நீளமான அந்தச் சாலையின் ஒரு ஓரத்தில் மிகப்பெரிய மரம் பரந்து விரிந்து சடைத்து வளர்ந்து நின்றது.
அனலாகக் கொதிக்கும், கடும் வெயிலில் போவோர் வருவோர்க்கெல்லாம் களைப்பாறும் தங்குமிடமாக ஒரு கற்பக விருட்சமாக அமைந்திருந்தது அந்த மரம்.
மரத்தில் மலர்ந்திருந்த பூக்கள் அழகாகவும் நல்ல நறுமணத்தையும் தந்தது. மலர்களைச் சுற்றி தேனீக்களும் வண்டுகளும் ரீங்காரமிட்டு, வலம் வந்தன.
மரத்தின் கீழ் இளைப்பாறும் வழி போக்கர்கள் பூவின் அழகையும் அதன் நறுமணத்தையும் புகழ்ந்து கொண்டே செல்வார்கள்.
பூ, புகழ்ச்சியால் பூரித்துப் போனது. அதற்கு தனது பெருமையை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
குனிந்து மரத்தின் வேரைப் பார்த்து கேட்டது. “வேரே! வேரே! நீயோ மண்ணுக்குள் அடியில் புதைந்து கிடந்து உணவுகளைச் சேகரித்து மரத்திற்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றாய். இருந்தும் என்ன பிரயோசனம்? உன்னை யாரும் பார்ப்பதும் இல்லை. உன்னைப்பற்றிப் பேசுவோரும் இல்லை. என்னைப் பார்! நான் எந்த வேலையும் செய்வதில்லை. இருந்தும் மரத்தின் மேல் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறேன். என்னைச்சுற்றி ரீங்காரமிடும் வண்டுகள் கூட்டத்தைப் பார்! என்னிடமிருந்து அழகான நறுமணம் வருகின்றது. நான் மனிதர்கள் கழுத்தில் மாலையாய் இருப்பேன். மங்கையர்கள் தலையில் ஒய்யாரமாக அமர்வேன். என்னைப் புகழாத மனிதர்களே கிடையாது. எனது பெருமையைத் தெரிந்து கொண்டாயா? ” என்றது.
வேர், தனது நிலையை நினைத்து வேதனைப்பட்டு கலங்கியது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மரம், பூவைப் பார்த்துச் சொன்னது: “ஏ, பூவே! உன்னிடம் அழகு இருக்கலாம்! இருந்தும் என்ன பிரயோசனம்? நீ, காலையில் மலர்ந்து மாலையில் கருகி விடுவாய். வேரின் பெருமைகள் உனக்குத் தெரியாது! அது உனக்கும் எனக்கும் உணவளிக்கின்றது. எங்களைக் காலம் எல்லாம் தாங்கி நிற்கின்றது. வேர் தன் கடமையை நிறுத்திவிட்டால் நீ எங்கே? நான் எங்கே? அதன் பின் இளைப்பாறும் மனிதர்களுக்கும் இங்கு என்ன வேலை? தெரிந்து கொள். உன்னை விட உயர்வானது வேர்தான்!”
பூ, தன் நிலை அறிந்து வெட்கத்தால் தலை குனிந்து கொண்டது. வேர், தன்னை உணர்ந்து தலை நிமிர்ந்து கொண்டது.
மரம் சொன்னது: “ஒருநாள் புகழுக்காய் பூவாய் இருப்பதைவிட மற்றவர் நலனுக்காய் வேராய் இருப்பதே மேல்”.