தமிழர் நெஞ்சம் தமிழ்நெஞ்சம் – அது
தமிழர் வாழ்வில் கமழ்நெஞ்சம்;
இமயம் போலும் புகழ்நெஞ்சம் – அது
என்றும் தமிழர் மகிழ்நெஞ்சம்.
வீர வித்தை நடும்நெஞ்சம் – அது
வெற்றி விளைவைத் தொடும்நெஞ்சம்
ஈர அன்பைப் பொழிநெஞ்சம் – பண்பு
ஏந்தி நடக்கும் வழிநெஞ்சம்.
மானம் காக்கும் அறநெஞ்சம் – உலக
மனத்தைக் கவரும் அறநெஞ்சம்
ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் – நலம்
இயற்றும் கடமை கெடாநெஞ்சம்.
நீதி வகுத்த நன்நெஞ்சம் – சங்க
நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம்
ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் – வேறு
அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?