இரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும், செய்த வேலையே செய்வதனால் எற்படுகிற சலிப்பும் தான் காரணம்.

இரவிற்கு உணவு தேவையில்லை. பணம் தேவையில்லை. பயணம் தேவையில்லை.  கண்மூடி மயங்கி கிடக்கும் வித்தை தெரிந்தால் போதும். இரவு எப்போதும் விடுதி வேலைக்காரர்களுக்கு பிடித்தமான ஒன்று. ஹோட்டல் அறை முழுக்க பணக்காரர்களின் ஆதிக்க குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். வருபவர்களிடம் நாம் பணிந்து உபசரிப்பது என்பது, அவர்களுக்கு மேலும் மகிழ்வை தரும். உணவு சரியில்லாமல் போனால் தன் மனைவியிடம் கூட கோபப்பட முடியாது. ஆனால் வெயிட்டர்களிடம் எளிதில் கோபத்தை காட்டி விடுவார்கள்.

மனித இனம் எப்போதுமே ஒருவனை தனக்கு கீழ் வைத்துக் கொள்வதையே புத்திசாலி என்று நம்புகிறது.

சென்னையில் அண்ணாநகரில் உள்ள ஒரு உயர்தர சைவ உணவகத்தில் வேலை செய்கிறான். காலை 5 மணியில் இருந்து மதியம் 5 மணிவரை தொடர்ந்து நின்று கொண்டே செய்யும் வேலை என்பதால் கால் வலியால் ஹோட்டலில் வேலை பார்க்கும் பலரும் அவதிப்பட்டார்கள்.

சிலர் மது அருந்திவிட்டு படுத்து கொள்வார்கள். எப்போதுமே ஹோட்டலில் வேலை செய்பவர்கள் குடிப்பார்கள் என்று பலரும் சொல்வார்கள். அவர்கள் தொடர்ந்து அடுப்பின் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அவை உடலின் விந்தனு சுரப்பதை குறைக்கிறது. அதோடு சீக்கிரம் இரவு உறங்கினால் தான் காலையில் வேலைக்கு விரைந்து எழுந்திருக்க முடியும் என்பதால் குடிக்கிறார்கள்.அரசு மது விற்பனை செய்கிறது. அதை மக்கள் வாங்குகிறார்கள். தவறு செய்பவனை விட செய்யதூண்டுபவன் தானே மிகப் பெரிய குற்றவாளி.

வழக்கம் போல அடுப்படி ஆட்களை ஒவ்வொருவராக இரவு வாட்ச்மேன்  எழுப்பி விட்டார்.

எழுப்பியும் எழுந்திருக்காதவர்களை பார்த்து நைட்டு முழுக்க படத்த பாத்துட்டு வேலைக்கு போரப்ப தூங்குறானுங்க மயிரானுங்க என்று கணத்த குரலில் கத்தினார்.

பிறகு எழுந்து முந்தைய நாளே பெரிய மாஸ்டர் சொன்னதைப் போல அவர் அவருக்கென்று வேலையை பிரித்து கொண்டார்கள்.

ஒருவர் சாம்பார் வைக்கவும், ஒருவர் சட்னி ரெடி பன்னவும், ஒருவர் குருமா வைக்கவும் சரியாக 6:30 ஆகிவிடும். அதை எடுத்து கொண்டு ஸ்டாலில் வைப்பதற்கு முன்பு பெரிய மாஸ்டர் வந்து, கண் ஊலை துடைக்காமல் அறை தூக்கத்தில் எழுந்து வந்து வாயில் தண்ணீரை ஊற்றி கொப்பளித்து துப்பிவிட்டு ஒவ்வொன்றையும் நக்க பார்ப்பார். எதாவது குறையிருந்தால் உடனே சரி செய்து கொடுத்து விடுவார்.

சமையல் என்பது ஒரு கலை. அதை கற்றுக் கொள்வது கடினம். கற்றுக் கொணடாலும் கை தேர்ந்த சமையல் கலைஞனாக ஆவதென்பது கடினமான ஒன்று.

பெண் விடுதலை என்பதை மனதில் கொண்டு தான் ஹோட்டலில் ஆண்களை சமைக்க  வைத்தார்களோ என்னவோ? சமைப்பதை நிறுத்திவிட்டால் பெண் விடுதலை ஆகிவிடுமா என்ற கேள்வி உடனே எழும்.

இது விடுதலை அல்ல தான் இருந்தாலும் ஆண்கள் சமைப்பதற்கு இது மேலும் உந்துதலாகும்.

பெரிய மாஸ்டர் உப்பு, காரம்  சரியாக உள்ளதா என்று பார்த்தவுடன் காலை உணவுக்கான பொருளை எடுத்து வைத்து விற்பனைக்காக தயார் செய்து கொண்டிருந்தான் கார்த்தி.

ஒவ்வொரு வராக வேலைக்கு வர ஆரம்பித்தார்கள். ஒரு புறம் தோசை மாஸ்டர் தோசை கல்லை சூடேற்றி தக்க பதத்தில் வைக்க முயற்சித்து கொண்டிருந்தார்.அவர் நேர் எதிரே புரோட்டா மாஸ்டர் மைதாவை பிசைந்து புரோட்டா வீசுவதற்கு பீடா பிடித்துக் கொண்டிருந்தார்.

கார்த்தி எப்போதும் கலகலப்பாக இருக்க கூடியவன். அதுபோல வேலை என்று வந்து விட்டாள் யார்? என்று கூட பார்க்க மாட்டான். உடனே முகம் சுழிக்கும் அளவிற்கு வார்த்தைகளை கொட்டி விடுவான்.

அவன் ஹோட்டலை தனது சொந்தக்கடை போல் நினைத்து வேலை செய்தான். ஏன் அங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரும் அப்படி தான் நினைத்திருந்தார்கள்.நேரமான தும் கஸ்டமர்கள் வர ஆரம்பித்தார்கள். மொத்தம் மூன்று ஹால்.ஒன்று ஏசி இல்லாத அறை, மற்ற மூன்றும் ஏசி கொண்ட அறைகள். அது அதுக்கும் தனி தனியாக சூப்பர்வைசர்கள், வெயிட்டர்கள் என தினமும் டூட்டி எழுதப்பட்டு விடும். அதன் படி அவர்கள் வேலை பார்க்க வேண்டும்.

கஸ்டமரிடம் சூப்பர்வைசர் ஆர்டர் எடுத்து வெயிட்டர் துரையிடம் சொன்னார். ஒரு மசால் தோசை, ஒரு காபி. துரை கிச்சனுக்கு சென்று மாஸ்டர் ஒரு மசாலா என்று கத்தினார். அதற்கு சரி சரி என்று மாஸ்டர் எதிர் குரலெழுப்பினார்.

ஒரு நாள் முழுக்க ஆடி ஓடி அலைந்து திரிந்து சம்பாதித்து ஒத்த ரூபாக்கூட கையில நிக்கலையே என்ற வார்த்தை ஹோட்டலில் வேலை செய்பவர்களின் பலரின் குரல். அதுவும் வெயிட்டர் வேலை என்பது மனதை சிதைக்கிற ஒன்று. நாள் முழுக்க நிற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

என்ன துரை அண்ண, புதுக்கல்யாண மாப்பிள்ளை வேற ஆகப் போர. ஏ! சீக்கிரமா வந்துட்ட பொண்ணு பாத்தாச்சா என்றான் கார்த்தி.என்ன பன்ன இருந்த ஆளுலா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டானுங்களா அதுக்கு என்ன சீக்கிரம் வானு சொல்லிட்டாங்க என்ன பன்னுரது. நம்ம நிலைம அப்படி. உக்காந்து திங்க நம்ம அப்பனுங்க என்ன சொத்தா வச்சிறுக்கானுங்க. கடன் மட்டும் தா வாங்கி வச்சருக்கானுங்க. இருடா மசாலா வேற சொன்ன கஸ்டமர் கோப ப்பட்டுட போறாரு. போய் கொடுத்துட்டு வந்துடுர என்றான்.

என்னாப்பா ஆர்டர் பன்னி எவ்வளவு நேரமாகுது இன்னும் காணும் என்று  சொல்லி முடிப்பதற்குள் துரை மசால் தோசையை டேபிளுக்கு எடுத்து சென்று வைத்தான். சாரி சார் மாவு புது மாத்துனாங்க என்று பொய் சொல்லி சமாளித்தான். முக்கால் தோசை உள்ள போனப் பிறகு காபி மாஸ்டரிம் காபி ஒன்னு ஆர்டர் செய்தான்.

அவர் தோசையை சாப்பிட்டு முடித்து கை கழுவி உட்கார்ந்தவுடனே சார் காபி என்று சொல்லி டேபிளில் வைத்தான். உடனே அவர் புன்னகைத்தார்.

என்ன துரை அண்ண, கஸ்டமரு சிரிக்குறாரு எதாவது கவனிப்பாரா என்றான் கார்த்தி. அவரு நம்ம ரெகுலர் கஸ்டமர், எப்போ வந்தாலும் ஐந்தா நம்பர் டேபிள் தா. நா எங்கிருந்தாலும் வேர டேபிள் சர்வீஸ் பன்னாலும் என்ன தா எதையும் எடுத்துகிட்டு வர சொல்லுவார். கடைசியில் இருபது ரூபாய் கொடுத்து விட்டு போவார் என்றான்.

சாப்ட வர பாதி பேரு கேவலமாக தா பார்க்குறானுக. அந்த பார்வையே நம்மல கொன்னுடுது. என்ன பன்னுரது, அவன் கொடுக்குர அஞ்சு, பத்து தா நம்மல ஊர்ல பணக்காரனா காட்டுது என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

உடனே சத்தமாக டே… கார்த்தி என்று கணத்த குரலில் சத்தமிட்டார் கிச்சன் சூப்பர்வைசர். சொல்லுங்கண்ண என்றான். மேல போய் சாப்பாட்டுக்கு ரெடி பண்ணனும் எல்லோரையும் வரச்ச சொல்லு என்று கார்த்தியிடம் சொன்னார். எப்போதும் நமக்கு மேல் உயர் பதவியில் இருப்பவர்கள் தான் நினைக்கும் வேலை முடிய வேண்டு என்பதில் சரியா இருப்பார்கள். அதற்காக பணிந்து பேசுவார்கள் சில நேரங்களில் கோபமாகவும் பேசுவார்கள். அதனால் என்னவோ நல்ல வேலைக்காரன் என்பதால் எந்த வேலையையும் சரியாக செய்து விடுவான் என்ற நம்பிக்கையிலும், அவர் இல்லாத போது சில உணவுப் பொருட்களை அவனே மாஸ்டரிடம் சொல்லி தயார் பன்ன சொல்லி விடுவான்.

அவன் கடைக்கு வந்து மூன்று வருடங்கள் தானாகிறது ஆனால், சாம்பார் எப்படி வைக்க வேண்டும், 300 பேருக்கு எத்தனை படி பருப்பு போட வேண்டும். ரசத்துக்கு எவ்வளவு புளி சேர்ககனும் என்பதெல்லெம் அவனுக்கு அத்துபடியாகிவிட்டது.

தினமும்  அவன் வேலை முடிந்தாலும் பெரிய மாஸ்டருடன் நின்று கையால்  வேலை செய்வான். அவர் சமைக்கும் போது உன்னிப்பாகக் கவனிப்பான். பெரிய மாஸ்டர் ஒன்னும் சாதாரண ஆளு இல்ல. அவர் ஒன்னும் எடுத்த உடனே மாஸ்டராயிடல முதல்ல கிளினர் வேலைக்கு சேர்ந்து கொஞ்ச கொஞசமாக ஒவ்வொரு வேலைய கத்துகிட்டு தா இந்த நிலைமைக்கு வந்திருகுறாரு.

அவர பார்த்த ஓனரே கொஞ்சம் பயப்படுவார். அந்த அளவுக்கு வாட்ட சாட்டமான ஆள். ஒரே ஆளு நான்கு அடுப்ப பத்த வச்சு, நான்கு விதமான பொருட்களை சமைக்க கூடியவர். பத்தடிக்கு மேல் தூரத்தில் உள்ள ரசம் கொதியும் போது வரும் வாசனையை வைத்தே உப்பு இருக்கா, புளிப்பு இருக்கா இல்லையா என்று கச்சிதமாக சொல்லிவிடுவார். அதுவும் நின்ற  இடத்திலிருந்தே உப்பை அள்ளி வீசுவார். சிறு துளிக்கூட கீழ விழாமல் போய் ரச அண்டாவை அடையும். இரண்டாயிரம் மூவாயிரம் பேராக இருந்தாலும் அசாத்தி யமாக சமைப்பார்.

கார்த்தி அவரிடமிருந்து ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டான்.அவருக்கு தற்போது நாற்பத்தைந்து வயதாகிறது. ஆனால், குழந்தைகள் இல்லை. அவருக்கு மிகவும் வருத்தமான நினைவு இது ஒன்று தான்.

அதனால் என்னவோ அவனை அவருக்கு ரொம்ப பிடிக்கும். யாருக்கும் எளிதில் தன் தொழில் ரகசியத்தை சொல்லி தராதவர் அவனுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தார்.

கார்த்திக்கு பெரிய மாஸ்டரை விடவும் இன்னொருவரை மிகவும் பிடிக்கும். அது வேறுயாருமில்லை அதே ஹோட்டலில் வேலை செய்யும் ரெஜினா தான். அவள் குடும்ப கஷ்டத்திற்காக பாத்திரம் கழுவும் வேலைக்கு வரும் பெண். ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் இடத்தில் பெண் என்பவள் எப்படியிருந்தாலும் தேவதையாகதான் தெரிவாள்.

அவளை பார்த்தால் வேலைக்காரி போல் தெரியவே தெரியாது. பட்டு புடவையும் கொஞ்சம் நகைகளும் அணிந்தால், அவள் தான் கடைக்கு முதலாளி மகள் என்று சொன்னாலும் நம்பிவிடுவார்கள்.

காலை சரியாக ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்து விட்டு மதியம் ஐந்து மணிக்கெல்லாம் போய்விடுவாள்.

அவளை பார்ப்பதற்காகவே கார்த்தி தனது வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு ஐஓபி பேங் ஓரத்தில் போய் நின்று விடுவான்.

அவன் பார்ப்பது கடையில் வேலை செய்யும் ஒருவரை தவிர மற்ற யாருக்குமே தெரியாது. ஏனென்றால் தெரிந்தால் கிண்டல் செய்வதோடு அவளை பற்றி கேவலமாக சொல்வார்கள்.

அவள் கடைக்குள் நுழைந்ததும் கிட்டதட்ட சுமார் முன்னூறு ஜோடி கண்கள், அவளை தின்ன ஆரம்பித்திருக்கும்.

அவள் உள்ளே நுழைந்தால் வேலை முடியும் வரை அங்கிருக்கும் பசங்க கூட கலகலப்பாக பேசி விளையாடுவாள். அதை பார்க்கும் சில வெயிட்டர்கள் அவள் மீது அதீத ஆசைக் கொள்வார்கள்.

ஆண்கள் முகங்களை மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் இடத்தில் பெண்கள் வேலை செய்வதென்பது. கூண்டுக்குள் மாட்டிய கிளிப்போல் தானே. அவளால் நம்மை எதிர்த்து என்ன பேசிவிட முடியும் என்ற எண்ணம் பலரிடத்தில் இருந்தது.

கார்த்தி சாப்பிட்டு பிளேட்டை கழுவப் போடும் போதெல்லாம் ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பாள். அது அவனை பல இரவுகள் தூங்க விடாமல் செய்திருக்கிறது.

அவள் எனக்காக பிறந்தவள் என்றும் மனம் உள்ளூர மகிழ்ந்தான்.

ரெஜினா என்ற பெயர் அவனுக்கு மந்திரம், ஊக்க மருந்து, உணவு, நினைவு எல்லாமும்.

ஹோட்டலில் அவன் விரும்பி பேசுபவர் களில் ஒருவர் தான் தட்சிணாமூர்த்தி. அவர் அந்த கடையில் பதினைந்து வருடமாக வேலை செய்பவர்.அவருக்கு எல்லா வேலையும் அத்துப்படி.தற்போது வடை மாஸ்டராக வேலை பார்க்கிறார். ஆயிரம், இரண்டாயிரம் வடையெல்லாம் அசாத்தியமாக செய்து கொடுத்திருக்கிறார்.

ஏன் அவரை அவனுக்கு பிடிக்குமென்றால் ரெஜினா அவரிடம் தான் எப்போதும் ஓய்வு நேரத்தில் பேசிக் கொண்டிருப்பாள்.அதனால் அவள் அவரிடம் என்ன பேசினாள். அவனைப் பற்றி ஏதாவது பேசினாலா என்று தெரிந்து கொள்வதற்காகவே பேச ஆரம்பித்தவன். தற்போது மிக நெருக்கமான அண்ணன் தம்பியாகி விட்டார்கள்.

ரெஜினாவை ஒரு தலையாக காதலிக்கி றான் என்று தட்சிணாமூர்த்திக்கு தெரியும். ஆனால் தெரியாத மாதிரி காட்டி கொண்டார்.

ரெஜினா சரியாக 5’3 அடி உயரம் இருப்பாள். வாலிபவயதை தூண்டும் உடல் அமைப்பு கொண்டவள்.

கார்த்திக்கு ரெஜினாவினுடைய கண்கள் மிகவும் பிடித்தமான ஒன்று. அவளை அவன் நேருக்கு நேர் பார்க்கும் போதும், எதர்ச்சையாக அவளை பார்க்க நேரும் போதும் கண்கள் தான் முதலில் தென்படும்.

அந்த கண் ஆண்களுக்கெல்லாம் பார்த்த வுடனே பிடித்துவிடும் என்கிற அளவிற்கு இருக்கும். கண்கள் ஏதோ பேசுவது போலவே இருக்கும்.

வடை மாஸ்டரும் ரெஜினாவும் பேசிக் கொண்டிருக்கும் போது பொறுமையாக  கிட்டே சென்று அவர்களுடன் உட்கார்ந்து எதுவும் பேசாமல் , அவளை  ஓரக்கண்ணால் யாருக்கும் பார்ப்பது தெரியாதவாறு பார்ப்பான். ஆனாலும் ரெஜினா அதை கவனித்து விடுவாள். இருந்தாலும் அதை அவள் பொருட்படுத்தியதே கிடையாது.

இப்படியே அவளை பார்த்துக் கொண்டே சாம்பார் வைக்கவும், உணவு பொருட்களை பார்சல் கட்டுவதுமாக நகர்ந்து கொண்டே இருந்தது.

ஹோட்டலில் அவளை பற்றிய பேச்சுகள் தான் அதிகமாக இருக்கும்.வயசு பையன்கள் முதல் வயதான கிழவர்கள் வரை.

அவள் நடத்தையை கேவலமாக பேசியும், உடல் அமைப்பை வர்ணித்தும் பேசிக் கொண்டு ரசிப்பார்கள். அதை கண்டு கோபமடைந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையைக் கண்டு சோர்ந்து போனான்.

அவள் மீது அவன் காதல் கொண்டதில் இருந்து இரவு நேரத்தை வெறுக்க ஆரம்பித்தான். காலை விடிந்தவுடଞன்  எப்போதும் போல எழுந்து குளித்து விட்டு, இரண்டு இட்லியும் ஒரு வடையையும் எடுத்து பிளேட்டில் வைத்துக் கொண்டு வடை மாஸ்டருக்கு அருகில் சென்று சாப்பிட்டு கொண்டிருந்தான்.

என்ன கார்த்தி பேங்குகா என்றார். ம்ம்…. என்றான். பேங்க் வாட்மேனை விடவும் காவல் காக்குர டூட்டிய நீ தா சரியா செய்யுற என்று மாஸ்டர் அவனை கலாய்தார்.

சிரித்துக் கொண்டே மாஸ்டர் நான் ரெஜினாவை கல்யாணம் பன்னிக்கலாம்னு இருக்க. நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டான்.

மாஸ்டரின் முகம் திடீரென்று மாறியது.

ஏன்டா இந்த முடிவு அந்த பொண்ணுக்கு அடுத்த மாதம் கல்யாணம்டா. அதுக்காக தான் அந்த பொண்ணு கணக்கு முடிச்சிட்டு போக போகுது. சூப்பர்வைசர், மேனேஜர் கிட்டலாம் சொல்லிடுச்சி. நம்ம ஆட்டோ ஸ்டேண்ட் செல்வம் தா மாப்ள.

நீ போய் புதுசா எதையும் அந்த புள்ளைக்கிட்ட கேட்டு விடாத என்றார் தட்சிணாமூர்த்தி.

குண்டூசி பட்டு வெடிக்கும் பலூனைப் போல் அவன் மனதில் உள்ள ஆசைகளெல்லாம் நொறுங்கியது.

என்ன செய்வதென்று தெரியாமல் ஹோட்டலில் யாரிடமும் பேசாமல் மனம் நொந்து தனது வேலைகளை மட்டும் செய்து வந்தான்.

ஊருக்கு போன வெயிட்டர் துரை வந்த வுடன் விசயத்தை சொல்லி அழுது தீர்த்தான்.

அவரும் மனதை தேர்த்தும் வகையில் ஆறுதல் வார்த்தைகளை சொல்லி தேற்றி னார். கொஞ்ச நாள் கடந்தது. வேலைகளை முழு மூச்சாக செய்து வந்தான்.தனது குடும்ப கஷ்டத்திற்கு ஏற்ப எந்த வேலையையும் மறுக்காமல் செய்தான். காசு கிடைத்தால் போதும் என்று முடிவு செய்தான்.

இப்படியாகவே பெரிய மாஸ்டர் சொல்லும் வேலைகளை செய்து கொண்டும், ஸ்டாலில் பார்சல் கட்டிக் கொண்டும் வாழ்க்கை சிறு எறும்பு பெரிய வெல்லத்துண்டை தூக்கி செல்வது போல் மெல்ல நகர்ந்தது.

காலம் மாறி கொண்டே இருந்தது.இப்போது கடையில் கார்த்தி பெரிய மாஸ்டருக்கு அடுத்த இடத்தை பிடித்தான்.துரை அண்ணனுக்கும் கல்யாணமாகி ஒரு பையனும் பிறந்து விட்டான். ஆனாலும் கார்த்தி மனதில் ஒரு ஓரத்தில் எங்கோ ரெஜினாவின் நினைவுகள் ஊஞ்சலாடி கொண்டே இருந்தது. அவள் வேலை விட்டு நின்று மூன்றாண்டுகள் ஆனாலும் ,அவளை பற்றி அவதூறு பேச்சுகள் குறையவில்லை. ஒருவன் நேற்று இரவு அவளை தான் பார்க்க போனேன் எனவும், இரண்டு நாட்களுக்கு முன்பு அவளுடன் தான் படம் பார்க்க சென்றேன் எனவும், சிலர் அவளுடைய ரேட் ஐநூறு ரூபாய் தான் என்று உச்சப்பட்ச பேச்சுகள் ஹோட்டலை சுற்றி உலாவிக் கொண்டிருக்கிறது.

அதை கேட்ட அவனால் தாங்கி கொல்ல முடியவில்லை. குடும்ப சூழ்நிலையாலும், வறுமையின் காரணத்தாலும் படிப்பை விட்டு வேலைக்கு வந்து குடும்பத்தை காப்பாற்றுகிற ஒருத்தியை பார்த்து எவ்வளவு கேவலமான சித்தரிப்புகளுக்கு உள்ளாக்கிறார்கள்.

ஒரு நாள் தட்சிணாமூர்த்தி  ரொம்ப நேர மாக போன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் வேகமாக சென்று மேனேஜரிடம் ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார்.

போனில் பேசியது யாராக இருக்கும். அவருடைய வீட்டிலிருந்திருக்குமோ? இல்லை யென்றால் ஊரில் ஏதாவது மரணச் செய்தியோ என்று மனதை குழப்பிக் கொண்டே இருந்தான்.

நேற்று தான் ரெஜினா பேசியதாக சொன்னார்; ஒரு வேலை மீண்டும் வேலைக்கு வர போகிறாளோ. அவளுக்கு குழந்தையெல்லாம் பிறந்திருக்குமா? அதற்கு என்ன பெயர் வைத்திருப்பாள்? என்றெல்லாம் அவனுக்குள் அடுக்கடுக்கான கேள்விகள் எழும்பி கொண்டே இருந்தது.

அவன் நினைத்தது போல அவள் மீண்டும் வேலைக்குதான் வருகிறார்கள். அதிகாலையை எதிர் நோக்கி காத்திருந்தான். ரெஜினா வந்தவுடன் எப்படி பேசுவது. என்ன கேட்பது என்று சிந்தித்து கொணடே இரவை கழித்தான்.

சரியாக அவள் எப்போது வேலைக்கு வரும் நேரம் ஒன்பது மணிக்கு சரியாக வந்தாள். அவனுள்ளத்தில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தது.

அவளுக்கு கல்யாணம் ஆனால் என்ன அவளிடம் அன்பாக பேசக்கூடாதா? என்ன. நான் ஒரு நல்ல நண்பனாக இருந்து விட்டு போகிறேன் என்று உள்ளார்ந்து நினைத்து மகிழ்ந்தான்.

அன்று மட்டும் மூன்றாட்கள் செய்யும் வேலையை அவன் ஒருவனே செய்து முடித்தான். என்றைக்குமில்லாது சாம்பாரின் மணம் எதிரிலுள்ள ஆட்டோ ஸ்டேண்ட் வரை வீசியது. அந்த ஸ்டேண்டில் தான் செல்வம் உறுப்பினராக இருந்தான்.கார்த்தியும் செல்வமும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். ஹோட்டலுக்கு தண்ணீர் பிடிக்க வரும் போதெல்லாம் யாருக்கும் தெரியாது பாக்கெட் செய்த சாம்பார் பொட்டலங்களை தருவான்.

வேலை முடிந்து எப்போதும் போல குளித்து விட்டு மீண்டும்  ஐஓபி பேங்க் முன்பு நின்று அவள் போவதை பார்த்தான். கொஞ்ச தூரம் முன்னேறி சென்றாள். திடீரென்று நின்று கார்த்தி என்று கூப்பிட்டாள். அவன் இதயம் எப்போதுமில்லாது இரண்டுமடங்கு வேகமாக துடித்தது. உடலின் வெப்பமேறியது. அடிவயிற்றில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது.

அருகில் சென்றான்.  அவளுடனே அழைத்து சென்றாள். அவனும் ஏதும் கேட்காமல் மது மயக்கத்தில் இருப்பது போல் உடன் சென்றான். காசு வச்சுறிக்கியா என்றாள். ம்ம்… என்றான். பத்து முழம் மல்லிகை பூவும், இரண்டு செட் புரோட்டாவும் சிக்கன் குருமாவும் வாங்கினாள். அதற்கான காசை  அவனையே கொடுக்க சொன்னாள். ரெஜினா எதற்கோ தன்னை பயன்படுத்தி கொள்கிறாள் என்று நினைத்தான். இல்லையென்றால் ஏன் இவள் வாங்கும் கொருளுக்கு என்னை காசு கொடுக்க சொல்கிறாள். கொஞ்ச தூரம் அப்படியே நடந்து கோபி கிருஷ்ணா தியேட்டரை கடந்தார்கள். தியேட்டரை பார்த்தவுடன் கல்யாணமான புதுசுல வந்தது என்று சொல்லி நடந்தாள். அவனும் பின் தொடர்ந்து நடந்தான். வாடகை வீடு என்பதால் எந்த ஒரு புது ஆட்கள் வந்தாலும் குற்றவாளியை போல் தான் பார்ப்பார்கள்.

உள்ளே நுழைந்ததும் ‘‘பூ’’ வை எடுத்து அவள் கணவன் போட்டோவிற்கு போட்டாள். ஒரு கணம் அதிர்ந்து போனான். என்ன ஆச்சு அவருக்கு என்றான். ஒரு நாள் ஆட்டோ சவாரி முடிச்சுட்டு பத்து மணிக்கு வந்து சாப்டு நல்லாத படுத்தாரு. திடீர்னு பதினொரு மணிக்கு போலீஸ் காவலர்கள் ரெண்டு பேர் வந்து கதவை தட்டினார்கள். பதறி எழுந்து என்ன வென்று கேட்டதருக்கு சின்ன விசாரனை இருக்கு அதா வந்தோம் என்றார்கள். அவரும் நான் எதற்கு சார் என்று கேட்டார். அட பயப்படாத செல்வம் சின்ன விசாரனதாங்குறம்ல, வா காலையில வீடு வந்து விடலாம் என்று அழைத்து சென்றார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் அவனும் மவுனமாக உடன் சென்றான். காலையில் ரெஜினாவும் அவளது மாமியாரும் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று கான்ஸ்டபிளிடம் செல்வத்தை பற்றி விசாரித்தார்கள். அதற்கு, அவன் நைட்டே வீட்டுக்கு வந்திருப்பானே என்றார். வரவே இல்லையென்று என்றார்கள் இருவரும். சரி, உள்ள எஸ்.ஐ. இருப்பாரு. அவருகிட்ட போய் செல்வத்தை காணவில்லை என்று கேஸ் கொடு என்றார். அவர்களும் வேறு வழி தெரியாமல் கேஸ் கொடுத்தார்கள். பிறகு தினமும் போய் ஸ்டேசனில் விசாரித்ததுடன் மட்டுமல்லாது  தெரிந்த இடத்தில் தேடியும், தெரிந்தவர்களிடத்தில் கேட்டும் அலைந்து எந்த பயனுமில்லை. ஒரு மாதம் கழித்து எங்கோ செல்வம் இறந்து கிடக்கிறான் என்றே செய்தி மட்டும் தான் வந்து சேர்ந்தது. அவன் எதற்கு போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்டான். யார் அவனை கொன்றார்கள். இல்லை தற்கொலையா என்று தெரியவில்லை. பிறகு போலிஸ் கான்ஸ்டபிள் வந்து ரெஜினா கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்காக ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கி சென்றார். அதில் செல்வம் கடன் தொல்லையாலும், குடும்ப பிரச்சனையாலும்தான் தற் கொலை செய்து கொண்டான் என்று எழுதியிருந்தது என்று சொல்லிக் கொண்டே கண்கலங்கினாள். கண்களில் ஓரத்தில் வடிந்த கண்ணீரை துடைத்து ஆறுதல் சொல்ல யாருமற்றவளாக அவளே தன் முந்தானையாள் துடைத்துக் கொண்டாள். அவள் பேசிக் கொண்டிருக்கையிலே, நாமே அவளை திருமணம் செய்து கொண்டால் என்ன? என்று மனதினூடே கேள்வியை எழுப்பிக் கொண்டான்.

செத்து போன மனுச என்ன மட்டும் விட்டுட்டு போயிருந்தா பரவாயில்ல. கையில புள்ளைய வேர கொடுத்துட்டு போய்ட்டாரு. நாம செஞ்ச பாவத்துக்கு  அது என்ன பன்னும். அத காப்பாத்துனுமில்ல அதா  திரும்பவும் வேலைக்கு வர வேண்டியதாச்சு என்று கண்கலங்கினாள்.

சரி, அத விடு இந்தா தண்ணிய குடி என்று ஒரு சொம்புல தண்ணிய கொடுத்தாள். அதை வாங்கி குடித்து விட்டு, சரி நான் கிளம்புகிறேன் என்றான். ஏ! அதுக்குள்ள போற நைட்டு தங்கிட்டு போ என்றாள்.

அவ எதிர்ப்பார்க்காத வார்த்தை அது.எந்த பெண்ணிடமும் உடனடியாக வரக் கூடிய வார்த்தை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஏன் அப்படியொரு வார்த்தையை பயன்படுத்தினாள் என்று திக்கிட்டு நின்றான். அதா கடை முழுக்க என்ன பத்தி சொல்லிருப்பாங்களே. என் கூட படம் பாத்ததாவும், என் ரேட் ஐநூறு ரூபாதானும். நான் அப்படி இல்லை கார்த்தி. அவர்கள் சொல்வது போல் நான் இல்லை. அப்படி என் உடம்பை விற்று தான் நான் வயிறு வளக்கனும்னா, அப்புறம் ஏ நான் வேலைக்கு போற.

பெண்கள் ஆண்கள் துணையற்று வாழ்வது கடினமென்றும், அப்படியே வாழ்ந்தால் தவறான வழியில் தான் வாழ்வாள் என்றும் இந்த கேவலமான சமூகம் ஒரு சிந்தனையை தொடர்ந்து வளர்த்து கொண்டே வருகிறது.

உன்ன பத்தி எனக்கு தெரியும். நீ என்ன காதலிச்சதும் தெரியும். உன் அன்பு என்பது தூய்மையானது. எந்த நேரத்திலும் என்னை பற்றிய அவதூறுகளுக்கு வழி மொழிந்தவனாக நீ இல்லை. என் மனம் உவந்து என்னையே உனக்கு தருகிறேன். நீ தயங்காமல் எடுத்து கொள். ஆனால் நான் திரும்பவும் சொல்லுகிறேன். அவர்கள் சொல்வது போல் நான் இல்லை என்று கதறி அழுதாள். என் அன்பு என்பது தூய்மையானது.. நான் உன்னையும் உன் அன்பையும் நேசித்தேன். இப்போதும் சொல்கிறேன் உன் உடம்பை நேசிக்கவில்லை என்பது போல் மவுனமாக வீட்டை விட்டு வெளியேறினான்.

வழக்கம் போல் மறு நாள் விடிந்து மீண்டும் நிற்கிறான் ஐஓபி பேங்க் வாசலில்…

< >

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »