முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி

தமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது. அவ்விருது மங்கை செல்வக்குமாரி அவர்களின் நேர்க்காணல் இதோ…

  • இந்த ஆண்டில் இரு சக்தி விருதுகளை வாங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.. இவ்விருதுகள் குறிப்பாக பெண்களுக்கு அளிக்கப்படும் விருதுகள்.. இவ்விருது களைப் பெரும்பொழுது என்ன மாதிரியான மனநிலையை உணர்ந்தீர்கள்..

உண்மையில் சொல்லப்போனால், நான் எவற்றையும் பெரிதாகக் கருதுபவள் கிடையாது. இவை போன்ற பல விருதுகளை நான் எப்போதோ வாங்கியிருக்க வேண்டும். காலச்சூழலும், வாழ்க்கைச் சூழலும் காலம் தாழ்த்தியே இவ்விருதை வாங்க வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். மேலும் இவ்விருதுகள் வலிய வந்து என்னை முன்தூக்கிவிடுவதாக உணர்கிறேன். ஆம்…. இனி நான் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் ஓடயோடி செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திவிட்டதற்காக இவ்விருதுகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

  • உங்கள் கடந்த காலம் பற்றிய நினைவு களையும் பணிகளையும் அறிமுகம் செய்யுங்களேன்..

நான் தமிழகத்தில் பிறந்து புதுச்சேரியில் வாழ்க்கைப்பட்டவள். நான் ஆசிரியப்பணியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அதோடு இலக்கியப்பணியும் சமூகப்பணியும் என் இரு கண்கள் எனலாம். அந்த அளவிற்கு அவற்றோடு ஈடுபாடும் நெருங்கிய தொடர்பும் கொண்டவள்.

கடலூரில் உள்ள சோனங்குப்பம் என்ற சிற்றூரில் சாதாரண நடுத்தர மீனவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். என் ஊரிலேயே முதன்முதலாக கல்லூரியில் படித்தவள் நான்தான். இளங்கலை தமிழ் படித்துபின் புதுவைப் பல்கலையில் முதுகலை படித்தேன். எனது கல்லூரி காலத்திலேயே படிக்காத முதியவர்களுக்குப் படிக்கக் கற்றுக்கொடுப்பேன். அன்றைக்கே ஊரில் மரங்களை நட்டுவளர்ப்பதிலே ஆர்வங் கொண்டிருந்தேன். மரங்களே நம்மைக் காக்கும் தெய்வங்கள் என்பதை அறிந்திருந்தேன். ஆம்.. இயற்கையின் மீது ஆறாக் காதலும் மாறாப் பற்றும் உடையவளாக இருந்தேன். தற்பொழுது நான் வசிக்கின்ற சோலை நகரில் முந்நூறு மரங்கள் நட்டு வளர்த்தவள். சுனாமிக்குப் பிறகு அந்த மரங்கள் பல கருகி காய்ந்துவிட்டன. பலபேர் வெட்டிப்போட்டனர். இருந்தும் பத்துப் பதினைந்து மரங்கள் இன்னும் என் பேரைச் சொல்லும். இப்பொழுதும் மாணவர்களிடத்தும், பார்க்கின்றவர்களிடத்தும் மரங்களின் அவசி யம் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பேன். மரங்கள்தாம் உண்மையில் நம் உயிர் காக்கும் தெய்வங்கள்.

  • உங்களுக்கு வேறு எவற்றிலெல்லாம் ஈடுபாடு உண்டு. அது குறித்துச் சொல்லுங்கள்.

பொதுசேவையில் ஆதீத ஆர்வமும் ஈடு பாடும் கொண்டவள். குழந்தைகள் மீது மிகுந்த ஈடுபாடு என்பதால், ஆசிரியப்பணி செய்து திரும்பும் மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்து வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைகளைச் சொல்லி மகிழ்விப்பேன். குழந்தைகள் அன்போடு ‘‘ஆன்டி’’ என்று அழைப்பர். நான் ராசாராணி கதையிலிருந்து தற்கால கதைகள் வரை சொல்வேன். குழந்தைகளையும் சொல்ல வைப்பேன். நான் நல்ல கதைச்சொல்லி என்பதால் புதிதாகத் தோன்றும் மாயாசாலக் கதைகளை நானாகவே உடனே உருவாக்கிச் சொல்வேன். சில பொழுதுகளில் சொதப்பலாகி, குழந்தைகள் சிரிப்பர். குழந்தைகளோடு அளவளாவி, விளையாடுவதில் அலாதிப் பிரியம் எனக்குள். முன்னாள் பிரதமர் விபிசிங் அவர்களிடம் உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு எது என்று கேட்டபொழுது ‘‘எனக்கு என் பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவதுதான்’’ என்றாராம். அது போல் குழந்தைகளிடம் குழந்தையாக மாறி விளையாடுவதில் ஒரு பேரின்பம் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒரு முறை குழந்தைகளோடு குழந்தையாக கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்ப ஒரு எல்கேஜி படிக்கற தினேசை சீண்டிப் பார்க்க வேண்டி இந்தியா தோற்றுவிடும் என விளையாட்டாகச் சொன்னேன். அது கடைசி விக்கெட் நேரம். சொன்னபடியே இந்தியா தோற்றது. அவன் மிகக் கோபமாக எழுந்து ‘‘ஆன்டி உங்களாலதான் இந்தியா தோத்துப்போச்சு. உங்கப் பேச்சு கா’’ என்று சொல்லிவிட்டு கோபமாகச் சென்றதை இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கும். குழந்தைகள்தாம் எத்தனை உண்மையானவர்களாக இருக்கிறார்கள். நாம் தாம் அவர்களைப் பொய் சொல்ல வைக்கிறோம். தீயப் பழக்கத்திற்கு ஆளாக்குகிறோம் என்பதை உணர்ந்த தருணம் அது.

  • நீங்கள் இதுவரை எத்தனை புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறீர்கள்.. இது குறித்துச் சொல்லுங்களேன்.

பொறிஞர் மு. பாலசுப்ரமணியன், முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி, மேகலாசெழியன் மற்றும் இலக்கிய நட்புகள்.

என் முனைவர் பட்ட ஆய்வு நூல் ”திருநங்கையர் வாழ் நிலையும் பால்நிலையும்” என்பதாகும். ஏழாண்டுகள் களப்பணி செய்து எழுதப் பட்ட ஆய்வுநூல் இது. இந்நூலை பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் பதிப்பகம் வெளியிட்டு சிறப்பித்தது. இந்நூல் வெளிவந்த சில மாதங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு புதிய இணைப்புகளுடன் விரைவில் வெளியாகவுள்ளது.

நியூசெஞ்சுரி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட முதல் கவிதைநூல் ”பெண்ணியம் பேசுகிறேன்”, புதுச்சேரி கலைப் பண்பாட்டு துறையின் நிதியுதவி யுடன் வெளிவந்த இரண்டாவது நூல் ‘‘ஈர்ப்பு’’. பாட்டுக்கவி பாரதியின்மேல் காதல் கொண்டு எழுதிய கவிதைநூல் ‘‘அகத்தீ,’’ அடுத்ததாக இலங்கையில் சிறந்த கவிதை நூலுக்கான விருது கிடைத்த நூல் ”கரைந்தழும் கடல்” என்பதாகும். தற்பொழுது ‘‘காமத்துப்பாலும் ஹைக்கூவும்’’ நூல் எழுதி முடித்திருக்கிறேன். அதோடு ‘‘வம்பாமணல்’’ என்ற பெண் பற்றிய நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மேலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். நாட்டுப்புறவியல் ஒப் பாரிப்பாடல்கள் பற்றி எழுதியுள்ளேன். ‘‘சிங்காரவேலரும் பெரியாரும்’’, ‘‘அறிவுமதியும் அவர்தம் படைப்புகளும்’’, குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளாகும். ‘‘பழந்தமிழ் இலக்கியத்தில் பெண் புனைவுகள்’’ என்ற கட்டுரை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு கட்டுரையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அடுத்து «திருநங்கையர் வாழ்நிலையும் பால்நிலையும், «தமிழ்ப் புனைவுகளில் திருநங்கையர்» என்ற கட்டுரைகள் தற்பொழுது மானுடம் போன்ற ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. தினமலரில் இன்னொரு தாய்வீடாக வேண்டும் பள்ளிக்கூடங்கள் எனும் தலைப்பில் வெளிவந்தது.

  • தமிழ்நெஞ்சம் இதழில் இணை யாசிரியர் நீங்கள்.. அவ்விதழ் குறித்துச் சொல்லுங்கள்.

முதலில் தமிழ்நெஞ்சம் அமின் அவர் களுக்கு என் நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்தான் இந்த அரிய வாய்ப்பினை நல்கினார். அவரால் உலகம் முழுக்க இருக்கின்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிமுகமானேன். பிரான்சிலிருந்து வெளிவரும் தமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர். உலகின் பலநாடுகளிலிருந்தும் தமிழ்க்கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள் எனத் தமிழ்நெஞ்சத்தில் எழுதிவருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவருடன் சேர்ந்து பதிப்பித்திருக்கின்றேன்.. நிறைய எழுத்தாளர் கள் புத்தகம் போட வாய்ப்பில்லாச் சூழலில் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த செலவில் பதிப்பித்திருக்கின்றேன். இலக்கியவாதிகள் பலர் இதுகுறித்துப் பாராட்டு வது எனக்கு உத்வேகம் அளிக்கிறது என்றால் மிகையில்லை.

  • உங்களுடைய வேறுபட்ட பணிகள் ஏதாகிலும் உண்டெனில் அது குறித்தும் கூறுங்களேன்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு மையத்தில் «சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அறக்கட்டளை» யை உருவாக்கிய பொறுப் பாளர்களில் நானும் ஒருவர். கவிஞர் அறிவுமதி, கவிஞர் முத்துநிலவன், பேராசிரியர் இளங்கோ, புலவர்.பா.வீரமணி போன்ற சிறந்த ஆளுமைகள் அவ்வறக்கட்டளையில் சிறப்புரையாற்றியுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

இலக்கியப்பணி மற்றும் சமூகப் பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள் ளேன். ‘‘சிங்காரவேலர் சுடர் விருது’’, ‘‘சாதனைத்திலகம் விருது’’ எனப் பல களப்போராளி, சமூகச் செயற்பாட்டாளர் என்பதால் ‘‘காமராசர் நினைவு விருது’’ பெற்றுள்ளேன்.

பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருபவள். «மகிழ்ச்சி பெண்கள் நலப்பேரவை», ‘‘மீனவப் பெண்கள் முன்னேற்ற அமைப்பு’’, ‘‘நீலக்கடல் மகளிர் சங்கம்’’ போன்ற பெண்களுக்காக சங்கங்கள் இவைகள்வழி செயலாற்றி வருகிறேன்.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழாவில் மதிப்புமிகு மன்னர் மன்னன், கி்.ரா போன்றோருடன் ‘‘சான்றோர் பாராட்டு’’ பெற்றிருக்கிறேன் என்பதில் புளங்காகிதமடைகிறேன்.முனிசிபல் கவுன்சிலராக சுயேச்சையாக (ஓட்டுக்குப் பணம் தராமல்) நின்று தோற்ற அனுபவமும் உண்டு. ‘‘செயல் அதுவே சிறந்த சொல்’’ என்பதற்கேற்ப என் எளிய வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? இறுதியாக.. என்னைப் பற்றி நீங்கள் இரத்தினச் சுருக்கமாக அறிந்து கொள்ள என் ஒரு கவிதையே போதுமானது என்று நினைக்கிறேன்.

என் கவிதையின் சிலவரிகள்தான் இவை..

‘‘என்னை பெமினிஸ்டு
என்னை கம்யூனிஸ்ட்
என்னை பெரியாரிஸ்ட்
என்றழைப்பதை விட
ஹிமனிஸ்ட் என்றழைப்பதையே
பெருமிதமாகக் கொள்வேன்.’’


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »