மறக்க முடியாத சம்பவங்கள்?
பணி ரீதியாக மறக்கமுடியாத சம்பவம் என்று சொன்னால், ஆப்பிரிக்காவில் ஒருசமயம் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு போன்ற பணிகளை உள்ளடக்கிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
வழக்கமாக அண்டை நாடுகளிலிருந்து வரும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையத்தில் எப்பொழுதுமே குழந்தை தொழிலாளர்கள், வீட்டிலிருந்து ஓடி வரும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் இவர்களை மீட்கும் பணி இருக்கும். கடத்தப்படும் குழந்தைகள் என்றால் திரைப்படங்களில் வருவது போல கன்டெய்னர்களில் கடத்தப்படுவது கிடையாது. ஆப்பிரிக்க நாடுகளில் பொதுவாக நோயின் காரணமாகவோ, இல்லை உடைந்த குடும்ப சூழ்நிலையின் காரணமாகவோ குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்து தாத்தா பாட்டியிடம் இருப்பார்கள் அல்லது தகப்பனை பிரிந்து தாயிடமும், தாயைப் பிரிந்த தகப்பன் இடமும் இருப்பார்கள். இவ்வாறு இருக்கும் சூழலில் அவர்களுடைய பெற்றோர்கள் யாராவது இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களின் வயதான பாட்டி அல்லது தாத்தாவினால் அவர்களைப் பார்த்துக்கொள்ள இயலாது.
நகரத்தில் அவர்களுடைய உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் படிக்க வைக்க உதவி கோரியோ அல்லது பணிக்காகவோ சேர்த்து விடுவார்கள். இவ்வாறு வரும் குழந்தைகள் சில சமயம் யாரேனும் தெரிந்த உறவினர்கள் மூலமாகவோ அல்லது யாரேனும் இடைத்தரகர் மூலமாகவோ கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டு வரப்படுவார்கள். முதலில் நன்றாக கவனித்துக் கொள்ளும் உறவினர்கள் ஒரு சிறிய சம்பளமும், மூன்று வேளை உணவும் அளித்து வருவார்கள். பின்னர் போகப் போக இரு வேளை சாப்பாடு அல்லது ஒரு வேளை சாப்பாடு என்று குறைந்து சம்பளம் ஏதும் கொடுக்காமல் பின்னர் அவர்களே அடிக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறான குழந்தைகள் அந்த இடத்திலிருந்து தப்பித்து, அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்லும் பொழுது, பேருந்து நிலையத்தில் சுற்றி தெரியும் இடைத் தரகர்களிடம் மாட்டிக்கொள்வார்கள். பின்னர் இவர்கள் வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அங்கும் கொடுமை தொடரும். இப்படித்தான் இவர்கள் உறவினர்கள் மூலமாகவே கடத்த ப்படுவார்கள். அவ்வாறு ஒரு சமயம் நானும், எனது குழுவினரும் பேருந்து நிலையத்தில் அவ்வாறு யாரேனும் குழந்தைகள் தட்டு படுகிறார்களா என்று சுற்றி வரும்பொழுது ஒரு பெண் குழந்தை தனியாக நின்று கொண்டிருந்தார் 13 வயது இருக்கும். அவளிடம் அணுகி மெதுவாகப் பேச்சுக் கொடுத்த பொழுது, தான் தனது மாமாவுடன் வந்து இருப்பதாகவும் தனது சித்தி வீட்டிற்கு செல்ல இருப்பதாகவும் கூறினார். நாங்கள் வெகு நேரம் காத்திருந்து அவருடைய மாமா வருகிறாரா என்று பார்த்தோம் அவர் ஒரு இடைத்தரகர் போலும், நாங்கள் இம்மாதிரியான குழந்தைகளை மீட்பவர்கள் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. தூரத்திலிருந்தே எங்களைப் பார்த்து விட்டு எங்கோ ஓடி ஒளிந்து விட்டார். அந்த குழந்தைக்கு கிராமத்தில் ஒரே ஒரு பாட்டி மட்டும் இருக்கிறார். அப்பா அம்மா இருவருமே ஹெச்.ஐ.வி தாக்கத்தால் இறந்துவிட்டார்கள். அவளுக்கு அவருடைய பாட்டி வீட்டிற்கு திரும்ப போக விருப்பமில்லை, நாங்கள் இது மாதிரி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, சிறிது நேரம் கழித்து மற்ற இடைத்தரகர்களுடன் வந்த அவருடைய உறவினர் எங்களுடன் சண்டைக்கு வந்துவிட்டார். பொதுமக்களும் கூடிவிட்டனர். பொதுமக்களிடம் நாங்கள்தான் குழந்தையை கடத்த வந்திருக்கிறோம் என்று சொல்லி விட அவர்களும் எங்களுடன் சண்டை போட்டனர். வழக்கமாக எப்பொழுதும் எங்களுடன் ஒரு காவல்காரர் வருவது வழக்கம் அன்று அவர் எங்கோ டிராபிக்கில் மாட்டிக்கொண்டார். பின்னர் அவர் வந்து நாங்கள் குழந்தையை கடத்தவில்லை நாங்கள் மீட்டு சென்று குழந்தையை படிக்க வைக்கவே வந்திருக்கிறோம் என்பதே எல்லோருக்கும் எடுத்து சொன்ன பிறகுதான் எங்களை விட்டார்கள். இது ஒரு மறக்க முடியாத சம்பவம்.
அதன்பிறகு 2016ல் இந்திய வணிக பேரவையில் பணியாற்றி விலகி பின் அதே அவையின், துணை செயற்குழுவில் செயலாளராக பொறுப்பளிக்கப்பட்டிருந்தேன். அச்சமயம், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தான்சானியாவிற்கு வந்திருந்தார். இதன்பொருட்டு, தான்சானியாவில் உள்ள மற்ற முதலீடு சார்ந்த அரசு நிறுவனங்களோடும், அமைச்சகத்தோடும் இணைந்து இந்தியப் பிரதமரின் வருகை சார்ந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினேன். இதுவும் ஒரு மறக்க முடியாத சம்பவம்.