நான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு. அதற்கு அடுத்து எப்போதும் வற்றாத பெரிய கிணறு இருக்கும். தண்ணீரும் கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும்.

தென்னந்தோப்பின் காவலே நானும் பாட்டியும்தான். தினமும் தென்னை மரங்களுக்குத் தண்ணீர் விடுவதும், மரத்தில் இருந்து விழும் தேங்காய்களைப் புதிய மோட்டார் ரூமில் கொண்டு போடுவதுமே எங்கள் வேலை. தோப்புக் காவலுக்கு ஆள் வேண்டுமே என்று தோப்புக்குச் சொந்தக்காரர் பாட்டியையுயும், என்னையும் பழைய மோட்டார் ரூமில் தங்க வைத்திருந்தார். மாசம் நூறு ரூபாய் சம்பளமாகப் பாட்டிக்குக் கொடுப்பார்.

பார்க்கும் எல்லோருக்கும் அது மோட்டார் ரூம். ஆனால் எனக்கும் பாட்டிக்கும் அதுதான் வீடு. தென்னை மட்டைகள் மேலே இருந்து கீழே விழும்போது எங்கள் வீட்டு ஓட்டின் மேல் அடிக்கடி விழுவதால் பாதி ஓடுகள் உடைந்தே இருக்கும். அதனால் வெயிலும், மழையும், தென்னை ஓலைகளுக்கு நடுவே ஊடுருவி வரும் நிலா வெளிச்சமும் வீட்டுக்குள் அன்றாட விருந்தாளிகளாக வந்துவிடும். செம்மண் கொண்டு கட்டப்பட்ட சுவர் என்பதால் சுண்ணாம்பு போய் உள்சுவர் எட்டிப் பார்க்கும். தோப்பில் உள்ள மண் மிருதுவான பொடி மணல். அதனால் செருப்பு போடாமல் நடந்தாலும் பாதத்துக்கு சுகமாக இருக்கும். எனக்கும் பாட்டிக்கும் செருப்பு கிடையாது. அதனால் நடக்கும் பாதையைப் பாட்டி நன்றாகப் பெருக்கிப் போட்டிருப்பாள்.

எங்களுக்கு ரேஷன் கார்டோ, அரசின் எந்தச் சலுகைகளோ கிடையாது. சாப்பாட்டுக்கு ரேஷன் அரிசிதான். பாட்டி தென்னை ஓலை ஈக்கலை நன்றாகச் சீவி, துடைப்பமாகக் கட்டி புளியூர் ரேஷன் கடைக்காரருக்குக் கொடுப்பாள். அதனால் அவர் ரேஷன் கடையின் தரையில் சிந்திக் கிடைக்கும் அரிசியை அள்ளி எடுக்க அனுமதிப்பார். அதுதவிர அரிசி லோடு என்றைக்கு வரும் என்கிற தகவலையும் சொல்வார். அரிசி லோடு வரும்போது, லாரியில் அதிகமாக அரிசி சிந்திக் கிடக்கும். லாரி லோடு மேன்களுக்கும் ஒரு புது ஈக்கல் துடைப்பத்தைப் பாட்டி கொடுப்பாள். அதனால் லோடு மேன்கள் லாரியில் சிந்திக் கிடக்கும் அரிசியைக் காலால் வழித்துப் போடுவார்கள். பாட்டி தனது முந்தானையால் மடி ஏந்தி வாங்குவாள். முருகன் என்கிற லோடுமேன் வந்தால் மட்டும் அரிசி குடோனில் சிந்திக் கிடக்கும் அரிசியை ஒரு கவரில் கட்டிக் கொண்டு வந்து கொடுப்பான். இந்த அரிசியைக் கொழித்து, தூசி எடுத்து, பொங்கி பாட்டியும் நானும் சாப்பிடுவோம்.

வீட்டில் அரிசி இல்லை என்றால் நான் மதியம் சத்துணவில் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸ் நிறைய சோற்றை எடுத்து வருவேன். அதில் தண்ணீ ஊத்தி, பாட்டியும் நானும் ராத்திரி கஞ்சியாகக் குடிப்போம். வீட்டில் 40 வால்ட் பல்ப், குழம்பு வைக்க மண்சட்டியும், மூடியும், இரண்டு கப்பு, சின்ன அலுமினிய சோத்துப் பானை, இரண்டு பிளேட், குடி தண்ணீர் குடம். பாட்டிக்கு மூணு பழைய சேலை, எனக்குப் பள்ளிக்கூடத்தில் கொடுத்த யூனிபார்ம் இரண்டு செட்டும், பழைய சட்டையும், இரண்டு நிக்கரும். இவையே எங்க வீட்டின் சொத்து. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் சாப்பிட பிளேட் கிடையாது. குழம்பு வைக்கும் மண்சட்டி மூடியில்தான் நானும் பாட்டியும் சாப்பிடுவோம். அதன்பின் பொங்கல், தீபாவளிக்கு ஊரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசாக இரண்டு பிளேட்டும், ஒரு டிபன் பாக்ஸூம் வாங்கினேன்.

பள்ளிக்கு சமாதானபுரத்தில் இருந்து வரும் நண்பன் சதீஷோடுதான் போவேன். அவனின் அண்ணன் பிரதீஷும் அங்கேதான் படித்தான். இரண்டு பேரும் சைக்கிளில் பள்ளிக்குப் போவார்கள். ஆனால் என் வீட்டுக்குப் பக்கத்தில் வந்த உடன் சதீஷ் இறங்கி விடுவான். அதன்பின் என்னோடு நடந்து பள்ளிக்கு வருவான். புளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாண்டி தான் பள்ளிக் கூடம் இருந்தது.

சமாதானபுரம் சர்ச்சில் சபைநாள் வந்தால் சதீஷ், என்னையும் பாட்டியையும் வந்து கூட்டிக் கொண்டு போவான். அது சி.எஸ்.ஐ. சர்ச். சபைநாள் அன்று வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆட்டிறைச்சி சாப்பாட்டை நான் ஒரு பிடிபிடிப்பேன். இறைச்சி பக்கத்து ஊர் சபைநாட்களிலும், சுடலைமாடன் கோயில் கொடைகளிலும்தான் எங்களுக்குக் கிடைப்பது வழக்கம். சதீஷ் வீட்டில் அவித்த பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு, மிட்டாயையும் எனக்குக் கொடுப்பான்.

நாங்கள் தொடக்கப் பள்ளியிலிருந்தே சேர்ந்தே படித்தோம். என் குடும்ப நிலை சதீஷூக்குத் தெரியும் என்பதால் கூடுதல் கரிசனையோடு இருப்பான்.

ஒருநாள் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது திடீரென பெய்த மழையில் நானும், சதீஷூம் நனைந்து குளித்தோம். அதனால் ராத்திரியில் அவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. மறுநாள் என் வீட்டுப் பக்கத்தில் வந்ததும் இறங்க முயற்சி செய்யும்போது, ‘லே, ஒனக்குக் காய்ச்சலு, அதனால ஆஸ்பத்திரிக்கி வா, கூட்டிட்டுப் போறேன். அதுக்கெ பெறவு நீ சிவாகூட நடந்து பள்ளிக்கூடத்துக்கு வா. காய்ச்சல் ரொம்ப அடிக்கி’ என்று பிரதீஷ் சொன்னான். ‘லே, நீ சைக்கிள்லயே போ. நா பின்னால ஓடி வாரேன்’ என்று நான் சொன்னேன். பிரதீஷ் வேகமாக சைக்கிளை மிதித்தான். நான் சிமெண்ட் சாக்கு புத்தகப் பையைத் தோளின் பின்புறம் போட்டுவிட்டு சைக்கிளின் பின்னால் ஓடினேன். சதீஷ் கழுத்தைத் திருப்பி, என்னைப் பார்த்துக் கொண்டு வந்தான்

பிரதீஷின் சைக்கிள் புளியூர் ஆஸ்பத்திரிக்கு வர நானும் வந்து சேர்ந்தேன். சதீஷோடு உள்ளேபோய் டோக்கன் எடுத்துவிட்டு டாக்டர் ரூம் வரிசையில் நின்றோம். அங்கு இரண்டு வரிசை நின்றது. நான் ஆடிஆடி சதீஷிடம் சத்தமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ‘சத்தம் போடாதீங்க’ என்று உள்ளே இருந்த நர்ஸ் சொன்னாள். மறுபடியும் ஆடிஆடி பேசிக் கொண்டிருந்தேன். மறுபடியும் நர்ஸ் ‘சத்தம் போடாதீங்க’ என்று சொன்னதும் வரிசையில் இருந்து விலகி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

இடதுபுறம் ஒரு குண்டு ஆண் டாக்டர் நோயாளியின் முதுகில் ஸ்டெதஸ்கோப்பை வைத்துப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். வலதுபுறம் பார்த்தேன். அந்தக் கணம் மௌனத்தின் வலை என்னைப் பின்னியது.திறந்து வைக்கப்பட்ட ஜன்னல் வழியாகக் காற்று வீசியதில் ஜன்னல் கர்ட்டன் பறந்து கிழக்கில் இருந்து உதித்த சூரிய வெளிச்சம் உள்ளே வந்தது. அந்த வெளிச்சத்தைத் திரும்பிப் பார்த்தபடி பெண் டாக்டர் முகத்தை நேராகத் திருப்பும்போது தலையில் வைத்திருந்த மல்லிகை பூ ஒன்று உதிர்ந்து மேஜையில் விழுந்தது. மேஜையில் ஆவி பறக்கும் சூடான டீ கப். செடிகளை வருடிச் செல்லும் காற்று, அவளது முடியையும் வருடிச் சென்றது. வரிசையில் இருந்து விலகி நின்ற நான் அவளைப் பார்த்தேன்.

நிலவின் சின்ன வடிவான வட்டமுகம். அதில் சந்தனமும் இளம் காலை வெயிலும் கொடுக்கும் நிறம். உடைத்த நாட்டு மாதுளையின் நிறத்தில் உதடு. பாலில் தோய்த்து எடுத்த பாலாடைக் கட்டிப் போல் கன்னம். மையிட்ட கருவிழிக்குள் நெஞ்சை ஊடுருவும் துப்பாக்கி குண்டின் வண்ணக் கண்கள். கடல், கரையை அடிக்கடி முத்தமிடுவதுபோல் மேல் இமை, கீழ் இமையை முத்தமிட்டது. வளர்பிறை நெற்றியில் அகில உலகையும் அடக்கியதுபோல் சின்ன வட்டப் பொட்டு. காதுமடலில் இரு தோடுகள். முகத்துக்கேற்றார் போல் கூரான சின்ன மூக்கு. தலை சீவாமல் விரித்துவிட்டு, வலது புறமாகக் கோதி விட்டப்படி இருந்த முடிகளில் கொஞ்சம் அவள் போட்டிருந்த டாக்டர் கோட்டின் மீதும் சிதறிக் கிடந்தன. அவளில் இருந்து உருவான வாசம் பேரழகின் காட்டின் வாசமாக இருந்தது. இதழோரம் மெல்லிய புன்னகையோடு என்னைப் பார்த்தாள். அந்தப் புன்னகையில் மகரந்தத் துகள்கள் பறந்தன. நெடுநாள் காத்திருந்த வானம் மழை பொழிய விவசாயிகள் பெருங்காதலை உணருவது போல் நின்றேன். பனிமலையில் இருந்து உருகி ஓடும் ஆறுபோல உள்ளங்கையில் வியர்வை வர கையில் இருந்து பை பிடி தவறிக் கீழே விழுந்தது.

‘லேய் பைய எடுடா’ என சதீஷ் சொன்னான். பையை எடுத்து வரிசையில் நின்று கொண்டு ‘லேய் மக்கா உள்ள ஒரு நர்ஸ் ரொம்ப அழகா இருக்குடா, அதுபோல ஒரு அழகான பொண்ணு நம்ம ஊர்லயே இல்லலே’ எனச் சொன்னேன். சதீஷூக்கும் பார்க்க ஆசை வந்துவிட்டது. டாக்டர் ரூம் கதவருகே வந்து உள்ளே போகும்போது ஆண் டாக்டர் வரச் சொன்னார். உடனே நான் சதீஷை ‘மக்கா இங்க வா. அது என்னன்னு பாரு’ எனத் தோளில் கையைப் போட்டு கூட்டிட்டுக் கொண்டு காட்டினேன்.

‘லே இது ஒனக்குத் தெரியாதா? இந்தெ பைத்தியத்தை இதுக்கு முன்னாடி நீ பாத்தது இல்லயா?’ என ஏசிவிட்டு அடுத்த வரிசையில் நின்றான். அப்போது சதீஷை பெண் டாக்டர் கை சைகையால் கூப்பிட, என் முகத்தில் புன்னகைக் காற்று வீசியது. சதீஷ் உள்ளே நின்று கொண்டிருந்த நர்ஸைப் பார்த்தான். நான் உட்கார்ந்து கொண்டிருந்த பெண் டாக்டரைப் பார்த்தேன். டாக்டர் சதீஷைப் பார்த்ததும் ‘என்னாச்சி, காய்ச்சலா? எப்ப இருந்து? எனக் கேட்டார். அந்த உரையாடல் எதையும் கவனிக்காதது போல் நான் டாக்டரை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘ஆமா மழையில நனைஞ்சேன். அதான்’ என்று சதீஷ் சொன்னான். சேரி சரி சீக்கிரம் சரியாகிடும். இன்னேக்கு ஊசி போட்டு மாத்திரை தாரேன். குறையலன்னா நாளைக்கு வா’ எனச் சொன்னாள். ஊசி போட்டு மாத்திரை வாங்கிவிட்டு நடக்கும்போது ‘அந்த டாக்டர் சூப்பரா இருக்காங்கலே, நாளைக்கும் ஆஸ்பத்திரிக்குப் போலாமா?’ எனக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்தபடி சதீஷ் நடந்தான். கிளாஸிலும் டாக்டரின் நினைப்பாகவே எனக்கு இருந்தது. சாயங்காலம் டாக்டர் இருப்பாங்களோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். காய்ச்சல் எனக்கும் வராதா என ஏக்கம் எனக்குள் துளிர்விட ஆரம்பித்தது. பள்ளி முடிந்து போகும்போது ஆஸ்பத்திரியைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு சென்றேன்.

மறுநாளும் சதீஷூக்குக் காய்ச்சல் குறைய வில்லை. எனக்கு ஒரே சந்தோஷம். ‘ஆஸ்பத்திரிக்குப் போய் பாக்கலாம். டாக்டர் வர சொன்னாவலா, போலாமா?’ எனக் கேட்டேன். காய்ச்சலை விட நான் படுத்திய பாடுதான் சதீஷுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆஸ்பத்திரிக்குப் போனோம். நான் சுற்றி சுற்றி தேடுனேன் பெண் டாக்டரைக் காணவில்லை. ஆண் டாக்டர் மட்டும் இருந்தார். உடனே சதீஷின் நெத்தியில் தொட்டுப் பார்த்து, ‘காய்ச்சல் குறைஞ்சது போல இருக்கு. அதுனால நாளக்கு வரலாம் வாலே’ எனக் கையைப் பிடித்து பள்ளிக்கு இழுத்துச் சென்றேன். டாக்டர் எங்கே போய்ருப்பாங்க என்று மனதில் எழும்பிய கேள்விக்குப் பதில் கிடைக்காமல் இருந்தது.

அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குப் போகும்போது பெண் டாக்டர் இருந்தாள். ஆரஞ்சு நிறச் சுடிதாரில் பின்னிப்போட்ட தலைமுடியோடு இருந்த அவள் என்னை ஒருமுறை மட்டும் பார்த்தாள். சதீஷூக்கு மறுபடியும் ஊசிப் போட்டு மாத்திரை கொடுத்தாள். ‘சதீஷ் யெனக்கு அந்தெ டாக்டர ரொம்பப் பிடிச்சிருக்குல’ என்று நான் சொல்ல, ‘லே அவிய பெரிய டாக்டர்ல. நீ சின்னப் பையன். அப்படி சொல்லக் கூடாதுலே’ என்று சதீஷ் சொன்னான். எனக்கு எதுவும் காதில் விழவில்லை. மறுநாள் எனக்கு வயிற்றுவலி என ஆஸ்பத்திரிக்குப் போனேன். வெந்நீரில் கலக்கிக் குடிக்க மருந்துப் பொடியும், மாத்திரையையும் டாக்டர் கொடுத்து அனுப்பினாள். கதவோரம் வந்து திரும்பி அவளைப் பார்த்துவிட்டு வந்தேன்.

சதீஷ் வெளியே நின்று அங்கே காம்பவுண்ட் சுவர் ஓரமாக, கிழிந்த சேலையோடு உடல் முழுக்க அழுக்காக, உட்கார்ந்து இருந்த ஒரு பைத்தியக்காரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். என் பாட்டி ஒரு வாளியில் சோற்றைக் கொண்டு வந்து அவள் முன்னால் இலையைப் போட்டுத் தட்டிவிட்டுப் போனாள். பைத்தியக்காரி இலையில் கொட்டப் பட்டிருந்த சோற்றை அள்ளி அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எனக்கு உண்மையில் வயிற்றுவலி இல்லாததால் மருந்துப் பொடியையும், மாத்திரையையும் ஆஸ்பத்திரிக்கு வெளியே இருக்கும் சாக்கடையில் போட்டேன். நான் டாக்டரை பார்க்கத்தான் வருகிறேன் என்று சதீஷுக்குப் புரிந்துவிட்டது. காய்ச்சல் குறையாததால் மறுநாள் ஆஸ்பத்திரிக்கு அவனது அண்ணன் பிரதீஷோடு போனான். நான் கிளாஸூக்குப் போய்விட்டேன்.

டாக்டர் சதீஷைப் பரிசோதித்துவிட்டு ‘அவென் இன்னைக்கு வரலையா? அவெனுக்கு வயிற்றுவலி சரியாகிடுச்சா? என்று கேட்டாள். ‘அவனுக்கு வயித்து வலில்லாம் ஒன்னமில்ல டாக்டர். அவென் ஒங்களப் பாக்கத்தான் டெய்லி வாரான். அவெனுக்கு ஒங்களை ரொம்பப் புடிச்சிருக்கு’ என்று சொன்னான். கண்கள் சிரிக்க சதீஷைப் பார்த்தாள். பதிலுக்கு சதீஷூம் சிரித்துவிட்டுப் பள்ளிக்கு நடந்தான். கிளாஸில் என்னைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டிருந்தான். ‘என்னலே சிரிக்க?ஆஸ்பத்திரில நம்ம டாக்டர் இருந்தாவளா?’ என்று கேட்டேன். ‘ஆமாலே இருந்தாவ. அவிய ஒன்னத் தேடுனாவ’ என்று சதீஷ் சொன்னான். அவ்வளவுதான். நான் சொற்களற்று நின்றேன்.

தினமும் ஒவ்வொரு நோய் என்று காரணம் சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போகத் தொடங்கினேன். ஒருமுறை நெஞ்சுவலி என்று சொன்னபோது என் சட்டையைக் கழற்றச சொல்லிவிட்டு, ஸ்டெதஸ்கோப்பை வைத்து பரிசோதித்துவிட்டு கையால் நெஞ்சை அழுத்தமாகத் தடவினாள். அவள் எனக்கு எந்த நோயும் இல்லை என்று கண்டுபிடித்து விட்டாள். சட்டை பட்டனைப் பூட்டத் தொடங்கினேன். அவள் எழுந்து நின்று என் சட்டைக் காலரோடு கையைப் போட்டு கழுத்தோடு இறுக்கி, இன்னொரு கையில் பையைத் தூக்கிக் கொண்டு ‘வா இன்னெக்கு ஒனக்கு ஆப்ரேஷன் பண்ணப் போறேன்’ என டாக்டர் ரூமுக்கு வெளியே இடதுபுறம் போய் வலதுபுறம் திரும்பினால் வரும் ரூமுக்கு இழுத்துக்கொண்டு போனாள். ‘அக்கா விட்டுருங்கக்கா, டாக்டரக்கா ப்ளீஸ்க்கா. இனி வரமாட்டேன்க்கா’ என்று கத்தினேன். கம்பௌண்டரும், நர்ஸ்களும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ‘மணியண்ணே, அந்தெ ஆப்ரேஷன் தியேட்டரை ஓப்பன் பண்ணுங்க’ என்று டாக்டர் அக்கா சொன்னாள். மணி கம்பௌண்டர் ஆப்ரேஷன் தியேட்டருக்கு அடுத்து இருக்கும் ரூமைத் திறந்துவிட்டுப் போய்விட்டார். உள்ளே என்னை இழுத்துக்கொண்டு போனாள். அங்கு ஒரு மேஜையும், இரண்டு சேரும் கிடந்ததன. என்னை இறுக்கி இருந்த கையை விட்டுவிட்டு சேரில் உட்காரச் சொன்னாள். கொஞ்சம் நடுங்கியபடியே உட்கார்ந்தேன்.

கொண்டு வந்த பையைத் திறந்து ஏத்தன் பழம், பப்படத்தையும், டிபன் பாக்ஸில் இருந்த புட்டைத் திறந்து வைத்துவிட்டு கை கழுவி எதிரே உட்கார்ந்தாள். டிபன் பாக்ஸ் மூடியில் கொஞ்சம் புட்டை எனக்கு வைத்தாள். சிரித்தபடியே வேகமாகச் சாப்பிட்டேன். அதன்பின் பழம். என் வயிற்றில் இருந்த பசி அவளின் வயிற்றுக்குப் போனது. ‘மணியண்ணே போய் இரண்டு பழம் வாங்கிட்டு வாங்க’ என்று பத்து ரூபாய் கொடுத்து அனுப்பினாள். வந்த இரண்டு பழத்தையும் சாப்பிட்டுவிட்டு தண்ணீ குடித்தாள். அவளின் வயிறு நிரம்பவில்லையென எனக்குப் புரிந்தது.

‘என்ன படிக்குற? வீடு எங்க? அப்பா அம்மால்லாம் என்னெ பண்ணுறாங்க?’ என்று கேட்டாள். ‘ஏழாம்பு படிக்கேன். சமாதானபுரம் சாலையிலதான் வீடு. அம்மா அப்பா இல்ல.பாட்டிக் கூடத்தான் இருக்கேன்’ என்று சொன்னேன். அவளின் முகம் வெடித்து அதிர்ந்ததுபோல் இருந்தது. ‘கிளாஸூக்கு நேரமாச்சி. நான் போய்ட்டு நாளக்கு வரவா?’ எனக் கேட்டேன். சரி எனச் சிரித்துக்கொண்டு சொன்னாள். அவளைத் திருப்பித் திரும்பிப் பார்த்துச் சிரித்தபடியே வேகமாகப் பள்ளிக்கு ஓடினேன்.

தினமும் நான் போகும்போது டாக்டர் அக்காவும் சாப்பிடக் கிளம்புவாள். எனக்கும் சேர்த்தே டிபன் கொண்டு வருவாள். சதீஷ் என் வீட்டின் பக்கத்தில் வருவதற்க்கு முன் நான் கிளம்பி விடுவேன். அதனால் அவன், அவனது அண்ணனோடு சைக்கிளில் தினமும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான். சர்வசாதாரணமாக ஆஸ்பத்திரி எனக்குப் பரிச்சயமாகிப் போனது. டாக்டர் அக்கா என்னை ‘தம்பி’ என்று கூப்பிடத் தொடங்கினாள். அவளைப் பார்க்காமல் நான் பள்ளிக்குச் செல்வது கிடையாது. ஞாயிற்றுக்கிழமை அவள் வரமாட்டாள். அன்று மட்டுமே தீயின்மீது நிற்பதுபோல் இருக்கும். தோப்பில் தேங்காய் வெட்டும்போது கொஞ்சம் இளநீரையும் வெட்டுவார்கள். அதில் இரண்டை சீவி வாங்கி டாக்டர் அக்காவுக்குக் கொண்டு கொடுப்பேன். சில நாட்கள் பள்ளி தொடங்கிய பின்னும் போகாமல் டாக்டர் அக்காவோடு பேசிக் கொண்டிருப்பேன்.

கை நகங்களைப் பார்ப்பாள். ‘என்னெ இவ்ளோ அழுக்கா இருக்கு? நகத்தை ஒழுங்கா வெட்ட மாட்டியா? எனக் கேட்டாள். ‘நகவெட்டி இல்ல. அதனால பல்லுலக் கடிச்சித் துப்புவேன்’ என்று சொன்னேன். ‘அப்படி செய்யாதே நாளைக்கு வா’ என அனுப்பினாள். மறுநாள் நகவெட்டி வாங்கி வந்து சாப்பிடப் போகும் முன் என் கையைப் பிடித்து நகத்தை வெட்டிவிட்டாள். நான் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெட்டி முடித்ததும் நகவெட்டியை என்கிட்ட கொடுத்து, ‘இதெ நீயே வச்சிக்கோ. நகம் வளர வளர வெட்டு. பல்லால நகத்தக் கடிக்காத’ என்று சொன்னாள். சதீஷிடம் நகவெட்டியைக் காட்டிவிட்டுச் சொன்னேன். ‘லே மக்கா, நா இப்ப டாக்டரை டாக்டர் அக்கான்னுதான் கூப்பிடுறேன். டெய்லி எனக்கு இட்லி தோச புட்டுனு கொண்டு வாராவல. அவியளும் தம்பின்னுதான் கூப்பிடுகாவ’ அவன் ‘செரிசெரி’ என்று சிரித்தான்.

சில நேரம் காலையில் டாக்டர் அக்காவைப் பார்த்துவிட்டு வந்தாலும் கிளாஸில் இருந்து கட் அடித்து விட்டு ஆஸ்பத்திரிக்குப் போய்விடுவேன். முதலில் திட்டுவாள். அதன்பிறகு பேசிக் கொண்டிருப்போம். அவளைவிட அந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் அழகி யாரும் இல்லாததால் வயதான கிழட்டுத் தாத்தாக்கள் முதல் வாலிபப் பையன்மார்கள் வரை அவளைப் பார்ப்பதைப் பார்த்திருக்கிறேன். ‘அக்கா நீ மட்டும் யென் இவ்வளொ அழகா இருக்கிய?’ என்று ஒருநாள் கேட்டேன். ‘நீ ஊருக்குள்ளே இருக்க. அதனால என்னை உனக்கு அழகாத் தெரியுது. ஊரை விட்டு வெளியப் போய் பாரு. என்னவிட அழகான பொண்ணுங்கலாம் இருக்கு’ என்று சொன்னாள். ‘நாளைக்கு சுதந்திர தினம். ஆஸ்பத்திரில கொடி ஏத்தணும். காலையில வந்துரு’ என்று சொன்னாள்.

‘அக்கா, யனக்கு ரொம்ப நாளா கொடி ஏத்தணும்னு ஆசயாருக்கு. நா வளந்ததும் ஒரு நாளாது கொடி ஏத்தாம விடமாட்டேன்’ என்று சொன்னேன். சுதந்திர தினம் அன்று மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் இருந்த கொடிக் கம்பத்தைச் சுற்றி நன்றாகத் தூத்துப்போட்டு, சுற்றிலும் சுண்ணாம்புப் பவுடர் கோடு போட்டிருந்தார்கள். என்னால் ஆஸ்பத்திரியைக் கடந்து பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நேராக டாக்டர் ரூமுக்குள் சென்றேன். வெள்ளை நிறத்தில் ஆரஞ்ச் கலர் பாடர் போட்ட பட்டுச் சேலையை டாக்டர் அக்கா கட்டி இருந்தாள். வழக்கத்தைவிட தலையில் அதிகமாக மல்லிகைப்பூ. வலதுபுறம் மார்பில் சின்ன தேசியக் கொடி குத்தியிருந்தாள். ஒல்லியான தேகத்தில் பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் பொலிவு அவளிடம் இருந்தது.

என்னைப் பார்த்ததும் சாப்பிடும் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். அவளின் ஹேண்ட்பேக்கைத் திறந்து பவுடரைக் கையில் தட்டி, இரண்டு கையால் உரசி என் முகத்தில் பூசினாள். சீப்பால் தலைசீவி விட்டாள். சட்டையை மேலே தூக்கச் சொல்லிவிட்டு என் பேண்ட் ஊக்கைக் கழற்றி, ஜிப்பைத் திறந்துவிட்டு சட்டையைப் பேண்டுக்குள் போட்டு, டக்இன் பண்ணிவிட்டு ஊக்கை மாட்டினாள். அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.

சரி நேரமாச்சி’ என என் கையைப் பிடித்து இழுத்து கொடிக் கம்பம் அருகே சென்று, அவள் பக்கத்திலேயே என்னை நிறுத்திக் கொண்டாள். ஆஸ்பத்திரி ஊழியர்களும், நோயாளிகளின் உறவினர்களும், மருந்து வாங்க வந்தவர்களும் கூடவே அந்தப் பைத்தியக்காரியும் நின்று கொண்டிருந்தார்கள். டாக்டர் அக்கா கொடியேற்ற, கம்பத்துக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு என்னைக் கூப்பிட்டாள். ‘இந்தெ கயிறப் புடிச்சி கீழ இழு’ என்று சொன்னாள். நான் கயிறை மெதுவாக இழுக்க என் கை மேல் கை வைத்து வேகமாக இழுத்தாள். அண்ணாந்து மேலே பார்த்தேன். பொத்தி வைக்கப்பட்டிருக்கும் மொட்டு போல தேசியக் கொடிக்குள் இருந்த பூக்களின் இதழ்கள் மலர்ந்து என்னை நோக்கி வந்து முத்தமிட்டுச் சென்றன. தட்டில் வைக்கப்பட்டிருந்த மிட்டாய்களை ஒவ்வொருவருக்காகக் கொடுக்க ஆரம்பித்தாள். நான் கையை நீட்டினேன். எனக்குத் தராமல் மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ‘அக்கா எனக்குக் கிடைக்கல’ என்று சொன்னேன். அதனைக் காதில் வாங்காதது போல பைத்தியக்காரியைத் தவிர வந்தவர்களுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு ரூமுக்குள் போய் தட்டை மேஜையில் வைத்து விட்டு சேரில் உட்கார்ந்தாள்.

‘யக்கா எனெக்கு யென் மிட்டாய் தரல?’ என்று கேட்டேன். பக்கத்தில் கூப்பிட்டு ‘வெளிய வச்சி உனக்கு மிட்டாய் தந்தா ஒன்னுதான தரணும். இங்க வச்சி தந்தா எவ்வளவு வேணும்னாலும் தரலாம். அதான் அங்க வச்சி தரல’ என்று கை நிறைய மிட்டாய்களை அள்ளி என் பாக்கெட்டில் போட்டாள். தட்டில் இருந்து இரண்டு மிட்டாயை எடுத்து, ஒரு மிட்டாயைப் பிரித்து டாக்டர் அக்காவிடம் நீட்டினேன். வாயால் கவ்விக் கொண்டாள். ‘சரி நா பள்ளிக் கூடத்துக்குப் போயிட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். கையில் இருந்த ஒரு மிட்டாயை வெளியே தெரியும்படி இடது கையில் வைத்திருந்தேன். பைத்தியக்காரி கொடிக்கம்பம் தாண்டி குத்த வைத்து உட்கார்ந்து இருந்தாள். அவளைக் கடந்து செல்லும்போது என் கையைப் பிடித்து உருவி அந்த மிட்டாயை எடுத்தாள். ‘ஒங்களுக்கு டாக்டர் அக்கா மிட்டாய் தரலயோ?’ என்று கேட்டுவிட்டு பாக்கெட்டில் இருந்து இன்னொரு மிட்டாயை எடுத்து நீட்டினேன். அவள் வாங்கவில்லை. அவளின் முன்னால் வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். டாக்டர் அக்கா ஜன்னல் வழியாக எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆஸ்பத்திரியில் நான் போய் அதிகநேரம் பேசுவதால் அங்கு இருக்கும் நர்சுகளுக்கும், கம்பௌண்டருக்கும் எரிச்சலாக இருக்கும். அவர்கள் ‘என்னெ டாக்டர், நீங்கெ போயி இந்தப் பய கூடலாம் பழகுறீங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘ஸ்கூல்ல எதாவது பிள்ளய உனக்குப் பிடிக்குமா?’ என்று கேட்பாள். ‘இல்லக்கா, எனக்கு உங்களப் பாத்த பெறகு யாரையும் பிடிக்கல’ என்று சொல்வேன். ‘எப்பிடி படிக்கிற, ஒன் பிராகிரஸ் கார்ட் கொண்டு வா’ என்று சொன்னாள். படிப்பு எனக்கு சரியா வராது. தமிழுக்கு முப்பத்தியஞ்சு மார்க்கும், வரலாறுக்கு தொன்னித்தியஞ்சு மார்க்கும் வாங்குவேன். மற்ற பாடங்கள் பெயிலாயிடுவேன். பாட்டியின் பெயரை நான்தான் பிராகிரஸ் கார்ட்டில் எழுதிக் கொண்டு கிளாஸில் கொடுப்பேன். இதுவரை எங்க டீச்சர் கண்டுபிடிச்சது இல்லை. டாக்டர் அக்கா பிராகிரஸ் கார்ட் கேட்டதும் சிரித்துவிட்டு ‘சரிக்கா கொண்டாரேன்’ என்று சொல்லி இரண்டு மாதங்கள் கடத்தினேன்.

அவளுக்கு மாதம் தோறும் சம்பளம் வரும் மறுநாள் எனக்கு புது டிரஸ் வாங்கிக் கொண்டு வருவாள். சுதந்திர தினம் அன்று எனக்கு டக் இன் பண்ணி விடும்போது, உள்ளே நான் ஜட்டி போடாததைப் பார்த்தபின் ஜட்டியும் வாங்கிக் கொண்டு வந்தாள். லக்ஸ் சோப்பு, பான்ஸ் பவுடர், லூனார்ஸ் கட்டு செருப்பும் வாங்கித் தந்தாள். மிட்டாய் வாங்க அடிக்கடி பைசா தருவாள். அவளது அம்மாவின் பழைய சேலைகளைப் பையில் வைத்துக் கொண்டுவந்து என் பாட்டியிடம் கொடுக்கச் சொல்வாள். ‘குளிக்கதுக்கு முன்னால தலையில எண்ணெ தேக்கணும். இல்லன்னா முகத்துல எண்ணெ வடியும்‘ என்றும் சொன்னாள். அவளது ஊர் நாகர்கோவில் தாண்டி இருக்கும் என்பதால் காலையிலேயே கிளம்பி வருவாள். பஸ்ஸில் வரும்போது கதைப் புத்தகங்களை வைத்திருப்பாள். அவளது கையில் பெரும்பாலும் தி.ஜானகிராமன் புத்தகமும், அசோகமித்திரன் புத்தகமும் இருக்கும். ‘வீட்டுல சும்மா இருக்கும்போது நீயும் படி’ என ஸ்ரீரங்கத்து தேவதைகள் புத்தகத்தை எனக்குக் கொடுத்தாள். பள்ளிக்கூட புத்தகமே தூக்கத்தைக் கொடுக்கும்போது கதைப் புத்தகத்தை வாசிக்க என்னால் முடியவில்லை என்று சொன்னேன்.

‘ஒனக்கு என்ன ஆச?’ என்று கேட்டாள். ‘அக்கா, எனக்குப் படம் எடுக்கணும்னு ஆசக்கா. சினிமாக்குப் போணும்க்கா’ என்று சொன்னேன். ‘அங்கப் போகணும்னா, இதுபோல நிறைய புக்கு படிக்கணும். நிறைய கத எழுதணும்‘ என்று சொன்னாள்.

எனக்குக் கணக்குப் பாடம் சுத்தமாக வராது. அதனால் குளோரி டீச்சர் கை மொளிக்கட்டையில் அடிப்பாள். வலி தாங்க முடியாமல் துடிப்பேன். அப்போதுதான் பக்கத்து கிளாஸ் முருகனுக்கு டி.பி. நோய் இருந்தது. அதற்காக அவன் மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு டி.பி. என்பதால் அவனை மட்டும் குளோரி டீச்சர் அடிக்க மாட்டாள். என்னால் அடி தாங்க முடியாமல் ‘டீச்சர், எனக்கு நெஞ்சுவலி டீச்சர். அடிக்காதீங்க டீச்சர்’ எனச் சொன்னேன். ‘லேய் பொய் சொல்லாதலே, உண்மையில ஒனக்கு நெஞ்சி வலின்னா, ஆஸ்பத்திரி சீட்டக் கொண்டு வா. அதுக்கப் பொறவு ஒன்ன அடிக்க மாட்டேன்’ என்று சொன்னாள். என்ன செய்ய என நான் யோசித்துவிட்டு டாக்டர் அக்காகிட்ட கேட்டுற வேண்டியதுதான் என மறுநாள் ஆஸ்பத்திரிக்குப் போனேன். அன்றைக்கு டாக்டர் அக்கா வரவில்லை. அன்றுதான் கணக்கு டீச்சர் பரீட்சை பேப்பர் தருவதாகச் சொன்னாள். எப்படியும் அடி கிடைக்கும் என நினைத்துவிட்டு திரும்பி வீட்டுக்குப் போனேன். பாட்டி துடப்பம் விற்கப் போயிருந்தாள். சாயங்காலம் ஆஸ்பத்திரிக்குப் போய் பார்த்தேன். அக்கா வரவில்லை. அடுத்த நாள் காலையில் டாக்டர் அக்காகிட்டப் போயி ‘அக்கா நான் ஒன்னு கேட்டா தருவியளா?’ என்று கேட்டேன். ‘என்னடா என்னெ வேணும்? சீக்கிரெம் சொல்லு’ என்றாள்.

‘இல்லக்கா யெங்க கணக்கு டீச்சர் கை மொளிக்கட்டையில நல்லா அடிப்பாவ, அடி வலி தாங்க முடியல. அதனால யெனக்கு நெஞ்சி வலி, அடிக்காதீங்க டீச்சருன்னு சொன்னேன். அதுக்கு ஒனக்கு நெஞ்சி வலின்னு ஆஸ்பத்திரில இருந்து கொடுத்த சீட்ட கொண்டுவான்னு சொன்னாவ, யெனக்கு நெஞ்சிவலின்னு சீட்டு எழுதித் தருவியளா?’ என்று கேட்டேன். அதிர்ச்சியான அவள் ‘தம்பி இதுலாம் தப்புடா, அது நான் செய்யுற வேலைக்குச் செய்யுற துரோகம்‘ என்று சொன்னாள். நான் விடாமல் தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்ததால், ஒரு வெள்ளை ப்ளையின் பேப்பரில் இங்கிலீஷில் எழுதித் தந்துவிட்டு பேசாமல் மௌனமாக இருந்தாள். நான் டீச்சரிடம் கொண்டு கொடுத்தேன். அதன் பின்னை அடிப்பது இல்லை. கணக்கி பீரியட் மட்டும் என்னை நோயாளியாகத் தான் கிளாஸ் பார்க்கும்.

தீபாவளிக்குப் புது பேண்ட் சட்டை, அவங்க வீட்டில் செய்த பலகாரம் எனக் கொண்டு வந்தாள். அடிக்கடி ‘நீ யென் கூட எங்க வீட்டுக்கே வந்துடுறியா? யெனக்கு தம்பி இல்ல. எங்க அப்பா என்ன டாக்டராக்குனது போல ஒன்னயும் கலெக்டர் ஆக்குவாரு வாறீயா? என்று கேட்பாள். ‘இல்லக்கா, யெனக்குப் பாட்டி மட்டும்தான இருக்காவ, வேற யாரும் யெனக்குக் கெடையாது. அதுனால, அவியள விட்டுட்டு என்னால வர முடியாது. பாட்டி செத்தப் பெறவு வரட்டாக்கா?’ என்று கேட்பேன். லீவு நாள் சனிக்கிழமை பாட்டி ஆஸ்பத்திரிக்கு வெளியே இருக்கும் பைத்தியக்காரிக்குச் சோறு கொண்டு கொடுக்க வரும்போது நான் கூடப் போவேன். அப்போ டாக்டர் அக்கா கிட்டயும் பாட்டியைக் கூட்டிட்டுப் போவேன். ‘யெம்மா தாயி எப்ப பாத்தாலும், ஒன்னப் பத்திதான் புலம்பிட்டே இருக்கான். நீ நல்லாயிரு தாயி!’ என்று பாட்டி சொல்லிவிட்டுப் போவாள்.

அது ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரி என்பதால் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்கள்தான் வருவார்கள். அவர்களிடமும் கரிசனையோடு டாக்டர் அக்கா பேசுவாள். சிலர் வீட்டு விஷேசங்களுக்குக் கூட அவளுக்குப் பத்திரிக்கை கொடுத்துவிட்டுப் போவார்கள். நாங்க ரொம்பப் பாவம் என்பதால் கல்யாணம், சடங்கு, வீட்டுப் பால்காய்ப்பு போன்ற விஷேசங்களுக்கு யாரும் எங்களுக்கு கார்ட்டு தரமாட்டார்கள். சதீஷூக்கோ அல்லது கருங்குளத்தான்விளை குமாரவேல் வீட்டுக்கோ கார்ட்டு இருந்தால் அவர்கள் மத்தியானம் சாப்பிட விஷேச வீட்டுக்குப் போவார்கள். அவர்களோடு நானும் போவேன். எனக்கு கார்ட்டு கிடையாது என எல்லாருக்கும் தெரியும். கல்யாண வீட்டு அவியலும், தயிர் பச்சடியும், சாம்பாரும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால் நானும் விரும்பி சாப்பிடப் போவேன். எங்க கிளாஸில் படிக்கிற மாணவர்கள் வேறு யாராவது இருந்தால் ‘லே சிவா ஒனக்கு கார்டு கெடையாதுல? சோறு திங்க வந்தியா?’ என்று கேட்பார்கள். பெரும்பாலும் மதன்தான் கேட்பான். அந்த நிமிடம் என்னை அறியாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வரும். சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை மூடாமல், கையில் இருக்கும் எச்சி சோத்தையும் உதறிப் போட்டுவிட்டு போயி கை கழுவுவேன். அதனால் எந்த விஷேச வீட்டுக்கும் நான் போவது கிடையாது.

டாக்டர் அக்காவிடம் மருந்து வாங்க வரும் புளியூர் கீழச்சாலையைச் சேர்ந்த ஒருவரின் மகளுக்குக் கல்யாணம். அதனால் அவர் டாக்டர் அக்காவுக்கு கார்ட்டு கொடுத்து கண்டிப்பா வரணும் என்று சொல்லி இருந்தார். கல்யாணம் அன்று காலையில் நான் டாக்டர் அக்காவைப் பார்க்கப் போகும்போது மதியம் சாப்பிட கல்யாண வீட்டுக்கு வாரீயா? நா போறேன்’ என்று கூப்பிட்டாள். ‘இல்லக்கா நா வரல. எவனாது ஒனக்கு கார்டு கிடையாதுல. நீ எதுக்கு வந்தன்னு கேட்டுறுவாங்க. நா வரலக்கா’ என்று சொன்னேன். ‘டேய் தம்பி அதுலாம் ஒன்னுமில்ல, நா மதியம் வருவேன். நீயும் வந்துரு. அங்க சாப்பிடலாம். கார்டுதான பிரச்சனை. இந்தா, இந்த கார்டை வச்சிக்கோ. இனி நீயும் வா’ என்று சொன்னாள். மதியம் சாப்பிடப் போகும்போது கார்டையும் கையில் கொண்டு போனேன். டாக்டர் அக்கா பக்கத்தில் இருந்து சாப்பிட்டேன். அவளை எல்லோருக்கும் தெரியும் என்பதால் நல்ல உபசரிப்பு. அதில் சாப்பாடு விளம்பிக் கொண்டிருந்த அண்ணன்கள், நாங்க இருந்த பெஞ்ச் முன்னாடியே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தார்கள். அன்றுதான் கல்யாண வீட்டில் முழுசாகச் சாப்பிட்டது. குமாரவேலின் அப்பாவின் கடை புளியூரில் இருந்தது. கிறிஸ்மஸ் முதல் அங்கு வாழ்த்து அட்டையும் பட்டாசும் விற்பனைக்கு இருக்கும். கிளாஸில் என்னை யாரெல்லாம் கிண்டல் அடிப்பார்களோ, சண்டை போடுவார்களோ அவர்களின் வீட்டு அட்ரஸூக்கு ஸ்டாம்பு ஒட்டாமல் பொங்கல் வாழ்த்தை, என் பெயரை எழுதாமல் மொட்டையாக அனுப்பி விடுவேன். வீட்டில் ஃபயின் கட்டி வாங்குவார்கள். அதன்பிறகு ராஜேஷூம், மதனும் வீட்டுக்குப் போய் அடி வாங்குவார்கள்.

பொங்கலுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்தது. அந்த மழையில் எனக்குக் காய்ச்சல் வந்தது. ஆஸ்பத்திரியில் டாக்டர் அக்கா ஊசிப் போட்டு மாத்திரை கொடுத்தாள். ஆன பிறகும் குறையலை. பள்ளிக் கூடத்துக்குப் போனேன். சாப்பிட்டால் வாந்தி வந்துவிடும். உடனே மயக்கமும் வரும். அதனால் கிளாஸில் படுத்திருப்பேன். நான் படுத்திருந்ததைப் பார்த்த ஜெயக்குமார் சார் குமாரவேலிடம் ‘சிவாவை சைக்கிள்ல கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு வீட்டுல விட்டுட்டு வா’ என்று சொன்னார். மதியம் நல்ல வெயில். என்னால் கண்ணைத் திறந்து வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை. சைக்கிள் கேரியரில் உட்கார்ந்தேன். அவன் உருட்டிக் கொண்டு நடந்தான். ஆஸ்பத்திரிக்கு வந்ததும் எச்சிலையில் சோறு தின்னு கொண்டிருந்த அந்தப் பைத்தியக்காரி என்னைக் கண்டு எழும்பிப் பார்த்தாள். மெதுவாக டாக்டர் ரூமுக்குப் போனோம். அக்கா புக் படித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘ டேய் சிவா என்னாச்சி?’ என்று கேட்டாள். ‘டாக்டர், இவென் சாப்பிட்டுட்டு வாந்தி எடுத்து மயக்கம் போட்டுட்டான். அதான் சார் ஆஸ்பத்திரில விட்டுட்டு வீட்டுல விடச் சொன்னாரு’ என்று குமாரவேல் சொன்னான். ‘சரிப்பா, நீ ஸ்கூலுக்குப் போ. நான் இவென வீட்டுல விட்டுருகேன்’ என்று சொல்லி டாக்டர் அக்கா குமாரவேலை அனுப்பினாள்.

நான் ரொம்ப சோர்வாகப் படுத்து இருந்தேன். குளுக்கோஸ் போட்டார்கள். அப்படியே கொஞ்சம் தூங்கினேன். டாக்டர் அக்கா பக்கத்திலேயே கையைத் தடவிக் கொண்டு இருந்தாள். குளுக்கோஸ் ஏறி முடித்ததும், கம்பௌண்டர் மணி அண்ணனிடம் ‘அண்ணே ஒரு ஆட்டோவோ, டாக்ஸியோ பிடிச்சிட்டு வாங்க. இவென வீட்டுலக் கொண்டு விடணும் என்றாள். ‘என்ன டாக்டர் நீங்கெ, நடந்து போகச் சொல்லுங்க. இல்லன்னா, யாருக்க சைக்கிளில ஏத்தி விடுங்க’ என்று மணி அண்ணன் சொன்னார். ‘சரி நானே போய் ஆட்டோ பிடிச்சிக்குறேன்’ என்று அவள் வெளியே போகும்போது மணி அண்ணன் வேகமாக நடந்து ஆட்டோ பிடிக்கப் போனார். ஆட்டோ வந்ததும் வலது கையை டாக்டர் அக்கா பிடித்து தூக்கியதும், இடது கையை மணி அண்ணன் தாங்கிப் பிடித்தார். ஆட்டோவில் மெதுவாக ஏற்றிவிட்டு, ரூமில் போய் பர்ஸை எடுத்துக்கொண்டு வந்து ஆட்டோவில் ஏறி, ‘வழி சொல்லுப்பா’ என்று சொன்னாள். நான் சமாதானபுரம் சாலையில் போகச் சொன்னேன். வீட்டுப் பக்கம் வந்ததும் ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். தோப்பில் தென்ன மட்டைகளை ஒதுக்கி போட்டுக் கொண்டிருந்த பாட்டி என்னைப் பார்த்ததும் வேகமாக வந்தாள். மெதுவாக ஆட்டோவில் இருந்து இறங்கினேன். ஆட்டோக்காரருக்குப் பணம் கொடுத்துவிட்டு என் கையைப் பிடித்து வீட்டுக்குக் கூட்டி வந்தாள்.

‘லே மக்கா என்னல ஆச்சி ஒனக்கு?’ எனப் பாட்டி கேட்டாள். ‘ஒன்னுமில்ல பாட்டி, காய்ச்சலும் வாந்தியும்தான். இரண்டு நாளுல சரியாகிடும். அப்படி சரியாகலன்னா பிளட் டெஸ்ட் பண்ணிப் பாக்கணும்‘ என்று சொல்லிவிட்டு ‘வீடு எங்க இருக்கு?’ என்று டாக்டர் அக்கா கேட்டாள். பாட்டி மோட்டார் ரூமைக் காட்டினாள். வீட்டிக்கு வெளியே அசை கயிற்றில் டாக்டர் அக்கா வாங்கிக் கொடுத்த டிரஸ்கள் கிடந்தன. பாழடைந்த வீடாக இருந்தது. மணி அப்போது நாலரை இருக்கும். அதனால் வெயில் வீட்டுக்குள் விழவில்லை. உட்கார சேர் இல்லை. பாட்டி கிழிந்துபோன கோரைப் பாயை விரித்து இரண்டு சேலை சுருட்டு தலையணையாக வைத்தாள். மெதுவாகப் படுத்தேன். டாக்டர் அக்கா வாசலில் உட்கார்ந்தாள். பாட்டியில் சாணி மொழுகிய தரையில் காலை ஒரு பக்கமாக மடக்கி உட்கார்ந்தாள். நான் கண்களை மூடி இருந்தேன். ‘பாட்டி சிவாவோட அம்மா அப்பாவுக்கு என்னாச்சி? எப்படி இறந்தாங்க? உங்களோட மகனோட பிள்ளையா? மகளோட பிள்ளையா? எனக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். பாட்டி என்னைத் திரும்பிப் பார்த்தாள். நான் கண்களை மூடியிருந்தேன். எனக்குக் கொஞ்சம் பெரியகண் என்பதால் தூக்கத்தில் பாதிக்கண் திறந்து இருப்பது பாட்டிக்குத் தெரியும். நான் தூங்கிட்டேன் என்று நினைத்து பாட்டி நிதானமாகப் பேசத் தொடங்கினாள். ‘ இவெ யென் மக புள்ளையோ, மவென் புள்ளையோ இல்லம்மா.

‘நா மக்களாலயும், மருமக்களாலயும் விரட்டி வுடப்பட்ட அனாத, கன்னியாகுமெரி ரயில் தண்டவாளத்துக்க வடக்குப் பக்கம்தான் இவென் அம்ம இருந்தா. நா மையிலாடில இருந்து கௌம்பி கடல்ல உழுந்து செத்துறலாம்னு நெனைச்சி வந்தேன். பசி மயக்கத்துல இவெ வீட்டு முன்னாடி உழுந்துட்டேன். பக்கத்துல ஒன்னு ரெண்டு வீடுகதான் இருந்திச்சி. இவெ அம்ம ராதிகாளத் தவிர யாரும் வந்து தூக்கல. அவெதான் தண்ணீ கொண்டாந்து தெளிச்சி எழுப்புனா. ‘யம்மா ராசாத்தி ஒரு வா சோறு தா’ன்னு கேட்டேன். வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போயி அடுக்களையில இருந்து கஞ்ச புழிஞ்சி, பழைய மீன்கறிய ஊத்தி எடுத்துத் தந்தா. அப்ப இந்தப் பயலுக்கு மூணு வயசுதான் இருக்கும். நான் தின்னுக்கிட்டே ‘யம்மா ஆம்பள இல்லாத வீடாருக்கே. ஒன் மாப்பிள எங்கே?’ன்னு கேட்டேன். உடனே அடுக்களைத் திண்டுல சாஞ்சி, கீழ இருந்துட்டு அழத் தொடங்குனா.

‘யம்மா, யம்மா அழுகாத. நீ சொல்லாண்டாம்னா விடு’ன்னு சொன்னேன். சேலையால மூஞ்சைத் துடச்சிட்டு, ‘யெனக்கு தாமரக்குளம். அம்மையும் அப்பாவும் கெடயாது. சித்தி வீட்டுலதான் நின்னு வளந்தேன். அப்ப நா பதினொன்னாவது படிச்சிட்டு இருக்கும்போது, தாமரக்குளத்துல ரவுடி சுயம்பு குரூப்பைச் சேர்ந்த ஒருத்தன் புல்லட் பைக்குல அடிக்கடி ரவுண்டு அடிப்பான். அந்த புல்லட்டும், அந்த ‘டொக்டொக்‘ சத்தமும் புடிச்சிப் போயி, அந்த வண்டிய யதாவது கடேக்க முன்னாடி நிப்பாட்டி இருந்தா, ஓடிப் போயி தொட்டுத் தடவிப் பாப்பேன். அது அவனுக்கும் தெரியும். நா புன்னயடில இருக்க, யென் பெரியம்மா வீட்டுக்குப் போவும்போது திடீரென எதுக்க வந்தான். என்னப் பாத்து சிரிச்சான். நானும் சிரிச்சேன். ரோட்னுல ஆள் நடமாட்டம் அவ்வளோ இல்ல. பக்கத்துல வந்து பேசனான். ‘இந்தெ புல்லெட் ஒனக்குப் புடிச்சிருக்கா. ஒரு ரவுண்டு போலாமா’ன்னு கேட்டான். நானும் சரின்னு வண்டில ஏறி அவென் முதுகு பின்னாடி மொகத்த மறைச்சிட்டு இருந்தேன். நேரா இந்தெ வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டான். பொறவு என்ன பேசி மயக்கி எல்லாத்தையும் முடிச்சான். நீ இங்கயே இரு. ஒன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான். எல்லாம் முடிஞ்ச பொறவு திரும்பி எப்பிடி போவதுக்குன்னு இருந்துட்டேன்.

ஒரு வருசத்துக்குள்ள இவெனும் இவென் கூட்டாளிகளுமா எதிர் கோஷ்டி முத்துக்க தம்பிய வெட்டிக் கொன்னுப் போட்டாங்க. அதெனால போலீஸூம், முத்து கோஷ்டியும் தேடிச்சி. வீட்டுக்கு வரமாட்டான். யெனக்கு சாப்பாட்டுக்கு வழியில்ல. அப்பதான் யெம் புள்ள பொறந்தான். பீடி சுத்தி, ஓல மொடைச்சிதான் ஒரு பிடி கஞ்சி குடிச்சேன். யென் மாப்பிளயத் தேடி போலீஸ்காரங்க, வீட்டுக்கு ராத்திரில வந்து கதவத் தட்டுவாங்க. நா தெறந்து பாத்து இல்லன்னு சொன்னாலும் வீட்டுக்குள்ள வந்து பாப்பானுக. இல்லன்னு தெரிஞ்சா குண்டிய தட்டிட்டு, முலையப் புடிச்சிட்டுப் போகத் தொடங்குனானுக. நாளு போகப்போக யெ மாப்பிள எங்கெ போனான்னு தெரியல. திடீரென ஒருநா தாமரக்குளம் தாண்டி ரயில் தண்டவாளத்துல யெம் மாப்பிளயையும், அவென் பிரண்டையும் வெட்டிக் கொன்னு போட்டுருந்தாங்க. அதுக்கப் பொறவு வீட்டுக்கு ராத்திரில வந்த போலீஸ்காரனுக அவெனுக கூட படுக்கலன்னா கஞ்சா விக்க, பிராத்தல் பண்ணுகன்னு கேஸப் போட்டு உள்ளத் தள்ளிருவோம்னு மிரட்டி மிரட்டிப் படுத்தானுவ. போலீஸ்னால பக்கத்துல யாரும் சத்தம்கூடப் போட மாட்டாவ. இப்படியேத்தான் நடந்துட்டு இருக்கு. யென் புள்ளக்காகதான் உயிரோடு இருக்கேன்’ னு சொன்னா.

என்னப் பத்தி கேட்டா. நானும் யென் கதெயச் சொன்னதும் ‘யெனக்கு தொணைக்கு நீங்க இருப்பியளான்னு கேட்டா. சரின்னு நானும் அவ கூடயே இருந்தேன். அப்பவும் ராத்திரில போலீஸ்காரனுவ வருவானுவ. நான் உள்ள இருக்கதப் பாத்தா ஒரு சவுட்டு சவுட்டு வெளியப் போவச் சொல்லுவானுவ. நான் திண்ணயில போய்ப் படுப்பேன். நா வந்து ஒருமாசம் கழிச்சி இரண்டு போலீஸ்காரனுவ வீட்டுக்கு ராத்திரில வந்தானுவ. என்ன சவுட்டி வெளிய அனுப்பிட்டு அவகூடப் படுக்கப் போனானுவ. அப்ப இந்தப் பய சேலத் தொட்டில ஒறங்கிட்டுக் கிடந்தான்.

இரண்டு பேருகூடயும் படுக்கலன்னா, பிள்ளயக் கொன்னுருவோம்னு சத்தம் போட்டானுவ. மாறி மாறி புடிச்சித் தள்ளுனதுல, செவத்துல முட்டி விழுந்து அமைதியாயிட்டா. இரண்டு பேரும் வெளியப் போனதுக்குப் பொறவு உள்ளப் போய்ப் பாத்தேன். அவ அழவோ பேசவோ செய்யல. நா அழுதுகிட்டே படுத்தேன். இரண்டு நாளா அவ எதையும் பேசல. பித்துப் பிடிச்சிப் போயி இருந்தா. ஆனா பொறவும் போலீஸ்காரனுவ வரதை நிறுத்தல. ராத்திரியோட ராத்திரியா இந்தெப் பயலத் தூக்கித் தோளுலப் போட்டுட்டு, அவௌ ஒரு கையிலப் புடிச்சிட்டு நடக்கத் தொடங்கினேன். நடந்து நடந்து இந்த்த் தோப்புல வந்து படுத்தோம். காலம்பற விடிஞ்சதும் தோப்புக்காரரு வந்து விசாரிச்சி விரட்டுனாரு. நா அவரு காலப் புடிச்சி எதாவது வேல கொடுங்கன்னு கெஞ்சினேன். அவரும் பெரிய மனசு பண்ணி இந்த மோட்டரு பெறயில தங்கச் சொன்னாரு. இவென் அம்ம இரண்டு நாளு வீட்டுல இருந்தா. அதுக்கப் பொறவு, பித்து பிடிச்சி ரோட்டுல நடக்கத் தொடங்கிட்டா. இந்த பச்சப் புள்ளயப் பாத்துக்கணுமேன்னு நானும் இருந்துட்டேன். இன்னும் எவ்ளவு நாளு நானும் இருக்கப் போறேன்னு தெரியல’ என்று பாட்டி அழுதாள்.

‘பாட்டி, இவென் அம்மா இப்ப எங்க இருக்காங்க தெரியுமா?’ என்று டாக்டர் அக்கா கேட்டாள்.

‘மக்கா, ஒன் ஆஸ்பத்திரி வாசல்ல ஒரு பைத்தியக்காரி இருக்கால்ல, அவதான் இவென் அம்ம. இந்த விசயம் எதுவும் இந்றீதெப் பயலுக்குத் தெரியாது. நீயும் சொல்லிப்புடாத மக்கா’ என்று பாட்டி அழுதுகொண்டே சொன்னாள்.

கண்ணை மூடிப் படுத்திருந்த எனக்கு இரு கண்ணோரத்தில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. இரண்டு பேரும் என்னை கவனிக்கவில்லை. டாக்டர் அக்காவும் அதே நேரம் அழுதுவிட்டாள். ‘சரி பாட்டி, நான் போய்ட்டு வாரேன்’ என்று அவள் கிளம்பினாள். நான் எழும்பவில்லை. அவளை ‘நில்லு மக்கா, நா ஒன்னக் கொண்டு உடுகேன்’ என்று பாட்டி ஆஸ்பத்திரி வர கொண்டு விட்டுவிட்டு வந்தாள்.

அவர்கள் போன பிறகு என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. ஏதோ அசதியில் தூங்கி விட்டிருந்தேன். மறுநாளும் நான் தூங்கும்போது டாக்டர் அக்கா வந்து பார்த்துவிட்டு பாட்டியிடம் ஏதோ இங்கிலீஷில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்.

இரண்டுநாள் கழிச்சி நான் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது டாக்டர் அக்காவைப் போய் தேடினேன். கம்பௌன்டர் மணி அண்ணன் வந்து, ‘தம்பி டாக்டர் இங்கருந்து மாறிப் போயிட்டாங்க. இனி வரமாட்டாங்க’ என்று சொன்னார். வெளியே வந்து என் பைத்தியக்கார அம்மாவைத் தேடினேன். என்னைப் பார்த்துக் கொண்டிருந்த மணி அண்ணன் ‘என்னாச்சிடே, எதெ தேடுக? என்று கேட்டார். ‘இல்லெனே, இங்க ஒரு பொம்பள இருக்கும்லா. அவியளத் தேடுகேன்’ என்று சொன்னேன். ‘ஓ… அந்தெப் பைத்தியத்தையா? அதெயும் டாக்டர் எதோ பையித்தியக்கார ஆஸ்பத்திரில சேக்கக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க’ என்று சொன்னார். கண்ணீர் பொங்கியது. என் அம்மா சாப்பிட்டு போட்டிருந்த எச்சில் இலையைப் பார்த்தபடி, டாக்டர் அக்காவை நினைத்துக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு நடக்கத் தொடங்கினேன்.

Categories: சிறுகதை

3 Comments

இளங்குமரன் தா. · மே 2, 2018 at 9 h 12 min

அந்த டாக்டர் அக்கா யார்? ஏன் வேலையை மாற்றிக் கொண்டு போக வேண்டும்?

அழகர் · மார்ச் 8, 2020 at 2 h 11 min

இந்த கதை அடுத்த பாகம் விடுங்க

ரேணுகா · மே 21, 2020 at 17 h 16 min

அருமை. ஒவ்வொரு முறை ராம் தங்கம் அவர்கள் கதை படிக்கும் போதும் இதயம் கணகின்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »