காரைக் காலின் அருகினிலே
கமழும் ‘நிரவி’ நல்லூரில்,
ஊரைக் காக்கும் நல்லோர்தம்
உண்மை நெறியைக் காத்ததுவாம்!
ஏரைப் போன்றே உழுதுலகில்
இன்பப் பயிரை விளைத்ததுவாம்!
தேரை நிகர்த்த பொலிவோடு
திகழும் இனிய தமிழ்நெஞ்சம்!
பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!
புல்லும் பூண்டும் முளைக்காதே!
புவியில் இனிமை தழைக்காதே!
வெல்லும் வெறியால் மண்ணுலகை
விரைந்து பொசுக்கும் பெரும்போரால்!
செல்லும் வழியில் முள்விதையைச்
செரிதல் ஏனோ கொடியோரே!
சொல்லும் வல்ல கருத்தாலே
சுடர்க உயர்ந்து தமிழ்நெஞ்சம்!