புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள்.
அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள்.
உள்ளே… பிரபலமானவர்கள் நடித்துத் திரையிடப்பட்டிருக்கும் சினிமாவின் இரவு காட்சிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் இரண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர் யாராக இருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு இரவு காட்சிக்குக் கிளம்புகிறார்கள்.
சிறப்பாய்க் காட்சி முடிந்ததும் வீடு திரும்பும் அவர்களுக்குள் கடுமையான போட்டி. டிக்கெட் அனுப்பி வைத்தது யாராக இருக்கும்?
அவன், தன்னோடு படித்த சக மாணவர்களின் பெயரை வரிசையாகக் கூறுகிறான். அவளும் தன்னை நேசித்தத் தோழியரின் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வருகிறாள். எனினும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை!
வீடு வந்து விட்டார்கள். அவசரக் அவசரமாக வீட்டுச் சாவியைப் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து வாயிற் கதவைத் திறக்க முற்படுகிறான். கதவில் கை வைக்கும் முன்பே கதவு திறந்து கொள்கிறது. பதறிப் போய் ஸ்விட்சைப் போடுகிறார்கள். அலமாரியெல்லாம் திறந்தபடிக் கிடக்கிறது.
மேசையின் மேல் ஒரு துண்டுக் கடிதம்!
அதில்,
” டிக்கெட் அனுப்பி வைத்தது யாரென்று இப்போது புரிகிறதா..?”