மின்னிதழ் / நேர்காணல்

கும்பகோணம் சீனவாசா நகரில் உள்ள மரங்களெல்லாம் இவர்பெயரைச் சொல்லும். ஒவ்வொரு மரங்களிலும் ஒரு மருத்துவர் பெயர் இருக்கும். அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர் எனினும் தொடர்ந்து சமூக சேவைகளில் முன்னிற்பவர். ஊரடங்கு காலங்களில் தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கேரம் போர்டு செஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தியவர். இதற்கெல்லாம் மேலாக பதினைந்து வருடங்களுக்கும் மேலாகத் தாய்ப்பாலின் அவசியத்தைத் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழியாக வலியுறுத்தி வருபவர். தனது ஆடை யின் பின்புறம் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விளம்பர வாசகத்துடன் செல்பவர். ஆம் இத்தகைய சிறப்புடைய மருத்துவர் சாம்பசிவம் அவர்களைத்தான் இம்மாதம் நேர்காணல் செய்துள்ளோம்.,

நேர்கண்டவர் :
தமிழ்ச்செம்மல் பாவலர்மணி
இராம வேல்முருகன்

குழந்தைகளுக்குப் பிடித்த மருத்துவர் சாம்பசிவம்
ஜுலை 2022 / 100 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்.

வணக்கம் ஐயா

தாய்ப்பால் குறித்த ஒரு அமைப்பு தோன்றக் காரணம் என்ன?

எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதே இப்படி ஒரு அமைப்பு தோன்ற காரணம்

எத்தனை வருடங்களாக இந்த அமைப்பு இருக்கிறது?

18ஆண்டுகளாக இயங்கி வருகிறது

நீங்கள் இந்த அமைப்பில் என்ன பொறுப்பு வகிக்கிறீர்கள்?

இந்த அமைப்பை நிறுவியவர் என்ற முறையில் இவ்வமைப்பின் நடுவண் ஒருங் கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு அவசியமா?

மிகவும் அவசியம்

பிறந்த குழந்தைக்கு முதன் முதலாக என்ன கொடுக்க வேண்டும்?

குழந்தையின் முதல் உணவாகவும், முழுமை யான உணவாகவும் சீம்பால் எனப்படும் நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்த தாய்ப் பாலையே கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் குழந்தைக்கு என்ன விதமான பாதிப்பு கள் ஏற்படும்?

பல்வேறு விதமான நோய்த்தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது

தாய்ப்பாலை எவ்வளவு காலத்திற்குக் கொடுக்க வேண்டும்?

தாய்ப்பாலை குறைந்தது 2 வருடம் கொடுக்க வேண்டும். பிறந்த முதல் 6 மாதங்களுக்கு அதாவது 180 நாட்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூடத் தேவையில்லை. கோடைக் காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்ற வகையில் தாய்ப்பால் சுரக்கின்றது. ஆகவே முதல் 6 மாதங்களுக்கு, வேறு எதுவும் தேவையில்லை. 7ஆம் மாதம் முதல் தாய்ப்பாலுடன் வீட்டிலேயே செய்த மசித்த சாதம், இட்லி போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம். இவற்றடன் தாய்ப்பாலையும் இரண்டு வயது வரை அல்லது அதற்குப் பிறகும் நீடிக்கலாம்.

மேற்கூறிய இணை உணவுகளைக் கொடுக்காமல், வெறும் தாய்ப்பாலை மட்டும் வருடக்கணக்கில் கொடுத்தால் குழந்தை நோஞ்சானாகிவிடும். தாய்ப்பால் போதுமான அளவில் இருந்தால், எடை சீராகக் கூடும் சிறுநீர் ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல் வெளியேறும்.

தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன், மருத்துவர் மலர்விழி ஆகியோருடன் மருத்துவர் சாம்பசிவம்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தாய்ப்பால் தரும் என்கிறார்களே? அது உண்மையா?

ஆம் உண்மைதான் தாய்பாலில் உள்ள Macrophages, Complement, Lysozyme, Lactoferin and igA எனப்படும் இம்யுனோகுளோபிலின் ஆகியவை குழந்தையின் குடலில் வியாதியை உண்டாக்கும் பல்வேறு கிருமிகளையும், நச்சுக்களையும் வெளியேற்றிவிடுகின்றன. ஆகவே தாய்ப்பால் பல்வேறு நோய்களிலி ருந்து குழந்தையைக் காப்பாற்றுகிறது. தாய்ப் பாலில் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்கின்றன. எளிதில் ஜீரண மடைகிறது. நோய்களிலிருந்து காப்பாற்று கிறது. பாசத்தை ஊட்டி, உடல், மனம் மற்றும் மூளை வளர்ச்சியை மேம்படுத்து கிறது. அடுத்த கர்ப்பத்தை தாமதப் படுத்துகிறது. தாய்க்குப் புற்று நோய் வருவதைத் தடுக்கிறது. தாயின் உதிரப் போக்கை நிறுத்துகிறது.

தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையுமா கூடுமா?

நிச்சயமாக அழகும் குறையாது; உருவமும் குலைந்து போகாது. மாறாகத் தாயின் உடல் பருமன் குறைந்து, தேவையில்லாத வயிற்றுப்பகுதி கொழுப்பு மடிப்புகள் மறையும்; தாயின் கருப்பை விரைவாக சுருங்கும்; உதிரப்போக்கு குணமடையும்; மாதவிலக்கு சீரடையும்; தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் மற்றும் ஓவரி என்னும் சினைப்பை புற்றுநோயை தடுக்கவல்லது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பாலுக்கும் மார்பகப் புற்றுநோய்க் கும் என்ன தொடர்பு உள்ளது?

தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

தாய்ப்பாலை மற்றவர் குழந்தைகளுக்கு வழங்குவது நல்லதா?

நல்லதே வழங்கலாம் தவறில்லை

இரட்டைக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவதில் சிரமம் ஏதும் உள்ளதா?

சிரமம் எதுவும் இல்லை . ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வழங்கலாம்.

தாய்ப்பாலை உட்கார்ந்துதான் கொடுக்க வேண்டுமா?

தேவையில்லை; எந்த நிலை தாய்க்கும், குழந்தைக்கும் ஏதுவாக இருக்கிறதோ அந்த நிலையில் தயக்கமின்றிக் கொடுக் கலாம். ஆனால் குழந்தைக்கு புரை யேறுதல், காதில் சீழ் வடிதல் போன்ற வியாதிகள் இருந்தால் படுத்துக்கொண்டு பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பால்கட்டிக் கொள்வது எதனால்? அதனை எவ்வாறு சரிசெய்யலாம்?

குழந்தையை அடிக்கடி சப்பவைப்பதும், பாலை பீச்சி எடுப்பதுமே அதற்குச் சரியான சிகிச்சை ஆகும். இது வியாதியன்று; பதட்டமில்லாமல், தாய் நம்பிக்கையுடன் தொடர்ந்து பாலூட்டலாம். குழந்தைக்கு எந்த கெடுதலும் வராது.

தாய்ப்பால் கொடுப்பதால் குடும்பத் திற்கு என்ன நன்மைகள்?

குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற் படாது. தாய்ப்பால் குடிப்பதால் குழந்தை நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாக வளரும். எனவே, வாந்தி; வயிற்றுப்போக்கு, சளி, ஒவ்வாவை போன்ற நோய்கள் தாக்குவது குறைவு. அதனால் வைத்தியச் செலவும் குறைவு. குடும்பத்தில் அமைதியும்; அன்பும் நிலவும். சீம்பால் குடித்த குழந்தைக்குப் பின்னாளில் சர்க்கரை நோய், இருதய நோய் போன்றவை தாக்கும் வாய்ப்பு குறைவு.

மருந்துகள் உட்கொள்ளும் தாய், தாய்ப்பால் கொடுக்கலாமா?

பெரும்பாலான மருந்துகள் பாலூட்டும் சமயத்தில் தீங்குகளை உண்டாக்குவதில்லை. தாய்ப்பாலை தயக்கமின்றித் தரலாம். ஆனால், தைராய்டு சுரப்பியைக் கட்டுப் படுத்தும் மருந்துகள் மற்றும் கதிரியக்கம் கொண்ட Isotope மருந்துகளை உட் கொள்ளும் தாய், தாய்ப்பாலை குழந் தைக்குக் கொடுக்கக்கூடாது. அது போல் டயசிபாம் என்னும் தூக்க மருந்துகள், பார்பிச்சுரேட்ஸ் எனப்படும் வலிப்பு மருந்துகள், டெட்ராசைக்களின், சல்பா மற்றும் குளோரம் பெனிகால் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை பாலூட்டும் தாய் சாப்பிடக்கூடாது ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் மருந்து தாய்ப்பாலைக் குறைக்கும் தன்மை கொண்டது. அவைகளை யும் சாப்பிடக்கூடாது.

மெலிந்த தேகம் கொண்ட ஊட்டச்சத்து சாப்பிட முடியாத தாய் குழந்தைக்குப் பாலூட்டலாமா?

தாய்ப்பாலின் அளவும், குணமும் மெலிந்த தாயிடம் நன்றாகவே உள்ளது. ஆகவே தாய்க்கு ஊட்டச்சத்தைச் சாப்பிட ஊக்கப் படுத்தி, தொடர்ந்து பாலூட்டச் செய்யலாம்.

தாய்ப்பால் குடித்தவுடன் சில குழந்தை கள் வாந்தி எடுப்பதேன்?

இது நோயன்று, இதை தவிர்க்க, பால் புகட்டும் போது குழந்தையின் தலைப்பகுதி சற்று உயர்ந்து இருக்குமாறு செய்ய வேண்டும். பாலைக் கொடுத்தவுடன் குழந்தையை பக்குவமாகத் தூக்கித் தோளில் கிடத்தி, முதுகை மெல்ல மெல்ல தட்டிக் கொடுக்க வேண்டும். 10-15 நிமிடங்கள் அவ்வாறு செய்தால், குடிக்கும் போது உணவுக்குழலில் தேங்கியிருந்த பால் வயிற்றுக்குள முழுவதும் சென்று, அதன் அடையாளமாகக் குழந்தை ஏப்பம் விடும். அதன் பிறகு குழந்தையை படுக்க வைத்தால் வாந்தி எடுக்காது. குழந்தை அடிக்கடி வாந்தி எடுத்து எடை கூடாமல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

நிறைமாதக் குழந்தைக்குத் தாய்ப்பாலைக் கொடுக்கிறோம். குறைமாதக் குழந்தைக்கு என்ன கொடுப்பது?

குறைமாதக் குழந்தைக்கும் தாய்ப்பாலைத் தான் கொடுக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு ஏற்ப தாய்ப்பால் மாறுபடும் தன்மையும், சிறப்பும் வாய்ந்தது; குறைமாதக் குழந்தையின் செரிக்கும் திறனுக்குத் தக்கவாறும், வளர்ச்சிக்கு ஏற்றவாறும் தாயிடம் பால் சுரக்கிறது. எனவே குறைமாதக் குழந்தைக்கும், தாய் ப்பாலைத் தவிர வேறு எதுவும் கொடுக்கக் கூடாது. மேலும் குறைமாதக் குழந்தையை நோயிலிருந்து காப்பாற்ற தேவையான நோய் எதிர்ப்புச் சத்துக்களும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன.

சுகப்பிரசவத்தில், பிரசவித்த எவ்வளவு நேரத்திற்குள் சீம்பாலைக் கொடுக்க வேண்டும்?

சுகப்பிரசவத்தில், குழந்தை பிறந்த உடனேயே, அதாவது நஞ்சுக்கொடி துண்டிக்கப்பட்டவுடனேயே தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும். கொடுக்கும் முன்பாக மார்பகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பால் ஊட்டும் முன்பும், பாலுட்டிய பின்பும் வெந்நீரில் நனைத்த துணியால் சுத்தமாகத் துடைத்து விட வேண்டும். மார்க்காம்பில் கசிந்த பால் அப்படியே இருந்தால் பூஞ்சைக் காளான் நோய் உண்டாகும். குழந்தை மார்பில் பால் குடிக்க மறுக்கும்.

குழந்தையின் உடலில் ஈரத்தைத் துடைக்காமலேயே தாய்ப்பாலை கொடுக்கலாமா?

பிறந்த குழந்தைக்கு ஈரம் மற்றும் குளிர் ஆகியவை எதிரி. ஆகவே, பிறந்தவுடன் குழந்தையை உலர்ந்த வெண்மையான, பருத்தித் துணியால், தலையில் ஆரம்பித்து உடல் முழுவதையும் சுத்தமாகத் துடைக்க வேண்டும். பின்னர் மற்றொரு உலர்ந்த சுத்தமான துணியால்,தலை முதல் கால் வரை, முகத்தைத் தவிர்த்து,போர்த்தி, தாயின் அரவணைப்பில் கதகதப்பாக வைத்துக் கொண்டு தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும்.

பிரசவித்த தாயை உடனே பாலூட்டச் செய்தால் தாய்க்குக் களைப்பு அதிகரிக் காதா ?

பிரசவித்து களைப்புடன் இருக்கும் தாய் தனது குழந்தையை அரவணைத்துப் பாலூட்டுவதன் மூலம் மகிழ்ச்சியும், புத்துணர்வும் பெறுகிறாள். மேலும் குழந்தைக்கு சீம்பால் கிடைப்பதுடன், தாய்க்கு ஏற்படும் உதிரப்போக்கு வெகுவாகக் குறைகிறது. ஆகவே. பிறந்தவுடனேயே தாய்ப் பால் கொடுப்பது தாய்-சேய் இருவருக்குமே நல்லது.

பிறந்த உடனேயே பாலூட்டுவது எவ்வாறு ரத்தப் போக்கை நிறுத்து கிறது? இந்தச் செய்தி அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா?

ஆம். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை. இதை மருத்துவம் படித்த அனைவரும் அறிவார்கள். குழந்தை மார்பில் சப்பும் போது, நரம்பு நுனிகள் தூண்டப்பட்டு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் பின் பகுதியிலிருந்து ஆக்சிடோசின் எனப் படும், ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் கர்ப்பபையைச் சுருங்கச் செய்து, உதிரப்போக்கை நிறுத்துகிறது. இதே ஹார்மோன் ஆக்சிடோசின் மருந்தைத்தான் மருத்துவர்கள் உதிரப்போக்கை நிறுத்த ஊசி மூலம் செலுத்துகிறார்கள்.

குழந்தையை அடிக்கடி மார்பில் சப்ப வைப்பது, அதாவது குழந்தைக்கு அதிக நேரம் பாலூட்டுவது எவ்வாறு தாய்ப் பாலை அதிகப்படுத்துகிறது?

தாயிடம், தாய்ப்பாலுக்காக இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒன்று ஆக்சிடோசின் இரண்டாவது புரோலேக்ட்டின் ஆகும். புரோலேக்ட்டின் ஹார்மோன், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் முன் பகுதியிலிருந்து சுரக்கிறது. அதற்கு தூண்டுகோலாக அமைவது குழந்தை மார்பில் சப்புவது ஆகும். குழந்தை மார்பில் அதிக நேரம் சப்பச் சப்ப அதிகப் புரோலேக்ட்டின் சுரக்கிறது. அதிக புரோலேக்ட்டின் அதிகப் பாலை மார்பில் சுரக்க வைக்கிறது. இந்த ஹார்மோன் சுரந்த பின், தாயின் இரத்தத்தில் சுமார் அரை மணி நேரம் இருக்கும். பகலை விட இரவில் பாலூட்டுவது இந்த ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும். எனவே, இந்த அறிவியல் பூர்வ உண்மையின்படி அதிக நேரம் பாலூட்டுவது. அதிக பாலைச் சுரக்க வைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இரட்டைக் குழந்தை பெற்ற தாய்க்கு கூட இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான பால் சுரக்கிறது.

ஆக்சிடோசின் எனும் ஹார்மோன், தாயின் மார்பில் ஏற்கனவே சுரந்து தேங்கியிருக்கும் பாலை மார்புக் காம்புகளைத் தளரச் செய்து குழந்தைக்குத் திறந்து விடுகிறது. இந்த ஹார்மோனும் குழந்தை சப்புவதன் மூலமே சுரக்கிறது. சப்புவது மட்டுமல்லாது. குழந்தையின் அழுகை ஒலி, குழந்தையைப் பார்ப்பது, குழந்தை பற்றிய பாசமான நினைவு ஆகியவற்றின் மூலம் சுரக்கிறது. சிலருக்குக் குழந்தையின் அழுகை ஒலி கேட்ட மறுவினாடியே. மார்பில் பால் வடிய ஆரம்பிப்பதை நாம் பலரிடம் பார்க்கலாம்.

அதே சமயம், சப்புவது குறையக் குறைய புரோலேக்ட்டின் ஹார்மோன் சுரப்பதும் குறைகிறது. அதனால் தாய்ப்பால் சுரப்பதும் குறைந்து இறுதியில் வற்றி விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரசவித்த சில நாட்களுக்குச் சிலருக்கு சீம்பால் அளவில் குறைவாகவே சுரக்கிறது. இது குழந்தைக்குப் போதுமா?

குறைவாகவே இருந்தாலும், சீம்பால் அளவில் அடர்த்தியானது. சத்துக்களும், நோய் எதிர்ப்பு புரதங்களும் நிறைந்தது. சிறிதளவே இருந்தாலும், அதுவே குழந்தை யின் தேவைக்குப் போதுமானது. அதைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கத் தேவை யில்லை.

பிரசவித்தத் தாய்க்கு என்னென்ன கொடுக்கலாம்? பத்தியம் என்னும் உணவுக் கட்டுப்பாடு தேவையா?

பிரசவித்து களைப்புடன் இருக்கும் தாய்க்கு, திரவ உணவுகளையும், எளிதில் ஜீரணமாகக்கூடிய கஞ்சி, ரசம் சாதம் இவற்றுடன் காய்ச்சிய நீரையும் தாராளமாகக் கொடுக்க வேண்டும். பிறகு வழக்கம் போல் அனைத்து உணவு களையும் கொடுக்கலாம். வேகவைத்த பச்சைக் காய்கறிகள், வெல்லம் போட்ட பால், கீரைகள், பானகம், வெள்ளைப்பூண்டு சேர்ந்த குழம்பு, புரதச்சத்து நிறைந்த பயறு, மொச்சை, கொண்டக்கடலை ஆகியவற்றையும், அத்து டன் அசைவ உணவுகளையும் தாராளமாகக் கொடுக்கலாம். பத்தியம் தேவையில்லை. தாய் தாராளமாகக் காய்ச்சிய நீரையும் பருக வேண்டும். நீரும் முக்கியமான உணவாகும். தாய்க்கு அடிக்கடி*சிறுநீர் பிரிவது, தாயை நீர்த்தாரைச் சம்பந்தமான வியாதிகளிலிருந்து காப்பாற்றும்.

தாய்ப்பால் சிலருக்குச் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்களே. அதற்குக் தாய்ப்பாலை அதிகரிக்க வழிகள் என்ன?

எந்த ஒரு குழந்தைக்கும், அதற்குக் தேவை யான பால் அதன் தாயிடம் நிச்சயமாகச் சுரக்கும். பசுவிடம் அதன் கன்றிற்கும், நமக்கும் தேவையான பால் லிட்டர் கணக்கில் சுரக்கவில்லையா? அதைப் போலவே தாயிடமும் பால் சுரக்கும். தாய்ப்பால் தேவையான அளவில் சுரக்கத் தேவையானவை. தாயின் முழுமையான ஈடுபாடும், குழந்தை மார்பில் அடிக்கடி சப்புவதும் ஆகும்.

தாய்ப்பாலை அதிகப்படுத்த மருந்துகள் இருக்கின்றதா?

தாய்க்கு சத்து நிறைந்த உணவுகள், பசுமையும் கருமையும் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள், புரதச்சத்து நிறைந்த பயிறு வகைகள் அதாவது மொச்சை, உளுந்து, பாசிப்பயிறு, பட்டாணி, கொண்ட கடலை சுண்டல், வெல்லம் போட்டு காய்ச்சிய பால், வெள்ளைப்பூண்டு சேர்ந்த குழம்பு. காய்ச்சிய நீர் மற்றும் அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தாராளமாக அளிப்பதன் மூலம் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும். பருத்திப் பாலும் பலம் கொடுக்கும். இவை போதாத நிலையில் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அதற்கான மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடலாம், நிச்சயம் தேவையான பால் சுரக்கும். குடும்பத்தினரின் ஊக்கப்படுத்துதலும், ஒத்துழைப்பும், ஆதரவும் ஒரு தாய்க்கு மிக மிக அவசியம். பாலூட்டும் வேலை மட்டுமே தாய்க்கு அளிக்கப்பட வேண்டும், மற்ற வேலைகளைக் குறைந்தது முதல் ஆறு மாதத்திற்காவது குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பாலை அதிகப்படுத்தும் மருந்துகள் Lactare Capsule/Lactare Granules, Lacto gaurd / Granules, Relact Capsule, Lactone Capsule,Metaclopromide Tablets, சௌபாக்ய சுண்டி லேகியம்.

போதிய தாய்ப்பால் இல்லாததற்கு முக்கிய காரணங்கள் :

பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுவதைக் தாமதப்படுத்துதல் அடிக்கடி பாலூட்டாமல் இருப்பது

இரவில் பாலூட்டாமல் இருப்பது பால் குடிக்கும் போது குறுக்கிடுவது

குழந்தையை மார்பில் சரியான முறையில் பொருத்தாமல் இருப்பது. குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இருப்பது.

பாட்டில் மற்றும் சூப்பான்களைப் பயன் படுத்துவது விலங்கினப் பாலையும் / செயற்கையான டப்பா உணவுகளையும் கொடுப்பது.

தாயின் தன்னம்பிக்கையே குறைக்கும் வகையில் பேசுவது. கவலைகள், மன உளைச்சல் மற்றும் சோர்வு. பாலூட்ட, தாய்க்கு விருப்பம் இல்லாமல் இருப்பது.

மாறிவரும் அவசர உலகில், இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு தாய்ப் பாலைக் கொடுக்க வேண்டுமா? மாட்டுப் பாலையோ, டின் பாலையோ கொடுக்கக் கூடாதா?

கூடவே கூடாது; விலங்குகளின் பால் அதன் குட்டிகளுக்கே! எமது குழந்தைகளுக்கு அல்ல, விலங்கின் குணாதிசயங்கள் பாலின் மூலம் அதன் குட்டிக ளுக்குச் சென்றடைகிறது. நமது குழந்தைகளுக்கு விலங்கின் பாலைக் கொடுத்தால், விலங்கின் குணங்கள் தாம் நமது குழந்தைகளுக்கும் வரும். மனிதனுக்கு தேவையான அறிவும், புத்திசாலித்தனமும் விலங்கின் பாலில் கிடைக்காது; நமது குழந்தைகள் அறிவும் ஆரோக்கியமும், அன்பும், பண்பும் பாசமும் நிறைந்தவர்களாக வளரத் தாய்ப்பால் அவசியம்.

விலங்கின் பால் அதன் குட்டிகளின் உடம்பு வளரவே பயன்படுகின்றன. மூளையை வளரச் செய்யாது. அவைகளுக்கு மூளை வளர்ச்சி அவசியமில்லை. பள்ளிக்கும் போவதில்லை. ஆகவே தாய்ப்பாலுக்கு இணையான பால் வேறு கிடையாது. IQ எனப்படும் அறிவுத்திறன் தாய்ப்பால் குடிப்பதன் மூலமே குழந்தைக்குக் கிடைக்கிறது என்பது ஆராய்ச்சிகளின் முடிவு. டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் மாவுகள் குழந்தைகளுக்கு முற்றிலும் ஒவ்வாதவை; மேலும் நச்சுத் தன்மை கொண்டவை.


3 Comments

பாவேந்தன் · ஜூன் 30, 2022 at 15 h 31 min

அறிந்திராத பல செய்திகள். 18ஆண்டுகளாகத் தாய்ப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மருத்துவர் சாம்பசிவம் ஐயா போற்றுதலுக்குரியவர். அவரைக் கண்டு மரியாதை செய்து சிறப்பித்து இருக்கும் தமிழ்நெஞ்சம் இதழுக்கு நன்றி.

கோபால் ராஜேஸ்வரி ரவி · ஜூலை 1, 2022 at 7 h 12 min

அருமையான கட்டுரை

Kavi Muthu · ஜூலை 1, 2022 at 7 h 17 min

வணக்கம் ஐயா
மிகச் சிறப்பு ஐயா…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »