வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள்.

இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க! நாளை காலையில முன்பக்க வேலைக்கு சாரம் கட்ட ஆட்கள் வந்திடுவாங்கன்னு அந்த வீட்டைக் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ள பொறியாளர் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

வேலை செய்யும் ஆட்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்துக் கொண்டிருந்தனர்.அவன் பொழுது விடியும் முன் அவ்வீட்டிற்கு வருவான். என்னென்ன வேலைகள் நடந்துள்ளன என்று பார்ப்பான். எங்கெங்கு தண்ணீர் பிடிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் தண்ணீர் பிடிப்பான். பின்னர் பையிலிருந்து தான் வாங்கி வந்துள்ள போண்டாவுடன் மேல் மாடிக்குச் செல்வான்.

போண்டாவைத் துண்டு துண்டாக நான்கு பக்கமும், பிய்த்துப் போட்டுவிட்டு மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருப்பான். கொஞ்ச நேரத்தில் அணிலொன்று அந்த வேப்ப மரத்திலிருந்து இறங்கிவந்து, பிய்த்துப்போட்ட போண்டா துண்டுகளி லொன்றை எடுத்து தின்ண ஆரம்பிக்கும். முதல் விருந்தாளி எப்பவுமே அந்த அணில்தான். அடுத்த சில நிமிடங்களில் மாநிறத்தில் குயில் ஒன்று பறந்து போண்டா துண்டை எடுத்துக்கொண்டு வேப்ப மரத்தில் உட்காரும். மைனா, காகம், தவிட்டுக் குருவிகள் என ஒரு படைவந்து அந்த வேப்ப மரத்திலிருந்து இறங்கிவந்து அவன் பிய்த்துப்போட்ட போண்டா துண்டுகளை கவ்விச் செல்லும். இது தினந்தோறும் நடக்கும் வாடிக்கைச் செயல்கள். சில நேரங்களில் வேறு ஏதும் தின்பதற்கு விர்ந்தாளிகளுக்கு கிடைக்கும்.

அந்த வீட்டின் முன்னால் நின்று கொண்டிருக்கும் வேப்ப மரங்கள் இரண்டும்தான் இந்த விருந்தாளிகளுக்கு இடம் கொடுத்து தங்க வைத்திருந்தது.

மரம் என்றால் கொஞ்சம் முரடாய் அடர்ந்த இலைகளோடு, கிளை பரப்பி, கோவில் கருவறை, முன் மண்டபத்தின், இரு பக்கமும் நிற்கின்ற துவார பாலகர்கள் போல அந்த வீட்டின் முன்பக்கம் இந்த இரண்டு வேப்ப மரங்களும் நின்றிருந்தன.

அந்த மரம் எவ்வித குறையுமின்றி தன் வேலையை செய்துக் கொண்டிருந்தது. பருவ நிலைக்கு ஏற்ப இலைகளை உதிர்ப்பது, தளிர்ப்பது என தன் வேலையை செய்துக் கொண்டிருந்தது. இலைகள் உதிர்ப்பதென்றால், சும்மா இல்லை. வானத்திலிருந்து பூமழைப் பொழிவதுபோல் பொல பொல என்று உதிரும். தரையெங்கும் பச்சை, பழுப்பு, ஒருவித வெளிர் மஞ்சள் நிறத்தோடுத் தரையை மூடியிருக்கும். அதை கூட்டி அள்ள அள்ள மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருக்கும். தன் மேலுள்ள அத்தனை இலைகளும் கொட்டி மரம் நிர்வாணமாகிவிடும். அதற்குள் அதை கூட்டி அள்ளுபவர்கள் இந்த மரத்தை வெட்டுனாதான் என்ன என்று திட்டுவார்கள். அதைக கேட்டுக் கொண்டு அந்த மரங்கள் தேமே என நிற்கும்.

