இரண்டாவது பிரசவத்திற்குப்பின் அவள் உடல் நலம் வெகுவாகக் குறைந்துவிட்டது. முகம் வெளிறிப்போய் மஞ்சள் நிறம் ஏறியிருந்தது. நடக்கும்போது மூச்சு வாங்கியது. எந்த வேலையும் செய்யமுடியாமல் எப்போதும் படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். கட்டிலில் இருந்து கீழே இறங்குவதே இல்லை. லேடி டாக்டரையும் பார்த்தாயிற்று. அவள் கணவன்தான் கூட்டிக்கொண்டு போனான். டாக்டர் சோதனைக் குழாய் மூலம் பரிசோதித்தார். நீல வண்ணத் திரைச்சீலைக்குப் பின்புறம் அவளைக் கிடத்தினார். நீண்ட பரிசோதனைக்குப்பின் அவர் கேட்டார் :

‘‘மூத்த குழந்தையும் இன்னும் முலைப்பால் குடிக்கிறானா?’’

‘‘ஆம்!’’

‘‘எத்தனை வயசாச்சு?’’

‘‘விருச்சிக1 மாசம் பத்தாம் தேதியானால், நாலு வயசு நிறையும்!’

‘‘இனி மூத்தவனுக்கு முலைப்பால் கொடுக்காதே!’’

அவள் தலையாட்டினாள்.

‘‘தலை ஆட்டினால் போதாது. நா சொன்னது புரிஞ்சுதா? இளையவனுக்கு மாத்திரமே முலைப்பால் கொடுத்தால் போதும்!’

டாக்டர் மீண்டும் ஒருமுறை சோதனைக் குழாய் மூலம் பரிசோதித்தார். ‘ஸெப்டிலின்’ என்ற மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

‘‘தினமும் வேளைக்கு ரெண்டு வீதம், மூணு வேளை இந்த மாத்திரையைச் சாப்பிடு!’’ என்றார்.

‘‘சாப்பாட்டுக்கு அப்புறமா, இல்லே அதுக்கு முன்னாலயா?’’ _ அவள் கேட்டாள்.

‘‘சாப்பாட்டுக்கு அப்புறம்தான்!’’

‘‘மாத்திரை முழுங்க பச்சத் தண்ணி குடிக்கலாமா, இல்லே சுடுதண்ணியா?’’

‘‘ஆறின வெந்நீர் குடிக்கலாம்!’’

மாத்திரைக்கான குறிப்பை எடுத்துக் கொண்டாள். கணவனின் வேஷ்டி மடிப்பிலிருந்து பணம் எடுத்து, டாக்டரிடம் கொடுத்தாள். அதனைப் பெற்ற டாக்டர், மேஜை டிராயரில் போட்டார்.

அவளும் கணவனும் வெளியில் இறங்கி, டவுனை நோக்கி நடந்தனர். மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கிக் கொண்டார்கள். மஞ்சள் நிறமுள்ள டப்பாவில் ஐம்பது மாத்திரைகள். கணவன் வேஷ்டியை மடித்துக்கட்டி முன்னே நடந்தான். மூச்சிரைத்துக் கொண்டு பின்னால் நடந்த அவள், தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்: ‘‘கஞ்சியும் சோறும் தின்னும் கொழந்தகளானா பரவால்லாம இருக்கும். முலைப்பால் இல்லேன்னா அதன் வயித்தில் வேறொண்ணும் எறங்காதே!’’

மூத்த குழந்தையைப் பற்றித்தான் அவள் அவ்வாறு கூறினாள். ராஜுவைப் பற்றி. வயசு நாலாச்சு! கஞ்சியோ, சோறோ எதுவும் ஆகாது. முலைப்பால் மாத்திரமே வேணும். ஒரு முறை இல்லாவிட்டாலும் ஆர்ப்பாட்டம்தான். காலையில் டாக்டரைப் பார்க்கப் போகும்போது ராஜு உறங்கிக் கொண்டிருந்தான். கஞ்சியோ, சாயாவோ குடித்ததாகத் தெரியவில்லை. முலைப்பாலுக்காகக் காத்திருப்பானாக இருக்கும். அவள் சற்றே வேகமாக நடக்கலானாள். தனக்குத் தானே பேசிக் கொண்டாள்: ‘‘என்னோட ராஜுவுக்குப் பசி எடுத்திருக்குமே. மணி பத்தாயிடிச்சே! அதன் குடல் கருகியிருக்குமே! குருவாயூரப்பா!’’

‘‘வயசு நாலு ஆயாச்சு. இன்னமும் முலைப்பால் குடிச்சு நடக்கணும்னா முடியுமா?’’ _ அவள் கணவன் கேட்டான். வேஷ்டி மடிப்பில் இருந்து பீடியொன்றை எடுத்துப் பற்ற வைத்தான். அவள் ஒன்றும் பேசவில்லை. மூச்சிரைத்துக் கொண்டு மனம் நிறைய ராஜுவைப் பற்றியே ஆலோசித்துக் கொண்டு நடந்தாள்.

‘‘ரெண்டு நாளைக்கு பால் கொடுக்காதே! தகராறு பண்ணுவான். கஞ்சியும் சோறும் தின்னு அவன் பொழச்சுக்குவான். வேணுமானால், கொஞ்சம் சன்னிநாயகம்2 அந்த மூஸின்3 கடையில் வாங்கிக்கலாம்!’’ கணவன் தொடர்ந்தான், மூக்கின் வழியே புகைவிட்டுக் கொண்டு.

‘‘அது ஒண்ணும் வேண்டாம். என்னோட ராஜுவுக்கு சன்னிநாயகம் ஒண்ணும் வேண்டாம். நல்லபடியா சொன்னாலே அவன் புரிஞ்சுக்குவான். இல்லையா?’’

வழிநெடுக அவளுக்கு ராஜுவைப் பற்றிய ஆலோசனைதான். புலம்பல்தான். ரஸ்தாவின் முடிவில், வயல் வரம்பில் அவர்கள் இறங்கி நடந்தார்கள். தூரத்தில் அவர்களது வீட்டின் வாயிற்படிகள் தென்பட்டன. முன்புறச் சார்பு வெயிலில் பளபளத்தது. வீட்டின் அருகே அணுகியதும், ராஜு படியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

திடீரென்று அவள் சொன்னாள்: ‘‘ராஜு அவன் பாட்டுக்கு முலைப்பால் குடிச்சுக்கட்டும். அதுனாலே எனக்கு உடம்பு சரியில்லேன்னு வந்தா வந்துட்டுப் போகட்டும். குருவாயூரப்பன் இஷ்டம் போல நடக்கட்டும். என்னாலே தடுக்க முடியாது!’’

‘‘என்ன, ஜானூ! உனக்கு கிறுக்குப் புடிச்சுடுத்தா? டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்? எழுந்து நடக்கவே உன்னால முடியாமப் போச்சு. கையும், காலும் இன்னும் முளைக்காத ரெண்டு குழந்தைங்க முன்னாலே இருக்கிறாங்க என்கிற கவலை கொஞ்சம் வேணும்!’’ கணவன் அவளுக்கு நினைவுறுத்தினான். மீண்டும் ஒரு பீடி எடுத்துப் பற்ற வைத்தான்.

அவளும் கணவனும் வாயிற் கதவைத் தள்ளிவிட்டு, முற்றத்தில் இறங்கினார்கள். வாயிற்படியில் ராஜு குந்தியிருந்தான். அவன் முகம் வாடியிருந்தது. கோடு போட்ட கருப்பு நிக்கர் அணிந்திருந்தான். மேல் சட்டை போடவில்லை. இளம் வயிறு ஒட்டிப் போயிருந்தது.

‘‘என்ன மகனே, நீ கஞ்சி குடிக்கலையா?’’ படிகளில் விரைவாக ஏறும்போதே அவள் கேட்டாள். அவன் பதில் பேசவில்லை. கைவிரல்களைச் சப்பிக்கொண்டு, சாணமிட்டு மெழுகிய தரையில் அவன் உட்கார்ந்திருந்தான். அவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

‘‘மணி பதினொண்ணாச்சு. இன்னமும் புள்ளே கஞ்சித் தண்ணி குடிக்காமக் கிடக்கே! குருவாயூரப்பா!’’

வாயில் சப்தம் கேட்டதும் அவளது தாய் அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள்.

‘‘என்ன அழிச்சாட்டியம். ஒம் புள்ளைக்கு கஞ்சியும் வேண்டாம். ரொட்டியும் வேண்டாமாம்! எத்தனை பிடிவாதம் ஒம் புள்ளைக்கு? காந்தாரி மாதிரில்லா இருக்கு!’’

‘‘ஏண்டா நீ கஞ்சி குடிக்கலை?’’ _ அவனது தகப்பன் கேட்டான்.

சிறுவன் பதில் பேசவில்லை. கைவிரல்களைத் திருகிக் கொண்டிருந்தான்.

‘‘வா மகனே! கஞ்சி குடிக்கலாம்!’’

தாய் அவனைத் தூக்கி நிறுத்தினாள். அவன் சொன்னான்: ‘‘கஞ்சி வேண்டாம், பாலு…!’’

‘‘பாலோ? இனிமேல் பால் கிடையாது. வயசு நாலாச்சு. இன்னமும் பாலு! போ. போய் கஞ்சி குடிச்சுக்க!’’ என்றான் தகப்பன். உடனேயே அவன் கையைப் பிடித்திழுத்து அடுக்களையில் கொண்டுபோய் இருத்தினான். அப்போதும் கிண்ணத்தில் அவனுக்கான கஞ்சி வைக்கப்பட்டிருந்தது. கிண்ணத்தை அவன் முன்பு நகர்த்தினான். சிறுவன் கஞ்சியைத் தொடவேயில்லை. கண்களில் நீர் மல்க, அவன் சொன்னான்:

‘‘பாலு வேணம்; எனக்குப் பாலு வேணம்!’’

‘‘அம்மா இனி உனக்கு பாலு தரமாட்டா! டாக்டர் சொல்லியிருக்காரு, உனக்குப் பாலு தரக்கூடாதாம்!’’

சிறிய கரண்டியில் கொஞ்சம் கஞ்சி எடுத்து அவள் அவனது வாயருகில் கொண்டு போனாள். அவனோ, முகத்தைத் திருப்பியபடி அதைத் தட்டிவிட்டான். அவள் சொன்னது காதில் விழாதது போல் அவள் மார்பையே உற்று நோக்கியபடி அவளிடம் கெஞ்சினான்:

‘‘பாலு…!’’

‘‘பாலா… ஒரு உதை தருவேன். கஞ்சி குடி. நான் சொன்னது கேட்கலையா?’’

கப்பன் அவன் காதைப் பிடித்துத் திருகினான். சிறுவன் வலி தாங்காமல் வீறிட்டலறினான்.

‘‘என்னடா கோபாலா இது? உனக்கு கிறுக்கு புடிச்சிடிச்சா?’’ _ சிறுவனின் பாட்டி பரிவோடு கேட்டாள். ராஜு உரத்த குரலில் அழலானான். அவள் சிறுவனை அணைத்தபடி, ‘‘இன்னைக்கி மாத்திரம் மகன் அம்மாவிடம் பால் குடிச்சுக்க. நாளையிலிருந்து அம்மா பால் தரமாட்டாள். கேட்டியா?’’ என சிபாரிசு செய்தாள்.

தாய் அவனை எடுத்த மடியில் போட்டுக் கொண்டு, பிளவுஸின் முடிச்சுகளை அவிழ்க்கலானாள். ராஜுவின் அழுகை உடனே நின்றது.

‘‘ஜானூ!…’’

அவளது கணவன் விளித்தான். உரத்த அவனது குரலில் ஆண்மைவெறி பளிச்சிட்டது. முகம் சிவந்தது. மிகவும் கடுமையாக அவளை நோக்கினான். அவள் பேசவில்லை.

அவன் தொடர்ந்தான்:

‘‘உனக்கென்ன? சுகக்கேடு வந்தால் நீ வீட்டில் படுத்துக் கிடந்தாப் போதும். கஷ்டப்படுறது மத்தவங்கதானே? எல்லோரையும் கஷ்டப்படுத்தும் சாமர்த்தியம் உனக்கு ரொம்பவே உண்டு. ஒன்னே எனக்குத் தெரியாதா?’’

கொத்துச் சாவியை கையிலெடுத்துக் கொண்டு, வெறுப்புடன் கடையை நோக்கிப் போனான். அவன் மனைவி ராஜுவுக்குப் பால் தரவில்லை. என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. ஒரு புறமாக அமர்ந்து அவள் கண்ணீர் உகுத்தாள். அதைக் கண்ட ராஜு மீண்டும் அழத் தொடங்கினான். அவளுடைய தாய் அவளைக் கடிந்து கொண்டாள்:

‘‘என்ன இது? உங்க அம்மை செத்துத் தொலஞ்சாளா, இப்படிக் கிடந்து அழுதே!’’

அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ராஜுவை அள்ளி வாரிக்கொண்டு வாசற்படியில் சென்று அமர்ந்தாள். ஆறுதலாகப் பேசி, அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள். அவனுக்கு புத்தி உண்டு. சொன்னாப் புரிஞ்சுக்குவான். கொஞ்சம் பிடிவாதம் குறைந்தால் கஞ்சி குடிப்பான் என அவள் நம்பினாள்.

நண்பகலில் ஸ்கூல் விட்டதும், அவளுடைய தம்பி கோபி வந்தான். நேராகக் கையும் முகமும் கழுவிக் கொண்டு, அடுக்களையில் சென்று பலகையில் அமர்ந்தான். அவனுக்கருகே ராஜுவுக்காகவும் ஒரு பலகை போட்டிருந்தது. அவனுடைய கஞ்சிக் கிண்ணத்தை முன்னால் வைத்தாள். எழுந்துபோய் ராஜுவைத் தூக்கிவந்து பலகையில் அமர்த்தினாள். அவனுடைய வயிறு ஒட்டிப் போயிருந்தது. கண்கள் கீழ் நோக்கியிருந்தன. அவள் கிண்ணத்தில் சோறு வைத்தாள்.

‘‘யாரு முதல்லே சாப்பிடுவா, கோபி மாமாவா, இல்லே ராஜுவா, யாரு ஜெயிப்பா பார்க்கலாமா?’’ _ அவள் கேட்டாள்.

ராஜு வாளாவிருந்தான். அவள் மீண்டும் தொடர்ந்தாள்

‘‘கோபி மாமா சொல்றான், அவன்தான் ஜெயிப்பான்னு! வேகம் சாப்பிடு, கோபி மாமாவைத் தோக்க அடிக்கலாம்… வேகம்…!’’

சோற்றை உருட்டி உருண்டையாக அவன் வாயருகில் கொண்டு போனாள். அவனோ தலையை மறுபுறம் திருப்பி, அதை ஏற்க மறுத்தான்.

‘‘இப்படி ஒரு பிடிவாதம் பிடிச்சா, அம்மாவால் என்ன செய்ய முடியும் மகனே, கொஞ்சம் சாப்பிடு… ஒரே ஒரு பிடி!’’

அவள் கெஞ்சினாள். அவன் பொருட்படுத்தவேயில்லை. ஒன்றும் பேசாமல் அவள் வாயிற்படியில் போய்க் குந்தினாள். பலகையிலமர்ந்தபடியே அழுது கொண்டிருந்தான் ராஜு. அவனை எடுத்து மடியில் இருத்தி, பால் கொடுத்தாலென்ன? அவள் பலவாறாகச் சிந்தித்தாள். கணவனின் சிவந்த முகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவனுடைய ஆவேசக் குரலை அவள் கேட்டிருந்தாள். அவளுக்கு தைரியம் உண்டாகவில்லை. அவள் ராஜுவை அள்ளி எடுத்துக்கொண்டு மீண்டும் வாயிற்படியில் சென்று அமர்ந்தாள். அப்போது கேசத்தில் விரல்களை ஒட்டிக் கோதினாள். அப்போது அவளுடைய இளைய சிசுவும் எழுந்து அழ ஆரம்பித்தது. அவள் ராஜுவை பெஞ்சில் உட்காரவைத்துவிட்டு, குழந்தையின் அருகில் சென்றாள்.

பெஞ்சில் முகம் புதைத்தபடி, ராஜு திருகத் திருக முழித்துக் கொண்டிருந்தான். வராந்தாவின் மூலையில் மல்லாக்காகக் கிடந்தது கல்யாணி. அவர்களது நாய். சமீபத்தில்தான் அது தாயாகி இருந்தது. நான்கு குட்டிக.ள் பால் சுரக்கும் அதன் காம்புகளைச் சளப் சளப்பென்று சப்பிக் கொண்டிருந்தன அக்குட்டிகள்.

அவள் இளையவனை மடியில் கிடத்தி, பிளவுஸின் முடிச்சுகளை அவிழ்த்தாள். குழந்தை அவளுடைய மார்பில் ஒரு கைவைத்துப் பிடித்தது. கண்களை பாதி மூடியபடி பால் குடித்தது. படியிலிருந்த ராஜுவின் ஆவல்மிக்க கண்கள் சுழன்று சுழன்று திரும்புவதை அவள் கண்டாள். ஒரு முலையிலிருந்த பாலை மட்டுமே குழந்தை குடித்தபடி இருந்தது. அது அதற்குப் போதுமானதாக இருந்தது. வயிறு நிறைந்ததால், குழந்தை மீண்டும் உறங்கிப் போனது.

‘‘ஜானூ. உனக்கு இன்னைக்கு சோறு தண்ணி ஒண்ணும் வேண்டாமா?’’

‘எனக்குப் பசிக்கலை, அம்மே!’’

‘‘எதனால பசிக்கலை? வழியில என்னாத்த வாங்கித் தின்னே?’’

‘‘ராஜு ஒண்ணும் சாப்பிடலை இல்லையா?’’

‘‘பசி வந்தாத் தனியே திம்பான். அகோரப்பசி எனக்கு. கையும் காலும் தளர்ந்து போயாச்சு!’’

அவள் உண்ணவில்லை. ராஜு உறங்கிப் போனான். அவள் அவனைக் கட்டிலில் கிடத்தினாள். அவளும் அருகில் படுத்துக் கொண்டாள். உலர்ந்து போன அவனது கண்ணீரின் உவர்ப்புமிக்க அவனது முகத்தைத் தன்னோடு சேர்த்துப் பிடித்தாள்.

எதுக்காக டாக்டரிடம் போனேன்? போயிருக்க வேண்டாமாயிருந்தது. அப்படிப் போனதால்தானே என் மகன் அநியாயமாகப் பட்டினி கிடக்க நேர்ந்தது! அவள் யோசித்தாள். கணவனிடம் அவளுக்கு வெறுப்பு தோன்றியது. அவனல்லவா தன்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றது?

ராஜுவைப் போலவே அவளும் காலி வயிற்றுடன் உறங்கிப் போனாள்.

கடையை மூடிவிட்டு, ஒன்பது மணிக்கு அவளுடைய கணவன் வீடேறி வந்தான். ஒரு புறமாகக் கிடந்த கல்லில், செம்பில் நீரெடுத்து கால்களைத் தேய்த்துக் கழுவினான். படியேறி வந்ததும் வராததுமாகக் கேட்டான்: ‘‘பய சோறு தின்னானா?’’

‘‘அம்மையும் மகனும் இன்னைக்கி விரதம்தான்!’’ _ அவளது தாய் கூறினாள். அவன் பல்லைக் கடித்தான்.

‘‘சோறு திங்கமாட்டான். இல்லையா? எங்கே அவன்? நா யாருன்னு காட்டித் தரேன் அவனுக்கு!’’

அவன் வேகமாக உள்ளே போனான். ராஜு உறங்கிக் கிடந்தான். அவன் ராஜுவைத் தூக்கி எடுத்தான். அவனது வலிமைமிக்க கை உயர்ந்தது. தூக்கக் கலக்கத்தில் ராஜு அலறினான். அப்பனுடைய கை மீண்டும் மீண்டும் உயர்ந்து இறங்கியது.

‘‘கொன்னுடு, ஏம் புள்ளயே. கொன்னு போட்டுடு!’’ தாய் விம்மி அழுதுகொண்டே கத்தினாள்.

‘‘பதில் பேசாதே! பேசினா உனக்கும் உதைதான். நா சொல்றது கேக்குதா, பதில் பேசாதேன்னேன், ஜானூ!’

அவள் மீண்டும் அழுதாள். இரைச்சல் கேட்டு, சிறு குழந்தையும் விழித்துக் கொண்டது. அதுவும் அழ ஆரம்பித்தது.

‘‘அம்மே, சோறு எடுத்து வை!’’

ராஜுவைத் தூக்கியபடி அவன் அடுக்களைக்குப் போனான்.

‘‘என்னடா இது, கோபாலா, அந்தப் புள்ளய நீயே சாக அடிச்சிருவே போல இருக்கே!’’

‘‘சோறு வைன்னு அல்லவோ நான் சொன்னேன்? பல்லின் இடைவழியாக அவன் உறுமினான். ராஜுவைப் பலகையில் பலவந்தமாக அமர்த்தினான். அவள் சோறு கொண்டு வந்தாள். கிண்ணத்தை மகனின் முன்பு தள்ளி, அவன் உத்தரவிட்டான்.

‘‘தின்னுடா…!’’

அவன் நகரவில்லை.

‘‘தின்னு என்னல்லவா நான் சொன்னேன்?’’

‘‘பாலு…!’’ ராஜு முனகினான்.

அவன் முகத்தில் குருதி பிரவாகம் எடுத்தது. கண்கள் இடுங்கின. உதடுகள் சிலிர்த்தன. ஏறக்குறைய பைத்தியமே பிடித்தது போலாயிற்று. ராஜுவைத் தூக்கிக்கொண்டு தன் அறையை நோக்கி வெறியுடன் ஓடினான். அவள் பயத்தில் கண்ணையும் காதையும் இறுக மூடிக்கொண்டாள்.

‘‘என்னோட குருவாயூரப்பா…!’’

அவளது தாயும் இறைவனின் உதவியை நாடினாள்.

கையில் ஏறிய வெறி உணர்ச்சி தளர்ந்ததும் அவன் வெளியே வந்தான். வராந்தாவில் கிடந்த பெஞ்சில் சிறிது நேரம் படுத்துக் கொண்டான். தட்டில் இட்ட உணவு ஆறிப்போயிற்று. யாருமே உண்ணவில்லை.

விளக்கு அணைந்தது. வீடு இருட்டில் மூழ்கியது. ஒரு கட்டிலில் அவளும் குழந்தையும். அடுத்துள்ள கட்டிலில் கணவனும் ராஜுவும். அவனது குரல் எழும்பவில்லை. உறங்கிவிட்டானோ?

கணவனிடமிருந்தும் எவ்விதமான ஓசையும் வரவில்லை. அவன் உரத்து இழுத்துக் கொண்டிருந்த பீடியின் தீக்கங்கு இருட்டில் ஒளிர்ந்தது. அறையின் நிசப்தத்தில் அவளுடைய மூச்சு மாத்திரம் இழைவிட்டது. பீடியில் தீ அணைந்தது. அவன் மறுபுறம் திரும்பிப் படுத்தான். பலமாகக் குறட்டைச் சத்தம் கேட்டது.

ராஜு நிதானமாகக் கட்டிலி லிருந்து எழுந்து நின்று, சோம்பல் முறித்துக் கொண்டான். அறையில் கும்மிருட்டு. மெதுவாகத் தகப்பனைக் கடந்து அவன் கீழே இறங்கினான். இருட்டில் தட்டித் தடவி, தாய் படுத்திருந்த கட்டிலைக் கண்டுபிடித்தான். எம்பி எம்பி அதன் மேல் ஏறினான். தாயின் உடலைத் தடவினான். அம்மாவின் மார்பகம் அவன் கையில் தட்டுப்பட்டது. மிகுந்த ஆவலுடன் அவளுடைய ப்ளவுஸை உயர்த்தி அவனது முகத்தை அவள் மார்பில் அழுத்தியபோது:

‘‘எங்கே அந்தப் பயல்?’’

தீக்குச்சியைக் கிழித்து ஒளி உண்டாக்கினான். சிவப்பாக வெளிச்சம் அறையில் பரவியது. அவன் பல்லை நறநறவென்று கடித்தான்.

‘‘உனக்கு அவ்வளவு தைரியம் வந்திடுச்சா?’’

அவன் ராஜுவைப் பலமாக இழுத்துக் கீழே விட்டான். அவன் அழுதான். அவனது தாயும் அழுதாள். இளைய சிசுவும் வீறிட்டழுதது. எங்கும் ஒரே கூச்சல். நள்ளிரவில் தகப்பன் தனது பாயையும், தலையணையையும் போர்வையையும் உதறி எடுத்து, வராந்தாவில் கொண்டுபோய் விரித்தான். ராஜுவைத் தூக்கி வந்து அதில் படுக்க வைத்தான்.

அறையுள் நோக்கி, ‘‘கதவைச் சாத்தி, தாழ்ப்பாள் போடு!’’ என்று ஆணையிட்டான்.

கிழவி அவ்வாறே செய்தாள்.

தான் வெற்றிபெற்ற உணர்வோடு அவன் படுக்கையில் சாய்ந்தான். ராஜு படுத்திருந்த பக்கத்தில், வராந்தாவில் தாரகைகளின் ஒளி படர்ந்து கிடந்தது. குளிர்ந்த காற்று வீசியது. அவன் ராஜுவைக் கம்பிளிக்குள் திணித்தான்.

காலை புலர்ந்தது. நிலா வெளிச்சம் வராந்தா முழுதும் விரவியது.

தகப்பனின் கனமான கையை மெதுவாக அகற்றிவிட்டு, ராஜு போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டான். ஓசைப்படாமல் வராந்தாவில் நடந்தான். அதன் மூலையில் நாயும், குட்டிகளும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தன, தரையில் விரிக்கப்பட்ட கோணிப் பையில். நிலவொளியில் அவன் நாயின் பால் சுரக்கும் முலைக் காம்புகளைக் கண்டான். மெல்ல மெல்ல, நாயின் அருகில் சென்று குனிந்து, தரையில் படுத்தான்.

அடிக்குறிப்பு:

1 விருச்சிக: கார்த்திகை.
2 சன்னிநாயகம்: கசப்பான ஒரு மூலிகைக் கலவை
3 மூஸ்: நம்பூதிரிப் பெரியவர், வைத்தியர்.

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..