தமிழ்நெஞ்சம் அயலக தமிழ் உறவாகக் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவில் செயல்பட்டு வரும் EIS (ஈ.ஐ.எஸ்) பள்ளியின் தாளாளர்கள் திரு.கண்ணன் – திருமதி.கிரிஜா கண்ணன் இணையரைத் தொடர்பு கொண்டோம். வாருங்கள் இந்த தமிழ் உறவுகளை அறிந்து கொள்வோம்.

இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ‘‘இங்கிலீஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல்’’ என்ற பள்ளியின் மூலம் ஆங்கில வழிக்கல்வியை போதித்து கொண்டு வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், பிரெஞ்சு மொழி அலுவல் மொழியாகவும், பேச்சு மொழியாகவும் இருக்கும் இந்நாட்டில் வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டினர் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்க பெரிதாக வாய்ப்புகள் இல்லாத போதும், அங்ஙனம் இருப்பினும் பள்ளிக் கட்டணம் எல்லா தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள இயலாத சூழல் நிலவிய காலகட்டத்தில் 1993 ஆம் ஆண்டில் இவர்களிருவரும் இணைந்து இந்த பள்ளியை ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக நடத்திக்கொண்டு வருகிறார்கள். எளிய பெற்றோர்களால் கூட கட்டணம் செலுத்தக்கூடிய வகையில் கல்விச் சேவை செய்து வரும் இவர்களிருவரும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் குறிப்பிடத்தக்க இந்திய முகங்கள்.

வணக்கம் . உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் ஒரு சிறு அறிமுகம்..?

வணக்கம். எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. அக்கா மகப்பேறு மருத்துவர். நான் ஆங்கில இலக்கியத்திலும் பிறகு இதழியலிலும் இரட்டை முதுகலைப் பட்டம் பெற்றவள். ஆறு மாதம் இந்து பத்திரிகையில் குற்ற ஆய்வு நிருபராக பணியாற்றினேன். திருமணம் முடிந்த கையோடு வேலையை விட்டுவிட்டு பிறகு அவரோடு காங்கோ வந்துவிட்டேன். எனது அப்பா அம்மா இருவரும் இணைந்து ஒரு சிறு ஆடை வணிக நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு பிறகு தங்கை அந்த வணிகத்தை கவனித்து கொண்டாள். இப்பொழுது அந்த வணிகம் இல்லை. எங்களுக்கு ஒரே ஒரு மகள். அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு திருமணமும் முடித்துவிட்டோம். பெண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவில் வசிக்கி றார்கள்.

கண்ணன் கிரிஜா இணையருடன் நடுவில் அன்புமகள்

எப்பொழுது காங்கோ வந்தீர்கள்?

1989ல் வந்தேன். வந்ததும் நிருபர் பணியை தொடர்ந்து பார்த்தேன். பகுதி நேர நிருபராக பணியாற்றினேன். இங்கு கின்சாசாவில் உள்ள அமெரிக்க கலாச்சார துறையில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு காங்கோ பற்றி ஆய்வு செய்து எழுதிக்கொண்டிருந்தேன். அதற்கும் ஒரு தடங்கல் வந்தது, எனது கடவுச்சீட்டில் நிருபர் என அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், மொபூட்டு (காங்கோவின் முன்னாள் அதிபர்) ஆட்சியில் நிருபர்கள் காங்கோவில் வேலை செய்ய முடியாது. அதை வைத்து தொடர்ந்து நிறைய பிரச்சினைகள் வந்ததனால் இல்லத்தரசின்னு மாத்திட்டோம். அதோடு நிருபர் வேலைக்கும் ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.

திருமணம் ஆன புதிதில் ஊரும் புதிது, சுற்றமும் புதிது. உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நீங்கள் வந்த பொழுது நிறைய தமிழர்களை பார்க்க முடிந்ததா?

முதலில் தெரியாம கல்யாணம் பண்ணி தப்பான இடத்துக்கு வந்துட்டோமான்னு ரொம்ப கவலைப்பட்டிருக்கிறேன். திருமணமாகி வந்த புதிதில் இவருடைய அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே வீடு. தனிமையான வில்லா அமைப்பில் வீடு. அருகில் நண்பர்கள் யாரும் கிடையாது. மிகவும் தனிமையாக இருக்கும். சிலசமயம் இவர் இரவுப் பணிக்குப் போகும் போது பயமாகவும் இருக்கும். எல்லாவற்றையும் விட தமிழர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே இருந்தார்கள். இப்பொழுது மாதிரி எந்த விழாவும் கிடையாது. ஒருவரை ஒருவர் பார்ப்பதே அரிது.

உங்கள் வீட்டுலே ஆஃப்ரிக்கா மாப்பிள்ளைன்னு தெரிந்தும் எப்படி பெண் கொடுத்தார்கள்?

சிரிக்கிறார்… எங்கப்பா அப்படி ஒன்றும் யோசிக்கலை. அவரும் கண்ணனோட அப்பாவும் வேலை நிமித்தமான நண்பர்கள். அந்த உறவிலும் நம்பிக்கையிலும் தான் திருமணம் நடந்தது.

இன்று EIS தேசிய அளவில் பெரும் அங்கீகாரம் பெற்றிருக்கும் பள்ளி. ஆனால் தொடக்கத்தில் மிக மிக கடினமாக இருந்திருக்கும். உங்கள் பள்ளியின் வளர்ச்சியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் மிகவும் கடினமாகத்தான் இருந்தது; «BOBOTO» என்ற பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சியில் நாங்கள் அனைவரிடமும் ஒரு விளம்பரச்சீட்டு கொடுத்தோம். முதலில் இரண்டே குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியையுடன் தொடங்கினோம். ஆனால், அதே ஆண்டு முடிவிலேயே 34 குழந்தைகள் இணைந்திருந்தனர். அப்போது அதுவே எங்களுக்கு மிகப் பெரிய வளர்ச்சி. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் நினைத்த இலக்கை மெதுவாக நிலையாக பல இன்னல்களை வென்று எங்களுடைய தளராத விடாமுயற்சியால் அடைந்தோம்.

மேற்கொண்டு உங்கள் பள்ளியை மேம்படுத்த என்னென்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?

முன்னர், CBSE அங்கீகாரம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. நாளடைவில் அதுவே அர்த்தமற்றதாகத் தோன்றியது. இங்கு பயிலும் மாணவர்களின் மேற்படிப்பு ஆவல் பெரும்பாலும் ஐக்கிய குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளை நோக்கி இருப்பதால் தற்போது SAT வகுப்புகளை, கின்சாசாவில் உள்ள எங்களது பள்ளியில் எழுதமுடியும் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். இங்கு பயிலும் இந்திய மாணவர்களுக்காக தற்பொழுது இந்தியாவில் உள்ள சில பல்கலைக்கழகங்களுடன் தொடர்பில் இருக்கிறோம், அதன் மூலம் அவர்களுக்கு மேற்படிப்புக்கான நுழைவுச்சீட்டும், கல்வி உதவித்தொகையும் கிடைக்க வழி வகை செய்து தருகிறோம். இந்த சாத்தியக்கூறுகளை பெருக்கி இங்கு பயிலும் மாணவர்கள் அதிகப்படியாக பயன் பெற வேண்டும் என்பதே தற்பொழுது எங்களது முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக நானும் எனது கணவர் திரு. கண்ணன் அவர்களும் இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக் கழகங்களுடனான தொடர்புகளை பெருக்கி எங்களது குறிக்கோளை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட்டு வருகிறோம்.

 

வேலை மற்றும் குடும்பம், இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

பெரிய கடினம் இல்லை. வீட்டு வேலைக்கு இங்கு ஆட்கள் கிடைப்பதால் நான் எப்பொழுதும் ஞாயிற்றுக் கிழமை கூட வேலை செய்யனும் என்று சொல்வேன். வீட்டில் இருந்தால் சோம்பலாக இருக்கும்.

உங்களது பொழுது போக்கு..?

நிறையப் படிப்பேன். ஊருக்குப் போகும் போது விமானத்திலே எடுத்த புத்தகத்தை முடிக்கலைன்னா தூக்கம் வராது. சென்னையில் இறங்கும் வரை படிப்பேன். பெரும்பாலும் ஆங்கில புதினங்கள் விரும்பி படிப்பேன். தோட்ட வேலை, குறிப்பாக வித விதமான மலர்கள் வளர்க்க பிடிக்கும்.வீட்டை அலங்காரம் செய்வது, பாட்டு பாடுவது பிடிக்கும்.எங்கள் வீட்டில் எல்லோரும் கர்நாடக சங்கீதம் பாடுவார்கள். சின்ன வயசுலே இருந்து பாடுவோம்.

பெண்கள் உரிமை பற்றி தங்கள் கருத்து?

நிச்சயமா ஒவ்வொரு பெண்களுக் கும் தேவையான அளவு உரிமையும் சுதந்திரமும் வேண்டும். எங்கள் பள்ளியில் நிறைய பெண்கள் வேலை பார்க்கிறாங்க. எனக்கும் பெண்களோடு வேலை செய் வதில் தான் வசதி.

ஆண்கள் பெண்களை சமமாக நடத்துகிறார்களா?

பெண்கள் எல்லோரும் சுதந்திரத் தோடு தானே இருக்கிறார்கள். யாரும் யாரையும் கட்டுப்படுத்தலை. எல்லோரும் நினைத்ததை செய்கிறார்கள். சம உரிமை இருக்கிறது.

இந்த நாட்டிற்கு வந்ததற்காக என்றாவது வருத்தப்பட்டது உண்டா? தாய்நாட்டை பிரிவதாக உணருகிறீர்களா?

சிறிதளவும் இல்லை. இங்கு வந்த புதிதில் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் இப்பொழுது பழக்கமாகிவிட்டது. மேலும் இப்பொழுது எல்லாம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாத இடைவெளியில் இந்தியா சென்று வருவதால் தாய்நாட்டை பிரிந்துள்ளதாக தோன்றவில்லை.

உங்களது பலம் மற்றும் பலவீனம் எது?

தெரியலையே… பலவீனம் என்றால் என்னால் யாரோடும் கத்தி சண்டை போட முடியாது. மிகுந்த கோவத்தோடு வெறியாக செயல்பட முடியாது. பலம் என்றால் நல்ல உழைப்பாளி. சோம்பேறித்தனம் என்பதே கிடையாது. எவ்வளவு நேரம் வேணும் என்றாலும் என்னால் வேலை செய்ய முடியும்.

தமிழ் சார்ந்த பணிகளில் தங்களுடைய ஈடுபாடு?

படித்தது ஆங்கில இலக்கியம் என்றாலும் தமிழ்ப்பற்று இல்லையென சொல்ல முடியாது. ஒரு தமிழ் பெண்ணாய் என்றும் தமிழை நேசிப்பவள் நான். ஆனால், தமிழ் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள இயலவில்லை.

2011ல் TYCA (Tamil Youth Cultural association) எனப்படும் தமிழ் இளைஞர் கலாச்சார சங்கம் தொடங்கப்பட்டபோது அவர்கள் அலுவலகம் அமைக்க இடம் தேடுவதாக அறிந்து எங்களுடைய பள்ளி வளாகத்தில் ஒரு அறை ஒதுக்கி தந்தோம். அன்று முதல் இன்று வரை TYCAவின் அலுவலகம் எங்கள் வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும். எங்கள் பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை TYCAவின் பல்வேறு கூட் டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த வழங்குவதும் குறிப்பாக TYCAவின் தமிழ்ப் பள்ளிக்கென ஒரு வகுப்பு ஒதுக்கி தந்ததும் தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் என்னாலான பங்களிப்பு என கருதி பெருமை கொள்கிறேன்.

ஆப்ரிக்க நாடொன்றில் அனை வருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென உழைத்துவரும் இந்த சிங்கப்பெண்ணை அவரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தி பாராட்டி விடைபெற்றுக் கொண்டோம்.

நேர்கண்டவர் : நாச்சியார்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »