கற கறக்கும் லுமாலா சைக்கிள் ஆட்களை கண்டதும் முகமன் கூறி புன்னகையோடு ஒலிக்கும் இரண்டு மணிச் சத்தம், ஹம்ஸா பாய் என எல்லோர் வாயிலும் பழக்கப்பட்ட பெயர், நாட்டாமை வேலை செய்து மனைவியையும் நான்கு குமருப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் அவரை எப்படித்தான் செலவுகளை சமாளிக்கிறீங்க என்று கேட்டால், “எல்லாம் என்ட கைலயா இருக்கு??? படச்சவனுக்கு தெரியாதா யார எப்படி கவனிக்கனும்னு, அவன் பாத்துக்குவான்” என்று புன்னகை பூத்தபடியே சொல்லும் ஹம்ஸா பாய் உண்மையிலேயே படைத்தவன் மீது அலாதி நம்பிக்கை கொண்டவர் தான். ஐ வேளைத் தொழுகையை கூட்டாகத் தொழுவதிலும் அதிகாலைத் தொழுகைக்கும் ஏனைய தொழுகைக்கும் வீட்டார்களை தயார்படுத்துவதிலும் அவர் தவறுவதில்லை.
நாட்டாமைத் தொழிலுக்காய் அவர் பயன்படுத்தும் தள்ளு வண்டி, ஓட்டைகளுக்கு பெட்ச் போட்டாற் போல் ஆங்காங்கே கலர் கலராய் உரப் பைகள் சொருகப்பட்ட குட்டி வீடு, அவரைச் சுமக்கும் லுமாலா சைக்கிள். இதற்குள் தான் ஹம்ஸா பாயின் வாழ்க்கை வட்டமும் சுழன்றுகொண்டிருந்தது.

சீதனம் வாங்காத மாப்பிள்ளை பார்த்துப் பார்த்து தேடிக் களைத்துப் போனார். இறுதியாய் அவரது மூத்த மகளை மணம் முடிக்க வந்த ஒரு வரனும் எதுவும் தேவையில்லை. பெண் மட்டும் போதும் என வந்ததும், படைத்தவனைப் புகழ்ந்து மணமுடித்து வைத்தார். திருமணமாகி சில காலங்களில் தான் மூத்த மருமகனின் சுய ரூபம் வெளிப்படத் தொடங்கியது.

பார்வைக்கு பக்குவமான பையன் தான். ஆனாலென்ன, போதைப் பாவனையில் அவன் அவனையே இழந்திருந்தான். ஆம் அவனுக்கு ஆண்மைக் குறைபாடு.தான் நேசிக்கும் போதையால் ஒரு பேதையின் வாழ்வு சின்னாபின்னமாக்கப்படுவதைப்பற்றி சிந்திக்கும் மனப்பக்குவத்தில் கூட அவன் இருக்கவில்லை. அவ்வப்போது குடித்துவிட்டு வந்து வீட்டில் சன்டை செய்வதும் கேவலமான வார்த்தைகளால் ஏசுவதுமென, நகரத் தொடங்கிய வாழ்க்கையில் மூத்த மகள் சபீனாவுக்கு பிடிப்பில்லாமல் போனது. கணவன் இன்று திருந்துவான் நாளை திருந்துவான் எனும் அவனது நம்பிக்கை கை தவறி விழுந்த கோப்பை போல் சிதறிப் போகவே அவளும் தந்தையிடம் விடயத்தை மெல்ல எத்தி வைத்தாள். ஹம்ஸா பாய் சமூகத்தில் செல்வாக்கான மனிதர் அவரது பிள்ளைக்கு இப்படி ஒரு கேவலான வாழ்க்கை அமையுமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

விடயத்தை பெரிசுபடுத்த விரும்பாத ஹம்ஸா பாய், தன் மகளின் நிம்மதிக்காக விவாகரத்துக் கோரி வழக்கு தாக்கல் செய்துவிட்டு மகளையும் கையோடு வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துவிட்டார். மனம் முழுக்க கனம், முதுகு முழுக்க சுமை என ஹம்ஸா பாயின் வாழ்க்கை தள்ளாட முனைந்த போதும் எல்லாம் அவரது இறை நம்பிக்கை எனும் ஆணி வேரால் தான் அசையாமல் நகர்கிறது எனச் சொல்லிக்கொள்வதில் ஹம்ஸா பாய் பெருமிதமடைந்தார்.

பொழுதுகள் புலர்ந்தன. நிமிடங்கள் கரைந்து வருடங்கள் மலர்ந்தன. ஹம்ஸா பாயின் வாழ்க்கைப் பாதை குன்றும் குழியுமாய் பழையபடியே நகரவும் தொடங்கிற்று. புன்னகைக்குக் குறைவில்லாதவரின் வயதுகள் தாண்ட, அவரது வேகமும் குறையத் தொடங்கியது. தன் இறுதி மூச்சுக்கு முன் தன் ஆசையை ஒரு முறை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் எனும் மன ஆதங்கம் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. பத்து வருடங்களுக்கும் மேலாக தான் சேமித்து வந்த பணப் பையை திறந்து பார்த்துக் கொண்டார். கூலி வேலை செய்கிற ஒருவர் இப்படியெல்லாம் ஆசைப்படலாமா? அந்த சேமிப்பு கை கொடுக்குமா? கண்ட கனவுகள் கேட்ட, துஆக்கள் கொண்ட ஆசைகள் எல்லாம் பூர்த்தியாகி விட வேண்டும் என திரும்பத் திரும்ப பிரார்த்திக்கத் தொடங்கினார். அழுது மன்றாடினார். படைத்தவன் கொடுப்பதும் எடுப்பதும் எப்போதுமே நம்மை சோதிப்பதற்காகத் தான் எனும் உண்மையை ஹம்ஸா பாய் மீண்டும் புரிந்துகொள்ள அவ்வளவு காலம் ஆகவில்லை.

இம்முறை எப்படியாவது ஹஜ் கடமைகளை முடித்து விட வேண்டுமெனும் போக்கில் கடுமையாக உழைக்கத் தொடங்கினார் ஹம்ஸா பாய். ஓய்வு நேரத்தை குறைத்து, உடலை வருத்தி சில பல புதிய கூலி வேலைகளுக்குள்ளும் தன்னை புகுத்திக்கொண்டார். படைத்தவனின் இல்லத்தின் மகிமையுணர்ந்தவர்கள், படைத்தவன் மீது பேரன்பு வைத்தவர்கள் தங்களை விட தங்கள் இலக்கிலேயே அதிகம் கரிசனையாயிருப்பார்கள் என்பதற்கு ஹம்ஸா பாயும் உதாரணமாகிப் போனார். காலம் நெருங்க நெருங்க அவரின் சேமிப்பும் கொஞ்சம் வேகமாகவே அதிகரித்தது. இவ்வருடம் எப்படியும் போய்விடலாம் எனும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவருள் உதிக்க ஆரம்பித்தது.

நாட்களை கணக்கிட்டு பயணச் செலவுகளைப் பற்றிய தெளிவுகளைப் பெற பயண முகவர் ஒருவரைச் சந்திக்கச் சென்றார். ஹம்ஸா பாய்க்கு பழக்கமானவர் தான். ஹம்ஸா பாயின் ஹஜ் பயண ஆசையைக் கேட்டு அவரின் உழைப்பையும் கேட்டு உள்ளுக்குள் அழுதேவிட்டார் பயண முகவர்.

“ஹம்ஸா பாய் உங்கள பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு, படச்சவனுக்காக உங்க உடல வருத்தி இவ்ளோ பாடு பட்டிருக்கிங்களே, நேரத்தோடயே உங்க ஆசைய பத்தி சொல்லி இருந்தா ஏதாவது நான் உதவி செஞ்சிருப்பேனே” என வருத்தப்பட்டார்.

“அப்படி இல்ல ஹாஜி என்ட அல்லாஹ்ட வீட்ட பாக்க கையேந்தி மனுசங்க கிட்ட நிக்க எனக்கு மனசு வரல. எப்படியாச்சும் நான் போறதுக்கு வழிய அவன் காட்டுவான். அவன் தந்த உடம்ப அவனுக்காகவே வருத்திக்கிறது ஒன்னும் எனக்கு பெரிசா தெரியல” எனக் கூறி விட்டு கண் வழித்த இரு சொட்டுக் கண்ணீரை தோள் துண்டால் துடைத்துக்கொண்டார்.

அவரின் தோளை தட்டி விட்டு “அல்லாஹ்ட நாட்டம் கண்டிப்பா நீங்க இந்த முற ஹஜ்ஜுக்கு போவனும் னு நானும் ஆசப்படுறேன். என்னாலான உதவிய கண்டிப்பா செய்றேன். நீங்க உங்க உடம்ப பாத்துக்கோங்க. ஹஜ்ஜ தெம்பா செய்யனுமில்லையா? கொஞ்சம் வேலைகள குறச்சு தயாரா இருங்க” என புன்னகையை உதிர்த்துவிட்டு வழியனுப்பி வைத்தார்.

ஹம்ஸா பாய்க்கு தலைகால் புரியவில்லை “அல்லாஹ் அவன்ட அருள காட்டப் போறான் நம்ம பிரார்த்தன வீண் போகல” என நினைத்துக்கொண்டவர் இனிப்புகளோடும், உணவுப் பண்டங்களோடும் வீட்டை அடைந்தார்.

படைத்தவன் கருனை அவரின் ஆசை நிறைவேறும் நாளும் நல்ல செய்தியாகவே வந்து சேர்ந்தது.

ஹஜ் பயணங்களுக்காக மக்காவிலிருக்கும் சில நல்லுள்ளம் கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து கஷ்டப்படும் ஏழைகள் சிலருக்கு ஹஜ் பயணம் செல்வதற்கான உதவிகளை வழங்குவது வழக்கம். ஹம்ஸா பாயின் நிலையுணர்ந்த பயண முகவர் அந்த வாய்ப்பை ஹம்ஸா பாய்க்கே கொடுத்திருப்பதாகவும் வீடு தேடி வந்து சொன்னார். “இங்க பாருங்க பாய் இது அல்லாஹ்வோட கருணை இத மனுசங்க தர்ரதா நெனக்காம அல்லாஹ் உங்களுக்கு எங்க மூலமா தந்த வாய்ப்பா ஏத்துக்கோங்க” என்றார்.

அல்லாவோட இல்லத்த பாத்த போதும் னு வருசக் கணக்கா ஏங்கிக் கெடக்கேன் ஹாஜி. நீங்க எனக்கு செஞ்சது ரொம்பப் பெரிய உதவி” என கட்டித் தழுவி கண்ணீரை சொரித்தார் “அதான் உங்க கனவு நிஜமாகப் போகுதில்லையா? இன்னும் ஒரு மாசம் இருக்கு பயணத்துக்கு. போற வாற செலவெல்லாம் எங்களோடது, நீங்க வந்தா மட்டும் போதும்” எனக் கூறிக்கொண்டே விடைபெற்றார் பயண முகவர்.

பயண முகவர் படலையை திறந்து வெளில போக முன்னமே வீட்டுக்குள் ஓடிப் போன ஹம்ஸா பாய் உழு செய்துகொண்டு இரண்டு ரக்காத் தொழுதுவிட்டு கையேந்தத் தொடங்கினார். அழுதழுது படைத்தவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்தித்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் தன் வீட்டுக் கடமைகளையும் தன் பயண வேலைகளையும் செய்யவென கிழம்பினார் ஹம்ஸா பாய்.

லுமாலா சைக்கிள் அன்று அவருக்கு விமானத்தைப் போல் காட்சிகொடுத்தது சிட்டைப் போல் பறக்கலானார். அன்று அவருடைய சைக்கிள் மணி சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்க முடிந்தது. “என்ன பாய் ஏதும் விஷேசங்களா?” என ஆங்காங்கே எழுந்த குரல்களுக்கு புன்னகையாலேயே “ம்ம்” என பதில் கொடுத்துவிட்டு தன் வேலைகளை சுறுசுறுப்புடன் செய்யத் தொடங்கினார்.

நாட்களும் நெருங்கியது ஹம்ஸா பாயின் பதற்றமும் அதிகரித்தது. தன் வாழாவெட்டி மகளும் மூன்று குமர் பிள்ளைகளும் கண் முன் வந்து விட்டு போயினர். “திருமணம் என்ன கடையில் வாங்கும் பொருளா நினைத்ததும் வாங்கிட. வரதட்சனைக்கே ஆளை விற்க நேர்ந்துவிடுகிறது. இப்போதெல்லாம் பணக்காரர்கள் வரதட்சனை கேட்பதில்லை. பெண் வீட்டார் கொடுத்தே பழகியிருக்கிறார்கள். மார்க்கப்பற்றுள்ள இளைஞர்களை தேடுவதே கடினமாகிப் போனது, அவர்களாவது வரதட்சனை இல்லாமல் முடிப்பார்களா என்ன”
ஹம்ஸா பாயின் பிள்ளைகளுக்கு என்ன குறை? அழகில்லையா மார்க்கமில்லையா? என எண்ணிய அவருக்கு பணம் மட்டும் தான் இல்லாமலிருக்கிறது; என அவரது மனம் விடை சொல்லிற்று. நல்லவங்களுக்கு படைச்சவன் நல்லதையே நாடுவான் நம்ம ஹஜ் பயணத்த போல என நிம்மதியடைந்தார்.

பயணத்திற்கான நாளும் நெருங்கியது. ஒரு மாதத்திற்குத் தேவையான எல்லா பொருட்களும், பெருநாள் ஆடைகளையும் வீட்டிலுள்ளவர்களுக்கு முன்னமே வாங்கிக் கொடுத்துவிட்டு, அனைவரையும் கட்டித் தழுவி முத்தமிட்டு எல்லோருக்குமாக “நீங்கள் என் உயிரப் போலானவங்க, அல்லாஹ்வுக்கும் நபிக்கும் அடுத்ததா உங்களத் தான் நேசிக்குறேன். என் சக்திக்கு உட்பட்ட வகைல உங்கள இன்டைக்கு வரைக்கும் கவனிச்சிருக்கேன். இப்ப நான் போகப் போறதும் அல்லாஹ்ட பாதைல தான். அவன் வழியத் தேடி நான் போறேன் நமக்கொரு நல்ல வழிய கண்டிப்பா அவன் காட்டுவான்” எனச் சொல்லி முடிக்கும் போதே வீட்டார்களும் விம்மி விம்மி அழத் தொடங்கினார்கள்.

சிறிது நேரத்தில் தன்னை சுதாகரித்துக்கொண்ட ஹம்ஸா பாய், “சரிமா நான் போய் வாறன். அல்லாஹ்வ மறக்காதிங்க. அவன தொழுது கையேந்துங்க. வீட்டுல திருமறைய தினம் ஓதுங்க. நான் போனதும் கோல் பன்றன்” என்றுவிட்டு பயண முகவரின் வீட்டை நோக்கி நடந்தார் ஹம்ஸா பாய்.

புதுத் தெம்போடு பளிச்சிடும் புன்னகையைச் சுமந்து மனதில் பெரும் நிம்மதியடைந்தவராய் பயண முகவரின் காரியலயத்தை அடைந்தார். அவருடன் சேர்த்து இன்னும் 49 பேரளவில் இம்முறை அம் முகவர் ஊடாக பயணமாகவிருந்தனர். எல்லோரும் வந்து சேர்ந்ததும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பேரூந்தில் பயணமாகினர். எல்லோர் மனதிலும் இனம் புரியாத இன்பம் பரவிக் கிடந்தது. பேரூந்துக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர். பேரூந்து முழுதும் மகிழ்ச்சி ஆறு ஊற்றெடுக்கத் தொடங்கியது.

விமான நிலையத்தை அடைந்த ஹம்ஸா பாய் அதன் பிரம்மாண்டங்கள் கண்டு வியந்து போனார். படைப்பாளன் மாபெரும் கொடையாளன். உலகத்தில் அவன் படைத்த படைப்பினத்திற்காய் எதை எதையெல்லாமோ வசப்படுத்திக் கொடுத்திருக்கிறானே! நிலமும், நீரும், ஏன் வானத்தையும் கூட மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கும் படைப்பாளனுக்கு மனிதன் இன்னுமே நன்றி கெட்டவனாகத் தான் இருக்கிறான் என எண்ணியவருக்கு உள்ளம் பதை பதைத்தது. அல்லாஹ் மிகப் பெரியவன் என மொழிந்து அமைதியாகிக் கொண்டார்.

குடி வரவு குடியகழ்வு பரிசோதனைகளை முடித்துவிட்டு அனைவரும் விமானத்தை நோக்கி நடக்கலாயினர். லுமாலா சைக்கிளில் பறந்த ஹம்ஸா பாய்க்கு விமானத்தில் பறப்பது புதிய அனுபவத்தை கொடுத்தது.

தைக்காத வெள்ளை ஆடைகளோடும், வெள்ளையர் கறுப்பர் எனும் பாகுபாடில்லாமல் விமானம் முழுக்க தக்பீர் முழங்க விமானம் தரையை விட்டு கிளம்பியது. விமானம் உயர உயர பறக்கும் போது ஹம்ஸா பாய் தான் அல்லாஹ்விடம் நெருங்கிக் கொண்டிருப்பாதாகவே எண்ணிக் கொண்டார். ஹம்ஸா பாயின் பக்கத்து இருக்கையில் வாட்டசாட்டமான இளைஞன் அமர்ந்திருந்தான். ஹம்ஸா பாயின் புன்னகை அவனை வெகுவாகவே கவர்ந்திருந்தது. அவருடன் பேச்சுக் கொடுத்தான் சுவாரஷ்யம் நிறைந்த பேச்சில் அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் அவரது தொழில் பற்றியும் பல விடயங்களைப் பறிமாறிக்கொண்டார்கள். விமானமும் மக்கமா நகரத்தை நெருங்கியது.

ஹம்ஸா பாயின் வீட்டு நிலைமைகளை கேட்ட இளைஞனுக்கு தூக்கமே வரவில்லை. அல்லாஹ்வின் சோதனைகள் அவன் கண் முன் ஊசலாடின. படைத்தவன் தன் நேசத்துக்குரியவர்களையே அதிகம் சோதிக்கிறான். அந்த வகையில் ஹம்ஸா பாய் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவரல்லவா என நினைத்து மெய் சிலிர்த்தான். இளமைக்காலத்தை வீணும் விளையாட்டுமாய் கழிப்பவர்கள் வயது போன காலத்தில் படைத்தவனுக்கு நெருக்கமாவது என்பது பொய்யான பூசல் என்பதை ஹம்ஸா பாயின் அனுபவ வரிகள் அவ் இளைஞனுக்கு சொல்லிற்று.

விமானம் தரையிறங்கியது. எல்லோரும் உட்சாகமாக விமானத்திலிருந்து இறங்கி தம் விமான நிலைய கடமைகளை முடித்துவிட்டு தமக்கென ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறைகளை நோக்கி நடந்தனர்.

ஹஜ்ஜை நிறைவேற்ற உலகளாவிய முஸ்லிம்களே கூடி நிற்கும் மக்கமா நகரம் மக்கள் வெள்ளத்தில் கரைபுரண்டது. வந்து சேர்ந்த களைப்பில் கொஞ்சம் தூங்கலானார் ஹம்ஸா பாய். சிறிது தூங்கியிருப்பார். வீட்டுக்கு அழைப்பெடுத்து இன்னும் வந்த விஷயத்தை சொல்லாதது ஞாபகத்துக்கு வரவே… அவரோடு அறையில் கூட இருந்த இளைஞனிடம் “தம்பி இஸ்மாயில் கொஞ்சம் போன் கொடுக்குறியாப்பா, வீட்டுக்கு கோல் ஒன்னு பன்னிட்டுத் தாறன். வந்த விஷயத்த இன்னும் வீட்டுக்கு சொல்லல. வீட்ட எல்லாரும் பாத்துட்டு இருப்பாங்க” எனக் கேட்டதும், “என்ன ஹாஜி கேட்டுட்டு இருக்கிங்க. என்னட னா என்ன ஒங்கட னா எல்லாம் ஒன்னு தான். எடுத்து பேசுங்க” என்று அவன் சொன்னதும் பாய்க்கு புல்லரித்துப் போனது. ஹம்ஸா பாய் இனிமேல் ஹம்ஸா ஹாஜி எனவல்லவா அழைக்கப்படுவார். ஹம்ஸா ஹாஜி என மனசுக்குள் அவர் சொல்லிப் பார்க்கும் போது உள்ளுக்குள் ஒரு வித உணர்வு ஆட்கொண்டது. செல்போனில் வீட்டுக்கு அவசர அவசரமாய் அழைப்பை எடுத்து … வந்து சேர்ந்த விஷயத்தையும் பயண சுவாரஷ்யங்களையும் ஒன்று விடாமல் சொல்லித் தீர்த்தார். வீட்டிலுள்ளவர்களுக்கும் அலாதி சந்தோஷமும், நிம்மதியும் பிறந்தது.

துல்ஹஜ்ஜின் பிறையும் தென்பட்டு ஹஜ்ஜுக் கிரியைகள் ஆரம்பமாயின. நாடு விட்டு நாடு போன ஹம்ஸா பாய்க்கு உடற் பலவீனமும் லேசாய் வெளியே தெரியத் தொடங்கியது. உடலில் லேசான நடுக்கமும் இருந்தது. படைத்தவனை நாடி வந்த பின் உடல் வலியெல்லாம் பொருட்படுத்த முடியுமா? எப்படியும் ஹஜ்ஜை நல்ல படியாக பூர்த்தி செய்துவிட வேண்டுமெனும் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு கிரியைகளை ஆரம்பிக்கத் தொடங்கினார். ஒரே அறையில் ஒன்றாக இருந்த இளைஞன் இஸ்மாயில் ஹம்ஸா பாயின் உடல் பலவீனம் தெரிய வரவே அவனும் அவருடன் கூடவே தன் கிரியைகளை தொடரத் தொடங்கினான்.
இரண்டு நாள் மூன்று நாள் என ஹஜ் கிரியைகள் ஒருவாறு தொடர்ந்தார் பாய். அன்று அரபா தினம் அரபா மைதானத்து வெட்ட வெயிலில் ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் தரித்து நிற்க வேண்டும். கூட்டம் கூட்டமாக வெள்ளை ஆறு போல் அவ்விடமே காட்சி தந்தது. ஹம்ஸா பாய்க்கு உடல் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்கத் தொடங்கியது. பாலைவன வெயிலின் அகோரத்தை அவரால் தாங்க இயலவில்லை. எழுந்து நடக்க முடியாமல், ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டார் ஹம்ஸா பாய்.

இஸ்மாயிலிடம் “கொஞ்சம் தண்ணி கொண்டு வந்து என் தலையில் ஊத்தி நனச்சு விடுப்பா” என வேண்டிக் கொண்டார். இஸ்மாயிலும் தூரத்தே தெரிந்த நீர் வழங்கும் நிலையத்திற்கு சென்று நீர் போத்தல் ஒன்றைக் கொண்டு வந்தான். நீர் போத்தலோடு வந்தவனுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது, ஹம்ஸா பாய் அமர்ந்திருந்த இடத்தில் அவரைக் காணவில்லை. அவர் முகம் துடைப்பதற்காக வைத்திருந்த துண்டு மட்டும் அவர் அமர்ந்திருந்த இடத்தில் இஸ்மாயிலுக்காக காத்துக் கிடந்தது. ஹம்ஸா பாயின் பெயரை சத்தமிட்டு கூப்பிட்டு பார்த்தான். தக்பீர் முழக்கம் வானை எட்டும் சத்தத்தில் அது ஹம்ஸா பாய்க்கு எப்படிக் கேட்கப்போகிறது? இலட்சக்கணக்கான கூட்டத்துக்கு மத்தியில் ஹம்ஸா பாயை எங்கு போய் தேடுவேன் என வழி தெரியாமல் தலையில் கை வைத்தவனாய் அவ்விடத்திலேயே அமர்ந்தான் இளைஞன் இஸ்மாயில்.

இஸ்மாயிலுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது. ஹம்ஸா பாய் இந்தக் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டாரா? அவரால் சரியாக நடக்கக் கூட முடியவில்லையே… எப்படித்தான் போயிருப்பார்? என பலவாறு சிந்தித்தவன், பயண முகவரை தொடர்புகொண்டு விடயத்தை ஒருவாறு சொல்லி விட்டான். சில உறவுகளை நம் நெருக்கமில்லாதவர்களாக இருந்த போதும் அவர்களின் பிரிவு நம் மனதின் ஆழத்தில் சில வடுக்களை ஏற்படுத்தவே முனைகிறது என்பதை இஸ்மாயில் உணர்ந்துகொண்டான்.

பயண முகவர் அங்கிருந்த அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். பயண முகவர்கள் ஆள் அடையாளங்களை கேட்டுக்கொண்டு அவரை தேடும் பணியை தொடர்ந்தனர். குறித்த இடத்தில் மயங்கிக் கிடந்த ஒரு பெரியவரை சிகிச்சைக்காக கண்காணிப்பு அதிகாரிகள் தூக்கி வந்தது அறிவிக்கப்பட்டது.

தூக்கி வரப்பட்டவர் ஹம்ஸா பாயாகத் தான் இருக்க வேண்டுமென்று இஸ்மாயிலும் முகவரும் படைத்தவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

மருத்துவ அறைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே தான் அவர்களுக்கு மனத்தில் குளிர் காற்று வீசியது. ஹம்ஸா பாய் படுத்த படுக்கையாய் சேலேன் பாய்ச்சப்பட்டுக்கொண்டிருந்தார். இருவரும் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு ஹம்ஸா பாயின் கையை வருடிவிட்டனர். “என்ன மகன் முகமெல்லாம் வியர்த்துப் போயிருக்கு, ஏதும் கவலையா?” எனக் கேட்க ” ஒன்னுமில்ல ஹம்ஸா பாய் இவ்ளோ நேரமா உங்கள காணலனு இஸ்மாயில் ரொம்பவே உடஞ்சு போயிட்டார்” என முகவர் பதில்கொடுத்தார். இஸ்மாயிலை பக்கத்தில் அமர வைத்து தலை தடாவி விட்டு “அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்யனும், யார் எவர் னு தெரியாமயே உதவி செய்ய அல்லாஹ் உங்கள எனக்கு தயார்படுத்தி அனுப்பியிருக்கான். அவன் ரொம்பப் பெரியவன்” என படைத்தவரை மெச்சினார் ஹம்ஸா பாய்.

ஹம்ஸா பாயின் உடல் நிலை கொஞ்சம் தேறியதும் மீண்டும் ஹஜ் கிரியைகளை ஆரம்பித்தனர். ஹம்ஸா பாய் அதிகமதிகமாய் அழுது தன் குறைகளையும் தன் தேவைகளையும் படைத்தவனிடம் ஒப்புவித்தார். படைத்தவன் கருணையாளன் ஹம்ஸா பாயை தன் இல்லத்திற்கே அழைத்தாற் போல் அவர் தேவைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவேறியது.

இனியென்ன

வாசகனே/ வாசகியே

உன் ஆசையைப் போல ஹம்ஸா பாய் நல்லபடியாய் தன் உயிருக்கு முன்னரான ஆசையை பூர்த்தி செய்துகொண்டார். இஸ்மாயில் விதவையான ஹம்ஸா பாயின் மூத்த மகள் சபீனாவை மணந்துகொண்டார். ஹம்ஸா பாயால் முன் போல் சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்பதற்காய் ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளும் வாங்கிக் கொடுத்தான் இஸ்மாயில். இஸ்மாயிலே இப்போது குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் சுமக்கலானான்.

ஆஹ்.. சொல்ல மறந்தே போனேன்! இஸ்மாயில் பணக்கார வீட்டுப் பையன். தனியாக வியாபாரமும் செய்கிறான். தன் தனியார் வியாபாரத்திற்கு பொறுப்புதாரியாக இப்போது ஹம்ஸா பாயே இருக்கிறார்.

ஹம்ஸா பாயின் புன்னகை அப்போதும் வின்மீனாய் பளிச்சிட்டது!

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »