அந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும். அதற்குத்தான் இங்கே விடியல் என்று பெயர். அதைக்கூட டெலிவிஷன் அறிக்கையை வைத்துத்தான் தெளிவாகச் சொல்ல முடியும்.
இந்த ‘விடியல்’ போந்துவாஸ் தொடர் வண்டி நிலையம். ஒரு பாரிஸ் புற நகருக்குரிய இயந்திரச் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. ஒன்பது மணிக்குள் அலுவலகத்தை அடைந்து விடுகிற ஒரே குறிக்கோளோடு பம்பரமாய் வந்து சேர்ந்தனர் பயணிகள். அவர்களின் கால்கள் கடிகார முள்ளாய் இயங்கினாலும், கைகள் கருப்புக் கோட்டுகளுக்குள் தஞ்சம் புகுந்திருந்தன. அவர்களின் முகங்கள் இறுகிக் கிடந்தன. அவர்கள் எதை இழந்துவிட்டு இப்படி உறுகிப் போய்க் கிடக்கிறார்கள்? என்னத்தைப் பிடித்துவிட அப்படி ஒடுகிறார்கள்? எப்போது எங்கே இளைப்பாறுவார்கள்?
இரண்டு பேர் என்னை இடிக்காத குறையாகக் கடந்து போனார்கள். ரயில் வந்திருப்பது நினைவுக்கு வர நானும் ஏறினேன். என் காதோரத்தில் வந்த ஜன்னல் நெடி என்னைச் சட்டென்று திரும்பச் செய்தது. கொள்ளை வண்ணங்களை முகத்தில் அள்ளிப் பூசியிருந்த அந்த வெள்ளைக் கிழவிக்கு விலகி வழிவிட்டு என் முன்னால் இருந்த இருக்கையைக் காட்டினேன்.
அவளது மிளகாய்ப் பழக்கலர் “மெர்சி”யில் கிரங்கிப் போய் “தெரியேன்” என்றேன். அந்தச் சிவப்புச் சாயத்தைப் போலவே அவள் சொன்ன நன்றியும் உதட்டுக்கு வெளியே பூசப்பட்டிருந்த உண்மை எனக்கு உரைக்க சற்று நேரம் பிடித்தது. அது அவளுக்கொரு அனிச்சைச் செயல். மற்றபடி அவள் இமை கொட்டும் நேரம் கூட என்னை ஏறெடுத்து பார்க்க முயன்றதாகத் தெரியவில்லை. என் இளிச்சவாய்த்தனம் எனக்குப் பிடிபட அரம்பித்தது.
அதற்குள் என்னைச் சுற்றியிருந்த அத்தனை இருக்கைகளும் ஆட்கொள்ளப் பட்டுவிட்டன. இடம் கிடைக்காமல் எஞ்சியிருந்த இரண்டொரு பேரில் நானும் ஒருவன்.
ரயில் புறப்பட்டது. ஜன்னலுக்கு வெளியே புல் முனையிலும், புதர்களின் மேலும் அமர்ந்திருக்கும் வெண்பனிப் பஞ்சுகளின் வேகமான கண்ணாமூச்சி ஓட்டம் கூட என் கவனத்தை ஈர்க்கவில்லை. ஏமாந்துப் போன எரிச்சலில் என் ரசனை மறத்துப் போனது.
அதற்குள் ரயில் ‘அஷெர்வில்’லுக்கு வந்து நின்றது. கதவு திறந்ததும் விசுக்கென்று வீசியது வெளிப்புறக்குளிர். என் பெட்டிக்குள் நுழைந்த இரண்டு பேரைத் தொடர்ந்து ஒரு ஆப்ரிக்கன் ஏறினான். நான் சற்று அருவருப்போடு ஒதுங்கி வழிவிட்டேன். அவன் உள்ளே போகாமல் என் அருகிலேயே நின்று என் எரிச்சலை அதிகமாக்கினான்.
ஓரக்கண்ணால் ஒரு நொடி நோட்டமிட்டேன். ஒரு ஐம்பது வயது இருக்கலாம். என்னைவிட ஒரு சென்டிமீட்டர் குட்டையான உருவம். சற்று பருத்திருந்தான். முக்கால் வாசி நரைத்துப்போன தலையின் மேல் ஒரு கரு நீல வண்ணக் குல்லாய். அவன் போட்டிருந்த பழைய மிலிட்டெரிக் காக்கி உடை குளிருக்கு அத்தனை பாதுகாப்பானதாகத் தெரியவில்லை. என்றாலும் அவன் அதைப் பொருட்படுத்தின மாதிரித் தோன்றவில்லை.
ரயில் கிளம்பும் அதிர்ச்சியில் என்மீது லேசாக உராய்ந்து விட்டதற்காக “எக்ஸ்க்யூசே மிஸ்யே” என்றான். யாருக்கு வேண்டும் இவன் இங்கிதம்?
“மெத்மொசெல், மெதாம் எ மெஸ்யே”… அந்தப் பெட்டியில் இருக்கிற அத்தனை பேரையும் உரைக்க அழைத்தான். அந்த அழைப்புக்கு பதில் ? எதேச்சையாக அவன் பக்கம் திரும்பியிருந்த இரண்டொருவர் கூட வேறு எங்கேயோ பார்க்கத் தொடங்கினர். அவன் எதையும் எதிர்பாராதவன் மாதிரித் தன் பேச்சைத் தொடர்ந்தான்.
“மீண்டும் நான் தான். உங்களில் பலருக்கு நான் பரிச்சயமானவன் தான். உங்கள் பார்வை போகிற போக்கிலேயே நான் அதைப் புரிந்து கொண்டேன். நீங்கள் நினைக்கலாம். ஏன் இந்த குட்டைக் கருப்பன் இப்படி அடிக்கடி வந்து உயிரை எடுக்கிறான், அவன் எப்போது ஒழிவான், எப்போது நம் கண்ணில் இருந்து மறைவான் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கண்ணிலிருந்து என்னை மறைந்து போக வைப்பது மிகவும் சுலபம். இப்போதே இந்த நொடியிலேயே இந்த ரயிலில் உள்ள விளக்கை அணைத்துப் பாருங்கள். இருட்டோடு இருட்டாக நான் மறைந்து போவேன்.
ஆனால், அப்போதும் அந்த இருட்டிலும் என் புன்னகை பளிச்சென்று தெரியும். ஆமாம், எங்கள் நாட்டிலே சூரியனைப் போலவே பற்களும் பிரகாசமானவை. இதற்காக நீங்கள் என்னைப் போல் எப்போதும் சிரித்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சிரிப்பது என்ன அத்தனைச் சுலபமா?
வேலையிலே மன அழுத்தம், வெளியிலே வந்தால் மன அழுத்தம், வீட்டுக்குள்ளே மன அழுத்தம், விளையாடுவதற்கோ நேரமில்லை, தொலைகாட்சிகளோ நம்மை நிரம்பி வழியச்செய்கின்றன. இந்த மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளியே வருவது? இதற்காக டாக்டரிடம் போகிறோம். பணம் கொடுக்கிறோம். மசாஜ் கிளப்புக்குப் போகிறோம். பணம் கொடுக்கிறோம். இளைப்பாற்று மையத்துக்கு போகிறோம். பணம் கொடுக்கிறோம். இப்படிப் பணம் கொடுத்து செலவழிப்பதாலேயே நம் மன அழுத்தம் மேலும் அதிகமாகிறதே தவிர குறைவதில்லை.
உங்கள் கவலைகளுக்கு ஒரே மருந்து, எளிய மருந்து சிரிப்பது, சிந்தையிலிருந்து சிரிப்பது. வேலைக்காகவும், விற்பனை செய்வதற்காகவும் உங்கள் உதட்டின் மேல் ஒட்டி வைத்திருக்கிற பிளாஸ்டிக் புன்னகைப் பூவை உள்ளத்தில் இருந்து மலரச் செய்யுங்கள். இதயம் உரைந்து கிடக்கிறதா? கவலை வேண்டாம். என் புன்னகையிலிருந்து உங்கள் புன்னகையைக் கொளுத்திக் கொள்ளுங்கள்.
நம் வண்ண பேதம் இதற்குத் தடையாகி விடாது. இதற்காக என்னைத் தேடி நீங்கள் வரவேண்டியதில்லை. உங்களைத் தேடி நான் வருகிறேன். இதற்கிடையில், உங்கள் பாக்கெட்டுகளில் அல்லது பர்ஸ்களில் கையை விட்டுப் பாருங்கள். ஒரிரண்டு ‘சாந்த்தீம்கள்’ தட்டுப்பட்டால் எனக்கு குடுத்து வழங்குங்கள். இதற்கு என் இதயம் திறந்த நன்றியை இப்போதே தெரிவிக்கிறேன். வழங்க மனமில்லை. வாய்ப்பான சிறிய காசு இல்லை… வருத்தப்படாதீர்கள். அதற்காக நான் வழங்கும் புன்னகையைப் புறக்கணித்து விடாதீர்கள். இதில் உங்களுடையதை கொளுத்திக் கொள்ள மறந்து விடாதீர்கள்”.
ஒரு அரை நிமிட அமைதியில் அவன் கையில் எந்த வந்த தொப்பியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிலிங்… சிலிங் என்று சில்லரைகள் விழுந்தன.
”எல்லாருக்கும் மீண்டும் நன்றி. புன்னகை நிறைந்த இனிய நாளாகட்டும். வருகிறேன். வணக்கம்”. வண்டி நின்றது. அவன் இறங்கினான். நான் இறங்க வேண்டிய ‘நாந்த்தேர்’ வந்து விட்டதை உணர்ந்து நானும் இறங்கினேன். அந்த சிலீரென்று வீசிய திறந்த வெளிக் காற்றிலும் உரைந்து போகாமல் என்னைக் கத கதப்பாக உணர்ந்தேன். அந்தப் புன்னகை மன்னன் அடுத்தப் பெட்டியில் நழைந்தான். எனக்கும் புரிந்தது. அங்கே அவன் எடுக்கப் போகவில்லை. எல்லாருக்கும் வழங்கப் போகிறான்.