தன்முனை
இராம வேல்முருகன், வலங்கைமான்
1
புத்தகம் படித்து
நிமிர்ந்து பார்த்தேன்
புதிய உலகம்
கண்ணுக்குத் தெரிந்தது
2
தெரிந்த நண்பர்களைத்
தேடிப் பார்த்தேன்
வறியவன் ஆனதை
உணர்த்திச் சென்றனர்
3
சென்ற காலம்
திரும்பி வராது
இருக்கும் காலத்தை
இறுக்கிப் பிடிப்போம்
4
பிடித்த கவிதைகள்
பிடிக்காமல் போயின
பொறாமையா ஆதங்கமா
காரணம் தெரியவில்லை
5
இல்லாத காரணத்தைத்
தேடிப் பார்க்கிறேன்
தேர்வு செய்யப்படாத
கவிதைக்குச் சொல்ல…
6
சொல்லச் சொல்ல
இனிக்கத்தான் செய்கிறது
சர்க்கரைவியாதிக் காரனுக்கு
அல்வாவும் மிட்டாயும்
7
மிட்டாய் வாங்கிக் கொடுத்த
பால்ய நண்பன் வருகிறான்
கடன் கேட்பான் எனக்
காணாமல் போகின்றேன்
8
போகும் இடமெல்லாம்
அவளின் ஞாபகங்கள்
விதைக்கும்போது சொல்லியிருப்பின்
போகாமல் இருந்திருப்பேன்
9
இருப்பேன் என்ற
நம்பிக்கையில் வீட்டில் உலவுகிறேன்
கொரானா கழிந்த பிறகு
தொடருமா பயணங்கள்
10
பயணங்கள் நிறுத்திவைத்து
படித்துக் கொண்டிருக்கிறேன்
புதிது புதிதாக
தினமொரு புத்தகம்
11.
தனிமையும் கூட
கற்றுத் தருகிறது
உயிர்மேல் உலகம்
கொண்ட காதலை.
12
காதல் மட்டுமே
வாழ்க்கை அல்ல.
உணரும் போது
கைகளில் காலம் இல்லை
13
இல்லாத கடவுளைத்
தேடி அலைகின்றனர் வெளியே.
ஒவ்வொருவர் உள்ளும்
அவருள்ளார் என்பதை மறந்து
14
மறதி மனிதனுக்கு
கடவுள் அளித்த வரம்
இல்லையென்றால் தினமும்
செத்துக் கொண்டிருப்பான்.
15.
இருக்கும் நண்பர்களை
இளமையில் இழந்து விடாதீர்கள்
இறுதி காலங்களில்
பொழுது போகாது.
16.
போகாத ஊருக்குப்
பயணிக்க எண்ணுகிறோம்
போகப் போகும் ஊரை
ஏனோ வெறுத்து ஓடுகிறோம்
17
ஓடும் ஆற்று நீரில்
கலந்து ஓடுகின்றன பாவங்கள்
காத்துக் கிடக்கின்றன
நமக்கான தண்டனைகளும்
18
தண்டனைகள் மட்டும்
திருத்தி விடுவதில்லை
காலமும் மருந்தானால்தான்
காயங்கள் குணமாகும்
19
குணமான பின்னும்
மறந்தான் இல்லை
பித்துப் பிடிக்கச் செய்த
அவளின் நினைவுகளை.
20.
நினைவுகளின் உள்ளேயே
தொலைந்து போகிறேன்
நிறைய கற்றுத் தருகிறது
கொரானா தரும் தனிமை