியும் அரிசிக்கு ஈடாய் இன்னும் மாறலியே..
ஓக் பைன் சைப்ரஸ் பாதை தென்னந்தோப்பு போல அழகில்லையே..
ரோசாப்பூ அழகெல்லாம் கார்த்திகைப்பூ முன் நிற்கலியே..
முதல் மழை வாசம் நுரையீரல் சேகரித்தது மீளலியே..
7.
காதலும், வீரமும், கலாச்சார சாரமும், பண்பாடு பாரம்பரியமும்..
தமிழவளின் செறிவழகும் நிறைமதியாய் பிரகாசிக்கும் என்மண்..
மனதில் அவியாத கங்காய் மண் வாசம் சுமந்து வெளிநாட்டில்..
பேச்சோடு மட்டுமே நின்று போன மண்ணின் மாண்புகளை..
மக்களாவது அனுபவிக்கும் ஆர்வம் உந்திட ஏக்கமாய்..
வயறு வளர்க்க.. புலம் பெயர்ந்த பயிராய் நான்..
8.
அகத்தே அணுக்கமாய் புறத்தே வெகு தூரமாய் நிற்கின்ற தாய்மடியே..!
வந்திறங்கி உறவாட.. கடலோர மணல் வெளியில் காலார நடைபயில..
என் தேச நேச வாசம் உறிஞ்சி காத்திடும் இளநீர் சுவைக்க..
தேசச் சுவை நிறைந்த தேயிலை சரிவுகளூடே..
எந்தையும் என் மகனுடனே கதைத்து நடை போட ..என்றைக்கு அனுமதி தருவாயடி..?
மண்ணுக்குள் அமிழும் நேரமாவது உன்னை நுகருமா என் நாசி..?