இது ஆனந்தியின் வாக்குமூலம்

‘பெண்ணாகப் பிறந்துவிட்டால் வாழ்க்கையில் எத்தனை மேடு, பள்ளங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது?

எவ்வளவு எச்சரிக்கையாக வாழ்க்கையை திட்டம்போட்டு அமைத்தும்! நானாகவே ஆழக்குழியில் வீழ்ந்துவிட்டேனே! என்போன்ற படித்த பெண்களுக்கே இந்த அடிமை விலங்கை உடைக்க முடியாமல் இருக்கும்போது பாமரமான பெண்களின் நிலை எப்படியாக இருக்கும்? இப்படி மனம் நொந்துகொண்டாள் ஆனந்தி.

‘பெண்களாகப் பிறந்தாலே கல்யாணம். குடும்பம். இவையெல்லாம் இயல்பானவைதான். ஆனால் அந்த குடும்பவாழ்க்கையில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தலைமைத் தாங்குபவளாக பெண்களை நடிக்க வைக்கின்றார்கள்! குடும்பத்தை கட்டியாள்பவர்கள் ஆண்கள்தானே? பழியைச் சுமப்பவள் ஏன் பெண்ணாக இருக்கவேண்டும்? அவளுக்கென்று தனியான விருப்பு. வெறுப்புக்களே இருக்கக் கூடாதா? வீட்டில் என்ன சமைக்கவேண்டும்! நான் எப்படியான உடைகளை அணியவேண்டும்! யார் யாருடன் பழகவேண்டும்! எத்தனை பிள்ளைகள் பெறவேண்டும்! இப்படி பெண்களின் செயல்பாடுகள் எல்லாவற்றையுமே ஆண்கள்தானே தீர்மானிக்கின்றார்கள். எங்களுக்கு ஏன் குடும்பத் தலைவியென்ற பட்டப்பெயர்? கட்டுப்பாடு என்ற பெயரில் ஏன் இந்த அடிமை வாழ்க்கை?” தனிமை கிடைக்கின்றபோதெல்லாம் இப்படியாக தனக்குள்ளேயே குமுறிக்கொள்வாள் ஆனந்தி.

ஆமாம்! இவையெல்லாம் கணவனோடு பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது? அப்படிக் கதைக்க முற்பட்டால்! தேவையில்லாத விவாதங்கள் பிறக்கும்! சின்னச்சின்னப் பிரச்சனைகளைக்கூட பெரிதாக ஊதி வெடிக்க வைத்துவிடுவார்கள். வாய்க்காரி, அடங்காப்பிடாரி, இப்படியான பட்டங்களை சுமத்துவார்கள். என்பதனால் தனக்கேற்படும் அவமானங்களை தனக்குள்ளேயே அடக்கிக்கொள்வாள் ஆனந்தி.

‘இப்பொழுதுதான் எனக்கு அடிமைவாழ்வில் இருந்து விடுதலை கிடைத்திருக்கின்றது” என்று திருமணத் தினத்தன்று நினைததுக் கொண்டாள்.

வீட்டில் மூன்று ஆண் சகோதரங்களுக்கு மூத்தவளாகப் பிறந்தவள். ஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கும் மரியாதை முழுமையாக தனக்கு கிடைக்கவில்லையென்றே ஆனந்தி எண்ணிக்கொண்டாள். அப்படி அவள் எண்ணிக்கொள்ளும்படியாகவே வீட்டில் பல சம்பவங்கள் நடைபெறுவதை கண்கூடாகக் கண்டவள்.

வீட்டில் தனது தாயார் செய்யும் உழைப்புக்கும, படும் கஷ்ட்டங்களுக்கும். தாய்க்கு என்ன மரியாதை கிடைத்திருக்கின்றது?

விபரம் தெரியாத சின்னவயதில் ஆனந்திக்கு எந்தக்கட்டுப்பாடும் இருக்கவில்லை. பத்த வயதிற்கு மேலாகும்போது சின்னச் சின்னக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவளுக்கும் அப்பொழுதான் கொஞ்சம் விபரம் புரிய ஆரம்பித்தது. அம்மாதான் வீட்டு வேலைகளையெல்லாம் விழுந்து விழுந்து செய்கின்றாள்! காலையிலே எழுந்து மாட்டுத்தொழுவம் துப்பரவாக்குவது, பால் கறப்பது விற்பது, மாட்டுச்சாணியை விற்று காசாக்குவது எல்லாம் அம்மாதான்.! வீட்டிற்கு அம்மாதான் எசமான் என்றே ஆனந்தி எண்ணிக்கொள்வாள்.

அம்மா அதிகாலையில் எழுந்து இந்த வேலைகளை செய்வதோடு பாடசாலைக்குப்போகும் எங்களுக்கும் வேலைக்குப்போகும் அப்பாவிற்கும் சுடச்சுட காலைச்சாப்பாடுகள் செய்து கொடுக்கவேண்டும். கொஞ்சம் தாமதமானாலும் அப்பா தனது கோபத்தை பேப்பர் புத்தகங்களில் காட்ட ஆரம்ித்துவிடுவார்! சிலசமயங்களில் நேரடியாகவே அம்மாவிற்கு அர்ச்சனைகள் விழும். அனேகமாக அர்ச்சனைகள் விழும்படியாக அம்மா நடந்துகொள்வதில்லை. அடிமையாக இருந்தாலும் முதலாளியிடம் நல்லபெயர் எடுக்கத்தானே எவரும் விரும்புவார்கள்! அம்மாவும் அந்த ரகம்தான்.

தாத்தாவும் பாட்டியும்கூட தங்களுக்கு செய்யும் சேவையில் சின்னப்பிழை விட்டாலும்கூட இல்லாத காரணங்களுக்காக தங்களுக்குள் வாக்குவாதப்பட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக்கொள்வார்கள்!

இவ்வளவு பேருக்கும் சம்பளம் இல்லாமல் உழைக்கும் அம்மா தான் உண்பது இரவுச்சாப்பாட்டில் மீதமிருந்த பழையவைகளைத்தான்!

அதற்குப்பின் பாத்திரம் கழுவுதல் எல்லோருடைய ஊத்தை உடுப்புக்களையும் துவைத்தல், மதியச்சாப்பாடு தயாரித்தல், சாப்பாட்டிற்குப்பின் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் இரவுச் சாப்பாட்டிற்காக மாவு இடித்தல், மாவு அவித்தல் பின் மாலையாகிவிட பழையபடி மாட்டடி வேலைகள். அதன்பின் இரவுச்சமையல். இப்படி நாளுக்கு பதினாறு மணி நேரங்;களுக்கு மேல் உழைக்கும் கடுமையான உழைப்பாளி அம்மா.

இரவு நேரங்களில் அப்பாவிடம் கடுகடுப்பு, சிடுசிடுப்பு, எதுவும் இருக்காது! எல்லோரும் சாப்பிட்டு முடிந்தபின் மீதியிருப்பவையில் தான் சாப்பிட்பின் அடுப்படியை துப்பரவு செய்து சமையல் பாத்திரங்களோடு அம்மா சண்டைபோடும்போது அப்பா மிகவும் பரிவாக ‘அன்னம் பகல் முழுக்க குசினீக்கை அடுப்படியில் கிடந்து கஷ்ட்டப்படுகிறாய.; இதுகளையெல்லாம் இப்பவே கழுவவேணுமோ? வைச்சிட்டு வந்து படப்பா நாளைக்கு கழுவலாம்”. அப்பொழுது மட்டும் அப்பா அன்னம்மாவென்ற அம்மாவின் பெயரை அன்னம் என்று பாசம் வழியக்கூப்பிடுவார்.

‘காலமையும் நான்தானே கழுவவேண்டும்?” என்னும் அம்மாவின் நியாயமான கேள்வி அப்பாவின் மாயஜால வார்த்தைகளில் அடிபட்டுப்போகும்.

அந்த நேரத்தில் அம்மா மீது, அப்பா காட்டும் பரிவு அம்மாவிற்கு வீட்டில் பெரிய மரியாதை இருப்பது போன்ற தோற்றத்தையே ஆனந்திக்கு கொடுத்தது. பின்னாளில் விபரம் புரிந்தநாளில் தெரிந்துகொண்டாள். முட்டைகளை அடைகாக்வைத்து பொரித்த குஞ்சுகளை காகத்திற்கும் பருந்திற்கும் இரைகொடுக்காமல் மனிதர்கள் பாதுகாத்து வளர்ப்பது பின்னாளில் தங்களுக்கு உணவாக்கிக் கொள்வதற்காகத்தான்! என்பதைப்போல இரவு நேரங்களில் அம்மாவின் தேவை அப்பாவிற்கு தேவையாக இருந்தது என்பதையும். அதனால்தான் அந்த நேரங்களில் அப்படியான பாசமான அழைப்புக்கள்! விடிந்தால் பழையகுருடி கதவைத்திறடி கதைதான்.

பெண்களை முழு அடிமையாக்க ஆண்கள் வைத்திருக்கும் மிகச்சிறந்த ஆயுதம் ‘கற்பு’. இதைவைத்தே பெண்களை மூலைக்குள் இருத்திவிடுவார்கள்.

சின்னவயதில் சுதந்திரமாக அயல்வீட்டுச் சிறுவர்களுடனெல்லாம் ஆனந்தமாக சுதந்திரமாக விளையாடித்திரிந்த ஆனந்தி பூப்பெய்தியவுடன் மூலைக்குள் குந்தவைக்கப்பட்டாள். முன்னர்போல் ஆண் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாடசாலைக்குக்கூட பெண்களுடனேயே சேர்ந்து செல்ல வேண்டுமெனவும், அக்கம் பக்கம் பார்க்கக்கூடாது! தேவையில்லாமல் எந்த ஆண்களுடனும் பேச்சுவார்த்தை வைக்கக்கூடாது! இப்படியான பலவிதமான கட்டுப்பாடுகள்.

நாளாக நாளாக தனது உடலின் வளர்ச்சியைப்பார்க்க அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் முன்பு அணிந்த ஆடைகளெல்லாம் அளவில்லாமல் போய்விட்டது. ஆனந்திக்கு இப்பொழுது புதுவிதமான ஆடைகள் கொடுக்கப்பட்டன. கால் முட்டபாவாடை! வயிறு தெரியாத மேற்சட்டை! மார்புப்பகுதியை மேலுமொருமுறை மறைக்க துண்டுத்தாவணி! இப்படியாக உடைகளிலேயே பலவித மாற்றங்கள்.

பாடசாலையைத்தவிர வேறு எங்கும் தனியே போகமுடியாது. எப்பொழுதாவது கோவில்@ சினிமா என் று போவதானால்! கைதிகளை பொலீஸ் காவலுடன் கொண்டு செல்வதைப்போல அம்மா| பாட்டி| இன்;னும் பலர் காவலுக்கு வருவார்கள்.

இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் தனது ஆண் சகோதரங்களுக்கு இல்லாததால் தான் ஒரு வீட்டுக்கைதி என்றே ஆனந்தியின் மனம் கூறிக்கொள்ளத் தொடங்கியது.

அந்த நேரங்களில் ஆனந்தி எண்ணிக்கொள்வாள் இப்படியான கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் சுதந்திரமாக வாழவேண்டுமானால் இந்த வீட்டைவிட்டு வேளியேறவேண்டும். வீட்டைவிட்டு வெளியேற வேண்டுமானால்! அது திருமணத்திற்குப் பின்னால்தான் முடியும்.

கணவனாக வருபவருபவரும் ஒரு ஆண்தானே? இன்று அம்மா| அப்பா| போடும் கட்டுப்பாடுகளை நாளை கணவராக வரப்போறவரும் போடுவார்தானே? இப்படியான சந்தேகக் கேள்விகள் தோன்றும்போது அதற்கு சமாதானப்பதில்களும் தோன்றும்.

‘ஆண்கள் எல்லோரையும் ஒரேமாதிரியாகப் பார்க்கக் கூடாது. பெண்களின் உணர்ச்சிகளை மதிக்கத்தெரிந்த ஆண்களும் இருக்கத்தானே செய்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் திருமணம் செய்யவேண்டும்” என்பது ஆனந்தியின் எண்ணமாக இருக்கும்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஆனந்திக்கு தாய் புத்திமதிகள் கூறுவதுமுண்டு. ‘வாழப்போற இடத்திலை அடக்க ஒடுக்கமாய் நடந்து நல்லபேர் எடுக்கவேணும்.” என்பாள். ஆனந்தி மனதிற்குள் சிரித்துக்கொள்வாள். ‘நல்ல பெண்ணென்றால்? அடங்கி ஒடுங்கி நல்ல அடிமையாக?!”

பாட்டி பழங்கதைகள் எல்லாம் சொல்லும்போது பழமொழிகளும் கூறிக்கொள்வாள். ‘பொம்பிளையள் கண்டபாட்டுக்கு பல்லைக் காட்டக்கூடாது| பொம்பிளை சிரிச்சாப்போச்சு புகையிலை விரிச்சாப்போச்சு” என்பது போன்ற பழமொழிகள். பெண்கள் மனம்விட்டுச் சிரிப்பதற்கும் கட்டுப்பாடா? கல்யாணம் பண்ணும் பெண்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசனாம்!” கணவன் எப்படியானவனாக இருந்தாலும் பெண்ணானவள் அடங்கிப்போகவேண்டும் என்பதனை இப்படி வேறுவிதமாக சொல்லுகின்றார்கள்.

திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய உறவைத் தேடிக்கொடுத்தபோதும் உறவுக்கும்| மனிதாபிமானத்திற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றது என்பதனை அனுபவமூலமாக கற்றுக்கொண்டவள் ஆனந்தி.

திருமணமான பெண்களை இல்லாள்| இல்லத்தரசி| என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும்போது இவை பெண்களை பெருமைப்படுத்தும் வார்த்தைகள் என்றே ஆனந்தியும் முன்னர் எண்ணியதுண்டு. பின்னாளில் சிந்தித்துப்பார்த்தாள் இல்லான் என்று ஆண்களை அழைப்பதில்லையே? ஓகோ! இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று ஆகிவிடும்! அதனால்த்தான் ஆண்கள் அந்தப் பட்டப்பெயரை தங்களோடு ஒட்டவிடாமல் தவிர்த்துக்கொண்டார்கள் போலும்.

‘பெண்கள் ஒழுக்கம் தவறிவிட்டால் ‘வேசி’ என்கின்றார்கள். ‘தேவடியாள்’ என்கின்றார்கள். ஒழுக்கம் தவறும் ஆண்களை யாரும் ‘வேசன்’ என்றோ ‘தேவடியன்’ என்றோ அழைப்பதில்லையே? மாறாக அங்கும் ‘வேசி,மகன்’ , ‘தேவடியாள்,மகன்|’ என்றுகூறி பெண்களைத்தானே ஏசிவைக்கின்றார்கள்! குற்றம் செய்பவன் ஆண்! வசைபடுபவள் பெண்ணா? பெண்கள் அவ்வளவு இழக்காரமானவர்களா?” இப்படியான கேள்விகள் எல்லாம் ஆனந்தியை விழிப்படையச் செய்தன.

கலைஞன், மைந்தன், புலவன், இப்படியான சொற்களுக்கெல்லாம் வழமையில் பெண்பாலே இல்லை! இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்பது ஆனந்தியின் கருத்து.

பெண்ணாகப்பிறந்தால் ஒருவனுக்கு மனைவியாகத்தான் வேண்டும். இருவரும் விரும்பியும்! பெண் விரும்பாதபோதும்! கணவனுக்கு இன்பத்தை கொடுக்கத்தான் வேண்டும். குடும்ப வாழ்க்கையில் குழந்தை பெற்றெடுப்பது தவிர்;க்க முடியாததே. ஆனால் கணவனோ! தனது ஆண்மைக்கு கிடைத்த பரிசுதான் மனைவி பெற்ற பிள்ளை என மார்தட்டிக்கொள்கின்றான்! ஆண்குழந்தையையும் பெண்தான் பெற்றெடுக்கின்றாள். தனது இரத்தத்தை பாலாகக் கொடுத்து தூக்கமின்றி மார்பிலும், தோளிலும் சுமந்து அவனை வளர்த்து விடுகின்றாள். அவனோ தனது காலத்தில் இன்னொரு பெண்ணை ஆதிக்கம் செய்கின்றான். அவளின் உரிமைகளை பறிக்கின்றான். இதனை எந்த ஆண்களாவவது சிந்தித்து பார்க்கின்றார்களா?.

இப்படியான ஆண்களுக்கு மத்தியில் மாறுபட்ட ஒருவனை தான் வேலைசெய்த அலுவலகத்தில் கண்டாள் ஆனந்தி.

அவனது பெயர் செல்வம். பெண்கள் விரும்பக்கூடிய வகையில் அழகாக இருந்தது மட்டுமல்ல! பெண்களை மதித்து மரியாதை கொடுக்கும் பண்பு கொண்டவனாகவும் இருந்ததோடு பெண்களின் உரிமைகளுக்காக வாதாடும் பண்பும் ஆனந்தியைக் கவர்ந்தது.

இப்படியான பண்புகளுக்காக அவளது மனம் அவனை விரும்ப ஆரம்பித்தது. ‘நிச்சயமாக செல்வம் தனது எண்ணங்களோடு ஒத்துப் போகக்கூடிய கணவனாக இருப்பான் என்கின்ற எண்ணத்தில் அடிக்கடி அவனோடு மனம் விட்டுக் கதைத்தாள்.

கல்யாணம் என்ற பேச்சு வந்தபோது செல்வம் மறுத்துவிட்டான். காரணம்? ‘வயதான பெற்றோர். திருமண வயதில் ஒரு தங்கை. இப்படியான சூழ்நிலையில் தான் மணமுடித்தால்! மனைவியை சந்தோசமாக வைத்திருக்கமுடியாது” என்பது செல்வத்தின் கருத்து.

‘குடும்பம் என்றால் இப்படியெல்லாம் இருக்கத்தான் செய்யும். மனைவியாக வருபவள் இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் போகவேண்டும். அது மாத்திரமல்ல ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, திருமணம்தான் அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்த்தை கொடுக்கின்றது. நீங்கள் சொல்வது போன்ற சின்னக் காரணங்களுக்காக மனமொத்த இருவர் திருமணத்தை ஒத்திவைத்தால்? பிற்பாடு மனம் ஒத்துவராத ஒருவரை மணமுடிக்கவேண்டி ஏற்படலாம்! அப்படியான வாழ்க்கை சந்தோஷமாகவா இருக்கும்?” இப்படியான ஆனந்தியின் வாதங்கள் செல்வத்தை மனம்மாற வைத்தது.

இப்படி தான் மனம்விரும்பி தேர்ந்தெடுத்து மணமுடித்த செல்வத்துடன்தான் இனி சேர்ந்து வாழமுடியாது! என்ற நிலைக்கு வந்துவிட்டாள் ஆனந்தி.

தனது ஜந்து வருட குடும்ப வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியபின் ஏன் இந்த மனக்கசப்பு? ஆனந்தி கூறும் காரணங்களும் நியாயமானவையாகவே இருந்தது.

‘ஆரம்பத்தில் செல்வம் தற்சமயம் திருமணம் வேண்டாம் என்றுதான் சொன்னார். தற்சமயம் வேண்டாமென்றாரே தவிர திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. திமணமாகாத தன் தங்கை, வயதான பெற்றோர்கள், இவர்களெல்லோரையும் மறந்து தான் திருமணம் செய்ய முடியாது என்றுதான் சொன்னார். எல்லாக்குடும்பத்திலும் மாப்பிள்ளைக்கு பெற்றோர் இருக்கத்தான் செய்வார்கள் அதற்காக திருமணம் செய்யாமலேயே இருந்துவிடுவதா? என்றேன் நான். எனது விருப்பம்போல திருமணம் நடக்கவேண்டும் என்பதற்காக செல்வத்திற்கு சீதணமும் கொடுக்க முன்வந்தார்கள ;எனது பெற்றோர்கள். இது நான் விரும்பாததுதான் ஆனால் செல்வத்தின் தங்கையின் திருமணம் நடைபெறவேண்டுமானால் எனது கொள்கையை தியாகம் செய்யத்தான் வேண்டும் என்று எனது மனம் எனக்கு சமாதானம் கூறியது. அதே நேரம்; செல்வமும் சீதணம் வாங்க விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் செல்வத்தின் பெற்றோர்களோ சீதணம் வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். எனது அப்பாவும் சொன்னார் ‘ஆனந்தி எனக்கு ஒரே மகள் அவளுக்கு கொடுக்கவேண்டியதை நாங்கள் கொடுக்கின்றோம்” என்று முத்தாப்பாய் கதைத்தார். சீதணப்பணம் செல்வத்தின் பெற்றோர்கள் கைக்கு சென்றது. இதனால் செல்வத்தின் தங்கைக்கும் எனக்கும் திருமணம் நடந்தது.

திருமண ஆரம்பகாலம் சந்தோஷமாகத்தான் இருந்தது. திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டோடு போய்விட்டாள் செல்வத்தின் தங்கை. நான் மாப்பிள்ளை வீட்டோடு இருப்பதனால் வீட்டுவேலைகள் எல்லாம் என்னிடம் வந்து சேர்ந்தது. வீட்டுவேலைகளையும் செய்துகொண்டு வேலைக்கும் போய்வருவது கஷ்ட்டமாகவே இருந்தது இருந்தாலும் செய்தேன். வேலையை விட்டுவிடும்படி செல்வம் அடிக்கடி கூறுவார்! வேலையை விட்டுவிட்டால் குடும்பச்செலவை சமாளிக்கமுடியாது என்பது இருவருக்கும் தெரியும். அதுமாத்திரமல்ல இதுவரைகாலமும் நான் உழைத்துச் சாப்பிடுகின்றேன் என்று மனதிற்கு திருப்த்தியாக இருந்தது. வேலையை விட்டுவிட்டால் இன்னொருவர் உழைப்பில் சாப்பிடவேண்டும்! அதை நான் விரும்பவில்லை. அதனால் வேலையை தொடர்ந்தேன்.

செல்வமும் என்னைப்போல எட்டு மணித்தியாலம்தான் வேலை செய்கின்றார். ஆனால் வீட்டு வேலையில் எந்த உதவியும் செய்யமாட்டார்.

திருமணத்திற்கு முன் அவர் கூறிய கருத்துக்களுக்கும் இப்போதைய நடைமுறைகளுக்கும் பெரிய வித்தியாசம் தெரிந்தது. மனைவியென்றால் வீட்டுவேலைகள் செய்யவேண்டியது அவளின் கடமையென எல்லாக் கணவனமார;களைப் போலவே செல்வமும் என்னை ஒரு அடிமையென எண்ண ஆரம்பத்துவிட்டார்.

திருமணம் மூலம் சமூக அந்தஸ்த்து பெறவே எல்லாப் பெண்களும் விரும்புகின்றார்கள்! நானும் அதைத்தான் விரும்பினேன். ஆனால் கிடைத்ததோ அடிமை அந்தஸ்த்துத்தான்!

வீட்டு வேலைகளுடன், மாமன் மாமியின் தேவைகளைக் கவனித்துவிட்டு நான் கந்தோர் வேலைக்குப் போவதற்கு முன்னர் அவர் அணியும் உடுப்புக்களை அழகாக அயன் செய்து வைக்கவேண்டும்! அதைக்கூட அவர் செய்யமாட்டார்! நானும் எவளியில் போகும்போது அழகாகப்போகவேண்டும் என்றே அவர் கூறுவார். நான் அழகாகப்போவது தனக்கு கௌரவம் என்று நினைக்கின்றாரோ? என்னவோ! வேலைவிட்டு வீட்டிற்குவந்தால் அவர் பத்திரிகையும், டிவி யும்தான். பின் படுக்கைக்குப் போகும்போதும் நான் அழகாகவே இருக்கவேண்டும்.

எனது மனநிலை, உடல் களைப்பு இவைகளைப்பற்றி எண்ணுவதே இல்லை. தங்கள் இன்பமே திருப்தியான வாழ்வு என்று எண்ணுகின்றார்கள். எனது உடல் நிலையைக்கூறி தள்ளிப்படுத்தால்! அடுத்தநாள் நான் கொடுக்கும் தேநீரில் இருந்து சாப்பாடுவரை எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பார்! அது சின்னச் சின்ன சண்டைகளாக மாறும்! சிலவேளைகளில் ஒருவாரம் வரைக்கும் நாங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்ததும் உண்டு.

ஒருவாரத்திற்குப ;பின் அவராகவே சமாதானமாகுவார். எங்கு? கட்டிலில்தான்! ஒருவாரம் லீவில் இருந்துவிட்டு வேலைக்குப் போகும் போது கந்தோரில் எப்படி ஃபைல்கள் குவிந்து இருக்குமோ? அதேபோல அன்று கட்டிலிலும் அப்படித்தான்! பாலியலிலும் பழிவாங்கும் தன்மைதான்! தங்களுக்கு மட்டுமே வீரியம் உண்டு என்ற வீராப்பு.

குழந்தை பெறுவதை தள்ளிவைப்போம் என்றேன்! தங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டுமென்றார். குழந்தையை எப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கும் உரிமைகூட எனக்கு இல்லாமல் போய்விட்டது.

மருந்து மாத்திரைகளின் உதவியுடன் அவர்களுக்குத் தெரியாமல் அதைத்தள்ளி வைக்கலாம்! ஆனால் மலட்டுப்பட்டத்தை கட்டிவிடுவார்களே! என்ற காரணத்தால் அவர்கள் விருப்பத்திற்காக எனது வயித்தில் குழந்தையை சுமந்தேன்.

பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கவேண்டும் என்பது அவர்கள் எல்லோரது விருப்பமும்.

திருமணம் செய்யும்போது அழகான பெண்வேண்டும்! பிறக்கும் குழந்தை மட்டும் ஆணாக இருக்கவேண்டும்! என்ன விந்தையான ஆசைகள்!

என்ன விந்தையோ? அவர்கள் ஆசைப்பட்டபடி ஆண்குழந்தைதான் பிறந்தது! அதிலும் தன்னுடைய பிள்ளையென்று பெருமை பேசிக்கொள்வார்.

பிள்ளை பிறந்தபின் எனது மார்பழகில் கவர்ச்சி குறைந்திருக்கவேண்டும்! சில சமயங்களில் அவர் சிரித்துக்கொண்டே சொல்லுவார் ‘பிறைசியர் இல்லாவிட்டால் நான் பாட்டி,தானாம்!” நகைச்சுவைக்காகச் சொன்னாரா? அல்லது பெண்களின் அழகெல்லாம் ஒரு பிள்ளை பெறும்மட்டும்தான் என்று கேலி செய்தாரா?என்று புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கும். எங்களில் ஏற்படும் மாற்றங்களை கேலிசெய்வதற்கு எசமான்களுக்கு உரிமை இருக்கின்றது போலும்.

பெண்களுக்கு முதுமை விரைவில் வருவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. மாதவிலக்கு, கர்ப்பம், பிரவசம், குழந்தைக்கு பால் கொடுத்தல், ஓயாத வீட்டுவேலை, சமையலறையில் கிடைக்கும் வெப்பம், இவைகளோடு கணவனை சந்தோஷப்படுத்தும் வேலை! ஆண்கள் இவற்றில் இருந்து தப்பிவிடுகின்றார்கள். இதை தெரிந்துகொண்டும் கேலி செய்வார்கள்.

சமையல் பிந்திவிட்டது. சாப்பாடு சூடாகஇல்லை. இப்படியான சின்னக் காரணங்களுக்கெல்லாம் வீட்டில் சண்டைவரும்! அவர்கள் எசமான்கள் உரிமையோடு கேட்கின்றார்கள்! நாங்கள் அடிமைகள்! பணிந்து போகவேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள். என்னை சோதிப்பதற்காகவோ? தெரியாது! பெண்களுடன் வலிந்து@ வலிந்து சிரித்துக்கதைப்பார். நான் யாராவது அவருக்குத் தெரியாத@ எனக்குத் தெரிந்த ஆண்களுடன் கதைத்தால்! வீட்டிற்கு வந்தவுடன் ஆயிரம் கேள்விகள் ‘யாரவன்? கூடவே வேலைசெய்பவனென்றால்? ரோட்டில் சிரித்து, சிரித்துக் கதைக்கவேணுமோ?” இப்படியான சந்தேகப்பேச்சுக்கள்.

கந்தோரில் எவ்வளவு கடுமையான வேலையாக இருந்தாலும் மாலையில் குறித்தநேரத்தில் வீட்டில் நிற்கவேண்டும். வேலை அதிகம்; அல்லது பஸ்சிற்கு காத்திருந்து தாமதமானால் அதற்குரிய காரணத்தை அவர் நம்பும்படியாக சொல்லவேண்டும். அவர் தாமதாக வந்ததைக் கேட்டால்! ‘உனக்குத்தான் வீட்டில் நிறைய வேலைகள் இருக்கின்றதே! நான் வந்து உனது வேலைகளை தடுப்பானேன்!” என்பார். இந்தப் பதிலின் அர்த்தமென்ன? நேரத்திற்கு வந்து உனக்கு உதவி செய்ய மாட்டேன்! என்கின்றாரா? அல்லது தன்னுடன் சல்லாபம் செய்வதற்கு எனக்கு நேரமில்லை என்கின்றாரா?

இப்பொழுதெல்லாம் அவரின் தாய்,தந்தையரைக் கவனிப்பதற்கே அதிக நேரம் தேவையாக இருக்கின்றது. எனது சேவையில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் மகனிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைத்து விடுவார்கள். இப்படிக்கூட பல நாட்கள் எங்களுக்குள் சண்டை வந்ததுண்டு. இதைக் காரணமாக வைத்து நான் பிறந்தவீடு சென்றால் அங்கும் அவர் பக்கம்தான் எல்லோரும் கதைப்பார்கள்.

திருமணகாலத்தில் சமத்துவம் பற்றியெல்லாம் நிறையக்கதைப்பார். அவருக்கு வாய்ப்பாக நடக்கும்வரை பிரச்சனைகள் எதுவும் வரவில்லை. போகப்போக நிலமை மாறிவிட்டது! மனைவி அடங்கி வாழ்வதுதான் சமத்துவம் என அவர் எண்ணுகின்றார்.
இப்பொழுதுதான் அம்மா அப்பாவுடன் வாழ்ந்த வாழ்க்கை எனக்குச் சுதந்திரமாகத் தெரிகின்றது. இனி அந்த வாழ்க்கை திரும்பவும் வராதுதான்! ஆனால் அப்படிச் சுதந்திரமாக வாழவே விரும்புகின்னேன். அதில் என்ன தப்பு?”

ஆனந்தியின் இந்த வாதங்கள் நியாயமானதாகவே தென்படுகின்றது. ஆனாலும் ஒருபக்கவாதம் மட்டும் நியாயமானதாக இருக்காதே? இதுபற்றி செல்வம் என்ன சொல்கின்றார் என்று கேட்போம்.

இது செல்வத்தின் வாக்குமூலம்

‘ஆனந்தியின் குற்றச்சாட்டுக்களில் நியாயமே இல்லை. எல்லாம் தனக்குத்தானே வளர்த்துக்கொண்ட ஒரு தாழ்வு மனப்பான்மைதான்.

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்பார்கள் பெரியவர்கள். ஆறுமாதப் பயிர்களுக்கே காலமறிந்து@ நேரமறிந்து பசளை| நீர்| என்பன கவனமாக அளவாக கொடுக்கின்றோம். ஒன்று கூடினாலும் பயிர் அழுகிவிடும்! ஆறு மாத காலப் பயிருக்கே இப்படியிருக்கும்போது ஆயிரம்காலத்துப் பயிருக்கு எவ்வளவு கவனம் தேவை?

நல்ல சம்பளத்தோடு திருமணவயதில் ஒரு இளைஞன் இருந்தால் திருமண அழைப்புக்கள் நாடிவரத்தான் செய்யும்! ஆனந்தி தன்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது நான் மறுத்ததோடு அதற்கான காரணத்தையும் சொன்னேன். சீதணம் வாங்குவது ஆண்களக்கு அழகல்ல! நான் சீதணம் வாங்காமல் திருமணம் செய்யவேண்டும் என்ற கோள்கையோடே இருந்தேன். தங்கள் மகளின் திருமணத்திற்காக எனது பெற்றோருக்கு ஆசையை ஊட்டி ‘இது சீதணம் அல்ல எங்கள் மகளுக்கு கொடுக்கும் அன்பளிப்பு” என்று பணத்தை வலிந்து கொடுத்தார்கள். அது என் தங்கையின் திருமணத்திற்கு உதவியது என்பது உண்மைதான். இன்று சீதணம் வாங்கித்தானே திருமணம் செய்தீர்கள் என்று குத்திக்காட்டுவது என்ன நியாயம்?

நான் திருமணம் வேண்டாம் என்று சொன்னதற்கு மற்றொரு காரணம் ‘வயதான எனது பெற்றோர்கள்தான்’. எவ்வளவோ கஷ்ற்றப்பட்டு வளர்த்து ஆளாக்கிய அவர்களை கடைசி காலத்தில் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையல்லவா? அதற்காக எனக்கு மனைவியாக வருபவள்தான் எனது பெற்றோர்களை கவனிக்க வேண்டும் என்று கூறவில்லை.

எனது தங்கையே கூட அவர்களைக் கவனிக்கலாம்! ஆனால் எனது பெற்றோர்களின் சுயநலம் ‘மகளின் குடும்பத்திற்கு தாங்கள் பாரமாக இருக்கக்கூடாது’ என்ற எண்ணம்|. மருமகளாக வந்தவளுக்கு பாரமாக இருக்கின்றோமே என்று அவர்கள் எண்ணவில்லை. அதற்காக எனது பெற்றோர்களை அனாதை மடத்திலா விடமுடியும்?

இதையெல்லாம் மறைத்தா நான் திருமணம் செய்தேன்? பட்டினத்தாரால்கூட தாயையும் மனைவியையும் சமமாக வைத்துப்பார்க்க முடியவில்லை! தாயை உச்சமாக போற்றினார். மற்றைய பெண்களை மாயப்பிசாச, முலையால் மயக்குபவள் என்றெல்லாம் இகழ்ந்தார். நான் சாதாரண மனிதன்தானே! ஆனால் அப்படியெல்லாமா ஆனந்தியை இகழ்ந்து கதைத்தேன்?.

ஏனைய பெண்களுடன் எல்லாம் நான் சிரித்து, சிரித்து கதைக்கின்றேனாம்! தான் எந்த ஆணுடனாவது கதைத்தால் சந்தேகப்படுகின்றேனாம்! இது என்ன சின்னத்தனமான குற்றச்சாட்டு? வீதியில் போகின்ற எல்லாப்பெண்களுடனும் நான் கதைக்கமுடியுமா? என்னுடன் வேலைசெய்கின்ற, அல்லது மிகத்தெரிந்தவர்களைக் கண்டால் கதைப்பேன். அதுவும் நாகரிகமான முறையில் அப்பெண்ணின் கணவர் அல்லது உறவினர்கள் அருகிருக்கும் போதுதான். ஆனந்தியும் அப்படித்தான் நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறினேன். ஆனந்தியின் எந்த நடவடிக்கைகளையும் நான் சந்தேகத்துடன் பார்க்கவில்லை. சமூகம் அவளை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் என்பதற்காகவே கண்டித்திருக்கின்றேன். இது தப்பா?.

எங்கள் பண்பாட்டிற்கு ஏற்றபடி சேலை கட்டு. உடம்பு தெரியம்படியான உடைகளை அணியாதே என்றால் ‘நான் விரும்பிய உடையை உடுப்பதற்கும் உரிமையில்லையா?” என்கின்றாள். ‘நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே! இது எந்த சமூகத்தின் பண்பாடு” என்று குதர்க்கமாக கேட்கின்றாள்.

வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால்? எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது? வீட்டு வேலைகளையெல்லாம் அம்மா எனக்கு பழக்கிவைக்கவில்லையே?

சுகத்திற்கு மட்டும் ஆசையோடு அணைக்கின்றேனாம்! இன்பத்தையும் சுகத்தையும் நான் தனித்தா அனுபவிக்கின்றேன்? குடும்பவாழ்க்கையில் தாம்பத்தியமும் ஒரு அம்சம். பெண்கள் அதிக நாணமுடையவர்களானதால் உணர்ச்சிகளை அடக்கி வைத்துக்கொள்கின்றார்கள். நாங்கள் கொஞ்சம் வெளிப்படையாக நடந்து கொள்கின்றோம். அதற்காக அலைகின்றோம் என்று சொல்வது எவ்வளவு அநாகரீகமான வார்த்தை?.

எதற்கெடுத்தாலும் உரிமை சமத்துவம் என்று பேசும் பெண்கள் திருமணம் செய்யும்போது மட்டும் தங்களிலும் பார்க்க படித்தவனாக, உயரமானவனாக, பலசாலியாக, பணக்காரனாக, இப்படி எல்லாமே தங்களைவிட உயர்வானதாகவே தேடிக்கொள்கின்றார்கள். திருமணத்திற்குப்பின் கணவனுக்கு சமமாக வந்துவிட நினைக்கின்றார்கள்.

மற்ற பெண்களுடன் கதைக்கும்போது கணவனின் சிறப்புக்கள, திறமைகளை, பெருமையாக பேசுபவர்கள். வீட்டுக்குள் மட்டும் அது அடிமைத்தனம்! என்று கூறுவது குதர்க்கமா? இல்லையா?

ஆனந்தி போன்றவர்கள் முதலில் திருமணம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ளவேண்டும். திருமணம் என்பது ஒரு பரிசுத்தமான பிணைப்பு. திருமணத்திற்குப்பின் கர்ப்பம் வேண்டாம்! பிள்ளை வேண்டாம்! என்றால் என்ன வேடிக்கையிது.

தாங்கள் பத்து மாதம் சுமக்கின்றோம் என்கின்றார்கள்! இது இயற்கை. பறவைகள்| மிருகங்களும்தான் குட்டிபோட்டு குஞ்சு பொரிக்கின்றன. இதை மாற்றமுடியுமா?

எங்கள் குடும்ப விடயங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பதனால் எத்தனையோ விதத்தில் பொறுத்துப் பொறுத்துப் போகின்றேன். எனது பொறுமையை ஆனக்தி கேலியாக நினைக்கின்றாள். அதனால்த்தான் எதற்கெடுத்தாலும் எதிர்த்துக் கதைக்கின்றாள்.

ஆனந்தியின் பேச்சுக்கள் நடத்தைகள் எல்லாம் வீட்டின் அமைதியை குலைப்பதாகவே இருக்கின்றது. ஆனந்திபோன்ற படித்தபெண்கள் சிறிது சிந்திக்கவேண்டும்! ஆயிரமாயிம் ஆண்டுகளாக உள்ள சமூக அமைப்பை ஒரு ஆனந்தியும் செல்வமும் மாற்றிவிடலாம் என நினைப்பது அறிவீனம். அது எங்கள் வாழ்வின் அமைதியைக் குலைக்கும். அல்லது பிரிவிற்குத்தான் வழி வகுக்கும்! ஆனந்தி இதனை புரிந்துகொண்டால் சரி.

இந்த வாக்குமூலங்களுக்கு பதில் என்ன?

ஆனந்திக்கு காதல் தோல்வியா? வாழ்க்கையே தோல்வியா? என்று பார்ப்பதைவிட அவள் தனது மனதிற்குள் கட்டிவைத்த கற்பனைகள் தோற்றுவிட்டது என்றே எண்ணவேண்டும்.

சினிமாவில் மட்டுமே பல போராட்டங்களுக்குப்பின் முடிவில் கதாபாத்திரங்கள் வெற்றியடைகின்றன. வெறும் கற்பனையான சினிமாவை மனதில் புகுத்தி வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடத்திக்காட்டவேண்டும் என்று நினைப்பது நிலாவை கையில்பிடிக்க நினைக்கும் குழந்தைக்கு சமமானவர்கள்.

கிடைக்காதது எல்லாம் உயர்வானதாகத்தான் தெரியும். பக்கத்துவீட்டு கணவன் மனைவியின் வாழ்க்கையைப் பார்த்து ‘எவ்வளவு சிறப்பாக வாழ்கின்றார்கள்” என ஏங்குவது முட்டாள்த்தனம். அவர்கள் வீட்டில் இருக்கும் குழப்பங்கள் எமக்குத்தெரியவில்லை அவ்வளவுதான்.

வாதம்| மறுப்புவாதம்| இந்த இரண்டு வாதங்களிதிலும் குற்றச்சுமத்தலும் மறுப்பும் இருக்கின்றது. இதில் ஆனந்தி கூறிய குற்றச்சாட்டுக்கள் பொதுவாகவே பெண்களின் மனதில் ஆழப்பதிந்து கிடக்கும் ஒன்றுதான்.

தாங்கள் ஆண்களுக்கு அடிமையாக வாழ்கின்றோம் என்னும் எண்ணம் அனேகமான பெண்களின் மனதில் இருக்கத்தான் செய்கின்றது. சிறுவயதிலிருந்தே அவர்களுக்குரிய வேலைகள்| கடமைகள்| உடைகள்| பழக்கவழக்கங்கள்| இப்படியாக இவை பெண்களுக்குரியவை என போதிக்கப்படுகின்றது.

கொஞ்சம் அறிவு வளர| வளர கற்புக்கரசி கதைகள் ஒழுக்கவரம்புகள் ஆகியவையும் போதிக்கப்பட பெண்கள் தங்களுக்குள்ளேயே சிந்திக்கின்றார்கள். ‘ஏன் எங்களுக்கு மட்டும்; இப்படியான கட்டுப்பாடுகள்? ஆண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையே? அப்படியானால் நாங்கள் அடிமைகளா?” என்றெல்லாம் சிந்திக்கின்றார்கள்.

உழைக்கப்பிறந்தவன் ஆண்மகன்; உழைத்து குடும்பத்தைக் காப்பற்றவேண்டியது அவனுடைய பொறுப்பு என்ற நிலையில் ஆண்களுக்கு ஒரு மமதை. ‘என்னால்தானே இந்தக்குடும்பம் நடக்கின்றது! எனது உழைப்பில்தானே இவர்கள் உண்கின்றார்கள்! உடுக்கின்றார்கள்!” என்று தற்பெருமை கொள்கின்றான். ஆனால் நாள் முழுக்க வீட்டுக்காக உழைக்கும் பெண்களின் உழைப்பைப்பற்றி ஆண்கள் சிந்திப்பதே இல்லை.

அவர்கள் குடும்பத்திற்காக உழைப்பதற்கான ஊதியத்தை ஆண்கள் கொடுக்கவேண்டி வந்தால்தான் பெண்களின் உழைப்பின் மகிமை தெரியவரும்.

அனேகமான குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு சென்றுகொண்டே வீட்டுவேலைகளையும் செய்கின்றார்கள். படித்தபெண்கள் அலுவலகங்களுக்குப் போகின்றார்கள். ஏனையவர்கள் தோட்டம் கூலி வேலைகளிலும் வீடிக்,கொம்பனி பெனியன ;கொம்பெனி தையல், பிடவைக், போன்றவைக்ளில் வேலைசெய்யும் உழைப்பாளிகளாக இருக்கின்றார்கள். எப்படிப்பார்த்தாலும் தொண்ணுhறு வீதமான பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். தங்களின் இந்த உழைப்பிற்கு உரிய கௌரவம் கிடைக்கவில்லையே? என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருப்பது நியாயமே.

பெண்குழந்தை பிறந்ததும் பெற்றோர்களால்கூட அவள் இரண்டாம் பிரஜைகளாகவே நோக்கப்படுகின்றார்கள். காரணம் ‘இனி இவளின் பிற்காலத்திற்காக சீதணத்திற்காகவும் உழைக்கவேண்டுமே!” என்ற கவலை பெண்குழந்தை பிறந்தவுடனேயே பெற்றோர்களுக்கு வருகின்றது. அதுமாத்திரமல்ல பிள்ளை வளர்ப்பிலும் பெண்களுக்கு செலவு அதிகமே! உடைகள் நகைகள் இவைகள் எல்லாம் ஆண்களைவிட இரட்டிப்பு அல்லது மூன்று மடங்குகளைக்கூட ஏற்படுத்துகின்றது! இதனாலேயே பெண்பிள்ளைகளை கூடுதாலன பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பெண்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும் ஆண்கள்| அவர்களுக்குரிய சுதந்திரங்களில் தலையிடக்கூடாது என்று வாழ்கின்ற ஆண்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்ளைச் சமூகத்தில் பெட்டையன்| பெண்டாட்டி தாஷன்| என்று கேலிசெய்வதும் உண்டு. இப்படி கேலிசெய்பவர்களில் பெண்களும் அடங்குகின்றார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

சமூகத்தோடும் குடும்;பத்தோடும் போராடி சுதந்திரமாக வாழ முற்படும் பெண்களை வாயாடி| சண்டைக்காரி| என்று பழிசுமத்திக்கொள்கின்றார்கள். சில சமயங்களில் அப்படியான பெண்களின் ஒழுக்கத்திற்கும் களங்கம் கற்பிக்கப்படுகின்றது.

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்ற தோற்றம் உலகம் முழுவதுமே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அடுத்தவீட்டுப் பெண்களுடன் சரசம் செய்ய முற்படும் ஒருவன் தனது வீட்டுப்பெண்கள் மட்டும் உத்தமிகளாகவே இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றான்.

எல்லா ஆண்களும் தனக்கு வரப்போகும் மனைவி ஒழுக்கமானவளாகவே இருக்கவேண்டும் என்றே எண்ணுகின்றான். ஆனால் அவன் தனது ஒழுக்கத்தைப்பற்றி சிந்திப்பதில்லை! சமூகமும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை!.

பெண்கள் பூப்போன்றவர்கள்! வீணையைப் போன்றவர்கள்! என்கின்றார்கள். யாருடைய இன்பத்திற்காக அவள் பூவாகுகின்றாள்? வீணையாகுகின்றாள்? இதையெல்லாம் சிந்தித்துப்பார்க்கக்கூடிய புதிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்.

இதே நேரத்தில் பெண்கள் சுமத்தும் சில குற்றச்சாட்டுக்கள் அர்த்தமில்லாதவை! நாங்கள் என்ன கவர்ச்சிப்பாவைகளா?” என்கின்றார்கள்! அதில் என்ன சந்தேகம்? கவர்ச்சி பெண்களிடம்தான் அதிகம் இருக்கின்றது. பெண்களின் அங்கங்கள் பல கவர்ச்சியான படைப்புக்களே! அதை மேலும் கவர்ச்சியாகக்காட்டவே அவர்களும் விரும்புகின்றார்கள். இன்றைய சந்தையில் பெண்களின் கவர்ச்சியை மெருகூட்டும் சாதனப்பொருட்களே விற்பனையில் அதிகம்.

‘நாங்கள் என்ன பிள்ளைபெறும் இயந்திரங்களா?” என்று கேட்கின்றார்கள். என்ன முட்டாள்த்தனமான கேள்வி இது? இயற்கையின் படைப்பு இது. இதை யாரால் மாற்றமுடியும்? பெண்கள்தான் பிள்ளை பெறமுடியும். அவர்கள்தான், பிள்ளைக்கு பால் கொடுக்கவேண்டும். தாலி சுமக்கவேண்டுமா? என்று கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இன்று தாலியை அதிக பாரத்துடன் சுமக்கவிரும்பும் பெண்களே அதிகம். மற்றய பெண்களைவிட தன்னுடைய தாலி அதிக பவுன் என்று சொல்லிக்கொள்வதைத்தான் எல்லாப் பெண்களும் விரும்புகின்றார்கள். பிள்ளை பெற்றுக்கொள்வதில் பெண்கள் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.ஆண்கள் எத்தனை வீரம் பேசினாலும் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.

திருமணம் தங்களுக்கு சிறை! கணவன் சிறையதிகாரி! என்று கூறும் பெண்கள் திருமணம் செய்யாமலேயே வாழவேண்டும்!? இது சாத்தியப்படுமா? ஒரு பெண்ணால் திருமணம் செய்யாமல் வாழமுடியுமா? அப்படி வாழ்ந்தாலும் அவளை இந்த சமூகம் மதிக்குமா? திருமணம்தான் பெண்களுக்கு அந்தஸ்த்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது. என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது.

அப்படியானால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?

பிரச்சனை தீர்வதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். கல்வியில் இருந்து வேலைகள்,வரை…கற்பு இருவருக்கும் பொதுவாக்கப்படவேண்டும். குடும்பம் என்பது கூட்டுறவு என்னும் எண்ணம் இருவரிடமும் இருக்கவேண்டும். அதற்கு ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும்.

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..