மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன்

ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார். இசை ஞானம் உள்ளது. கட்டிடக்கலை ஆசிரியராக உள்ளார். பழங்கால சிற்பம் , ஓவியம் , இசை கட்டிடக் கலைகள் குறித்த ஆய்வு செய்கின்றார். ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுகின்றார். இவற்றோடு கவிதை எழுதும் கலையையும் கற்று, குறிப்பாக, மரபுக்கவிதை எழுதும் வல்லமை பெற்று ஆயிரம் விருத்தங்கள் எழுதிப் பாவலர் மணி ஆகியுள்ளார். ஆம் அவர் ஒருவரே என்பது வியப்பாகத்தானே இருக்கும்.ஒரு பன்முகக் கலைஞராக உள்ள பாவலர்மணி முனைவர் சி.அ.வ.இளஞ்செழியன் அவர்களைத்தான் நேர்காணல் செய்தோம். இதோ நேர்காணலுக்குள் செல்வோம்.

பேராசிரியர், பாவலர், முனைவர். சி. அ. வ. இளஞ்செழியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் நேர்காணல்

பிப்ரவரி 2023 / 104 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

புத்தகக்கண்காட்சியொன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன்...

1. தங்கள் பணி மதுரையில் ஆனால் வீடு சென்னையில். உங்கள் பூர்வீகம் எது ஐயா?

நாற்பது ஆண்டுகாலமாக நான் சென்னையில் வசிக்கின்றேன். என் மனைவி சென்னையைச் சேர்ந்தவர். என் இரு பிள்ளைகளும் சென்னையில் பிறந்தவர்களே. பல்லவர்கால சிற்பக் கலைஞர்களின் வழிவந்தோர் என்பத னால் தொண்டைமண்டலம் தான் பூர்வீகம். அரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டுள்ள பல்லவர் குடைவரைக் கோயில் அமையப் பெற்றுள்ள சிங்கவரம் (சிம்மபுரம்) தான் எங்களின் சொந்த ஊர். இவ்வூர், மலைக் கோட்டைகளுடன் திகழும் செஞ்சியின் வடமேற்கில் இரண்டு கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

2. தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே நுண்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனரே எப்படி? பயிற்சியா? பாரம்பரியமாக வந்துள்ளதா?

பாட்டன், முப்பாட்டன் என எல்லோ ரும் பாரம்பரியக் கலைகளைச் செய்து வந்தவர்களாக! எனது பாட்டனாரான அப்பாவு ஆச்சாரி அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞராக மட்டுமின்றி கூத்து, நாடகம், இசை என இயங்கிக் கிடந்தவர். எனது தந்தை செ.அ.வடிவேலன் ஆசிரியர் அவர்கள் இலக்கியம், இசை, நாடகம் மட்டுமல்லாது இசைப்பாடல்களை இயற்றி மெட்டமைத்து குரல் நயத்துடன் வளமாக ஓங்கிப் பாடக்கூடியவர். அப்பாவின் கடைசித் தம்பியான எனது சித்தப்பா திரு. கண்ணப்பன் ஆசிரியர் அவர்கள் கோட்டோவியம், வண்ண ஓவியம் வரை வதில் திறமுற்றிருந்தவர். ஆதலால், அவர் எப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அவரை ஓவியம் வரைந்து காட்டச் சொல்வேன்.

அப்போது அகவை நான்கு அல்லது ஐந்து இருக்கும்; சித்தப்பா வந்திருந்தார். முதன்முதலாக என நினைக்கிறேன். அல்லது நிகழ்வுகள் கருத்தில் ஏறிப் படியும் தகுதியின்படி முதன்முதலாக எனலாம். எனது பாடப் புத்தகத்தில் இருக்கும் இராஜராஜ சோழனின் கோட்டோவியத்தை சித்தப்பாவிடம் வரைந்து காட்டச் சொல்லி பின் நானும் வரைந்திருந்தேன். இதுபோன்றே எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன்; அப்போது பள்ளி, ஆண்டு விடுமுறையில் இருந்தது. ஊரின் கோவிலுக்கு மரச்சிற்பங்கள் செய்ய கும்பகோணத்திலிருந்து சிற்பிகள் வந்திருந் தனர். எங்கள் பள்ளியில் தான் தங்கி சிலைகளைச் செய்தனர். நான், நாள்முழுக்க அவர்களுடனேயே தான் இருப்பேன். அவர்கள் சொல்லிக்கொடுத்தது போலவே சிற்பங்களுக்கு வண்ணமிட்டமை இன்ன மும் நினைவினில் உலராமல். பன்னி ரண்டாம் வகுப்பு முடித்தவுடன் கல்லூரிப் படிப்புக்குச் செல்லவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கு அப்பா முற்றிலும் மறுத்துவிட்டார். கலை அறிவியல் கல்லூரி யில் சேர்ப்பதாக அவரது திட்டம். எனினும், எனது அனைத்து நோக்கமும் கலையாகவே இருந்தது. முறைப்படி கற்றுக்கொள்ள யாரும் வழி சொல்லவில்லை. நானாகவே முயன்று அச்சிறு அகவையிலேயே பல ஊர்களுக்குச் சென்று கற்ற பட்டறிவு. அப்பாவும் பின்னர் அங்கீகரித்தார். ஓவியம் வரையக் கற்றுக் கொடுப்பார்கள் என்று பார்த்தால் நான் சிறுவனாக இருப்பினும் கூட சரக்குந்துகளின் அடிப்பகுதிக்கு (Chassis of Lorries) செங்காவி வண்ணம் (Red Oxide) அடிக்கச்சொல்லி ஏமாற்றினர். லாரியின் அடியில் மல்லாந்து படுத்துக்கொண்டே வண்ணம் அடிக்கவேண்டிய கொடூரம். அழுதிருக்கின்றேன். கண்களில் வண்ணம் விழுந்து இடருற்றக் கொடூரம் வேறு. சரியாகக் காசு தரமாட்டார்கள். வேறுவழி யின்றி, சாப்பிடாமலேயே கடினமான வேலைகளைச் செய்துகொண்டிருப்பேன். இப்படி இந்த ஓவியக்கலையைக் கற்க நான் பட்டக் கடுமைகள் சொல்லி மாளாதவை. வண்ணத்தால் ஓவியம் வரைவதைக் கற்க பட்ட பாடு கிட்டத்தட்ட இமயமலையின் கனபரிமாணத்தை விட மூன்று மடங்கில் அதிகமாக இருக்கலாம். பட்டினி பட்டினி பட்டினி! என இப்படியே முற்றிலுமாக உடல் நலம் குன்றிப்போக எனது பத்தொன்பதாம் அகவையில் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக, நினைவின்றிக் கிடந்து செத்துப் பிழைத்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் எனது அறையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த முக்கால் வாசி பேர் அவ்வப்போது இறந்து கொண்டிருந்தனர். வாந்தி பேதி எனும் கொடுந்தொற்றுக் காலம் அது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இப்படி உயிருக்குப் போராடிப் பிழைத்ததால்தான் அப்பாவின் விருப்பத் தின்படி கல்லூரிப் படிப்பத் தொடர இசைந்தேன் என்பதனால். உடல் நலம் சீரான உடன் மீண்டும் கலைமீதான ஆர்வம் விட்டபாடில்லை. முற்றிலும் ஓவியத்தைப் புறக்கணித்திருந்த நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர். அப்போது இறுதி ஆண்டு மாணவராக இன்றைய எழுத்தாளரும், நடிகரும் கதை சொல்லியுமான திரு. பவாசெல்லதுரை படித்துக்கொண்டிருந்தார். அவர் திருவண் ணாமலைக்காரர். நான் திருவண்ணா மலையில் ஜெமினி ஆர்ட்ஸ் எனும் விளம்பர ஓவியக் கூடத்தில் 17 அகவையுடனான சிறுவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். பவா என்னை விட ஐந்தாறு அகவை மூத்தவராக இருந்தார். ஜெமினி ஆர்ட்ஸ் திரு. ஏ. நாகராஜனின் தம்பியான திரு. ஏ. லோகநாதனைப் (இன்றைய பாவலர். வையவன்) பார்க்க பவா மற்றும் இன்னும் சிலரும் வருவார்கள். கவிதைகள் குறித்துப் பேசுவார்கள். அப்போதுதான் பவா பழக்கம். இப்பழக்கத்தின் பேரில் என்னைக் கல்லூரியில் சந்தித்த பவா, தான் கல்லூரியின் பொதுச் செயலாளராக தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற் கான விளம்பரத் தட்டிகளையும் சுவர் விளம்பரங்களையும் எழுதி உதவக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே செய்தேன். வெற்றியும் பெற்றார் பவா. ஆனால், அவ்விளம்பரங்களின் வெகு புதுமை, செய்நேர்த்தி இவற்றினால் நான் பிரபலமாக நேர்ந்தது. வேறென்ன ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டே ஓவியக்கலையைத் தொடர ஆரம்பித்தேன். அப்பா உடல் நலமில்லாதிருந்தார். இதனால் இப்போது அவரது கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே, திரைப்படத்துறையின் ஓவியப்பிரிவான ராட்சச கட்டவுட், ராட்சச பேனர் வரையும் துறையில் உதவியாளனாகச் சேர்ந்தேன். அப்போது எனக் அகவை இருபத்தியொன்று. அத்துறையின் முதன்மை ஓவியர்களிடையே தனித்துவம் வாய்ந்தவனாகவும் இருந்தேன். இதனால், எனக்கென ஓர் ஓவியக்கூடமும் (Art Studio) மயிலாப்பூரில் வைத்திருந்தேன். இத்தகையச் சூழலில்தான் எனது தம்பிகள் இருவரும் கலையின் மீது இயல்பாகவே ஈடுபாடுகொள்ளத்தொடங்கினர். முறைப்படிக் கற்றுக்கொடுத்ததனால் இன்று அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் தலை சிறந்த ஓவியர்களுள் தனிச்சிறப்பைப் பெற்றவராகத் திகழ்கின்றனர்.

கலை, இலக்கியம் இசை இவை குருதிக்கொடைதானெனினும் மிக மிக கடினமான உழைப்பினிடையேயான உண்மையான கற்றல், பயிற்சி, தேடல் தான் எல்லாவற்றிகும் காரணம்.

சாஞ்சி ஸ்தூபிமுன் புகைப்படக் கலைஞனாக...

3. தங்கள் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகள் பற்றி

என் பெற்றோர் பற்றி : செ.அ. வடிவேலன் ஆசிரியரான எங்களது அப்பா அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிசெய்தவர். ‘வடிவேல் வாத்தியார்’ என்றால் சுற்று வட்டரத்தில் எல்லோருக்கும் தெரியும். பணியிலிருக்கும் போதே தமது ஐம்பத்தி மூன்றாம் அகவையில் இறந்து விட்டார். அப்பாவின் பன்முகத்திறம் பற்றி பிறிதொருகேள்விக்கான விடையில் கூறியிருக்கின்றேன். திரும்பக்கூறத் தேவை யில்லை. அவர் ஓர் ஆகச்சிறந்த கல்வி மான். நான் நேரில் கண்ட வள்ளலாக அப்பா. மிகவும் நேர்மையானவர். எத்தனையோ சிறந்த மாணவர்களை உருவாக்கிருக்கிறார். இன்னமும் அப்பாவிடம் பயின்ற மாணவர் கள் யாரேனும் மண விழாக்களில் அம்மாவைச் சந்திக்க நேர்ந்தால் அவர் களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுக்கொள்வதைக் கண்டதுண்டு. முன் மாதிரியாகத் திகழ்ந்தவர். அடிப்படைப் பொருளாதாரத்திலும் கூட அவர் தன் னிறைவடையாதவராகவே இறந்து போனார். தமது மிக இளம் மற்றும் சிறுபிள்ளைகளை அனாதைகளாக விட்டுச் செல்லப்போகிறோமே என மனம் பேதலித்தவராக தம் கடைசிக் காலத்தில் அம்மாவிடம் வருந்தி யிருக்கிறார். ஆதலால் தான், தட்டுத் தடுமாறி நாங்கள் இன்னமும் சுதாரித்துக்கொண்டு வருகிறோம்.

அம்மாவைப் பற்றி: ரத்தினாம்பாள் எனும் அம்மாவின் இயற்பெயரை வசந்தா எனத் திருமணத்தின்போதே அப்பா மாற்றியிருந்தார். அம்மாவுக்கு அவ்வ ளவாகக் கல்வியறிவில்லை, எனினும், அப்பாவிற்கேற்ற நற்பண்பு களுடனான நல் இணையராகத் திகழ்ந்தவர். அம்மா நன்றாகப் பாடியதைக் கேட்டதுண்டு. என்மீது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தனி அன்பு உண்டு. அப்பாவுக்கு நான் செல்லப்பிள்ளை.

உடன் பிறந்தோர் பற்றி: எங்கள் பெற்றோருக்கு நாங்கள் நான்கு பிள்ளை கள். நான் இரண்டாவது. எனது அண்ணன் பெயர் சி.அ.வ. இளங்கோவன். சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் விளம்பரத்துறையில் ஓவியராகப் பணி செய்துகொண்டிருக்கிறார். மிக மிக வளமாகவும் நுட்பமாகவும் பாடக்கூடிய ஆற்றல் கொண்டவர். அடுத்து நான். எனக்கு இரு தம்பிகள். மூத்தத் தம்பியின் பெயர் எஸ்.ஏ.வி. இளையராஜா. தமிழகத்தில் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவர். நீர் வண்ண ஓவியம் மற்றும் இன்ன பிற வண்ண ஓவியங்களில் செம்-பட்டறிவும் ஆளுமையும் கொண்டவர். கடைசித் தம்பியான எஸ்.ஏ.வி. இளையபாராதி, தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களுள் முதன்மையானவர். எவ்வண்ண முறையா யினும் உலகத்தரத்தினைத் தாண்டிய தரத்தினில் படைப்பவர். மட்டுமின்றி, தபலா இசைக்கலைஞர். புல்லாங்குழலும் வாசிப்பவர்.

ராஜராஜசோழன் கல்லறையில்...

4. தங்கள் இளமைக்காலக் கல்வி குறித்து

எனது ஆரம்பப் பள்ளிக் கல்வியின் போது என் தந்தையும் எனக்கோர் ஆசிரிய ராக அமைந்த வாய்ப்பு. அப்பா வின் தனித்துவமாக அவரது பெருந்திற பன்முகம். அவர் ஆசிரியர் பணிசெய்த ஆரம்பப் பள்ளியை விழா, பண்பாட்டு நிகழ்வு, இசைக் கச்சேரி, வரலாற்று நாடகம் என கல்வி மற்றும் கலைத் தளமாக இயக்குவித்தவர். ஆக, அப்பாவின் நேரடி கவனத்தின் கீழான ஆரம்பக்கல்வி. பின் பன்னிரண்டாம் வகுப்பு வரை வேறு பிற பள்ளிகளில். குழைந்தைப் பருவத்திலிருந்தே ஓவியம் மீதான ஈர்ப்பு. முறைப்படியான கற்றல் ஏதுமில்லையாயினும் பதினோறாம் வகுப்பு படிக்கும்போதே விளம்பரப் பலகை எழுத முனைந்தமை. எனினும், அப்பாவிற்கு எனது கலைமீதான நாட்டத்தில் உடன்பாடில்லை. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் ஓவியக் கல்லூரியில் சேர்க்கவேண்டி உண்ணாமல் உள்ளிருப்புப் போராட்டம். உண்மையிலேயே கதவைத் திறக்காமல் நான்கு நாட்கள் பட்டினிக் கிடந்து கோரிக்கையை வலுவாக்கி இருந்தேன். ஆயினும், வறுமையின் காரணமாய் நிறைவேறாமற் போன இளங் கவின் கலைக் கனவு. பின் நானாகவே முயன்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை என விளம்பர ஓவியக்கூடங்களில் சேர்ந்து ஓவியம் கற்றமை. இவ் இரு இடங்களிலும் மொத்தமாக நான்கு திங்களே பணி செய்தமைக் குறிப்பிடத்தக்கது. பின்னர், சென்னையின் சில ஓவியக்கூடங்களில். ஆயினும், பின்-பதின்ம அகவையின் சிறுவன்-இளைஞனாக இருந்தமையால் சம்பளம் கிடைக்காத நிலையில் பெரும்பான்மைப் பட்டினி. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் அப்பாவின் விருப்பத்திற்கு இணங்க கல்லூரிப் படிப்பு. இளங்கலை ஆங்கில இலக்கியத்தைப் படிக்கச்சொல்லி ஏற்பாடு. அப்பாவின் ஆசை நான் பேராசிரியர் ஆகவேண்டுமென்பதே. என்னுடைய இலக்கு நான் ஓர் ஆகச்சிறந்த கலைஞனாக ஆகவேண்டும் என்பதாக. அப்பா உயிருடன் இருக்கும்போது நான் பேராசிரியனாக ஆகவில்லையாயினும், ஆனால் வெகு பின்னரே அவரின் எண்ணத்தை நிறைவேற்றியிருக்கிறேன். எனது இலக்கினையும் தாண்டி அதன் உச்சம் வரை சென்றிருக்கின்றேன். ஆக அப்பாவின் ஆசையும் எனது இலக்கினையும் பிசிரில்லாமல் நிறைவேற்றியிருப்பதால் உளவியலில் எந்தவித சிக்கலும் இல்லாத நன்னிலை.

5. கவின்கலையில் பட்டம் பெற்றவரா அல்லது பொறியியலில் பட்டம் பெற்றவரா? இரண்டிலும் சிறப்பாகப் பயணிப்பதால் கேட்கிறேன்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொறியியற்புலத்தில் கவின் கலையும் ஓர் உள்ளடக்கம். சென்னைப் பல்கலைக் கீழ் இயங்கிய சென்னை அரசுகவின் கலைக்கல்லூரியில் இளங்கவின்கலை மற்றும் முதுகவின்கலையில் பட்டம் பெற்றவன். பொறியியல் புலத்தில்தான் தான் கலைக்கல்வி உள்ளது.

6. தங்கள் முனைவர் பட்ட ஆய்வு எதைப் பற்றியது?

பல்லவர் கலை மற்றும் கட்டடக் கலை பற்றியது. ‘காஞ்சிபுரம் மாவட்ட பல்லவர்காலக் கலை மற்றும் வரலாறு – ஓர் ஆய்வு’ என்பதாகத் தலைப்பு. பல்லவர் கலைகள் பற்றி எழுதிய முன்னோர்களான A.H. Longhurst, Alexander Rea, C. Meenakshi ஆகியோரை அடுத்து எனது முனைவர் பட்ட ஆய்வு அடுத்தவற்றைச் சொல்லும் ஆய்வாகச் சிறந்த ஒன்று. அவ் அறிஞர்களும் அறியாத மற்றும் சொல்லப்படாத ஏராளமான பல புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது என் ஆய்வு.

7. பாண்டியர் நாட்டில் ஒரு கல்லணை இது குறித்த தங்கள் ஆய்வு என்ன?

இலக்கியம் மற்றும் வரலாற்றின்படி மருதத்திணைக்கான ஆகச்சிறந்ததோர் எடுத்துக்காட்டாக மதுரை. எனின், இதனின் வேளாண் வளம் எதனால்? எவ்வாறு? என்பதாக எனது கருதுகோள். இதனால், இதுகுறித்துப் பாண்டியர் கல்லணை ஏதேனும் இருக்கிறதா என மதுரை மக்கள் பலரிடம் கேட்டேன். ஆனால், அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லையென்றார்கள். (ஒருவேளை அதுகுறித்து தெரிந்துவைத் துள்ள அந்த ஓரிரண்டு பேரும் என் கண்ணில் படவில்லையோ என்னவோ?) வேண்டுமென்றால், திருச்சியில் போய்ப் பாருங்கள் என்று ஆற்றுப்படுத்தினர்.

ஆக, வைகை ஆறு தறுதலையாகச் சுற்றுகிற ஒரு தண்டச்சோறு என்பதாக அதன் மதிப்பீடு ஒருபுறம் பிறழ்ந்திருக்கிறது போலும். இடைக்காலப் பாண்டியரின் கல்லணை இன்னமும் பயன்பாட்டில் இருப்பது கூட பெரும்பான்மையோர்க்குத் தெரியவில்லை. இஃதன்றி, அப்போது புதியதாக வெட்டப்பட்டிருந்த பாசன வாய்க்காலான சிரீவல்லபப் பேராறு, அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த மேற்சொன்ன அந்தப் பராக்கிரம பாண்டி யன் கல்லணை, பராக்கிரம பாண்டியன் பேராறு எனும் தென்கரை வாய்க்கால் இவற்றைக் கண்டடைந்தும் கண்டுபிடித்ததோடல்லாமல் சங்க கால அணைகளாக என்னால் கருதப்படுகிற சிதிலமுற்ற மேலும் மூன்று அணைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. ஆக, கல்லணை நுட்பத்தில் கரிகாலனின் பாணி, பாண்டியர் பாணி என இருபெரும் நுட்பங்களைப் பிரித்தறிய இயலும். ஆக, அவ் அவ் ஆறுகள் சார்ந்து எத்தகையத் திறத்துடன் வடிவமைத்துப் அன்னோர் பயன்படச் செய்தனர் என்பதை வெளியிடப்படவிருக்கும் எனது புதிய வரலாற்று ஆய்வு நூலான ‘‘பாண்டியர் கல்லணை’’ பேசவிருக்கிறது. மட்டுமின்றி, கரிகால் வளவனின் கல்லணையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் உணரப்படாத நுண் பெரும் பொறியியற் நுட்பச் சிறப்புகள் முதன்முதலாக இவ் ஆய்வு நூலில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. பாண்டியர் வரலாற்றில் அறியப்படாது கிடக்கும் இடைக்காலத்தின் 128 ஆண்டுகால இடை வெளியை இவ் ஆய்வு மிகச்சரியாக உய்த்துணர்ந்தும் சான்றுகளின் அடிப்படை யிலும் விளக்கியிருக்கிறது. பாண்டியர் வரலாற்று ஆய்வுகளில் இந்நூல் ஒளிரும் மணிமகுடமாகச் சிறப்புறும்.

ஓவியராக...

8. கரிகால் சோழனின் பெயர்க் காரணம் என்னவென்று தாங்கள் கருதுகிறீர்கள்?

கரிகால் வளவனின் பெயர்க்கார ணத்தின் பின்னணியில் அறியப்படுகிற கால் கருகிய கதையை ஒரு புரளி என்கிறது எனது ஆய்வு. அது, அவர் யானைப்படையை முதன் முதலாகப் போருக்குப் பயன்படுத்திய தாலும் ‘யானையியல்’ எனும் நூலை எழுதிய தாலும் காலாட்படை மட்டுமே யான போர் மரபினில் யானைப் படையைப் புகுத்தியதாலும் கல்லணை கட்டி வளம் சேர்த்ததாலும் உருகொண்ட உயர் சிறப்புப்பெயர்.

9. யாழ் குறித்த தங்கள் ஆய்வைப் பற்றிச் சொல்ல முடியுமா?

தமிழரின் தொல் இசையை, குறிப்பாக யாழிசைப் பற்றி ஆய்வு செய்து எழுத முடியுமா? அதுவும் மறைந்த ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், வீ.ப.கா. சுந்தரம், மற்றும் வாழும் நா. மம்மது முதலிய இசை ஆய்வறிஞர்களை அடுத்து? இப்படி ஒரு கேள்வி ஆம் அல்லது இல்லை எனப் பதிலளிக்கப்படாமல் நிலுவையில் கிடப்பதை நான் உணரவேவில்லை. ஆனால், இந்தக் கேள்வியின் இருப்பை அறியாமலேயே சரியான கருதுகோளுடன் துல்லியமான தலைப்பையும் தெரிவுசெய்து எழுதத் தொடங்கியிருந்தேன். நாற்பது பக்கங்கள் எழுதிய பின்புதான் அந்தக் கேள்வியை உணரநேர்ந்தது. இதனால், நடுங்கிப்போய் அச்சம் கவ்விய நிலையில் ஆகா! இது வேண்டாத வேலை என ஆய்வை நிறுத்திவிட்டேன். ஏன் நிறுத்திவிட்டாய்? நான் பின்னிருக்கிறேன் நீ எழுது! என நச்சரித்துக் கொண்டிருந்தார் கடவுள் என் ஆழ் மனத்தினுள். ஆயினும், ஆறு ஏழு திங்கள் கழிந்த பின்னரே மீண்டும் துணிந்து எழுதலானேன். ஆக, காத்திருந்த கடவுள் கைகோத்தார் போலும். இதனால், பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத இயன்றது. அடியார்க்கு நல்லார் மற்றும் அரும்பதவுரைக்காரர் ஆகியோரின் உரைகளையும் தாண்டி சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இசைக்குறிப்புகளை இளங்கோவின் கோணத்தின் படியே உற்றுணர்ந்தவனாய் செறிந்து விளக்கியும் அவற்றின் அழகியலுரைத்தும் என எழுதி முடித்திருக்கின்றேன். என் ஆய்வு நூலின் தலைப்பு ‘சொல்லும் முழவும் வெல்லும் யாழும்’ என்பதாகும். தலைப்பின்படி இவ் ஆய்வு யாழின் தனித்துவத்தை புதியத் தரவுகளுடன் பெரிது பேசுகிறது. பாணர்களின் ஒப்பற்ற பெருந்திறத்தினை எட்டுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. தாள இசைக்கருவிகளின் பரிணாமத்தினையும் தபலா எனும் தாள இசைக்கருவியின் தோற்றுவாயைத் தமிழ்நாடே எனவும் நிறுவுகிறது. மட்டு மின்றி, திரைப்படப் பாடல்களில் தாளத் தின் இன்றியமையாமை இதுவரை எடுத்துச் சொல்லாத வகையில் விளக்கி யுள்ளமைமை இவ் ஆய்வு நூலின் ஒப்பற்றச் சிறப்பாகும்.

தமிழிசை அறிஞர். இசைத்திரு. நா. மம்மது ஐயா அவர்கள் இந்நூலுக்கு விரும்பி அணிந்துரை எழுதியுள்ளார். மட்டுமின்றி, இவ் ஆய்வு நூலின் புதியநடை மற்றும் எடுத்துரைப்புகளை தம் அடிமனத்திலிருந்துப் பாராட்டிப் புலங்காகிதமடைந்தவராய் அவரது ஆசிரியரான வீ.ப.க. சுந்தரம் ஐயா அவர்களையும் தாண்டி எழுதியிருக்கிறீர் எனப் பாராட்டியதால் அச்சமும் படபடப்பும் தோன்றியது உண்மை. ஏனெனில், இசை ஆய்வினில் எனது முதலாம் நூல் என்பதால்! ஆக, அறிஞர்களும் போற்றும் வண்ணம் நூற்றுக்கணக்கான புதிய உண்மைகளை எனது ஆய்வு நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

10. பொறியியல் கல்லூரியில் பணி யாற்றுகிறீர்கள் ஆனால், தமிழில் பாவலர் ஆகியுள்ளீர், எப்படி?

ஓவியக் கலைதான் ஆதிமனிதனின் முதலாம் நுண்ணறிவு. அஃதே அவனுக்கு வினையறிவின் அடுத்து நுணுக்கத்தைத் தோற்றுவித்தது. கலையும் வினையறிவும் இணைந்து அடுத்தகட்டமாக மொழியைத் தோறுவித்தன. இதனால், அவன் கல்லைக் கூர்மையாக்கி விலங்குகளை வீழ்த்தி வெற்றிபெற்றான். அவ்வாறே சக்கரம் கண்டு பிடித்தமை. ஆக கலை, பொறியல், மொழி என மூன்றும் இணைந்தே மனித நாகரிகத்தைக் கட்டமைத்தன என்பதாக எனது புரிதல். இதன்படி, மொழிக்கே தாய்மொழியாக மூத்திருந்த கலையை ஊடகமாகக் கற்றதனால் எனக்கு மொழியும் பொறியியலும் வெகு சொந்தமாகிவிடுகின்றனவோ என்னவோ? என்னைப்பொறுத்தவரை, புற மற்றும் அக உற்றல் என இவை இரண்டும் கலையின் அடிப்படைகளாக! கவிதைக்கும் அவையே. ஆக, உற்றதை அல்லது உய்த்துணர்ந்ததை கவிதையாலும் கலையாலும் அழகூட்டி வடிக்கமுடிகிறது. என்றால், ஓவியக் கல்லூரியில் பணியாற்றினால் நேரடி இருப்பும் இயங்கியலும், கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றினால் உறவின் படியான இருப்பும் இயங்கியலும் பொறியியல் கல்லூரியில் பணியாற்றினால் தொடர்பின்படியான இருப்பும் இயங்கி யலும் எனப் புரிந்துகொள்ளலாம். நான் காலத்தைக் கடவுளாகக் கருதி வெளியைக் கற்க முனைந்தவன். ஆக, இடம் ஒரு பொருட்டல்ல! மட்டுமின்றி, நான் கட்டடக் கலைத்துறையில் ஒரு பேராசிரியர் என்பதனால், கலையில் உள்ளடங்கியதாக கட்டடக் கலை. நவீன காலத்தின் கல்வியியல் முறைப்படி பொறியியலின் ஒரு பிரிவாக கட்டடக்கலைத்துறை.

எவ்வாறெனினும், கலையில் அழகியல் உள்ளிருத்தி பெருநுட்பத்தின்படியான ஒரு படைப்பினை படைக்கமுடிகிறது என்றால் அப்படைப்பிற்கான வரைகருத்தை மனதளவில் எண்ணிப்பார்க்கும் முழு இயலுமத்தை யும் (சாத்தியம்) மொழிதானே தகவமைக்கிறது? ஆக, அத்தகைய நுண் நுட்பங்கள் மற்றும் அழகியலை முன்னோட்டமாக எண்ணிப்பார்க்கிற வலிமையை செம்மொழியான தமிழ்தானே கொடையளித்திருக்கிறது. என்றால், ஆங்கே இயல்பாகவே எனக்குக் கவிதையும் தோன்றிவிடும் அல்லவா? இதற்கு எடுத்துக் காட்டாக, எனது ஆய்வுகளை நான் ஓவியமாகவும் படைப்பித்துள்ளேன்! கவிதைகளாகவும் எழுதியுள்ளேன்! எனின், உள்ளியதை வரைந்தால் ஓவியம்; செய்தால் சிற்பம்; எழுதினால் கவிதை; விசாரணை செய்தால் ஆய்வு. படைப்பெண்ணம் மூண்டெழுந்தால் எவ்விடமும் நற்றளங்களே!

11. தமிழ்க் கவிதைகளில் மரபுக் கவிதைகள் பற்றித் தங்கள் கருத்து என்ன?

தமிழ்க்கவிதைகள் என்றாலே அது மரபுக்கவிதைகள்தானே! ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக நெடிது நிற்கும் செவ்வியற் கவிதைகளை வெறும் அறுபது எழுபது ஆண்டுகளாகப் புழங்கும் ஒரு புதிய மடைமாற்றம் அல்லது அணுகுமுறையினை முன்னிட்டு இப்படிக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இலக்கணம் வேண்டாம் எனக் கட்டுடைத்ததனால், கவிதையில் போலிகள் அடரலாயின. மட்டுமின்றி, ஏதோ புதுக்கவிதையால் மட்டுமே எக்கருத்துகளையும் சொல்லமுடியும் எனும் மாயபிம்பம் வேறு. இஃதோர் சுருங்கி சூம்பிய நிலையாகத்தான் தெரிகிறது.

