எங்கும் பயங்கரம். அண்டம் அசைந்தது. புயல்காற்று பயங்கரமாக ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. மக்கள் பயத்தால் நாலா பக்கமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். மரங்களெல்லாம் புயலின் சீற்றத்தைத் தாங்க முடியாமல் முறிந்து உடைந்துகொண்டிருந்தன. பிராணிகளும், பறவைகளும் உயிருக்கு அஞ்சி செய்வதறியாது திசை தெரியாமல் சிதறித் திரிந்தன. மக்களின் வீடுகள் உடைந்து அழிந்துகொண்டிருந்தன. புயல் அண்டத்தை ஆட்டிக் கொண்டிருக்கும் களிப்பில் எக்காளமிட்டு சிரித்துக்கொண்டிருந்தது. திமிர் பிடித்த புயல், மரங்களும் பிராணிகளும் அதன் கோர வெறியால் உடைவதையும் ஓடுவதையும் பார்த்துப் பார்த்து மேலும் மேலும் தன் வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தது. இப்போது மக்கள் சிந்தை குலைந்து ஈசனிடம் கெஞ்சினர். மன்றாடினர்.
‘இறைவா எங்களைக் காப்பாற்று. இந்தப் பயங்கரப் புயலிலிருந்து எங்களைக் காப்பாற்றி உயிர்ப் பிச்சை தந்துவிடு’ மக்களின் மன்றாட்டம் மேலும் விரிவடைந்து கொண்டிருந்தது. ஈசன் நேத்திரங்களை மூடி நிஷ்டையில் அமைதியாக இருந்தான்.
அப்பொழுது, கோரைப் புல்லொன்று புயலுக்கு கிஞ்சித்தும் அஞ்சாது நின்று கோரத் தாண்டவமாடும் புயலைப் பார்த்து சிளீத்துக்கொண்டிருந்தது. எண்ணற்ற மரங்களையும் செடிகளையும் சின்னாபின்னமாக்கி சிதைத்துக்கொண்டிருக்கும் புயலுக்கு அற்ப கோரைப் புல்லை அசைக்க முடியாமல் இருப்பது பெரும் அவமானமாகப் போய்விட்டது. புயல் புல்லின் இறுமாப்பையும், திமிரையும் பார்த்து மீண்டும் தன் வேகத்தைக் கூட்டி, புல்லை அழிக்கத் துடித்தது. கோரப் புல் எதற்கும் அஞ்சாது, புயலையும் அதன் அறியாமையையும் எண்ணி அமைதியாக நின்றது. புயலின் ஆத்திரம் அதன் சென்னியைத் தாண்டியது. மறுகணம், புயலின் ஆட்டத்திற்கெல்லாம் அசையாது நிற்கும் புல்லைப் பார்த்து புயல்,
‘ஏ அற்பப் புல்லே என் சக்தியின் முன்னே இந்த அண்டமே ஆடிக்கொண்டிருப்பதை நீ கண்டுமா எனக்குப் பயப்படாமல் தலைநிமிர்ந்து சிரிக்கிறாய்? திமிர் பிடித்த நாயே! உன்னை நான் அழிக்காமல் விட மாட்டேன் என் பலம் எவ்வளவு உறுதியானது என்பது உனக்குத் தெரியுமா? என் முன்னால் உன் சக்தி ஒரு தூசி என்பதை மறந்து விடாதே’ என்று கூறி அசையாமல் நிற்கும் கோரைப் புல்லை அழித்துவிட, புயல் தன் பலத்தையெல்லாம் கூட்டி பயங்கர சப்தத்துடன் வீசியது. கோரைப் புல் புயலின் வேகத்துக்கு ஏற்றாற்போல அசைந்து மண்ணில் விழுந்து ஈசனைத் துதிப்பதும் மீண்டும எழுவதுமாக நின்று ஆடிக்கொண்டிருந்தது. புயலால் கோரைப் புல்லை எதுவுமே செய்ய முடியவில்லை. பாவம்! கோரைப் புல்லை அழித்துவிட முடியாத புயல் சில மணி நேரங்களில் அமைதியாகிவிட்டது.
மரங்களையும், மிருகங்களையும், மனிதர்களையும் அடித்து நொறுக்கி சிதைத்து சீரழித்துவிட்ட அகோரப் புயல், ஒரு சிறு புல்லிடம் தோல்வியடைந்து வெட்கித் தலைகுனிந்து நிற்பதைப் பார்த்து ஈசன் சிரித்தான். எல்லாச் சக்தியிலும் தன் சக்தியே மேலென்று தலைக்கனம் பிடித்து பேயாட்டம் ஆடிய புயல் இறைவனிடம் மண்டியிட்டுப் பிரார்த்தித்தது.
‘இறைவா இது என்ன புதுமை? உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் சக்தியில் என்ன குறைபாடு?’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது.
எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்…
புயலின் கோரத் தாண்டவத்தால் அடிபட்டு அல்லலுற்று பசியால் கிடந்த மாடொன்று, ஓடி வந்து பச்சைப் பசேலென்று நிமிர்ந்து நின்ற கோரைப் புல்லைக் கடித்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. கருணையே வடிவான இறைவன் சிரிக்கிறான். அவன் சிரிப்பில் தத்துவங்கள் முகிழ்விட்டுக் கொண்டிருக்கின்றன!!!
1 Comment
TikTok ManyChat · ஏப்ரல் 16, 2025 at 16 h 41 min
I am really inspired with your writing abilities as smartly as with the format
in your weblog. Is this a paid topic or did you customize it your self?
Either way stay up the excellent high quality writing, it is uncommon to peer a great
weblog like this one today. LinkedIN Scraping!