ஸாகிரா டீச்சரின் உள்ளத்தில் குடியிருந்த வலியும், குழப்பமும் இன்னும் முற்றாகத் தணியவில்லை. அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற முயற்சிக்கிறாள். அதுவும் அவளால் முடியாமல் இருந்தது.

அவளது நூல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே பாக்கி இருந்தன. அதற்குள் அவளது இல்லத்தை வந்தடைந்த ஒரு கடிதம் அவளது உள்ளத்தை மிகவும் காயப்படுத்தியது. இன்னும் எதிலும் நிம்மதியாக ஈடுபட முடியாத அளவுக்கு வேதனை அவளை ஆட்கொண்டிருந்தது.

இன்னும் யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்ப பாக்கியுள்ளது என ஒருமுறை பரீட்சித்துக் கொண்டாள். எல்லாம் அனுப்பிவிட்டதாக உள்ளம் முடிவு செய்தாலும் ஏதோ ஓர் உணர்வு அவளது திருப்திக்கு தடையாக இருப்பதை அவளால் உணர முடிந்தது.

அது என்ன? அது என்ன?

ஆம்! அந்த கடிதம் தான்!

அது ஒரு முகவரி இல்லாத கடிதம், மொட்டைக் கடிதம்.

யாருக்கு என்ன தேவை வந்தது. அப்படி ஒரு கடிதம் எழுத?

யார் அதனை எழுதி இருப்பார்? ஏன்? எதற்காக எழுதி இருப்பார்கள்?

அவளால் எதையும் யூகித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த எழுத்துக்களை இதற்கு முன் கண்டிருப்பதாக ஞாபகம். யாருடையது என இன்னும் நினைவுக்கு வரவில்லை.

இப்படியான குழப்பங்கள் அவளது பணிகளுக்கு இடையூறு விளைவித்தன. ஷஇலக்கியம்| என்பது அவளது நீண்ட கால பயணிப்பு. அவளது கணவர் உயிரோடு இருக்கும் போதே எப்படியாவது ஒரு நூலை தொகுப்பாக வெளியீடு செய்ய வேண்டுமென்று அவள் மிகவும் முயற்சி செய்தாள். ஆயினும் முடியாமலேயே போய் விட்டது. அவரது மறைவுக்குப் பிறகு அவளது பெரு முயற்சிகளினாலும் இலக்கிய நல்லிதயங்களின் துணையோடு மூன்று நூல்களை ஒரே நேரத்தில் வெளியீடு செய்து, வெளியீட்டு விழாவையும் மிகச் சிறப்பாக செய்து முடித்தாள்.

அவளுக்கு அது ஒரு வெற்றி விழாவாக அமைந்தது. அதில் கிடைத்த அன்பளிப்புக்கள் அனைத்தையும் தனது அன்புக் கணவரது பெயரிலே தர்மம் வழங்கி விட்டதில் முழுமையான மன நிறைவை அடைந்தாள்.

அதில் கிடைத்த உற்சாகம் மேலும் அவளை எழுதத் தூண்டியது. அந்த தூண்டுதலுக்கு பல நல்ல நட்புக்களும் காரணமாக அமைந்தன. அது மாத்திரமின்றி பல வருடங்களாக நோயினால் பாதிப்படைந்திருந்த அவளது கணவர் நிஸாம் ஹாஜி வீட்டிலேயே முடங்கி விட்டதால் அவள் தனது ஆசிரியை தொழிலையும் விட்டுவிட்டு தனது கணவரை பராமரிக்கத் தொடங்கி விட்டாள். அவர்களது இரண்டு மகன்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டதால் அவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் எதுவும் இருக்கவில்லை.

கணவருக்கு ஒருநாள் நோய் அதிகமாக அவரை அவசரமாக தனியார் வைத்தியமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக இருதய சத்திர சிகிச்சை (பைபாஸ்) செய்தாக வேண்டுமென வைத்தியர் கூறியபோது இருவரும் அதிர்ந்து போனார்கள்.

அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

”உம்மா.. அழாதீங்க. நாங்க உடனே பைபாஸ் செய்ய ஏற்பாடு செய்வோம். வாப்பாவுக்கு எதுவுமே ஆகாது. நீங்க தைரியமாக இருங்க”

இப்படிக் கூறி ஆறுதல்படுத்தியதோடு மட்டுமல்லாமல் உடனடியாக அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தான் அவளது இளைய மகனான பர்ஸாத். ஆயினும் அவர்களது எந்த முயற்சிகளுக்கும் பயனிருக்கவில்லை.

திடீரென அவரது மூச்சு அடங்கிப் போனது. இது ஒரு பேரதிர்ச்சி அவளுக்கு. அதிலிருந்து மீள்வது எளிதான விடயமல்ல.

திடீர் மறைவு! திடீர் இழப்பு! திடீர் தனிமை! திடீர் வெறுமை! எல்லாமாக ஒன்று சேர்ந்து அவளைப் பித்துப்பிடித்தவள் போல் ஆக்கிவிட்டது. உயிரில் பாதி கரைந்து விட்டதைப் போன்ற ஓர் உணர்வு. யாரிடம் சொல்வது அதையெல்லாம்?

வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அவள் உறவுக்காரர்களின் வீடுகளில் போய் தங்குவது அவளது மகனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவனது கௌரவம் பாதிப்படைவதாக அவனது எண்ணம். அதைவிட மகனை கவனிக்க அவளை விட்டால் யாருமில்லையே என்ற கவலை அவளுக்கு. திருமணத்தை முடித்து அவனுக்கும் ஒரு துணைவியைத் தேடி வைத்தால் நிம்மதியடையலாம் என்று எண்ணி பல வரன்களைப் பார்த்து விட்டாள். அதுவரையில் எதுவுமே அவனுக்கு பிடிக்கவில்லை.

அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகினாள். தனியாக வீட்டில் இருப்பதை தவிர்ப்பதற்காக வலது குறைந்த பிள்ளைகளின் பள்ளிக்கூடம் ஒன்றில் இலவசமாகப் பாடம் கற்பிக்கும் பணியில் இணைந்தாள். பல சமூக சேவைகளில் ஈடுபட்டாள். அடிக்கடி பயான் (போதனை) நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாள். அதிகமாக தொழுகை இபாதத்துகளில ஈடுபட்டாள். மிகுதி நேரங்களில் நிறையவே எழுதினாள்.

அவளது தீவிர முயற்சியால் மீண்டும் ஒரு நூல் தயாரானது. பொது அறிவுக் களஞ்சியமாக. அதை மிகவும் கஷ்டப்பட்டே உருவாக்கினாள். அந்த நூலை வெளியீடு செய்ய பெருந்தொகையை முதலீடு செய்து, பல சிரமங்களின் மத்தியில் வெற்றி கண்டாள். அதற்கு ஒரு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வேளையில்தான் அப்படி ஒரு மொட்டைக் கடிதம் வந்தது. அந்த எழுத்துக்களை எங்கோ கண்ட ஞாபகம். மீண்டும் பிரித்துப் படித்தாள்.

ஸாகிறா டீச்சர் சமூகத்துக்கு நீங்கள் மீண்டும் ஒரு நூல் வெளியீட்டு விழா செய்யப் போவதாக கேள்விப்பட்டேன். வயதான இந்த கடைசிக் காலத்தில் உங்களுக்கு ஏன் இப்படியான பேராசை?

இனிமேலாவது இந்த தேவையில்லாத வேலைகளை விட்டுவிட்டால் உங்களுக்குத்தான் நல்லது. இதை உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன்.

இப்படிக்கு,

நலன்விரும்பி.

இக்கடிதத்தை படித்துவிட்டு மடித்து தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். அவளுக்கு இதை யாரிடமாவது காட்ட வேண்டும் போல் தோன்றியது.

இலக்கிய நண்பியான நஸ்ரியாவின் இல்லத்திற்கு வந்தாள். அவளோடு நூல் வெளியீட்டு விழா குறித்து கலந்தாலோசித்ததில் உள்ளம் சற்று ஆறுதலைப் பெற்றது. அந்தக் கடிதத்தையும் நண்பி நஸ்ரியாவுக்கு காண்பிக்கத் தவறவில்லை.

”இது… இது… பரீனா டீச்சர்ட எழுத்துதான்”

”இருக்காது நஸ்ரியா அவ ஒரு பட்டதாரி டீச்சர். என் கூடவே இருக்கிறவ”

”கூட இருந்து குழி பறிக்கிறது இப்படித்தான் டீச்சர்!”

”எதுக்காக இப்படி செய்யனும், அவக்கும் எனக்கும் ஒரு பகையும் இல்லையே”

”பொறாமைக்கெல்லாம் பகை தேவையில்ல டீச்சர். ஒருத்தரோட வளர்ச்சி போதும். வளர்ச்சிங்களை பாத்து எல்லாராலயும் சந்தோஷப்பட முடியாது. அதே மாதிரி பொறாமைய கட்டுப்படுத்தவும் தெரியாது. எல்லை மீறிப் போன பொறாமையிட வெளிப்பாடு இப்படித்தான் இருக்கும்”

”என்னால நம்ப முடியல்ல நஸ்ரியா…”

”அவ நிறைய படிச்சிருக்கலாம். ஆனா அவளால இலக்கியம் செய்ய முடியாது. இந்த எழுத்தாற்றல் என்றது இறைவனால அளிக்கப்படுற ஒரு அற்புத வரம்”

இப்படி இன்னும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு வெளியிறங்கி வந்தவளுக்கு அந்த ஞாபகம் வந்தது. அவளது ஒன்றுவிட்ட சகோதரியின் மகனான அன்ஸார் அந்த லேனுக்குள்தான் வசிக்கிறார். அவள் அவருக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருந்தாள். அவரின் இல்லத்திற்குச் சென்றாள். அவரது மகள்தான் எதிர்ப்பட்டாள்.

”அன்ஸாருக்கு நா அனுப்பின இன்விடேஷன் கிடைச்சதா மவள்?”

”ஓ… ஆன்ட்டி”

”வருவாருதானே”

”இல்ல ஆன்ட்டி, எங்களையும் போவ வேணாம்னு சொல்லிட்டார்”

”ஏனாம்”

”அந்த அழைப்பிதழ் கார்ட்ல யார் யாரோட பேரையெல்லாம் போட்டிருக்கீங்களாம். வாப்பாட பேர் மட்டும் போடலியாம். அவரை முக்கியமா நீங்க நினைக்கலியாம்”

”எனக்கு எல்லாரும் முக்கியம்தான் மவள் நான் போயிட்டு வாரன்” எனக் கூறிவிட்டு புறப்பட்டாள்.

”கொஞ்சம் இருங்க ஆன்ட்டி ஏதும் குடிச்சிட்டுப் போவலாம்”

இப்படி எப்போதும் சொல்கிறவள் இன்று ஒரு ஒப்புதலுக்காகவாவது சொல்லவில்லை.

இன்னும் பாக்கியிருந்த சில வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரும்போது இரவாகி விட்டது. இன்னும் மகனைக் காணவில்லை. அதுவரை தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி வுழுச் செய்து தொழுகைக்கு தயாரான போது தொலைபேசி சிணுங்கியது. விரைந்து வந்து ரிஸிவரை காதில் பொருத்தி ஹலோ என்றாள். எதிர்முனையில் இருந்து பேசியது காதர் காக்காதான்.

”உங்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு டீச்சர். உங்களுக்கு எதுக்கு இப்படியொரு தலையெழுத்து? எதுக்கு புஸ்தகம் எழுதி, வித்து கஷ்டப்படுறீங்க? உங்க இந்த வயசான காலத்துல உங்க புள்ளைங்க ரெண்டுபேரும் உங்களை கைவிட்டுட்டாங்களா? அவங்க உங்கள கவனிக்கிறதில்லையா?”

இந்தக் கேள்வி அவளை நிலைகுலைய வைத்தது. கண்ணீரை வரவழைத்தது. ஏற்கனவே உடைந்து போயிருந்தாள். இனியும் தாங்கிடத் திராணியில்லை.

”எதுக்கு இப்படி பேசுறிங்க காதர் காக்கா. ஏண்ட தேவையெல்லாம் செய்றது அவங்க ரெண்டுபேரும்தானே”

மிகுந்த வேதனையோடு பேசிக் கொண்டிருந்தவளின் நெஞ்சுக்குள் ஏதோ அடைத்தது. தலை சுற்றியது. கண்கள் இருண்டன. உணர்விழந்து தரையில் சரிந்தாள்.

கண்களை திறந்தபோது வைத்தியசாலையில் இருந்தாள். மகன் அருகில் நின்றார்.

”உம்மா நீங்க ரொம்பவே பலவீனமடைஞ்சு இருக்கிறதா டொக்டர் சொல்றார். ரொம்பவும் களைச்சுப் போயிருக்கிறீங்க. உங்கட மனசுக்கும் உடம்புக்கும் நிறைய ஓய்வு தேவையாம். பிரஷரும் அதிகமாக இருக்காம். இந்த விழா எல்லாம் வேணாம் உம்மா. உங்க ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். இந்த விழாவை நானே நிறுத்திடுரேன் உம்மா. இப்பவாவது நா சொல்றதை கேளுங்க. ப்ளீஸ்”

”வேணாம் மவன். இந்த விழா கண்டிப்பா நடக்கனும்.”

உறுதியாகக் கூறினாள். விழா நாள் விடிந்து, விழா துவங்க இன்னும் சில நிமிடங்களே பாக்கி இருந்தது.

அந்த மண்டபத்தில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற நாற்காலிகள் யாவும் வெறுமையாக இருப்பது அவளுக்கு மிகவும் வேதனையைத் தந்தது.

அதற்கு காரணம் அவள் பல மாதங்களுக்கு முன்னால் ஒரு வேலை விடயமாக பின்தங்கிய கிராமம் ஒன்றுக்கு செல்ல நேர்ந்தது. அங்குள்ள மக்கள் தண்ணீர் வசதியின்றி பெருந்துயரை அனுபவித்துக் கொண்டிருந்தனர். நீண்ட தூரத்தில் இருந்து தண்ணீர் சுமந்து வருவதை நேரில் கண்டு மிகவும் கவலை அடைந்தாள். எப்படியாவது அந்தக் கிராம மக்களுக்கு பொதுக் கிணறு ஒன்றை நிர்மாணித்து அவர்களது தண்ணீர் கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்று முடிவு செய்து கிணற்றுக்குரிய இடத்தையும் தெரிவு செய்துவிட்டே திரும்பினாள்.

அவர்களுக்கு இன்றைய அன்பளிப்புக்களை தர்மமாக வழங்க வேண்டுமென அவர்களையும் அழைத்திருந்தாள். அதற்காகவே அவளது கணவரது இரண்டாவது ஆண்டு நிறைவு தினத்தில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தாள். இவை எதுவுமே நிறைவேறாமல் போய் விடுமோ என்ற கவலையில் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

மீண்டும் மண்டபத்தை நோக்கினாள். மண்டபம் நிறைந்திருந்தது. இருக்காது இது வெறும் பிரம்மையாக இருக்கலாம்.

”விழாவுக்கு சனம் வந்திருக்கிதா மவன்?” தனது மகனிடம் வினவினாள்.

”ஓ… உம்மா ஹோல் நிறைஞ்சிட்டது” என்றான்.

ஆம்… உண்மையாகவே மண்டபம் நிரம்பி வழிந்தது. அவள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நூல் வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடந்தது. நினைக்காத அளவுக்கு அன்பளிப்புக்கள் சேர்ந்தன. கிணறு கட்டுவதற்காக முழுத் தொகையையும் கொடுத்தாள்.

இப்போது அவளுக்கு நிம்மதி. திருப்தியோடு வீடு திரும்பினாள்!!!

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »