மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே! விழித்தே னேநான்.
விரைந்தேனே உனையுநறுந் தேனே யாக்கக்
குலைத்தேனே உனையழிக்குந் திட்டம். : நல்ல
குலைத்தேனே! எழுந்தேனே உனைவ ளர்க்க!
அலைந்தேனே செந்தேனே! உனையு யர்த்த
அழுதேனே துடித்தேனே உன்நி லைக்கே
உலைந்தேனே உனைத்தின்று வாழுங் கூட்டம்
உவகைத்தே னேயுண்ணக் கண்டே நானும்
குலைந்தேனே! தமிழகத்தில் உலகோர் போற்றும்
கொள்கைத்தே னேயில்லார் ஏட்டில் பாட்டில்
கலைந்தேனே எனநீயும் வருந்தல் கண்டே
கனன்றேனே! எடுத்தேனே அறிவு வாளை!
இருந்தேனே! உனையுலகம் விரும்பச் செய்ய
இருந்தேனே! தமிழர்களின் மடநோய் நீக்க
வருந்தேனே! உனையிகழ்வார் தமைய ழிக்க
வருந்தேனே! இடர்நீக்கி உனைக்கா வாமல்
அருந்தேனே நல்லுணவே! கிடைத்தற் கிங்கே
அருந்தேனே! உண்ணவுண்ண நற்சு வையைத்
தருந்தேனே! நல்லுடலை உயிரைக் காக்கும்
தமிழ்த்தேனே! உன்னிடத்தென் உயிர்வைத் தேனே!
★
– புலவர் புங்கனேரியார் –
அவர்களின் “புதுமைச் சுவடுகள் ” நூலிலிருந்து.
நன்றி : இப்பாடலை எடுத்தாள ஒப்புதல் அளித்த புலவரின் துணைவியார்
அ.தமிழரசி அப்பாவு அவர்களுக்கு.
மற்றும்,
பாவேந்தர் பைந்தமிழ் மன்றம்
காட்டுமன்னார்கோயில்.
3 Comments
பாவலர் மா.வரதராசன் · நவம்பர் 16, 2016 at 14 h 51 min
மிக்க மகிழ்ச்சியும். நன்றியும் ஐயா. தங்கள் தமிழ்ப்பணி வாழ்க.
கிரிட்டிணமூர்த்தி நந்தகோபால் · நவம்பர் 16, 2016 at 22 h 47 min
படித்தேன் கவித்தேன் படித்தேன்! மதித்தேன்
குடித்தேன்கு ழைத்தேன்! குடத்தேன்! – வடித்தேன்!
சிலிர்த்தேன்! சுவைத்தேன்! செழித்தேன்! வளர்ந்தேன்!
மிளிர்ந்தேன்! ஒளிர்ந்தேன்! வியந்து!
சீனிவாசகோபாலன் மகாதேவன் · நவம்பர் 16, 2016 at 22 h 51 min
….
அறுசீர் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
** இனியதோர் வாழ்க்கை : (கூவிளம் புளிமா தேமா ) **
தாய்த்தமிழ் மொழியும் தேனே !
……தந்தையின் வழிவந் தேனே !
தாய்மொழி யுமுணர்ந் தேனே !
……தாள்வணங் கியெழுந் தேனே !
வாய்ப்புநல் லதுணர்ந் தேனே,
……வந்தநல் மனைபார்த் தேனே !
வாய்த்ததெ னநினைத் தேனே !
……வாழ்த்தெழு திமகிழ்ந் தேனே !
**
மனை — குடும்பம், மனைவி
தாய்மொழி — தாய் கற்றுத்தந்த / சொல்லிக்கொடுத்த கருத்துக்கள்.