Grund Schule Klauberg in Solingen

Germany, Solingen  இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது.

நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை. எனது பெயர் அன்றும் இன்றும் கிளௌபேர்க் (Klauberg) ஆகும். என்னை இப்போது பார்க்கும் போது எனக்கே பெருமிதமாக இருக்கின்றது. முதுமையிலும் இளமை காண யார்தான் முனையார்.

1698 ம் ஆண்டு முதன்முதலாக நான் இருந்த தோற்றத்தை எண்ணிப் பார்க்கின்றேன். அன்றைய நாளில் நான் பெருமை பெற்றவன் தான். ஆனால், இன்று என்ன இது பழைய கட்டிடம் என்று என்னை நாடி வராத இளைய தலைமுறையினரைக் கவர்ந்து இழுப்பதற்காக என் நகரபிதாவுடன் கலந்து ஆலோசித்ததன் காரணமாக என் தோலிலே பல வர்ணங்கள் பூசினார்கள்.  இரட்டைக் கண்ணாடிச் சாளரமும், இதமான மெல்லிய வண்ணப் பூச்சும், அலங்காரக் கண்ணாடிச் சுவர்களும், என் அழகுக்கு அழகு சேர்க்கும் அமர்க்கைகளும், என்னைப் புதுப் பொலிவுடன் திகழச் செய்தார்கள். இத்தனை வருட காலங்களின் பின் என் போல் இளமை அழகு பெற யாரால் முடியும். என் உறுப்புக்கள் சத்திரசிகிச்சை மூலம் மாற்றப்படும் போது என்னுடன் கூட வளர்ந்த உறுப்புக்களை இழப்பதற்கு நான் தயங்கினாலும் வாழும் காலத்திற்கு ஏற்றாற் போல் நான் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் அல்லவா! மனிதர்கள் மாத்திரம் இதயம் போன்ற உடல் உறுப்புக்களை மாற்றலாம். தோலை மாற்றலாம் மூக்கின் அழகை திருத்தி அமைக்கலாம். காலத்திற்கு ஏற்றாற்; போல் தம்மை மாற்றிக் கொள்ளலாம். ஏன் என்னால் மட்டும் முடியாது. கல், மண், சீமெந்து, நிறம், மரம், என்று பலவிதமான ஊட்டச்சத்துக்களுடன் உருவாகியதுதான் என் உடல். அதில் கதவு சாளரம், படிக்கல், என்றெல்லாம் உறுப்புக்களைத் தாங்கியபடி தான் நான் வாழ்ந்தேன். ஆண்டுகள் 318 காலப்பகுதிகள் வாழ்ந்துவிட்டேன். அதற்காக உணர்வுகள் அற்றவன். நானென்று அடையாளப்படுத்தலாமா?

என்னுள் துள்ளி விளையாடி இறந்து போன அந்த நகரபிதாவை இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அது மாணவர்களைக் கட்டுப்படுத்த மர ஆயுதமாகிய மரக்கரண்டி கையாளக் கூடாது என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட ஆரம்ப காலப்பகுதி. இது தான் வாய்ப்பு என்று அவர் அடித்த லூட்டி இருக்கிறதே. இன்றும் அதை எண்ணிப் பார்க்கின்றேன். மனிதர்களை விட ஞாபகசக்தி எனக்கு இருக்கின்றது. அவர் பின் பலரால் மதிக்கப்பட்ட நகரபிதாவாகி இறந்திருக்கின்றார் என்ற செய்தியும் ஒரு காலத்தில் நான் அறிந்ததே. என் சாளரத்திலே ஒரு பூச்சியைக் கொண்டுவந்து வைத்து அதனை அங்கம் அங்கமாக எடுத்துப் பேசிக் கொண்டிருக்கும் Badea, Dr. Badea வாக கற்றுப் பயன் பெற்றுப் பின் காலனுடன் உலகைக் கடந்து விட்டார். எப்போதும் அமைதியுடன் புத்தகம் கையேந்திப் பொழுதைக் கழித்த Alice பிற்காலத்தில் Drogen இற்கு அடிமையாகி இறந்துவிட்டதாகவும் அவர் பேத்தியே இப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்து மாண்டதாகவும் ஆசிரியர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளானேன். அப்படியென்றால், ‘வளரும் பயிரை முளையில் தெரியும்’’ என்பதில் என்ன உண்மை இருக்கின்றது. காலமாற்றமும், பருவமாற்றமும், ஒரு மனிதனை மாற்றியமைக்கும் என்னும் உண்மை என் அநுபவப்பாடமாக அமைகின்றது. ஆனாலும், என் படி தொட்ட பலரும் பல சாதனைகள் கண்ட மகிழ்வும் எனக்குண்டு. என் படி தொட்டுப் போன பலர் பல வேதனைகள் கண்ட வேதனையும் எனக்கு உண்டு. இன்னும் தலைமுறை தலைமுறையாக நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என்னிடம் வந்த பல சிறுவர்கள் உடலும் உயிரும் இழந்து காலத்து அழிவுகளுக்கு ஆளாகிவிட்டார்கள். உலக யுத்தத்திலே என் உறுப்புக்கள் சேதம் கண்டாலும் ஆயுளை அது அழித்து விடவில்லை. எனக்குப் போடப்பட்ட அத்திவாரமாகிய அடிப்படை உணவு என்னை அழிய விடவில்லை.

பூமி என்னைத் தாங்கும் வரை நான் வாழ்வேன். ஏனென்றால், புதுமைகள் காணும் விஞ்ஞானிகளை, ஆராய்ச்சியாளர்களை, கட்டிடக்கலை நிபுணர்களை, நான் உருவாக்கிக் கொண்டுதானே இருக்கின்றேன். அவர்கள் அழிவிலிருந்து என்னை காத்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், ஒன்று மட்டும் மகிழ்ச்சியுடன் நான் கூற வேண்டும். வாழும் வரை நாள்தோறும் இன்பத்துடன் வாழ்பவன் நான். ஏனென்றால், என்னில் என்றும் குதித்து விளையாடுபவர்கள் கள்ளங்கபடமற்ற 9 வயதுக்கு உட்பட்ட சிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இன்பங் காணுகின்றேன். சிறார்கள் ஆரம்பக் கல்விக்கும் ஆளுமைக்கும் இடந்தந்து அவர்களைத் தாங்கி நிற்கும் யான், வளர்த்துவிட நினைப்பது சிறந்த ஒரு சமுதாயத்தை. அதனைச் சரியாகப் பயன்படுத்தி வளர வேண்டியது. அந்த இனந்தலைமுறையினரே. என்று கூறி இன்னும் 10 வருடங்களின் பின்னும் என் எண்ணங்களின் வண்ணங்களை வார்த்தைகளால் வடிப்பேன் என்று விடைபெறுகின்றேன்.

அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி
அதை ஆரம்பிக்கும் கல்விக்கூடம் என்றும்
வாழ்வில் அழியாது மனதில் நிலைத்திருக்கும்!.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தெரிந்ததும்-தெரியாததும்

வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

 » Read more about: வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!  »

கட்டுரை

அரைஞாண் கயிறு அறிவோமா?

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்?

“அரைஞாண்” நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு.

திருஷ்டி பட கூடாதுன்னு தான் பா கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க ….

 » Read more about: அரைஞாண் கயிறு அறிவோமா?  »

தெரிந்ததும்-தெரியாததும்

பாம்புக்கு பால், முட்டை எதற்காக?

ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

 » Read more about: பாம்புக்கு பால், முட்டை எதற்காக?  »