தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் மணிப்பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.
வணக்கம் இராம.வேல்முருகன் அவர்களே! தாங்கள் பிறந்த ஊரை எப்போதும் பெயரோடு சேர்த்து எழுதுவதால் தங்கள் ஊரைப் பற்றிக் கூறுங்களேன்!
வணக்கம் ஐயா
எங்கள் ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான். இவ்வூரில் பிறந்ததை நான் மிகவும் பெருமையாக எண்ணுகிறேன்.தமிழ்நாடெங்கும் ஓலைச்சுவடிகளைத் தேடி அவற்றைத் தன்தலையிலேயே சுமந்து சென்ற எண்ணற்ற தமிழ்நூல்களைப் பதிப்பிக்கக் காரணமான தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் பிறந்த உத்தமதானபுரம் வலங்கைமான் வட்டத்தில்தான் உள்ளது. ஆங்கிலேயர்களே வியந்து பாராட்டிய வெள்ளிநாக்கு வீரர் சீனிவாச சாஸ்திரிகள் பிறந்த ஊர் வலங்கைமான். இசைக்கலைஞர்கள் அதிகம் இப்போதும் வாழும் ஊர்; இந்தாண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ள தவிலிசைச்சக்கரவர்த்தி சண்முகம்பிள்ளை நாதசுவர அரசு திருமிகு எஸ்.ஏ.சௌந்திரராசன் பிறந்த ஊர்.
உலகப்புகழ்பெற்ற பாடைக்கட்டி மாரியம்மன் அருள்பாலிக்கும் ஊர். இந்து முஸ்லீம் ஒற்றுமையாக வாழும் ஊர் வலங்கைமான். கிறித்துவப் பள்ளிகள் வழி கல்விப்பணியாற்றிவரும் ஊர் எங்கள் ஊர். செங்கல்லுக்கும் பட்டாசுக்கும் பெயர்பெற்ற ஊர். வடக்கே குடமுருட்டி தெற்கே சுள்ளான் மற்றும் வெட்டாறு பாய்ந்து வளம் கொழிக்க விவசாயம் செழிக்கும் பூமி எங்கள் ஊர். எனவே என் பெயருடன் எப்போதும் நான்பிறந்த ஊரையும் சேர்த்துப் பயன்படுத்துவது என் வழக்கமாகி விட்டது.
உங்கள் பெற்றோர்கள் பற்றி…
என் தந்தையார் இராமலிங்கம் ஒரு சாதாரண உழைப்பாளி. மிகவும் சிரமப்பட்டு என்னைப் படிக்க வைத்து ஆளாக்கியவர். அதிகம் படித்தவரில்லை. இளவயதில் மன்னார்குடியில் அவர் இருந்தபோது தந்தை பெரியார் அவர்களுடன் பழகும் வாய்ப்புகள் கிட்டியதை என்னிடம் சொல்லி யிருக்கிறார். தேநீரகம் உணவகம் வைத்துத் தொழிலாற்றி நொடித்துப்போய் கூலி வேலை செய்து என்னைப் படிக்க வைத்தவர்.
என் தாயார் சாந்தி எனது இன்றைய முன்னேற்றத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் காரணமானவர். தன்னைத் தேய்த்து என்னை வளர்த்தவர். ஓரளவு கல்வி அறிவு பெற்றவர். கவிஞர் கம்பதாசன் அவர்களின் தங்கை கிருஷ்ணவேணியின் ஒரே மகள் எனது தாயார். இன்றும் என்னை வழிநடத்திச் செல்பவர்.
ஓகோ கவிஞர் கம்பதாசனின் உறவுக்காரர் எனபதால்தான் கவிக்குருதி உங்கள் உடம்பிலும் பாய்கிறதா? அப்படி எண்ணுகிறீர்களா?
அப்படியெல்லாம் நான் எண்ணுவ தில்லை. நான் இந்த செய்தியையே சென்ற 2019 ஆகஸ்டு திங்களில்தான் வெளியில் சொன்னேன். என் மீது எந்த நிழலும் சாயலும் படிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளவன் நான். எனக்கென்ற அடையாளத்தை நிரூபித்த பிறகே அச்செய்தியை வெளியிட்டேன். இரத்த பந்தம் உள்ளதால் மரபுவழியாகக் கூட எனக்கு அந்தத் திறன் வந்திருக்கலாம்.
தங்கள் இளமைக்காலக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி குறித்து….
நான் த.சு.லு.தி. தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரையிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வலங்கைமான் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். இளமறிவியல் மற்றும் முதுஅறிவியல் விலங்கியல் படிப்பை தென்னிந்திய கேம்பிரிட்ஜ் எனப்படும் கும்பகோணம் அரசினர் ஆண்கள் கல்லூரியில் பயின்றேன். கல்லூரியில் விலங்கியல் துறையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவன். இளங்கல்வியியலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கற்றுத் தேர்ச்சி அடைந்தேன்.
ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்துவிட்டு ஏன் ஆசிரியராகப் போகவில்லை.?
ஏன் போகவில்லை? பயிற்சி முடித்தவுடன் கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். அப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற நானும் காரணமாக இருந்துள்ளேன். பிறகு எனது குடும்பத்தின் சூழல்காரணமாக ஏதாவது ஒரு அரசு வேலைக்குச் சென்றால் நலம் என எண்ணியதால் தேர்வு எழுதி தற்போதைய துறைக்குப் பணிக்கு வந்துவிட்டேன். அரசின் கொள்கை முடிவுகளால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்காமல் போய்விட்டது. அதற்காக ஒரு சிறு வருத்தம் இருப்பினும் தற்போதைய வேலையை விருப்பமுடனே செய்து வருகிறேன்.
உங்களுக்குள் இருந்த கவிஞரைக் கண்டறிந்தவர் யார்? உங்கள் முதல் கவிதை எப்போது எழுதினீர்கள்?
வழக்கம்போல் தமிழாசிரியர்தான். நான் பள்ளியில் படிக்கும் போது இலக்கியமன்றச் செயலாளராக அந்தத் தமிழாசிரியர்தான் நியமித்தார். எனது கையெழுத்து அழகாக இருந்ததால் தீர்மானங்கள் எழுதவும் வகுப்பில் முதல்மாணவனாக இருந்ததாலும் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. ஒரு பொங்கல் விழாவின் போது கவியரங்கம் ஒன்று இலக்கிய மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டது. மாணவர்கள் சார்பில் நான் கலந்து கொண்டேன். விடுதலைப் போராட்டம் பற்றி நான் எழுதியதே முதல் கவிதை என்றாலும் அது நீளமாக இருந்ததால் மஞ்சள் இஞ்சி கரும்பு என்று சிறுசிறு கவிதைகளாக எழுதச் சொன்னார் எங்கள் தமிழாசிரியர் திரு வ.கலிய மூர்த்தி அவர்கள். நானும் அவ்வாறே செய்து கவிதை வாசித்த போது எனக்கு வயது 13. ஆனால் கவிதைதான் இப்போது ஞாபகமில்லை.
கல்லூரிக் காலங்களில் கவிதை எழுதியது உண்டா? ஏதேனும் மறக்க இயலாத சம்பவங்கள் உண்டா?
கல்லூரிக் காலங்களில் கவிதை எழுதாமல் இருந்திருக்க முடியுமா? நானும் கல்லூரியில் படிக்கும் போது கவிதை என்ற பெயரில் ஏதேனும் எழுதியதுண்டு. என்ன ஒரு பெரிய வேடிக்கையென்றால் நான் எழுதிய கவிதைஏட்டைக் கல்லூரி மலர் தயாரிக்கும் குழு பொறுப்பு ஆசிரியரிடம் வழங்கிவிட்டுத் திரும்பப் பெறவில்லை. இன்னொரு ஏட்டை நண்பரின் தங்கை ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவர் திரும்பத் தரவில்லை என்பது இன்னொரு வேடிக்கை.
மறக்க இயலாத சம்பவம் சைதாப் பேட்டையில் படித்த போது நடைபெற்றது. கவிஞனாக எனக்கு மேடையில் அங்கீகாரம் கிடைத்தது சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில்தான். ஆசிரியர் தின விழாவில் எனக்கு நன்றியுரை வழங்கும் பொறுப்பு. நன்றியுரைக்கெல்லாம் நாற்காலிகள் காலியாகும் சூழலில் கவிதையால் ஆன எனது நன்றியுரையால் மறக்க இயலாத விழாவானது. அப்போது ஒருநாள் மாலை என்னைத்தேடி கல்லூரி முதல்வர் திருமதி கிருஷ்ணவேணி அருணாசலம் அவர்கள் விடுதிக்கு வர நாங்கள் வழக்கம் போல் மாலை நேரங்களில் சென்னையைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டுவிட அவர் நீண்டநேரம் காத்திருந்து விட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் காலை பயந்துகொண்டே அவர் அறைக்குச் செல்ல ஒரு வாழ்த்துக்கவிதை எழுத வேண்டித்தான் தேடி வந்ததாக முதல்வர் சொல்லச் சற்றே பயம்தெளிந்து மகிழ்ச்சியானேன். எங்கள் கல்லூரி திருவல்லிக்கேணி என்.கே.ட்டி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை வாழ்த்துவது போன்ற கவிதை. அன்றே எழுதிக் கொடுத்து அவரது பாராட்டைப் பெற்றது மறக்கவியலாத நிகழ்வே.
உங்கள் முதல் கவிதை எந்த இதழில் பிரசுரமானது? பிரசுரமான இதழ்கள் எவையெனச் சொல்ல முடியுமா?
எனது முதல் கவிதை 1992ல் மாலைமுரசில் வெளியானது. தென்னாப்பிரிக்கா அதிபரான போது நெல்சன் மண்டேலா குறித்து நான் எழுதிய கவிதை. அதன் பிறகு தினமலர் – வாரமலர், பாக்யா வார இதழ், குண்டூசி மாதஇதழ், ஓம் சக்தி மாதஇதழ், கவிதை மாதஇதழ், ஏழைதாசன், தும்பை, ராணி வார இதழ் உள்ளிட்ட இதழ்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட கவிதைகள் வெளியாகியுள்ளன. 2000 வரை எனது கவிதைகள் பத்திரிகைகளில் வெளியாகின.
அதன்பிறகு எழுதவில்லையா?
ஆமாம் அதன் பிறகு குடும்பவாழ்வில் ஈடுபட்டதாலும் பணிநிமித்தமாக வெவ் வேறு ஊர்களில் பணியாற்றியதாலும் எழுத இயலாமல் போய்விட்டது. கவிதை எழுதுவதே மறந்து விட்டது எனலாம்.
எப்போது மீண்டும் எழுதத் தொடங்கி னீர்கள்?
முகநூலில் வந்த பிறகுதான் மீண்டும் எழுதத் தொடங்கினேன். குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிட்டியது. திரு பாலு கோவிந்தராசன் அவர்களுடைய தொடர்பு எனக்கு பலருடைய நட்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நிலாச்சோறு என்ற குழுமத்தில்தான் எனக்கான அங்கீகாரம் முதலில் கிடைத்தது. பின்னர் நிலாமுற்றத்தில் இணைந்த பிறகு எனது வளர்ச்சி மேலும் அதிகமானது. அதன் பொறுப்பாளராக அங்கீகரிக்கப்பட்டு இப்போது அதன் செயலாளராகவும் செயலாற்றி வருகிறேன். சுவாமிமலையில் நடைபெற்ற நிலாமுற்ற இரண்டாமாண்டு விழாவில் நீர்விழி ராகம் எனும் நூலை வெளியிடுமளவுக்குக் கவிதைகள் எழுதிவிட்டேன். முகநூல் எனது கவிதைப் பயணத்தில் இரண்டாவது அத்தியாயம் என்றால் அது மிகையல்ல.
நிலாமுற்றத்தில் தங்கள் செயல்பாடுகள் குறித்து..
நிலாமுற்றம் என்ற முகநூல் குழுமம் ஒரு தமிழ்ச்சங்கம் போலச் செயல்படும் ஒரு அமைப்பு. இதன் நிறுவனர் திரு முத்துப்பேட்டை மாறன் சிங்கப்பூரிலும் தலைவர் திருமிகு சோதி செல்லத்துரை டென்மார்க்கிலும் கௌரவத்தலைவர் திருமிகு பாலு கோவிந்தராஜன் தமிழகத்திலும் இருந்து இயக்கும் இந்த அமைப்பின் செயலாளராக நான் பணியாற்றுகிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களைக் கொண்டு ஒரு பெரிய நிறுவனம் போலச் செயல்படும் அமைப்பு. புதுக்கவிதை ஹைக்கூ மரபுக்கவிதை முதற்சொல்கவிதை எனக் கவிதைகளில் மட்டுமில்லாது சிறுகதை மேடைப்பேச்சு எனப் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளித்து வருகிறது.
இதனுடைய இரண்டாம் ஆண்டுவிழா முதல் நான் இவ்வமைப்பில் செயல்பட்டு வருகிறேன். 200ஆவது கவியரங்கை வலங்கையில் 200 கவிஞர்களைக் கொண்டு நடத்தினேன். மரபுக்கவிதைகளை எழுது வதற்குப் பயிற்சி அளித்து வருகிறேன். சுமார் 50 கவிஞர்கள் 30க்கும் மேற்பட்ட மரபுக் கவிதைகளை யாப்பதில் வல்லவர் களாகியுள்ளனர். இதுவே நிலாமுற்றத்தில் எனது செயல்பாடு.
மரபுக்கவிதை புதுக்கவிதை ஹைக்கூ எனக் கவிதைகளில் பல வகைமைகள் உள்ளனவே அவைபற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
அனைத்தும் கவிதைகளே. எவற்றையும் குறைத்து மதிப்பிட இயலாது. மரபுக்கவிதை ஒரு தாய் வீடு போன்றது. இன்னும் சொல்லப் போனால் பண்டிகை தினங்களிலோ திருமண நிகழ்வுகளிலோ நாம் அணிந்து கொள்ளும் பாரம்பரிய உடை போன்றது மரபுக் கவிதைகள். அழகாகவும் கம்பீரமாகவும் வசீகரிக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடியவை. அவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். நமது அடையாளமாக விளங்கக் கூடிய திருக்குறள், தேவாரம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் முதலான நூல்களாகட்டும் நமது பாரம்பரியத்தைக் கடத்தக்கூடிய சங்ககால நூல்களாகட்டும், காலத்தால் இன்றும் நிலைத்திருக்கக் கூடிய காப்பியங்களாகட்டும் அனைத்தும் மரபுக் கவிதைகளால் யாக்கப் பட்டவையே. ஒவ்வொரு கவிஞனும் மரபை அறிந்திருக்க வேண்டும்.
புதுக்கவிதைகள் அவசர காலத்திற்கு அல்லது ஓய்வு நேரங்களில் நாம் அணியும் ஆடைகள் போலத்தான் நான் கருதுகிறேன்.ஒருவரது ஆடை இன்னொருவருக்குப் பிடிக்கலாம்; பிடிக்காமலும் போகலாம். ஆனால் ஆடை அத்தியாவசியமானது. எனவே புதுக்கவிதைகளும் இன்று இலக்கிய வளர்ச்சியில் பங்கு பெற்று வருகின்றன.
புதுக்கவிதைகள் எளிதில் புரியக் கூடியவையாக இருக்கலாம்.புரியாத புதிய வார்த்தைகளைப் போட்டு வாசகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதையே சிறந்த கவிதை என வாதிடுவோரின் பெருக்கம் வருத்தம் தரக்கூடியதே. இந்நிலை மாற வேண்டும். எந்தக் கட்டுக்கும் உட்படாமல் கவிஞனின் விருப்பம் போல் எழுதுவதே புதுக்கவிதை என்றாலும் இதற்கும் சில விதிகளைக் கற்பித்து அதன்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்வது தவறாகவே எனக்குப் படுகிறது.
ஹைக்கூ என்பது ஜப்பானிய வடிவம். இது தமிழுக்கு வந்துவிட்டது. எது சரியான வடிவம் என்று தீர்மானிப்பதிலேயே இன்னும் குழப்பங்கள் நிலவுகின்றன. கற்பனை அற்றனவே ஹைக்கூ என்றாலும் கவிதையில் கற்பனை தேவை என்பாரும் உளர். அசைக் கட்டுப்பாடு உள்ளவை முறையான ஹைக்கூ ( formal hykoos) என்றும் அசைக் கட்டுப்பாடு அற்றவை முறையிலா ஹைக்கூ ( informal hykoos ) எனவும் வகைப் படுத்தப் படுகின்றன. இதற்கென ஒரு கண்டிப்பான வரையறையைக் கொண்டுவந்தால் ஹைக்கூ கவிதைகள் காலத்தால் சிறக்கும் என்பதே எனது கருத்து.
தாங்கள் மரபுக் கவிஞரா? புதுக்கவிதை எழுதுபவரா?
கவிஞர்களில் மரபுக் கவிதை எழுதுபவர் புதுக்கவிதை எழுதுபவர் என்றெல்லாம் பாகுபாடு காண்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. கவிதை எழுதுபவன் கவிஞன் அவ்வளவுதான். கவிஞன் சொல்லும் செய்திகளை வைத்தே அவனுடைய நிலைத்திருத்தல் தீர்மானிக்கப் படுகிறது.
நான் மரபுக்கவிதை புதுக்கவிதை இரண்டையும் எழுதுபவன். ஹைக்கூ மற்றும் தன்முனைக் கவிதைகளையும் எழுதக் கூடியவனே! பெரும்பாலான கவிதைகள் மரபு வடிவத்தில் உள்ளதால் மரபுக்கவிஞனாகவே மற்றவர்களால் கருதப் படுகிறேன்.
சமீபத்தில் பிரான்சு கம்பன் கழகம் தங்களுக்குப் பாவலர் பட்டம் வழங்கியுள்ளதே! அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பிரான்சு கம்பன் கழகம், தொல்காப்பியர் கழகம் மற்றும் பாவலர் பயிலரங்கத்தில் எனக்குப் பாவலர் பட்டம் வழங்கப்பட்டது. அவ்வமைப்புகளின் நிறுவனர் திரு பாட்டரசர் பாரதிதாசன் அவர்களால் வழங்கப்பட்டது. பாவலர் பயிலரங்கில் பல்வேறு விருத்த வகைகளில் 500 விருத்தங்கள் எழுதினால் பாவலர் பட்டம் வழங்கப் படுகிறது. நானும் 500 விருத்தங்கள் எழுதி அப்பட்டத்தைப் பெற்றுள்ளேன். தற்போது ஆயிரத்தை நிறைவு செய்ய உள்ளேன். விரைவில் விருத்தமாயிரம் புத்தகமாக வரவுள்ளது.
தாங்கள் எழுதியுள்ள புத்தகங்கள் பற்றி..
நீர்விழி ராகம் என்ற கவிதை நூலையும் மதுரை மீனாட்சி அம்மன் இருபா இருபஃது, வலங்கைமான் மாரியம்மன் இருபா இருபஃது, பட்டீச்சுரம் துர்கை மும்மணிமாலை என்ற சிற்றிலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளேன். தமிழமுது, வானமே எல்லை, எது கவிதை, தமிழ்ப்பூங்கொத்து போன்ற கவிதைத்தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளேன். மரபுப்பாமாலை, தொலைந்து போன கவிதை, எழுக தமிழா மற்றும் கவிதைக்கழகு இலக்கணம் ஆகிய 4 நூல்களை விரைவில் வெளியிட உள்ளேன்.
தாங்கள் பெற்றுள்ள விருதுகள் பற்றி.
சுமார் 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் முகநூல் அமைப்புகளும் வழங்கிய விருதுகள் இவை. ஆனால் எதையும் எனது பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதில்லை. சமீப காலமாக, பாவலர் என்ற பட்டத்தை மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.
தாங்கள் என்ன படித்துள்ளீர்கள்?
நான்முன்பே குறிப்பிட்டுள்ளது போல விலங்கியலில் முதுஅறிவியல் பட்டம் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன். பணியில் சேர்ந்த பிறகு நூலக அறிவியல் வரலாறு மற்றும் வணிக மேலாண்மை (மனிதவளமேம்பாடு) ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள் மற்றும் இலண்டன் காமன்வெல்த் அமைப்பின் இளைஞர் வளர்ச்சியில் ஒரு சர்வதேச பட்டயம் பெற்றுள்ளேன்.
நான் படித்ததற்கும் பணிக்கும் தொடர்பில்லாத ஒரு அரசுப் பணியில் உள்ளேன்.
தற்போதைய பணி தங்களுக்கு மன நிறைவைத் தரவில்லையா?
அப்படிச் சொல்லிவிட முடியாது. நான் தற்போது ஆற்றும் பணியை எந்தவிதமான குறையும் இன்றி மனநிறைவுடனே செய்கிறேன். எனது பொருளாதாரத் தேவைகளை நிறைவுசெய்யும் அளவுக்குப் போதுமான ஊதியம் தரும் பணி. எனக்கு இன்னொரு முகத்தைத் தரும் பணி. நிறைய அனுபவத்தை உலகியல் அறிவைத் தரும் பணி. அவ்வப்போது ஆசிரியாகவும் வாய்ப்பு கிடைக்கும் போது பணியாற்றுகிறேன். நான் தற்போது தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வித்துறையில் முதல்வரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன்.
கல்லூரியில் எவ்வாறு தமிழ்ப்பணி ஆற்றி வருகிறீர்கள்?
இது கொஞ்சம் சிரமமான கேள்விதான். நான் பணியாற்றும் கல்லூரி தொழில் நுட்பக் கல்லூரி. பொறியியற்பாடங்களை நடத்தும் கல்லூரி . இங்கு தமிழ் ஒரு பாடமே அல்ல. ஆங்கிலம் உண்டு. ஆங்கிலவழிக் கல்வி. எனவே தமிழ்ப்பணி என்பது கேள்விக்குறிதான் என்றாலும் என்னால் இயன்ற அளவு செய்து வருகிறேன். மாணவர்களிடையே கவிதைப் போட்டிகள் நடத்துவது, பேச்சுப்போட்டிக்குப் பயிற்சி அளிப்பது போன்றவற்றைச் செய்வதுண்டு. தமிழ் மன்றம் என்ற ஒரு அமைப்பைத் தோற்றுவித்து அதனை தமிழ்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் வழியாகத் தொடங்க உதவி உள்ளேன். கவியரங்கங்கள் நடத்தி வருகிறேன். செந்தமிழ் சொற்பிறப்பியல் இயக்ககம் வழியாக புதிய சொற்களைக் கண்டறியும் கருத்தரங்கம் நடத்த உதவி இருக்கிறேன். பொறியியல் கல்லூரியில் அகரமுதலித் திட்ட இயக்குநரையும் தமிழ்ப் பல்கலைக் கழகத்துணை வேந்தரையும் அழைத்துவந்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். மாணவர்களைத் தமிழில் கையொப்பமிடவும் பணியாளர்களை அரசு ஆணையின்படி தமிழில் கையொப்பமிடுவதை வலியுறுத்தி யும் வருகிறேன். இதுவே நான் கல்லூரியில் செய்துவரும் தமிழ்ப்பணியாகக் கருதுகிறேன்.
முகநூல் வழியாக எவ்வாறு தங்கள் தமிழ்ப்பணி உள்ளது?
முகநூல் ஒரு மிகப்பெரிய வரம். மார்க் அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகநூல் வழியாக என்னால் இயன்ற அளவு மரபுக்கவிதைகளைப் பயிற்றுவிக்கிறேன். நிலாமுற்றம் குழுமம் வாயிலாக மரபுக்கவிஞர்களை உருவாக்கும் மற்றும் வளப்படுத்தும் பணியைக் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாகச் செய்துவருகிறேன். அவ்வப்போது கவியரங் கங்களில் பங்கு பெற்று வருகிறேன். முகநூலில் வந்த பிறகு தான் நிறைய கவிதைகளை நான் எழுதியுள்ளேன். முகநூல் கவிஞர்களை ஒருங்கிணைத்து குடந்தை வலங்கைமான் நகரங்களில் கவியரங்கங்கள் நடத்தியுள்ளேன்.
தஞ்சைத்தமிழ் மன்றம் குறித்து…
அது ஒரு விபத்து. ஒரு நண்பர் தஞ்சையில் கவிரயங்கம் நடத்தவேண்டிக் கேட்டுக் கொண்ட போது ஒரு தொடர்பு குழு தொடங்குவதற்கு மாற்றாக தவறுதலாக முகநூல் குழுவைத் தொடங்கிவிட்டேன். அந்தக் கவியரங்கம் தஞ்சையில் நடைபெற்ற போது ஏற்பட்ட சில கசப்பான சம்பவமும் மற்றொரு குழுமத்தில் அதன் நிறுவனர் என்னை ஒரு கறிவேப்பிலையாகப் பயன்படுத்தியதன் விளைவும் தஞ்சைத்தமிழ் மன்றம் தோன்றக் காரணமாக அமைந்து விட்டது. ஆனால் இது முகநூல் குழுமம் அல்ல. முகநூலைப் பயன்படுத்தும் அமைப்பு. இதன் முக்கிய செயல்பாடு அந்தந்தப் பகுதியில் உள்ள இணையத்தைப் பயன்படுத்தாத கவிஞர்களை இளம் கவிஞர்களை மாணவர்களை ஊக்கப்படுத்துவதே ஆகும். திங்கள் ஒருமுறை ஞாயிறு மாலை ஒரு இரண்டு மணித்துளிகள் மட்டும் கவியரங்கம் நடத்துவது. புதிய கவிஞர்களைத் தலைமை யேற்கச் செய்வது. ஆண்டுக் கொருமுறை கவிஞர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்திச் சிறப்பிப்பது; கம்பதாசன் பெயரில் ஏழு கவிஞர்களுக்கு விருது வழங்குதல்; இசைக்கலைஞர்கள் நாட்டியக் கலைஞர்கள் ஆசிரியர்களுக்கு விருது வழங்குதல்.இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடத்துதல்; கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுதல். இதற்காக கவிஞர் களிடம் எந்தவித நன்கொடையும் பங் கேற்புக் கட்டணமும் பெறுவதில்லை. இதன் தலைவராக எனது ஆருயிர் நண்பர் வழிகாட்டி திரு பாலு கோவிந்தராசன் அவர்கள் உள்ளார். துணைத்தலைவர்களாக நண்பர்கள் ஏவிஎஸ் தேவநாதன் மற்றும் தென்பரை சுப்பிரமணியன் பணியாற்ற நண்பர் வா சண்முகம் அவர்கள் பொருளாளராகப் பணியாற்றுகிறார். வரும் 2021ல் சனவரி அல்லது பிப்ரவரி திங்கள் ஆண்டுவிழாவைப் புத்தகத் திருவிழாவாகக் கொண்டாட உள்ளோம் சுமார் 15க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட உள்ளன.
தங்கள் எதிர்காலத்திட்டம் என்ன?
இலக்கண நூல் ஒன்று எழுதுதல்.
கம்பரின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதைநடையில் எழுதுதல்.
திருக்குறளுக்குக் கவிதைநடையில் உரை எழுதுதல்.
குறுந்தொகைக்குக் கவிதை நடையில் உரை எழுதுதல்.
சிற்றிலக்கியங்களை ஆய்வு செய்தல்.
இளங்கவிஞர்களை ஊக்குவித்தல்.
வறிய நிலையில் உள்ள கவிஞர்களுக்கு உதவுதல்.
தமிழன்னைத் தமிழ்ச் சங்கத்து டன் இணைந்து தமிழன்னைக்கு ஆலயம் அமைத்தல்.
இக்கால இளைஞர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். உழைக்கத் தயங்காதீர்கள்; மனத்தை ஒருநிலைப் படுத்திச் செயல்படுங்கள். நீங்கள் நினைத்தை அடைவீ ர் கள். குறுக்கு வழிகளைக் கடைப்பிடிக்காதீர்கள்; பெற்றோர்களை மதியுங் கள். எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் தாய்மொழியை மறவாதீர்கள். ஏதேனும் ஒரு வகையில் மொழிக் கும் சமுதாயத்திற்கும் தொண்டு செய்யுங்கள்.
தமிழ்நெஞ்சம் குறித்த தங்களின் பார்வை…
இன்றைய காலத்தில் போற்றப்பட வேண்டிய இதழ். சிறிதும் இலாப நோக்க மின்றிச் செயல்படும் இதழ். கவிதைளுக்கும் கவிஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் முதன்மையான இதழ். உலகின் எந்த மூலையில் உள்ள கவிஞரானாலும் அவருக்கு நூல் வெளியிட எந்தவிதமானக் கைமாறுமின்றி நூலை வடிவமைத்து வெளியீடு செய்ய உதவும் ஒப்பற்ற அமைப்பு. இது ஒரு அளப்பரிய பணி. கவிஞர்களின் கவிதையை வெளியிடக் கூடக் காசு கேட்கும் உலகில் கைமாறு கருதாமல் தமிழ்நெஞ்சம் செய்யும் பணி மகத்தானது. மென்மேலும் வளர எனது இனிய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .
3 Comments
நிறைமதி நீலமேகம். · செப்டம்பர் 30, 2020 at 19 h 31 min
மிகவும் சிறப்பு.. இனிய நல்வாழ்த்துகள்.💐💐💐💐💐💐💐
ஆத்தூர் சாகுல் · அக்டோபர் 1, 2020 at 10 h 12 min
உழைப்பால் உயரலாம் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நேர்காணல்.
பாவலர் இராம வேல்முருகன் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
வே.பூங்குழலி பெருமாள் · அக்டோபர் 28, 2020 at 6 h 13 min
மிக அருமையான யதார்த்தமான பேட்டி
பாவலருக்கும் நூலாசிரியர் க்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்