இலைகள் கொட்டித் தீர்த்த ஓரிரு நாட்களுக்குள், பச்சை பசேலென துளிர்கள் தளிர்த்து மீண்டும் அடர்த்தியாய் மரமெங்கும் பச்சையாய் குலுங்கி நிற்கும்.

அடுத்த வேலையை அந்த மரங்கள் தொடங்கும். மரமெங்கும் கொத்துக் கொத்தாய் காய்களும் பழங்களுமாய்த் தொங்கும். பின்னர் ஒவ்வொன்றாய் கொட்டத் தொடங்கும். பழங்கள், தோல்கள், விதைகள் என கூட்டுபவர்களின் வேலையே அதிகரிக்கச் செய்யும். மீண்டும் அந்த மரங்கள் திட்டு வாங்கும்.

வீட்டுவேலை வேகமாய் வளர்ந்து, முகப்பு முன்தோற்ற வேலைகள் தொடங்கின. இதுவரை அந்த வீட்டிற்கு வேலை செய்ய வந்தவர்களெல்லம் இங்கேதான் வெயில் தெரியாமல் வேலைப் பார்க்கிறோம். நல்லா குளுமையா இருக்கு. இந்த மரங்களை வெட்டிடாதீங்க என்றும், வெயில் காலத்தில் மிகப்பெரிய மூலிகையென்றும் சொன்னவர்களும் உண்டு. இதையும் அந்த மரங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன.

அது மட்டுமா ? தற்போது வளர்ந்துவரும் வீட்டின் புதுக்கதையும், முன்னால் இருந்த பழைய வீட்டின் கதையும் அந்த இரு வேப்ப மரங்களுக்கும் நன்றாகத் தெரியும். அந்த வீட்டின் சச்சரவுகள், சிரிப்புகள், வாக்குவாதங்கள், மௌனம் என அத்தனைக்கும் சாட்சியாய் அந்த மரங்கள் வேரூன்றி நின்றிருந்தன.

மரத்தை வெட்ட வேண்டாம். கிளைகளை எல்லாம் கழிச்சிவிட்டா போதும். இவ்வாறு ஆளுக்கு ஆள் அந்த மங்களைப்பற்றி பேசிச் சென்றனர்.

வீட்டின் முகப்புத் தோற்ற வேலைகள் ஆரம்பித்தாயிற்று. மரத்தைக் கழிச்சி சுத்தப் படுத்தினால் முன் முகப்பின் அழகு தெரியும். அந்த வீட்டின் உரிமையாளர் கவலையானார். மரம் வெட்டப்பட்டுவிடுமோ? கிளைகளை முறித்து முடமாக்குவார்களோ? வெளியில் சொல்ல இயலாமல் மனம் தத்தளித்தது. வேலைகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்தன. பொறியாளர் மரத்தை ஏதும் செய்யாமல் வேலையை முடித்திருந்தார். புதுமனை புக நாள் குறிக்கப்பட்டு, மனை புகுந்து ஒருவாறு ஆரவாரம் அடங்கியது.

பருவமழைத் துவங்கியதாக தொலைக் காட்சியில் அறிவிக்கப்பட்டது. மழையும் வந்து போனது. மேகங்கள் கறுத்து விலகின. அந்த மழைநாளில் ஒருநாள், புயலொன்று மையம் கொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தது. கஜா எனும் பெயரில் புயலின் வள்ர்ச்சி படிப்படியாக கவனிக்கப்பட்டு வந்தது. நகரும் திசை, வேகம், அதன் வளர்ச்சியென வானிலை அறிக்கைச் சொல்ல, மனிதர்கள் அந்த அறிவிப்பைச் சட்டைச் செய்யாது இடவளமாய்த் திரிந்தார்கள். செல்பேசிகள் மீம்ஸ் போட்டு மின்சாரத்தை செலவழித்தார்கள்.

இரவு மணி 11. லேசாந்த் தூறலோடு வானம் மழையை இறக்க ஆரம்பித்தது. நேரம் நகர, நகர காற்று மெதுவாக ஊருக்குள் நுழைந்தது.

நள்ளிரவு மணி 12. தொலைபேசி அழைப்பு ஒன்று புயலைப்பற்றி விசாரிக்க, லேசா கற்றுவீச, மழையின் தூறல் இருக்கு என பதில் கூறினான். அத்துடன் அலை, தொலைபேசிகளும், மின்சாரமும் ஓய்ந்து போயின.

நேரம் கரைய, கரைய காற்று முழு பலத்துடன் வீசத் துவங்கியது. மணி 4. பேயாய் கற்றும், மழையும் சுழல ஆரம்பித்தன. இருட்டில் சன்னல் வழியாகப் பார்த்தபோது மரங்கள் தலைவிரித்தாடின. தட்டுமுட்டு சாமான்கள் அங்குமிங்குமாக அலைகழிக்கப்பட்டன.

மணி 4.30க்கு ஒரு மயான அமைதி. சட்டென காற்றும் மழையும் நின்று ஒரு நிசப்தம். அடுத்த 5வது நிமிடத்தில் மீண்டும் காற்று தனது கோர முகத்தைக் காட்டியது. வானம் தன்னிடம் உள்ள தண்ணீரை எல்லாம் கொட்டித் தீர்த்தது.

ஒருவாறு பொழுதுவிடிய, வெளியில் வந்து பார்த்தபோது, புயலின் வேகம் தெரியவந்தது. வீட்டிற்கு வெளியே நின்றி ருந்த வேப்பமரத்தின் கிளைகள் யாவும் முறிக்கப்பட்டு முடமாகிக் கிடந்தன. ஆனால் மரம் கீழே விழவில்லை. அந்த ஒரு ஆறுதலைத் தவிர, வேறு ஒன்றும் பெரிதாகச் சொல்லமுடியவில்லை..

சாலைக்கு வந்தபோது, சாலை யெங்கும் மரங்கள், ஏதோவொரு காட்டுக்குள் செல்வது போல் இருந்தது. மரங்கள் யாவும் போர்க்களத்தில் நின்றிருந்த வீரர்கள் வெட்டுண்டு கிடப்பதைப்போல சாய்ந்து கிடந்தன. ஓரமெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய வீட்டுக்காரர், அந்த இரு வேப்ப மரங்களை அண்ணாந்துப் பார்த்தார் கண்களிலிருந்து உருண்டோடிய இரு நீர்த்திவலைகள் அந்த வேப்பமரத்து விருந்தாளிகளை எண்ணிப் பார்த்தது.

மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இடமும், வலமுமாக அலைந்தார்கள். ஒருவருக்கு ஒருவர், தங்களின் சேதங்களைப்பற்றி கலந்தார்கள். கலைந்தார்கள். பல இடங்களில் சுய நலமும், சில இடங்களில் பொது நலமுமாய் மனித மந்தைகள் அலைந்தன.

அவன் அந்த வேப்ப மரத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். இனி எப்போது இவைகள் இலைகளை உதிக்கும். மீண்டும் துளிர்விடுமா? நிலப்்பரப்பையே போர்வையாய் மூடியிருந்த நிழல் எப்போதுவரும்? தங்க நிறமாய் மின்னும் மஞ்சள் நிறப் பழங்களை எப்போது பார்க்கலாம்? காக்கைகளும், கெச்சட்டமிடும்மைனாக்களும் வந்தமர்ந்து, கிளையெங்கும் தாவியோடிய அணிற்பிள்ளைகளும் வருமா? இனி அந்த விருந்தாளிகளைக் காணமுடியுமா என எண்ணுகையில் கூடுதேடி பறவைகள் பறப்பதை கனத்த மனதோடு அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். எப்போதும்போல, அம்மரங்கள் தேமே என்று நின்றிருந்தன.

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »