அறிவோம் இஸ்லாம் – 49

 

ஹிஜ்ரி 10 ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். ‘கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்’ என்ற நபிகளாரின் அறிவிப்பு அரபுலகம் முழுவதும் பரவி மக்கள் மனதில் பரவசத்தை ஏற் படுத்தியது.

பல திசைகளில் இருந்தும் மக்கள் மதீனாவை நோக்கி திரண்டனர். துல்கஅதா மாதத்தின் இறுதியில் நபிகளார், அங்கிருந்து மக்கா புறப்பட்டார்கள். துல்ஹஜ் மாதம் 4 ந் தேதி வைகறை வேளையில் மக்காவை அடைந்தார்கள்.

மக்கா நகருக்கு வந்தவுடன் முதலாவதாக இறை இல்லம் கஅபாவை ‘தவாப்’ செய்தார்கள். ( ‘தவாப்’ என்பதற்குச் சுற்றி வருதல் என்று அர்த்தம்). இப்போதும் ஹஜ் செல்லும் புனித பயணிகள் நபி வழிப்படி ‘தவாப்’ செய்கிறார்கள்.

பின்னர் ‘மகாமே இப்ராகீம்’ (நபி இப்ராகீம் நின்ற இடம்) என்னும் இடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு ‘ஸபா’ மலைக்குன்றின் மீது ஏறினார்கள். அப்போது இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டே இருந்தார்கள்.

ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டத்தை முடித்துக் கொண்டு நபிகளார் துல்ஹஜ் பிறை 8-ம் நாளன்று ‘மினா’வில் தங்கினார்கள்.

மறுநாள் அதிகாலைத் தொழுகையைத் தொழுது முடித்த பிறகு ‘மினா’வில் இருந்து புறப்பட்டு அரபா வந்து சேர்ந்தார்கள். அங்கு ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் முஸ்லிம்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் நின்று கொண்டு நபிகளார் வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையை நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாத்தின் அறிவுரைகள் முழுமையாகவும் கம்பீரத்துடனும் எடுத்துரைக்கப்பட்டன.

அதன் விவரம் வருமாறு: –

‘மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில் இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் நான் உங்களைச் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது.

ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு இணையாக எவருமில்லை. நான் அவனது தூதர் என்றும், அடிமை என்றும் சான்று பகர்கிறேன்.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9-ம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும், பொருளையும், மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள். அக்கிரமம் செய்யாதீர்கள். எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று. செல்வத்தின் உரிமையாளர் அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர! உங்களில் எவராவது மற்றவர்களுடைய பொருளின் மீது பொறுப்பேற்று இருந்தால், அதை அவர் உரிய முறையில் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

எச்சரிக்கையாக இருங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அந்தக் குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும். தந்தை செய்த குற்றத்திற்கு (பாவத்திற்கு) மகனோ, மகன் செய்த குற்றத்திற்கு தந்தையோ பொறுப்பாக மாட்டார். எந்தப் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம்.

அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாத்துக்கு முந்தைய) அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் கால கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டு விட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.

வட்டி இன்றோடு முழுமையாகத் தடை செய்யப்படுகிறது. கடனாக கொடுத்த பணத்தை மட்டும் நீங்கள் வசூலித்துக் கொள்ளலாம். முதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு முத்தலிபுக்கு வர வேண்டிய வட்டி பாக்கியைத் தள்ளுபடி செய்கிறேன்.

மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் ஆதிப்பெற்றோரும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள். எந்த ஓர் அரபிக்கும், ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த உயர்வும், சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே உங்கள் மேன்மையை- சிறப்பை நிர்ணயிக்கும். நிச்சயமாக இறைவனிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர், உங்களில் அதிக இறையச்சம் உள்ளவர்தான்.

மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். தலைமைக்குக் கீழ்ப்படியுங்கள். கருப்பு நிற அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும், அவர் இறைவனின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கு இடையில் நிலை நிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்.

மக்களே! பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். அவர்களை நன்றாகப் பராமரியுங்கள். நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவது போன்ற உடைகளையே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். உங்களால் மன்னிக்க முடியாத குற்றத்தை அவர்கள் செய்திருந்தால், அவர்களைப் பணியில் இருந்து நீக்கி விடுங்கள். அவர்களுக்குத் தண்டனை அளிக்காதீர்கள். அவர்கள் இறைவனின் அடியார்களாக இருக்கிறார்கள் ‘.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

ஆன்மீகம்

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள்.

 » Read more about: ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )  »