வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !
அலங்கார நடைபோடும் தேவதையே – உந்தன்
அருகினிலே வந்தமரும் சேவடியே !
பலங்காலப் பக்தியிலே அடியவளே – உந்தன்
பக்தியினை மெச்சாவிடில் கொடியவளே !
பூமிக்கும் வலிக்காமல் நடப்பவளே – உந்தன்
பூவிரல்கள் மலராக்கிக் கடப்பவளே !
சாமிக்கும் உனைக்காண அருள்வருமே – உந்தன்
சஞ்சலத்தைத் தீர்ப்பதற்குப் பொருள்தருமே !
ஊர்கண்கள் உன்னைத்தான் பார்க்கிறதே – உந்தன்
ஓரவிழிப் பார்வைக்காய் வேர்க்கிறதே !
நீர்வார்த்த செடிகள்கூட வேர்விடுமே – உந்தன்
நீலவிழிப் பார்வையும் பேர்பெறுமே !
இதழ்காட்டும் புன்னகையும் இருள்விரட்டுமே – உந்தன்
இனிமைக்குத் தேவியுமே அருள்தரட்டுமே !
இதமான நடையினிலே ஒளிவீசுமே – உந்தன்
எழிலான முகம்பார்த்து கிளிபேசுமே !