அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம்.
என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில், முழங்கை நீண்ட, கழுத்துவரை உயர்ந்த கிளாஸ்கோ மல் இரவிக்கையில் ஐம்பது வயதிலும் நரை அறியாது என்னை ஆச்சரியப்படுத்துபவள். காலையில் தோசைக்கல் வழிய மாவை வார்த்து, பொன் சிவப்புக்குக் காத்திருந்து, “குறைந்தது மூன்றாவது தின்னுட்டுத்தான் எழுந்திருக்கணுமெனச்” சத்தம் போடுவதையும், மாலையில் எனக்குக் கண்ணூறு கழிப்பதையும் கொண்டு சராசரி அம்மாவாகக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் எங்கள் கிராமத்தில் பொம்மை, பேசும்படம் மட்டுமே வாசித்தப் பெண்களைப் புதுமைப்பித்தன், மு.வ. ஜெயகாந்தன் எனப் பேசவைத்தவள் அவள்.
என் கைபிடித்து, சுக துக்கங்களை பரிமாறிக்கொள்வதில், அம்மா எனக்கொரு சிநேகிதி. அதிர்ந்து பேசமாட்டாள். அன்போ, கோபமோ, வார்த்தைகள் வராது. கண்களும் கைகளுந்தான் அவளுக்கான கருவிகள். உதடுகள், ஏன் முகவாய்கட்டைகூட சில தருணங்களில் அவற்றை வெளிப்படுத்தி யிருக்கின்றன.
அன்பு மட்டுமே அறிந்த அம்மாவிற்கு இடைக்கிடை கோபமும் வருவதுண்டு. அம்மாவின் கோபத்தைத் தணிக்க எனக்குத் தெரிந்த தந்திரம் ஓடி ஒளிவது. அது ஆரம்பக் காலங்களில் மணிக்கணக்கில் துவங்கி, பின்னர் அவள் வாங்கிவந்திருந்த மான் மார்க் குடையைத் தொலைத்துவிட்டு கிராமத்துப் பெருமாள் கோவிலில் கருடாழ்வார் பின்னே ஒருநாளாய் ஆகியிருக்கின்றது. பிறகு இருபது ஆண்டுகளாக ஒளிந்து வாழ்ந்தவனை, முகவரி கண்டுபிடித்து அழைத்து வந்தவன் கிராமத்து நண்பன் குட்டியாப்பிள்ளை. அம்மா படுத்த படுக்கையிலிருப்பதாகவும், என்னை ‘ஒருமுறை பார்த்தாளென்றால் அவள் உயிர் நல்லபடியாப் போய்ச் சேர்ந்திடும்’ என்றும் அவன் சொல்லியிருந்தான்.
அம்மாவிடம் முதன் முதலில் நான் முரண்படத் தொடங்கியது படையாட்சி வீட்டுக் கல்யாணத்தின் போது. கிராமத்தில் நல்லது கெட்டது என்றால் முன் நிற்கும் அம்மாவைக் குறித்து சுளீர் என்று வந்து விழுந்தது அந்த விமர்சனம்.
“அந்த……..ளுக்கு இங்கென்ன வேலை”. அதற்காகவே காத்திருந்தது போல இரண்டொருவரின் முனங்கல், தொடர்ந்து நக்கற் சிரிப்பு.
கடந்த சில மாதங்களாகவே, கிராமத்தில் அம்மாவைக் குறிவைத்த வதந்தியின் உக்கிரத்தை ஜாடை மாடையாக குட்டியாப்பிள்ளை சொல்லியிருந்தான். அம்மா செய்திருந்த குற்றம் தெருவில் அலைந்து கொண்டிருந்த பைத்தியக்காரன் ஒருவனுக்கு வீட்டுத் திண்ணையில் அடைக்கலம் கொடுத்துச் சோறுபோட்டுக் கொண்டிருப்பது. அன்றைக்கு அவள் மீது வீசப்பட்ட தீக்குழம்பு விமர்சனத்தில் துடித்துப் போனது நான் மட்டுமல்ல குட்டியாப்பிள்ளையும் கூட.. இரவு முழுதும் வாதிட்ட அம்மாவிடம் நான் கண்டது ஓர் “சாதரண மௌனம். மற்றவர்களின் பார்வைக் கோளாறுக்கு நான் பொறுப்பாக முடியாது என்கின்ற மௌனம். முதன்முறையாக அம்மாவுக்கும் எனக்குமிருந்த சிநேகிதச் சங்கிலி அறுந்து விழுந்தது. இந்தமுறை அவளிடமே சொல்லிகொண்டு ஒளிவதெனத் தீர்மானித்தேன்.
இரவு முழுக்க, புரள்வதும் எழுந்து உட்காருவதுமாய்க் கழித்தேன்.. தூக்கமில்லை. மனத்தை அமைதிப் படுத்த முயன்று களைத்துவிட்டேன். அம்மா சற்றுத் தள்ளி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அவளும் தூக்கமின்றி என்னைக் கவனித்துக் கொண்டிருப்பாளோ? இருட்டுத் திரை என்னைக் குழப்பத்தில் நிறுத்த, இருவருக்கிடையில் விழுந்து கிடந்தது. எங்களுக்குள் உண்டான சிநேகித வாசிப்பில் எங்கே புள்ளி விழுந்தது?. பதில் கிடைக்காததால் கழிவிரக்கம், கோபம், ஆத்திரம்.
மறுநாள் காலை “நான் கிளம்பறேன்” என்று சொன்னவனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பதிலில்லை. “எங்கே கிளம்பற? ஏன் கிளம்பற?” என்கின்ற கேள்விகள் ஏதுமில்லை. எனது இரு கைகளையும் இறுகப்பற்றினாள். அமைதியாக இருந்தாள். அதன் மூலம் என்ன சொல்ல வருகிறாள்? என் புறப்பாடு குறித்து அவளுக்குத் துக்கமா? சந்தோஷமா? யூகிக்க முடியலை. இப்படிக் கைகளைப் பற்றிகொண்டு மௌனம் பேசுவதை காட்டிலும், வாயைத் திறந்து நான்குவார்த்தையில் என்ன திட்டியிருக்கலாம்.. எப்போது பேசினாள்? இப்போது பேசுவதற்கு? மௌனம். அசாதரண மௌனம். என் கைகள் அவள் கைகளில் இறுக்கப்படுவதையுணர்ந்தேன். அவளது உதடுகளும், முகவாய்க் கட்டையும் வழக்கம்போல நடுங்கின. எனக்கென்னவோ அவள் செயல் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அவள் மனதில் என்ன இருந்திருக்கும்? உணர்வை உணர்வால் மட்டுமே அறிய முடியும் என்கின்றார்களே? அப்படியா? எனக்கு யாரேனும் விளக்கினாத் தேவலாம். கடந்த இருபது ஆண்டுகளாக என்னுள் அந்த வினா துரத்துகின்றது. இன்றுவரை ‘என் புறப்பாடு தினத்தில் அம்மா என்ன சொல்லியிருப்பாள் என்பது புதிராகவே உள்ளது.
அம்மா படுக்கையிலிருந்தாள். சற்றுத் தள்ளி அகல் விளக்கொன்று எரிந்து கொண்டிருக்கிறது. எனக்காவேக் காத்திருந்தது போல, நாசியில் திடுமென்று நுழைந்து, உடலில் சிலிர்ப்பையும், கதகதப்பையும் ஒரு சேர அழைத்துவந்தது என் வீட்டு மணம்.
பாயிலிருந்து எழுந்து உட்காரமுயன்ற அம்மா, என்ன நினைத்தாளோ மறுபடியும் படுத்துக் கொண்டாள். அவளது இருண்ட கண்கள் கூரை, சுவர்கள் என அலைந்துவிட்டு இறுதியாக என்னைப் பதிவு செய்து கொண்டன.
“பக்கத்துல வா..!” கையசைத்து என்னை அருகில் அழைத்தாள். எனக்கே என்னிடம் பயம். என் பயத்திற்கு நேர்மாறாக அம்மாவின் முகத்திலே எப்போதும்போல நான் அறிந்த அமைதி. எதையோ மெல்லுவது போன்ற தாடை அசைவுகள். முகவாயும் அதில் சேர்ந்து கொள்கின்றது. எதனை அசை போடுகின்றாளோ? இந்த முறை ஏதோ சொல்ல வருகிறாள். பெரும்பாலும் வார்த்தைகளை நம்பாதவள். பேசுகிறாள். ஆச்சரியமாயிருக்கிறது.
“இப்படி வா..!” அம்மாவிடம் இன்னும் நெருங்கி நிற்கிறேன். விளக்கின் தீபம் இருள் சேர்ந்த ஒளியை அம்மா முகத்திலும் என் முகத்திலுமாக பங்கீடுச் செய்திருந்தது.
“கையை என்னிடம் கொடு” வெகுக் காலத்திற்குப் பிறகு அம்மா பேசுவதால் மனதுக்குள் ஏற்பட்ட சுகம் சிறிது நேரமே நீடித்தது. மனதுக்குள் மறுபடியும் பயம். ஏதோ ஒரு அசம்பாவிதத்தை எதிர்நோக்கும் பயம்.
அம்மாதான் மௌனத்தை கலைத்துக் கொண்டு பேசினாள்:
“மகனே..! இப்போதாவது வந்தாயே. சந்தோஷம்.. உன் அஞ்ஞாத வாழ்க்கையின் தேடுதல் முடிந்ததா? எதையாவது எதிர்பார்த்து வந்தாயா? நான் உனக்கு என்ன கொடுப்பேன் ? இருப்பேதுமில்லாத வாழ்க்கை என்கின்றபோது, கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்க முடியும்.. என்னிடம் இருப்பதெல்லாம் இதயம் அதன் சுமைகள், ஏக்கங்கள், அதில் சுரக்கும் அன்பு. ம்.. அதுமட்டுமே எஞ்சியிருக்கின்றது. அன்பை புரிந்துகொண்டமையில் இரண்டுபேருமே தவறியிருப்போமா? நல்லதோ கெட்டதோ மாந்தர்களின் ஒழுக்கங்களில் அன்பிற்கும் பங்கிருக்கிறது. இப்பொழுது என்னுடைய முறை. நான் புறப்பட்டாக வேண்டும். உனக்காகத்தான் காத்திருந்தேன். உன்னிடமிருந்து ஒளிந்து வாழப்போகின்றேன். உன் சினேகிதி நான் பிரியப் போகின்றேன். இனி ‘நான்’ என்பது உன்னிடம் நிழலாகக் கூட இருக்கமுடியாது.”.
‘பிரிவென்பது இறப்பின் ஒரு பகுதி’ யென்று யாரோ சொன்னதாய் ஞாபகம். என் சிநேகித அம்மா அந்தப் பொருளில் சொல்லியிருப்பாளோ? மெள்ளக் குனிந்து உதடுகளைக் குவித்து சுட்டுவிரலை நிறுத்திய என் குறியீட்டில் என்ன புரிந்துகொண்டாளோ அமைதியானாள். இப்போது என் முறை. நான் பேசியாக வேண்டும். அவள் காதுமடல்கள் விரிந்து, ஆர்வத்தோடு என் வார்த்தைகளுக்குக் காத்திருக்கின்றன.
“அம்மா..! புறப்பாடெல்லாம் முடிவாக முடியுமா?. பிறப்பு இறப்பு, ஆரம்பம் முடிவு, இரவு பகல் அனைத்துமே ஊழின் சுழற்சி. முடிவல்ல ஆரம்பம்.. நீ இருப்பாய். உன்னுடைய அன்பும் கோபமும், என்னிடமும் இருக்கும். பிரிவென்பதே ஆத்மாவிற்கு இல்லை. ”
“ம்… மறுக்கலை. இறுதியாக ஒரு வேண்டுகோள். குந்திக்கு நேர்ந்தது போல என்மார்பு நிறைய அன்பு. வா. கிட்டத்தில் வா.. தாகசாந்தி செய். என் மார்பில் உறைந்திருக்கின்ற பாலை உறிஞ்சு. என் ஆன்மா வெண்பஞ்சாக மேலே எழுந்திருக்கவேண்டும். ஏற்பாடு செய்வாயா?. எதற்காக இப்படி குனிந்து நிற்கிறாய்? நிமிர்ந்து என்னை நேராகப்பார். என் மடியில் படுத்து எத்தனை நாளாகிறது. இப்போதாவது என் விருப்பத்தை நிறைவேற்று. மறுத்தாய் என்றால் காலத்திற்கும் அதற்காக வருந்த நேரிடும்.” அம்மாவின் உலர்ந்த கைகள் மெல்ல மெல்ல என்னிடம்…..
* * *