நாக் அவுட் நாவன்னா வீட்டுப் பாகப்பிரிவினைப் பிரச்சினைக்கு என்ன முடிவு எற்படப்போகின்றது என்பதைத் தெரிந்துகொள்ள செட்டி நாட்டிலுள்ள அந்த சிற்றூரே மிகவும் ஆவலாக இருந்தது!

என்ன பிரச்சினை?

பெரியதாக ஒன்றுமில்லை. அரண்மனை போன்ற அவர்களுடைய வீட்டை நாவன்னாவும் அவருடைய உடன் பிறப்புக்கள் ஆறு பேரும் சேர்ந்து எப்படி சண்டை, சச்சரவின்றி சமமாகப் பிரித்துக் கொள்வார்கள் என்பதைத்தான் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்

நாவன்னா வீட்டில் ஏழு சகோதரர்கள்.நான்கு சகோதரிகள்.பிறப்பு வரிசையில் நாவன்னா இரண்டாவது.அவருக்கு ஒரு மூத்த சகோதரர் மட்டுமே மற்ற அனைவரும் அவருக்கு இளையவர்களே.

சுண்டியிழுக்கும் கண்கள். களையான முகம்.சிவந்த நிறம்.வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போன்ற தெறிக்கும் பேச்சு.பார்வை யிலேயே ஆட்களை எடைபோடும் திறமை என்று வித்தியாசமான குணாதிய சங்களைக் கொண்டவர் நாவன்னா. வயது ஐம்பத்தியெட்டு. ஆனாலும் இருபது வயது இளைஞனுக்குரிய சுறுசுறுப்போடு இருப்பார். தும்பைப்பூ போன்ற வெள்ளை மல் வேஷ்டி, வெள்ளை அரைக்கைச் சட்டை அணிந்திருப்பார்.கையில் கடிகாரமோ, விரல்களில் மோதிரமோ அணிந்திருக்க மாட்டார். போர்டு ஐகான் காரில் வந்திறங்கும் போதுதான் அந்தஸ்து தெரியும்.

அவருடைய இயற்பெயர் நாராயணன். அவருக்கு நாக் அவுட் நாவன்னா என்று பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.ஒன்று அவர் தினமும் மாலை நேரங்களில் அனுமதிக்கப்பட்ட கிளப்புகளில், அல்லது நண்பர்கள் வீடுகளில் சீட்டாடுவார்-அதுவும் 251 அல்லது 321 பாயிண்ட்டுகள் என்று நாக் அவுட் ஆட்டம்தான் ஆடுவார். இரண்டு, அவருடைய பேச்சு ஆட்களை நாக் அவுட் செய்வதைப்போல இருக்கும்

நாவன்னாவின் பாட்டையா காலத்தில் கட்டப்பெற்ற வீடு அது. 90 அடி அகலம், 160 அடிநீளத்தில், பர்மா தேக்கு மரங்களாலேயே இழைத்துக் கட்டப்பெற்றது. கலை அழகு மிளிரும். இடத்திற்கு இடம் பெரிய பெரிய பெல்ஜியம் கண்ணாடிகள். இன்று வரை பராமரிகப்பட்டு வந்துள்ளது முன் தலைமுறைகளில், வழி வழியாக ஒரே ஒரு பிள்ளை தான் வாரிசாக வந்துள்ளது என்பதனால் நாவன்னாவின் அப்பச்சி காலம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் நாவன்னாவின் தந்தையாரின் மறைவிற்குப் பிறகுதான் பிரச்சினை அரம்பித்தது..

அண்ணன் தம்பிகள் ஏழு பேர்களும், வீட்டைப்பங்கு வைத்துச் சாவிகளை எடுத்துக்கொள்வது பற்றி விவாதித்த போதுதான் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாமல் போய்விட்டது

நான்கு ஆப்பிள்கள் – ஏழு பேர்களுக்குச் சமமாகப் பங்கு வைக்க வேண்டுமென்றால் எப்படி முடியும் ?

இரண்டு முகப்பு அறைகள், நான்கு பெட்டகசாலைகள்,எட்டு இரட்டை அறைகள், எட்டு மேல் வீட்டு அறைகள்,ஆறு நடுக்கட்டு அறைகள்,ஆறு அடுப்படி அறைகள் – இவற்றை எப்படிச் சமமாகப் பங்கு வைக்க முடியும்?

எல்லோருமே, எல்லாப் பகுதிகளிலுமே பங்கு கேட்டு வாதிட்டதால் ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை

அவர்கள் அனைவருமே வெளியூர் வாசிகள்தான். நாவன்னாவின் அண்ணனுக்கு மதுரையில் இரும்புக்கம்பிகள், தகடுகள் வியாபாரம். நாவன்னாவிற்குக் கோவையில் பஞ்சு வியாபாரம். தம்பிகளில் நால்வர் சென்னை, பெங்களூர், மும்பை என்று பெரிய ஊர்களில் வங்கிகளிலும் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் பெரிய பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். கடைசித் தம்பி மட்டும் தன் பெரிய அண்ணனுடன் சேர்ந்து அவர் செய்து வரும் வியாபாரத்தையே செய்து வருகிறார்

ஊர் வீட்டினால் பெரிய உபயோகம் இல்லை என்றாலும், யாருக்கும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. குட்டையோ, நெட்டையோ பஞ்சாயத்தாரை வைத்து ஏழு பங்குகளாகப் பிரித்துத் திருவுளச்சீட்டு போட்டுப் பிரித்துக் கொள்ளலாம் என்ற நாவன்னாவின் யோசனைக்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை

கடைசியாக நாவன்னா இப்படிச் சொன்னார், “நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பங்கு வைத்துக் கொண்டால்தான் நல்லது. அதற்கு நீங்கள் யாரும் உடன் படுவதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வீட்டின் அமைப்புப்படி நான்கு பேர்கள்தான் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளமுடியும். ஆகவே நம்மில் நான்கு பேர்கள்தான் இந்த வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று பேர்கள் விலைவைத்துப் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட வேண்டியது தான். வேறு வழியில்லை ! ”

கடைக்குட்டித்தம்பி இடைமறித்தார். “எப்படி விலை வைப்பது/ யார் யார் வெளியேறுவது?”

“வீட்டிற்கு எழுபது இலட்சம் அல்லது எண்பது இலட்சம் என்று மதிப்பு வைப்போம்.எந்த நான்கு பேர் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்களோ, அவர்கள் மற்ற மூவருக்கும் ஈவுத்தொகையைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டியதுதான்”

“அது சரி! யார் யார் வெளியேறுவது என்பதை எப்படி முடிவு செய்வது? ”

நாவன்னா அதற்குத் தெளிவாகவும், விளக்கமாகவும்,சற்றுப் புன்னகையோடும் பதில் சொன்னார்,”ஏன் இல்லை! கிரிக்கெட்டில் நாக் அவுட் மேட்ச் என்று இருக்கிறதல்லவா – அது போல செய்ய வேண்டியது தான்.பன்னிரெண்டு நாடுகள் கலந்து கொள்ளும் போட்டியில், செமி பைனல்ஸிற்கு நான்கு நாடுகள் தானே வருகின்றன. அவர்கள் ஆடுவது போல நாக் அவுட் மேட்ச் ஆட வேண்டியதுதான். மூன்று மூன்று பேர்களாக இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்ளுங்கள் எனக்கு என்று தனிப்பட்ட கருத்து ஒன்றும் கிடையாது.நான் பொதுவாக இருந்து கொள்கிறேன்.ஒவ்வொரு அணியும் தாங்கள் வீட்டை எடுத்துக் கொண்டால் என்ன விலை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதை எழுத்து மூலம் எழுதி பரஸ்பரம் கையெழுத்திட்டு ஒரு கவரில் போட்டுக்கொடுங்கள்.மூன்று பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் அந்தக்கவர்களைப் பிரித்துப்பார்த்து, யார் அதிக விலை தருவதாக எழுதியிருக்கிறார்களோ அந்த மூவரும் வீட்டை எடுத்துக் கொள்ள வேண்டியது. கவர்களைப் பிரிக்குமுன், அல்லது பிரித்தப்பின் எந்த அணி என்னைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறதோ அந்த அணியோடு நானும் சேர்ந்து கொள்கிறேன் ”

இந்த யோசனை அனைவருக்கும் சரி என்று பட்டது. ஆனால் ஒரு நாள் முழுவதும் தாங்களும் தங்கள் மனைவி, குழந்தைகளோடும் பேசி முடிவெடுக்கும் போதுதான் ஒரு சின்னக் குழப்பம் ஏற்பட்டது. மதுரையில் கூட்டாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெரிய அண்ணனையும், கடைசித்தம்பியையும் விட்டு விட்டு நாவன்னாவிற்கு அடுத்துப் பிறந்த நான்கு சகோதரர்களும் ஓர் அணியாகி விட்டார்கள் இது தெரிந்த மறுவிநாடியே நாவன்னா தன் பெரிய அண்ணனையும், கடைசித்தம்பியையும் அழைத்துக் கவலைபட வேண்டாம், நாம் மூவரும் ஒரு அணியாய் இருப்போம் என்று கூறிவிட்டார். அவர்களும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டு, முடிவெடுக்கும் பொறுப்பை நாவன்னாவிடமே விட்டு விட்டார்கள்.

எல்லாம் மட மடவென்று நடந்தது

அடுத்து இரண்டு நாட்களில் வரும் ஞாயிற்றுகிழமை முகூர்த்தநாள் என்பதால் அந்தநாள் பஞ்சாயத்தார் முன்னிலையில் முடிவெடுக்கப் பெறும் நாளாக நிச்சயிக்கப்பட்டது. சிவன்கோவில் காரியக்காரர் முத்துபழநியப்ப செட்டியார், மற்றும் தங்கள் பங்காளிகள் வீட்டில் வயதில் பெரியவர் களான ஆண்டியப்ப செட்டியார் மற்றும் அடைக்கப்ப செட்டியார் ஆகியோர்களைப் பஞ்சாயத்தார்களாக நியமிப்பதற்கும் ஒருமித்த கருத்தோடு முடிவு செய்யப்பட்டது.

******************

ஞாயிற்றுக்கிழமை காலை மணி சரியாகப் பதினொன்று.குரு ஹோரை நல்ல நேரம்.பஞ்சாயத்தார்கள் மூன்று பேர்களும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.

ஊரணிக்கரைக்கு எதிர் வீடு என்பதால் அந்த நேரத்திலும் கூடக் குளிர்ந்த காற்று தவழ்ந்து வந்து கோண்டிருந்தது.

நாவன்னாவும், அவருடைய சகோதரர்களும் வந்தவர்களை வரவேற்றார்கள். அனைவருக்கும் கின்னங்களில் ரஸமலாய் இனிப்பும், வறுத்த முந்திரிப்பருப்புக்களும்,வேபர் பிஸ்கெட்டுகளும், சூடான பில்டர் காப்பியும் வழங்கப்பட்டது

முதலில் சுழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக காரியக்காரர் மூனா பானாழானா பொதுவான விஷயங்களைப் பேசி விட்டுக் கடைசியில், வந்த விஷயத்திற்குரிய செய்திகளைப் பற்றிப் பேசினார். பிரிவினைக்குப் பிறகும் கூட அவர்களுடைய வீட்டுப் பெருமையைக் காப்பாற்ற பேதங்களை மறந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.பிறகு இரண்டு சாராரிடமும் கவர்களை வாங்கி, அங்கே உள்ளவர்களில் வயதில் பெரியவரான ஆண்டியப்ப செட்டியார் அவர்களிடம் கொடுத்து, அவற்றைப் பிரித்துப் படிக்கச் சொன்னார்.

முதலில் நால்வர் கூட்டணிக் கவர்தான் பிரித்துப் படிக்கப் பெற்றது வீட்டை எப்படியும் வாங்கி விடவேண்டும் என்ற நோக்கத்திலும், நாவன்னாவை மடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்திலும்,நாவன்னா மதிப்பிட்ட எழுபதையும் எண்பதையும் எழுதாமல் அதிரடி விலையாக ரூபாய் ஒரு கோடி என்று எழுதியிருந்தார்கள்.அவர்கள் குடும்பங்களில் வீட்டுக்கொரு பிள்ளை வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டு பணத்தை டாலர்களாகக் கொட்டிக் கொண்டிருப்பதாலும், பத்து வருடங்களுக்கு முன்பு தங்கள் தந்தையார் பிரித்துக் கொடுத்த பணம் வட்டியும் முதலுமாக லட்சக்கணக்கில் பெருகி வங்கிகளில் வைப்பு நிதியாகக் கிடப்பதாலும், விலையைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருந்தார்கள்.

இந்த விலைக்கு அவர்களுக்குத்தான் கிடைக்கவேண்டும் – கிடைக்குமா?

நாவன்னாவின் கவரைப் பிரித்தால் அல்லவா தெரியும்!

பஞ்சாயத்தார்கள் ஆவலோடும், கோடி எழுதிய தம்பிகள் பதை பதைப்போடும் பார்த்துக்கொண்டிருக்க அந்தக்கவரும் பிரிக்கப்பட்டது.

நாக் அவுட் நாவன்னா என்ன சாதாரண மனிதரா? அறிவு ஜீவியல்லவா! யாரும் எதிபார்க்காததையும், யாரலும் ஊகிக்க முடியாததையும் அவர் எழுதியிருந்தார்.

அவர் எழுதியிருந்தது இதுதான்.

‘ என் தம்பிகள் நால்வரும் என்ன தொகை வேண்டுமென்றாலும் எழுதட்டும். அதைவிட ரூ.108:00 அதிகமாகக் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்ள நான் தாயாராக உள்ளேன். என்னுடைய மூத்த சகோதரரும், கடைசித்தம்பியும் மனப்பூர்வமாக எனக்கு முழு அதிகாரம் கொடுத்திருப்பதால் அவர்களும் அந்தத் தொகைக்குச் சம்மதப்படுவார்கள்
என் முடிவிற்குக் கட்டுப்படுவார்கள்.’

முடிவு தெரிந்தவுடன் தம்பிகள் நால்வரின் முகமும் சுருங்கிப்போய் நான்கு தினங்கள் தரையில் கிடந்த தாமரைப்பூப் போல ஆயிற்று! சொல்லி வைத்தாற் போல நான்கு பேர்களும் எழுந்தார்கள்.

அவர்களைக் கையமர்த்தி, மீண்டும் அமரச் செய்த நாவன்னா, தன்னுடைய வழக்கமான பாணியில் மள மளவென்று பேச ஆரம்பித்தார்.

“உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். உண்மையில் எனக்கு இந்த வீடு வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஞானி சொன்னதைப் போல வீடா முக்கியம்? அந்த வீட்டை ஜீவனுள்ளதாகவும், சந்தோஷங்கள் உள்ளதாகவும், கலகலப்பு உள்ளதாகவும் வைக்கக்கூடிய உறவுகள் அல்லவா முக்கியம்! எத்தனை கோடி கொடுத்தாலும், அப்பச்சி, ஆத்தா, அண்ணன் தம்பி உறவுகளை விலைக்கு வாங்க முடியுமா? அல்லது நமது எண்ணப்படி நமக்கு வளைந்து கொடுத்து போகும்படியான உறவுகள் நமக்கு ரெடிமேடாகக் கிடைக்குமா?எல்லாம் கவியரசர் கண்ணதாசன் சொன்னதைபோல ஆண்டவன் அளித்த வரம். அதனால் உங்களை இழந்து இந்த வீட்டை நான் கைப்பற்றிக் கொள்ள விரும்பவில்லை – வீட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நம் ஊருக்கு எல்லையில் நான் கட்டியிருக்கும் வீடே போதும். என் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் பெரிய அண்ணனுக்கும், சின்னத் தம்பிக்கும் நாற்பது சென்ட் இடத்தை நான் என்னை நம்பி வந்து அவர்கள் கைகோர்த்ததற்குப் பரிசாகத் தருகிறேன். அவர்கள் அந்த இடத்தில் தங்கள் விருப்பம் போல் வீடுகளைக் கட்டிக்கொள்ளட்டும். ஈட்டுத் தொகையாக எனக்கு நீங்கள் ஒரு பைசாக்கூடக் கொடுக்க வேண்டாம்.பழநியாண்டவர் அருளால் நான் மிகவும் வசதியாக இருக்கிறேன்.அவர்களுக்கு மட்டும் ஆளுக்கு பதினைந்து லட்சம் நீங்கள் நால்வரும் சேர்ந்து கொடுத்து விடுங்கள். இப்போது நடந்தது எல்லாவற்றையும் மறந்து நாம் இதுவரை இருந்தது போல ஒற்றுமையாகவே இருப்போம். ஒரே ஒரு வேண்டுகோள், நம் சாமி வீட்டு அறை உங்களில் யார் பங்கிற்கு வருகிறதோ அவர்கள் அதைப்பூட்ட வேண்டாம் – அப்படியே பூட்டினாலும் வீட்டுக்கணக்கப்பிள்ளையிடம் சாவியைக் கொடுத்து வையுங்கள். அதில் பேழை, ஐயா அப்பத்தா, அப்பச்சி, ஆத்தா படங்கள் எல்லாம் உள்ளது நம்மில் யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வந்து கும்பிட்டு செல்வதற்கான வசதியைப் பண்ணிவையுங்கள். அது போதும்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பஞ்சாயத்துக்கு வந்த பெரியவர்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத் தன் பேச்சைத்தொடர்ந்தார், ” அண்ணே, நீங்கள் மூவரும் எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே வந்ததற்கு மிக்க நன்றி! நான் சொன்ன இந்த முடிவைப் பஞ்சாயத்து முச்சரிக்கையாக எழுதிக் கொடுத்துவிடுங்கள் ”

அடுத்து முச்சரிக்கை எழுதப்பெற்றது. எழுதிமுடித்தவுடன் இரு சாரார்களிடமும் முச்சரிக்கைகளைக் கொடுத்துவிட்டு அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள்.

நாவன்னாவும், தங்கள் வீட்டு சாமி அறையில் சாஷ்டங்கமாக விழுந்து கும்பிட்டு விட்டுத் தன் பெரிய அண்ணன், மற்றும் தன் கடைசித் தம்பி உடன்வரப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மற்ற நால்வரும் நடந்து முடிந்த செயல்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தங்கள் மனம் முற்றிலும் பாதிக்கப்பட்ட காரணத்தாலும், நாராயண அண்ணனுக்குள்ள நுண்னறிவும், பக்குவமும் தங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்ற ஆதங்கத்தாலும் அப்படியே உறைந்துபோய் நின்றார்கள்.

அவர்கள் அறியாமலேயே அவர்கள் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

அதை விடுங்கள் – அடுத்த சில மணி நேரத்தில் செய்தி பரவ, அந்த சிற்றூரிலுள்ள நகரத்தார்களெல்லாம் என்ன பேசிக் கொண்டார்கள் தெரியுமா?

” நடந்து முடிந்த நாக் அவுட் மேட்சில் எல்லோருடைய மனம் என்ற கோப்பையைத் தட்டிக் கொண்டு போனது நாவன்னாதான்! “

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..