எவ்வாறெனினும், இன்று 360 பாகையிலும் உற்றறிந்து கவிதைபாடும் ஆகச்சிறந்த கவிஞர்கள் தோன்றியுள்ளனர். இதனின் பின்னணியில் செவ்வியற் கவிதை களைச் சொல்லிக்கொடுத்து இத்தகைய நற்சூழலை உருவாக்கிய் பல நல்லுள்ளங்கள் இருக்கின்றன. அவ்வோரில் ஆகச்சிறந்தவராக பிரான்சு நாட்டின் பாட்டரசர். திரு. பாரதிதாசன் களப்பணியில்…

மேலும், செவ்வியற் கவிதைகளில் அவை பாடப்பட்டச் சமகாலத்தின் சான்று கள் இயல்பாய் இருப்புற்றிருக்கும். ஆனால், புதுக்கவிதை மரபில் அதுவும் குறிப்பாக பின் நவீனத்துவக் கவிதைகள் என்பன பெரும்பான்மையில் மனம் பிறழ் கவிதைகளாக இருப்பதோடன்றி மணிப்பிரவாள நடையில் தமிழ்சம்ஸாக இடருறுத்துவதைக் காணமுடிகிறது.

ஆக, புறநானூற்றின் இருவேறு பாடல் களின் இரண்டிரண்டு அடிகளை மட்டுமே முதன்மைச் சான்றாக்கிக் கொண்டு கட்டுக் கதையாய்க் குதப்பும் முதலாம் கரிகால்வளவனின் வரலாற்றினை என்னால் 200 பக்கங்களுக்கு அதுவும் எவராலும் மறுக்கவியலாத தரத்தினில் எழுத முடிகிறது என்றால், செவ்வியற் செய்யுள்களின் நுண்திறத்தினை எப்படிக் கடந்து போகமுடியும்? என்றால், கடைசியில் நாங்களும் கவிதை எழுதுவோம் என மிதமிஞ்சிய ஆவல் கொண்டோர் யாவரும் புதுக் கவிதையினை ஒரு நல் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால்…

12. எவ்வகை மரபுக் கவிதைகள் எழுதுவதற்கு எளிதாக இருக்கும் எனத் தாங்கள் கருதுகிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை முதலாவ தாக ஆசிரியப்பாவைக் கூறுவேன். இரண்டாவதாக விருத்தம். மூன்றாவதாகவே வெண்பா. ஆசிரியப்பாவே என்போன்ற வரலாற்று ஆய்வாளர்களுக்கு உகந்தது. ஆனால், எவ்வொரு ஆய்வுச் சுருக்கத்தையும் வெண்பாவால் பாடவியலும். விருத்தம் ஏறி எழுதவும் இறங்கி அடிக்கவும் வளைந்து கொடுக்கும் இலகியம் சார்ந்தது. வெண்பா கவனமில்லாவிடில் தளை தட்டி வைக்கும். வெண்பாவின் பொறியியலாக சொற்கட்டுமானமின்றி; வரையறை, வாழ்த்துதல், கருத்துரைத்தல், நெறியு ரைத்தல், அறமுறைத்தல் என மேல் நின்றுரைக்கும் மேன்மைத் தன்மையைக் கொண்டிருப்பதால் அது பிசிறாத செப்ப லோசையைத் தக்கவைத்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் வெண்பாவுக்குத் தளைதட்டுதலும் தடம்புரளுவதலும் ஒவ்வா.

13. தங்களுக்கான உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்று ஏதேனும் நினைத்ததுண்டா?

அங்கீகாரத்தை நான் எதிர்ப்பார்ப்ப தில்லை. என் கலை, இலக்கிய, ஆய்வுப் பணி சமூக நலன் பாற்பட்டது. என் கற்றலில், தேடலில், புரிதலில், உற்றலில் புலப் படுத்துதலில் பொய் இருக்க வாய்ப்பில்லை. நிரலிட்ட இவற்றுடன் பொய்களைக் கலப்பவ னாக இருந்தால் தான் நான் அங்க்கீகாரம் தேடி அலையவேண்டியிருக்கும். என்னை நோக்கிய கலைக்கான பல உயர் விருதுகளை அரசியல் செய்யும் கீழோர் தடுத்துள்ளமையும் நிகழ்ந்துள்ளன. திருவள்ளுவர் அங்கீகாரத்தை எதிர்பார்த்தா குறளை இயற்றியிருப்பார்? சொல்லப்போனால், ஒற்றைத் திருக்குறளுடன் அவரை மேலும் படைக்கவிடாமல் அப்போ தைய அரசியல் முடக்கியிருக்கலாம் கூட. ஆனால், காலம் அவரை அங்கீகரித்து உலகறியச் செய்தது. முகநூல் மட்டும் இல்லாதிருந்தால் என்னை எப்போதோ ஏறகட்டியிருப்பர்!

கலைஞரின் கைவண்ணத்தில் ... அசலும் நகலும்

14. ஓவியம் சிற்பம் இசை மற்றும் கவி யெழுதுதல் என எல்லாவற்றிலும் எவ்வாறு பயணிக்கமுடிகிறது?

இந்தக் கேள்விக்கு முன்னம் சொன்ன விடைகளிலேயே பதில் இருக்கிறது. எனினும், இரத்தினச் சுருக்கமாக மற்றுமொருமுறை. ஆக, எதிர்ப்பார்ப்பற்ற உளவியல், சுழியத்தில் நிலைபெறும் இருப்பியல்பு என இவற்றை வாய்க்கப்பெற்றோர் யாவரும் பன்முகப் படைப்பாளர்களாகவே இருப்பர் என்பது யதார்த்தம்தானே? எனது இயல்பாக அரை விழிப்புணர்வும் தியானமும்! இதனால், முழு முட்டாளாகவும் ஞானத்தினனாகவும் இருபட.

15. தாங்கள் எழுதிய நூல்கள் பற்றிக் கூறவியலுமா?

கலைக் குலத்தில் பிறந்ததால் எனக்கு அழகியல் அத்துப்படி. குரோமோசோம் களில் குடியிருந்த அவ் அழகியல்-குல-நெடும்-நுட்பத்தினை இப்பிறவியில் தூண்டி விட்டவராக ஒப்பற்ற அறிஞர். ஆனந்த குமாரசாமியைக் கருதுவேன். இதனைப் பிரதிபலிக்கும் வகையில் முனைவர் பட்டம் பெற்றபின் நான் எழுதிய முதலாம் நூலின் தலைப்பு ‘அழகியல் அகழாய்வு’ (2014). இரண்டாம் நூலாக: ‘பரிணாம உச்சம் கூறும் மதுரை புதுமண்டபச் சிற்பம்’ (2014), மூன்றாவது நூலாக: ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உலகின் மிக உயர்ந்த கோபுரங்களுடனான நான்காம் பிரகாரம்’ (2016), நான்காவதாக ‘Art and Architectural Glory of Chola and Pandiya Region’ (2016) (நிதியுதவி: கருமுத்து. தியாகராஜச் செட்டியார் அறக்கட்டளை, கப்பலூர்) எனும் ஆங்கில ஆய்வு நூல், ஐந்தாவதாக ‘சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்’ (காலச்சுவடு வெளியீடு 2018), ஆறாவதாக ‘தமிழரின் உருவ வழிபாடு’ (காலச்சுவடு வெளியீடு 2019), ஏழாவதாக, ‘உபரி நிலா’ எனும் எனது முதலாம் கவிதை நூல் (2019), எட்டாவதாக ‘கரிகால் வளவன் சரியான பெயரும் தவறான புரிதலும்’ (2022) எனும் வரலாற்று ஆய்வு நூல். வெளியிடப்பட விருக்கிற ‘பாண்டியர் கல்லணை’, ‘சொல்லும் முழவும் வெல்லும் யாழும்’ என இன்ன பிற சோழர், பாண்டியர் சார்ந்த ஆய்வுகளுமாம். எனது எல்லா ஆய்வு நூல்களும் இதுவரை சொல்லப்படாத அவற்றின் உன்மைகளை உரைப்பவை.

16. தாங்கள் பெற்ற விருதுகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

விருதுகள் வழங்குதலில் அரசியல் இருப்பதால் நான் போட்டிகளில் ஈடுபடுவ தில்லை. எனக்குரிய நடுவண் அரசின் தேசிய விருதினைத் தடுத்து முடக்கினர். எனினும், அரசியல் நுழையாத உண்மையான தேசிய விருதினை ஓவியத்திற்காக 2008ல் பெற்றுள்ளேன். இளங்கவின்கலை, முதுகவின் கலை இரண்டு படிப்பிலும் Best Out Going Student Award வழங்கப் பெற்றேன். பிரான்சு நாட்டின் பாவலர் பயிலரங்கத்தில் பயிற்சி பெற்று பாவலர் பட்டம் பெற்றுள்ளேன். அண்மையில் தஞ்சைத் தமிழ் மன்றத்தினரால் ‘கம்பதாசன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

17. நவீன எழுத்தாளர்களின் பிதற்றல் குறித்து

குடிமயக்கம் தெளிந்த பின் எழுதியதாக ‘குற்றம் கடிதல்’ எனும் அதிகாரத்தினை உணரமுடியவில்லை. அவ்வாறே, கூத்தி யார் வீட்டில் கும்மியடித்தக் கையோடு ‘கூடாவொழுக்கம் எனும் அதிகாரம் எழுதப் பட்டது எனக் கூறத்தான் இயலுமா? அல்லது பொய்ப்பொய்யாய் புளுகித் திரிந்த ஒருவரால் ‘சொல்வன்மை’ எனும் அதிகாரத்தை… ஆக, வள்ளுவர் சுழிய இருப்பை இயல்பாக்கிக் கொண்டவர் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவரின் ‘தவம்’ எனும் அதிகாரம் அதனை மெய்ப்படுத்துவதால் அறியலாம். என்றால், சொல் ஒன்று, செயல் வேறு எனும் மரபினராய்; உடனுறை வாசகர் என புயபல பராக்கிரமங்களுடன் வலம் வரும் நவீன எழுத்தாளர்களிடம் பிதற்றல் இருக்கத்தானே செய்யும்.

18. தங்கள் எதிர்கால இலக்கு என்ன?

தமிழகத்தில் அழகியற் கோணத்தில் வரலாறு அல்லது கலை வரலாறு எழுது வோர் இல்லையென்றே சொல்லும் நிலை. இதனால், நிறைய ஆய்வு நூல்கள் எழுதவேண்டும். ஆகச்சிறந்த கவிதை நூல்கள் இயற்றவேண்டும். ஒப்பற்றக் கலைப் படைப்புகளை படைக்கவேண்டும். இவற்றினூடே தஞ்சை பெரியகோயில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் சார்ந்த எனது புதிய வரலாற்று ஆய்வுகள் திரைப் படமாக்கப் படவேண்டும். அங்கோர் வாட் கோயிலைக் கண்டு அதனிடத்திலேயே ஆய்வு செய்த நிலையில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி பன்னாட்டு ஆய்வு சஞ்சிகை யில் வெளியிட முடிந்தது. அவ்வாறே எகிப்துக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் இலக்காக! பேராசிரியம் எனது இயல்பு.

புத்தகக்கண்காட்சியொன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகனுடன்...
பேராசிரியர், பாவலர், முனைவர். சி. அ. வ. இளஞ்செழியன்
பேராசிரியர், பாவலர், முனைவர். சி. அ. வ. இளஞ்செழியன் எழுதிய நூல்

19. தற்போதைய தங்கள் பணி மன நிறைவைத் தருகிறதா?

கற்க கசடறக் கற்பவை (நுண்கலை) கற்றபின், கலைஞனாகவே நின்றேன். எனினும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பை முடித்த பின் எனது நிற்றலானது அதற்குத் தகுந்தவாறு கற்பித்தலாக வலுப்பெற்றது. ஏமாற்றிப் பித்தலாட்ட முறையில் பெற்றதல்ல என் மேற்படிப்பின் பட்டங்கள். எனது ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளின் இடையே இடப்பட்டுள்ள நிறுத்தக் குறிகள் கூட என்னுடையதே. எனது நெறியாளர் என்னைச் ‘சூரப்புலி’ என்பார். சுதந்திரமாக என்னை ஆய்வு செய்து எழுத அனுமதித்தார். முறை யான முழு நேர முனைவர் பட்ட மேற் படிப்பு. இப்படியான முனைவர் பட்ட மேற்படிப்பு என் திறத்தினை உயர்த்தி ஆசிரியப்பணியை ஏற்றுக்கொள்ளவைத்தது. அதுமட்டுமின்றி, என் தந்தையின் நிலுவை யிலிருக்கும் எண்ணமும் நிறைவேறி யதில் பெருமகிழ்ச்சி. ஆயினும், வழக்கம்போல் நேர்மையும் திறமையும் கொண்ட ஒரு வனை இவ்வுலகம் எப்படி அரசியல் செய்து மூடி மறைக்கச்செய்யுமல்லவா அதனைச் சகித்துக்கொண்டவாறு இயங்கிக் கொண்டிருக்கின்றேன். எவ்வாறெனினும், என்னிடம் பயின்ற, பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பதில் மகிழ்ச்சியே.

20. தமிழ்நெஞ்சம் இதழ் குறித்து.

நண்பர் தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன் அவர்களால் தான் தமிழ்நெஞ்சம் இதழ் ஆற்றுப் படுத்தப் பட்டது. அவ்வப்போது எனது பங்களிப்பும் இவ்விதழ்களில்! ஓர் நேரிசை ஆசிரியப் பாவினால்

தமிழ் நெஞ்சம் இதழ் குறித்து:

இமிழ்கடல் மூன்றுடன் இமயமும் வடக்கினில்
தமிழ்நில மென்றே சமைந்தது முன்பு
இமிழ்கடல் தாண்டி ஏனைய உலகிலும்
தமிழ்மொழி புழங்கும் தளமாம் இன்று!
பிரான்சு நாட்டினில் திங்க ளோர்முறை
பிறக்கும்! பிறந்து மின்வழி கிடைப்பதால்
எளியோ ராயினும் எளிதினில் பலனுற
உளியால் செதுக்கும் நுட்பத் திறந்தோய்
பொன்விழா கண்ட பூவிதழ் இஃதே!
பண்ணுடன் கவிதை பல்சுவை அடங்கிய
ஒண்ணிதழ் கொல்லோ? ஒப்பிலா நோன்பும்
மொழியுடன் வாழ்க்கையே முழுமை என்றும்
வழியை அமைத்து களத்தினில் அமினார்!
கட்டுரை பலவும் கதைத்திடும் புதியவை
மொட்டென மலர்ந்து முத்திடும் கவிதைகள்!
சட்டென நிமிர்த்துந் தரத்தினில் சிறுகதை!
கொட்டிடும் முரசாய் நேர்காணல் நிரலுற
பேரிதழாய்த் தமிழ்நெஞ்சம் கொல்லோ?
தூரிகையாய் எழுத்தைத் துலக்குந் தானே!


5 Comments

அ.முத்துவிஜயன் · பிப்ரவரி 1, 2023 at 17 h 06 min

சிறப்பு வாழ்த்துகள் அய்யா

வீரா பாலச்சந்திரன் · பிப்ரவரி 3, 2023 at 4 h 20 min

ஒரு கலையிலக்கியக் கட்டுரையைப் படித்தது போன்ற உணர்வு.இத்தனை சிறந்த மனிதரை ‘தமிழ்நெஞ்சம்” தமிழ்உலகுக்குக் காட்டியிருப்பதற்காக அதனைப் போற்றுகிறேன்.அரியபல ஆய்வுச் சிந்தனைகளும் புதியபல செய்திகளும் இச்செவ்வியில் சேமிப்பாக அமைந்துள்ளது.தனிப்பட்ட கேள்விகளில்கூட தகவல்கள் பல தருகின்ற பாங்கு ஓர் உண்மைப் படைப்பாளியின் தன்மையாகும்.இவர் தமிழுக்கும் தமிழருக்கும் பெருஞ்சொத்து.இளஞ்செழியனாருக்கு இனியநல் வாழ்த்துகள்.வெளிக்காட்டிய ‘தமிழ்நெஞ்ச’த்துக்கும் இராம வேல்முருகனார்க்கும் பாராட்டுகள்.

விஜி சிவா · பிப்ரவரி 6, 2023 at 6 h 08 min

தமிழ் நெஞ்சம் ஐயா அமின் அவர்களுக்கு வணக்கம்.
நாங்கள் நால்வரும் (விஜி சிவா , வனஜா முத்துக்கிருஷ்ணன் , ருக்மணி வெங்கட்ராமன் , கி.இரகுநாதன்)
இணைந்து எழுதிய சிறுகதையை (சிறுகதை : 3 -மனிதரில் இத்தனை நிறங்களா) இம்மாதம் வெளியிட்டு எங்களை மகிழ்வித்ததற்கும் , பவர்பாயிண்ட் ஸ்டோரீஸ் எனும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் தமிழ் நெஞ்சம் இதழில் வெளியிடுவதற்கும் , தங்களுக்கு எங்கள் நால்வரின் சார்பாக மனமார்ந்த நன்றி பல பல.

எங்களின் புதிய முயற்சிக்கு (புதுமையான யோசனைக்கு) ஊக்கம் கொடுத்து , நம்பிக்கை கொடுத்து வழி நடத்தும் தங்களின் நம்பிக்கைக்கும் , அன்பிற்கும் என்றும் நன்றியுடன் ….

– விஜி சிவா

நிறைமதி நீலமேகம் · பிப்ரவரி 7, 2023 at 5 h 24 min

மிகச் சிறப்புங்க, ஐயா, வணங்கி மகிழ்கின்றேன்.

கி. இரகுநாதன் · பிப்ரவரி 15, 2023 at 15 h 20 min

பெருமதிப்பிற்குரிய தமிழ்நெஞ்சம் ஆசிரியர் அவர்களுக்கு

வணக்கம்.

‘பவர் பாயிண்ட்’ குழுமம் முலம் நாங்கள் நால்வர்…
திருமிகு வனஜா முத்துக்கிருஷ்ணன்
திருமிகு ருக்மணி வெங்கட்ராமன்
திருமிகு விஜி சிவா
கி. இரகுநாதன்

ஆகியோர் இணைந்து எழுதிய மூன்றாவது கதை ‘மனிதரில் இத்தனை நிறங்களா..?’

வழக்கம் போலவே எங்கள் கதையை தங்கள் இதழில் வெளியிட்டு, ஊக்கமும் உற்சாகமும் தந்து எங்களை பெருமையடையச் செய்துள்ளீர்கள். இன்னும் சிறப்பானதை தர வேண்டும் என்கிற உத்வேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியமைக்கு எங்கள் நன்றியும் வணக்கமும்.

எங்கள் கதைக்கு மெருகூட்டும் வகையில், ‘வினய்’ என்கிற பெயரில் அருமையாக ஓவியம் வரைந்துள்ள எங்கள் பெருமைமிகு ஓவியர்.. திருமிகு லீனா கிரிதர் அவர்களின் ஓவியத்தையும் பிரசுரித்தமைக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம் பல.

– கி. இரகுநாதன்
பெங்களூர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »