sakthyjothy_tamilnenjam

தீர்க்கமான் பேச்சு, சிறந்த தமிழாற்றல், நட்பினை மதிக்கும் சீரிய குணம், எப்பொழுதும் முகமலர்ச்சி, வந்தாரை வரவேற்கும் பாங்கு, சீர்மிகு விருந்தோம்பல் இத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்ற கவித்தென்றல் திருமதி. சக்திஜோதி அவர்களின் சந்திப்பின் நீண்ட உரையாடலில் …

படைப்பாளராக உங்களைப் பற்றி நீங்களே …

சிறுவயது முதலாகவே வாசிப்பிற்குள் இயல்பாகவே நுழைந்து விடுபவர்களின்  இறுதியான இலக்கு படைப்பு.  எனக்குள்ளும் அந்தக் கனல் கனன்று கொண்டுதான் இருந்தது.

சங்க இலக்கியத்தின்பால் எனக்குள்ள ஈடுபாடும் நவீன கவிதைகளும் என்னை கவிதைத்தளம் நோக்கித் திரும்ப வைத்தன.

இயற்கையையும் அதனோடு இணைந்து வாழ்க்கையையும் விட்டு நாம் விலகிச் செல்வதும்,  இன்றைக்குப் பல்வேறு வகைகளில் சிக்கல் மிகுந்ததாய் அமைந்துவிட்டதுமான நமது  வாழ்க்கைமுறையும் என்னைச் சலனப்படுத்திக் கொண்டிருக்கின்றது.  சமூகத்தின் அனைத்து வகையான சிக்கல்களுக்கும் அன்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு எனவும் நான் நம்புகிறேன்.

இந்த நிலம்,  நீர்,  ஆகாயம்,  காற்று,  நெருப்பு ஆகிய அனைத்தும் பெண்ணின்  வடிவங்கள்தாம்.  இவைகளின் எது இருக்கிறதோ அது என் கவிதைகளில் இருக்கிறது.

காமம்  இன்றிக் காதல் எவ்வாறு இல்லையோ அவ்வாறு குடும்பம்,  உறவுகள் இன்றிச் சமூகம்  இல்லை.  இந்த வரம்பிற்குள் இருந்து தான் வெள்ளிவீதியாரும், ஆண்டாலும் பாடினார்கள்.  அவர்களைப் பின்பற்றிச் செல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும்  இல்லை.

மொட்டு பூவாய் மலர்கிறது,  காய்க்கிறது,  கனிகிறது,  இந்த  நிகழ்வு எதனையும் நாம் கண்ணால் காணமுடியாது.  அதனைப் போன்றது தான் காதல்  மலரும் தருணமும். அந்த மென்மையான தருணத்தைத்தான் நான் என்னுடைய கவிதைகளில் பதிவு செய்திருக்கிறேன்.

உங்கள் காடம்பாறை காலங்களை கொஞ்சம் அசை போட முடியுமா? அது உங்கள் வாழ்விலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கிறதா ?

எனக்குள் எப்போதும் ஒரு காடு இருக்கிறதாக உணர்கிறவள் நான் .இப்போது அந்த நினைவறையின் திரை விலக்கிப் பார்க்கிறேன். என்னுடைய பால்யம் தொடங்கி பதின்பருவ நினைவு வரை எனக்குள் பொதிந்து கிடப்பது ஒளியறியாத  அடர்கானகம் எனில் அது என்னுடைய காடம்பாறை தினங்கள் தான் .

இத்தனை காலமாக  அந்தக் காடு  மழையில் நனைந்த  ஈரத்துடன் இருள் அடர்ந்து எனக்குள் புதைந்து கிடக்கிறது.  நனைந்த ஒளி, நீர்ப்பூச்சு மினுங்கும் கரும்பாறை, வான்முட்டும் தேன்பாறை, மந்திகள் தாவிக்குதிக்கும் பள்ளத்தாக்குகள் எனவும் மான், மிளா, கரடி, முள்ளம்பன்றி, கருங்குரங்கு, காட்டு  அணில், காட்டு கோழி, காட்டு மாடு, சாரைப்பாம்பு, நல்லபாம்பு, பச்சை பாம்பு, கீரி, அட்டைப்பூச்சி, யானைகளின் கூட்டம், பெயர் தெரியாத எண்ணற்ற பூச்சிகள், கேளையாடு, வரையாடு  என வனமிருகங்கள்  நடமாடித் திரிந்த அந்தக்காட்டினுள் நான் வாழ்ந்திருக்கிறேன். வண்டுகளின் ஓயாத பேரிரைச்சலை, மின்னலில் பெரும் இடியோசையில் வெடித்து பூத்திருந்த காளான்களின் வெள்ளை நிறத்தை கண்டிருக்கிறேன். சிறு தொடுதலில் சாய்கிற காளான்களின் மென்மையில் நெகிழ்ந்திருக்கிறேன் .

வேங்கை மரத்தின் உடலைக் கீறி அதன் சிவந்து வடியும் பால் எடுத்து என் நெற்றியில் திலகமிட்டு வளர்க்கப் பட்ட பெண்  நான். வேங்கை மரத்தின் பால் எடுக்க நானும் காட்டிற்குள் அலைந்திருக்கிறேன். அப்போது அங்கே நான் பார்த்த  வெக்காளி, கல்வரசு, செங்கோரை, தோதகத்தி, தடுசு, தேக்கு, கடுக்காய், வேங்கை என பின்னாளில் நான் பெயரரிந்த என் பால்ய கால மரங்களின் வாசனை என்மீது இப்பொழுதும் கமழ்ந்திருப்பதாகவே நான் நினைப்பதுண்டு .

அங்கு நான் பார்த்த உயர்ந்த பெருநெல்லி மரங்களையும் சோப்புக் காய் மரங்களையும் இன்று நான் காணவேயில்லை. நின்று நிதானித்து ஒலிக்கின்ற செம்போத்துப் பறவையின் குரல், எதிர்பாராத சமயத்தில் ஓசையெழுப்பும் வவ்வால்களின் இறக்கை சப்தம்,என் மீது வண்ணங்களை அப்பிச் செல்லும் வண்ணத்துப் பூச்சிகள்  இப்படி எதுவுமே இன்று  நான் காணவேயில்லை எனினும் எனக்குள் ஒரு காடு இருக்கிறது. அந்தக் காடு என்னுடைய கவிதைகளில் இருக்கிறது . அதுவே என்னை என் பணி சார்ந்தும் இயங்க வைக்கிறது .

இப்பொழுது விவசாய நிலங்களை மேம்படுத்தும் விதமாக நிலத்தில் விழும் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகிப் போகாமல் இருக்கும் படியாக பண்ணைக் குட்டைகள் அமைத்து அதனை  மண் வரப்பில் அணைத்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் விதமாகவும் உயர்த்தும் விதமாகவும்  நிலத்தின் மண்ணரிப்பைத் தடுத்துச் செயல்படுகிறேன். அதன் தொடர்ச்சியாக  இழந்த விவசாயத்தை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப் படாமல் தரிசு நிலமென கிடக்கும்  நிலங்களில்  பலவகையான பழமரங்களையும் வனமரங்களையும் வளர்க்கத் துவங்கியிருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் இருபதாயிரம் மரங்கள் வரை வளர்த்திருக்கிறேன். அடர் கானகமும் சமூகக் காடும் ஒன்றல்ல என்றாலும் அதற்கு எனக்குள் இருக்கும் காடம்பாறைக் காடுகளும் காரணம் .

முதல் கவிதை எது?  அதை எழுதிய சூழல்?

தமிழ்நாடு இறையியல் கல்லூரி நடத்திய பெண்கள் பற்றிய கருத்தரங்கில் எழுதி அவர்கள் நடத்தும் இறையியல் மலர் என்கிற புத்தகத்தில் ‘மலர் ‘என்கிற பெயரில் வெளியானது. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதும் பழக்கம் இருந்தாலும் எந்த இதழுக்கும் கவிதைகள் அனுப்பியதில்லை. நாட்குறிப்பு போல எழுதி வைத்துக்கொள்வதோடு அவ்வளவு தான். தேசிய அளவில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கில் பேசவேண்டிய வாய்ப்பு அமைய ஒரு சிறிய கவிதையோடு என்னுடைய உரையைத் தொடங்கினேன். காலம் படைத்திடு பெண்ணே ‘ என்று தலைப்பிட்ட அந்தக் கவிதையே முதல் கவிதை .

“உலகைப் படைத்திடுSJ_books
வீட்டை உருவாக்கு
குழந்தைகளைக் கவனி
கணவனைச் சாய்த்துக்கொள்
நட்பு வளர்
சுற்றம் காத்திடு
பணம் உருவாக்கு
பெரியோரைத் தாங்கு
அஷ்டாவதானமாக உள்ளவளே
நீயும் இருக்கிறாய்
உனக்காக காலம் படைத்திடு ” 

உங்களின் எந்தக்கவிதை உங்களை அடையாளப்படுத்தியது?

உயிர் எழுத்து இதழில் வெளிவந்த முத்தங்களின் இரகசியங்கள்” என்ற கவிதை என்னை கவனப்படுத்தியது என்று நினைக்கிறேன் .

“என்னை முத்தமிடுகையில்
உனது பிரச்சினை
என்னவென்பது
எப்பொழுதும் புரியவில்லை

உனக்கான
முத்தத்தில்
புதைந்திருக்கும் பிரியங்களின்
இரகசியங்கள்
நீ அறிந்து கொள்ள
முயல்வதேயில்லை

என் இதழ்கள்
உன்னைத் தீண்டுகையில்
என் தந்தை
என் சகோதரன்
என் நண்பன் ஆகியோரின்
அன்பையும்
உன்னிடமே சேர்க்கிறேன்

இதழ்களால்
என் மீது செலுத்தும்
உனதன்பு
வெறும் முயங்குதலில்
முடிந்து போகின்றபொழுது
எஞ்சுகின்ற தனிமையில்
புரிந்து கொள்வதற்கு
என்னிடம்
எதுவும் இல்லை எப்பொழுதும்.”

கவிஞர் சமூக செயற்பாட்டாளராக மாறியது எப்போது?

பள்ளிப்பருவத்திலிருந்து கலை இலக்கியங்களில் ஆர்வம் மிகுந்திருந்தாலும் திருமணத்திற்கு பின்பு தனித்து செயல்பட வேண்டிய சூழல். சிறிய தையல் இயந்திரமும் சித்திரத் தையலும் வண்ணஓவியங்கள் தீட்டுவதும் என இருந்த நான் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பணியாளர்களை நியமிக்க தேடும்பொழுது எங்களூரின் பெண்களின் நிலைபற்றி ஆராய வேண்டி வந்தது.

தென்னை சார்ந்த தொழில் செய்து வளமாக இருப்பவர்களும் தினக்கூலி வேலைக்குப் போகிற பெண்களும் என பலரின் வாழ்நிலை பற்றிய புரிதல் ஏற்பட்டது. பொதுவாக இந்தப் பகுதியில் இருக்கும் பெண்கள் கிடுகு முடைவது போன்ற தென்னை சார்ந்த தொழில் செய்பவர்களாக இருந்தார்கள் . பெண்குழந்தைகளின் கல்வி என்பது பின்தங்கிய நிலையில் இருந்தது. தென்னை சார்ந்த தொழில் போதிய வருமானம் தந்ததால் குழந்தைகள் கூட இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தவிரவும் திருமணம் செய்து வெளியூர் செல்லும் பெண்கள் அங்கு இந்தத் தொழில் செய்ய வாய்ப்பில்லாமலும் வேறு தொழில் தெரியாமலும் எல்லாவற்றிற்கும் கணவனை எதிர்பார்த்து நிற்க வேண்டி இருப்பதை விரும்புவதில்லை . எனவே பலபெண்கள் தங்கள் கணவனோடு அல்லது தனித்து இந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள். இந்த நிலையை அறிந்த பின்பே பெண்களின் கல்வியிலும் எந்த ஊருக்குப் போனாலும் சுயமாக நிற்க சில தொழில் பயிற்சிகளும் கொடுக்க முடிவெடுத்து செயல்படத் தொடங்கினேன் .

பெண்கள் பலரையும் தொழில் முனைவோர்களாக்கி அவர்களை பொருளாதாரத்தில் மேம்படுத்தியுள்ளீர்கள். இதுவரையில் எவ்வளவு பெண்கள் உங்களால் பயனடைந்திருப்பார்கள் ?

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து அரசு அலுவலகங்களை அணுகுதல் என்பதும் வங்கிகளுக்கு செல்லுதல் என்பதும் நடைமுறையில் இல்லாத காலத்தில் தோன்றியது தான் இந்த சுய உதவிக் குழு என்கிற செயல்பாடு . முதன் முதலாக நபார்டு வங்கி இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய, வங்கிகள் பலவும் கடனுதவி செய்ய முன்வர கிராமப்புறப் பெண்களுக்கு வங்கிகளும் அதன் நடைமுறைகளும் அறிமுகம் ஆகின . ஒரு காலத்தில் பெண்கள் வங்கிகளுக்கு செல்வது என்பது பணம் படைத்தவர்களின் செயல்பாடு போலவும் படித்தவர்களும் செயல்பாடு போலவும் இருந்தது .கையெழுத்துக் கூட போடத் தெரியாத படிக்காத கிராமப்புற பெண்களுக்கு வங்கிகளுக்குச் செல்வது என்பது  காவல் நிலையங்களுக்குச் செல்வது போல பயமும் தயக்கமும் நிறைந்த ஒன்றாக இருந்தது . இன்று தங்கள் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டமிடலை, விவசாய நிலத்தை பராமரிக்க , குழந்தைகளின் உயர்கல்வியை வங்கிகளின் உதவியோடு தீர்மானித்து பெண்கள் செயல் படுத்துகிறார்கள். நான் என்னுடைய நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 800 கிராமங்களில் 45000 பெண்கள் வரை இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறச் செய்திருக்கிறேன் .

உங்களின் சீனா பயணம் பற்றி?

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், மகளிர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக செயல்பட்டதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான விருதுகளை நேருயுவகேந்திரா நிறுவனத்தின் மூலமாக வழங்கியது. அந்த சமயத்தில் இந்தியா முழுவதும்  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ஒருங்கிணைத்து  இந்திய சீன நல்லுறவுப் பயணம் இந்திய சீன அரசுகளினால் திட்டமிடப் பட்டது . அதில்  சமூகப்பணியாளராக தமிழ்நாட்டின் சார்பாக நானும் அந்தப் பயணத்தில் கலந்து கொண்டேன். அறுபது சதவீதம் மாணவ மாணவிரும், நாற்பது சதவீதம் சமூகப்பணி மற்றும் பஞ்சாயத்ராஜ் பணியாளர்களும் கலந்து கொண்ட வித்தியாசமான இந்த குழு  இது. நான்கு மாகாணங்களில் எங்களுடைய பயணம் அமைந்திருந்தது. என்னைப் புதுப்பித்துக் கொண்ட பயணம் அது.

பல்வேறு கதைகளையும், கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய ஒரு பாரம்பரியமான சீனாவின் கலை, இலக்கியம், கலாச்சாரம், கல்வி தொழில்வளர்ச்சி, மருத்துவம், அரசியல், மதம், குடும்பம் என பரந்துபட்ட கலந்துரையாடலை அங்கிருந்த இளைஞர்களோடு கலந்து பேசியும் அவர்களோடு உறவாடியும் திரும்பியதில் அரசின் கலாச்சார பரிவர்த்தனை நோக்கம் நிறைவடைந்ததாக இருந்தது. தனிப்பட்ட வகையில் உறவுகள் தான் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது என்ற என்னுடைய நம்பிக்கை மேலும் ஆழப்பட்டது .

சமூக வலைதளங்கள் பெண்களுக்கு எப்படி உதவியாக இருக்கின்றன?

சமூக வலைத்தளங்கள் ஒரு பார்வையில் பொழுதுபோக்காக செயல்படுவது போலத் தோன்றினாலும் பெண்கள் நிறையப்பேர் தங்களை வெளிப்படுத்தும் வகையில் எழுதவும் புதிய படைப்பாளர்கள் உருவாகவும் சாத்தியப்டுத்துகின்றன.

சங்க இலக்கியத்தில் உங்கள் ஆய்வு எதைப் பற்றி ?

சங்க இலக்கியத்தில் ஆண் மையக் கருத்துருவாக்கம் என்கிற தலைப்பில் நிலமும், பெண்ணின் உடலும் மனமும் மொழியும் ஆணுக்கு உகந்தவையாக கட்டமைக்கப்பட்ட சூழலைப் பற்றி மானுடவியல் கோட்பாடுகளையும் சங்க காலத்தையும் இணைத்து என்னுடைய ஆய்வு அமைந்திருக்கிறது.

படைப்பாளராகவும் சமூகப் பணியாளராகவும் இருக்கும் நீங்கள் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்கிற மாணவியாகவும் இருக்கிறீர்கள். இதற்கு உங்கள் குடும்பம் எவ்விதம் உதவியாக இருக்கிறது ?

என்னை பலவிதமான பரிமாணங்களில் இயங்க வைக்கவும் என்னுடைய அடையாளத்தை நான் மீட்டெடுக்கவும் என்னுடைய கணவர் சக்திவேலும் குழந்தைகள் திலீப் குமார், காவியாவும் முழுமையாக உடனிருக்கிறார்கள். அவர்களின் ஊக்கப்படுத்துதல் என்னை இன்னும் கொஞ்ச தூரம் முன் நகர்த்திச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.


சக்தி ஜோதியைப் பற்றி …

தேனி மாவட்டத்தில் முல்லையாற்றின்  ஈரம் படர்ந்திருக்கும் அனுமந்தன்பட்டி கிராமத்தில் பிறந்து, மருதாநதி கரையின் அய்யம்பாளையத்தில் வசிக்கிறார் சக்தி ஜோதி.

பெற்றோர் : பாண்டியன், சிரோன்மணி.

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

நீர்செறிவு மேலாண்மையைக்    கவனப்படுத்தி செயல்படுகிற இவர் விவசாயம் மற்றும் பெண் கல்வியை மையப்படுத்தி சமூகப் பணியாளராக இயங்கி வருகிறார்.

பணிநிமித்தமாக பயணம் மேற்கொண்ட நாடுகள் : சீனா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, தாய்லாந்து, இஸ்ரேல், போர்ச்சுக்கல்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »