மின்னிதழ் / நேர்காணல்

மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர். இப்போதும் முகநூலில் துடிப்பாக இயங்கி வருகிறார்.
அவரிடம் நம் தமிழ்நெஞ்சம் இதழுக்காக நேர்காணல் கண்டோம். வாருங்கள் என்னோடு…

– வெற்றிப்பேரொளி

மே 2022 / 88 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
பிறந்த நாளின் போது மனைவி மகள்களோடு
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கப் பேராளர்கள் கலைஞரின் அழைப்பின் பேரில் மூதறிஞரை கோட்டையில் சந்தித்த தருணம்!
உலக பண்பாட்டு பேராளர் மாநாட்டில் ‘ மானமிகு பேராசிரியர் கா.அன்பழகனாரிடம் ‘இளங்கோ கவிதைக’ நூலை அன்புடன் கொடுத்த தருணம்!அருகில் நெ.மா.எழுத்தாளர் சங்க செயலாளர் திரு.கா.மாரியப்பன்

உங்கள் இளமை, பெற்றோர், படிப்பு பற்றிச் சொல்லுங்கள் ஐயா.

எனது இளமை காலம்? ஏழ்மையின் தாலாட்டில் வறுமையின் தொட்டிலில் உறவுகளின் உதாசீன பாராட்டுகளில் உருவானது!

காரணம், நான் ஏழாவதாக பிறந்து தவழும் ஓராண்டு பிராயத்திலேயே அம்மா மாரியாயியை விதவையாக்கி அப்பன் சின்னப்பளை சிவலோகம் அனுப்பிய வெள்ளிக் கிழமை பிறந்த விளங்காதவன் நான்!

பள்ளிக்கு கோவணத்தோடு… அதைமறைக்க அண்ணனின் பெரிய சட்டையை போட்டுக் கொண்டு பள்ளி மாணவ தோழர்கள் கிண்டலடிக்க, ஆசிரிய தெய்வங்களின் அனுசரணையோடு ஆறாம் வகுப்பை தாண்டி, ஆசிரியர் பயிற்சிக்கான ஏழாம் வகுப்புக்கு பணவசதி இல்லாமல் தொடர முடியாத துரதிஷ்டசாலியெல்லாம் எந்த சாதியோ, அந்த சாதி நான்,

ஆங்கிலமும் மலாய் மொழியும் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டது. அப்பனை 1942 ல் இழந்து அம்மாவை 1987 ல் பறிகொடுத்தவன்!

புதுச்சேரியில் கவிஞர் பெருந்தகைகளுடன்...

பெற்றோர்க்கு ஏழாவது பிள்ளை யாக பிறந்திருக்கின்றீர்கள். அது குறித்து….

என் உடன் பிறப்புகள் 5 அண்ணன்கள்! ஒரே பெண் ஆறாவது அக்காவாக ஏழாவதாக நான் அறுவரின் எச்சில்பால் குடித்து செல்வ மில்லா செல்ல பிள்ளையாக தாயின் மார்பில் 5 வயதுவரை பால் குடித்து வளர்ந்தவன்!

பள்ளி படிப்பு முடித்து 13 வது வயதிலேயே அம்மாவுடன் தோட்டக் காட்டு வேலைக்குப் போனவன்!

இலக்கிய ஆர்வம், கவிதை எழுதும் உந்துதல் எப்படி எழுந்தது உங்களுக்குள்?

1956 – 57 களில் கலைஞர் கருணாநிதி அவர்களின் ஏடுகளும் முத்தாரம் போன்ற எழுத்துகளின் பாய்ச்சல்களும் தான் என் இலக்கிய ஆர்வத்தின் முகத்துவாரம்!

நான் நிறைய நாள் வார மாத ஏடுகளையும், குறிப்பாக 57 களின் திமுக முரசொலி மன்றம் காஞ்சி தென்றல் திராவிடன் இன்னும் சில ஏடுகள்!

கவிதைகளில் சுரதா கண்ணதாசன் பொன்னிவளவன் முடியரசன் வாணிதாசன் போன்ற கழக கவிஞர்களின் கவிதை வீச்சுகளே என் கவியார்வ மூலத்திற்க் நதிமூலமாகும்!

உங்கள் இலக்கியப் பயணத்தில் விரல் பிடித்து அழைத்துச் சென்ற முன்னோடிகள்… என்று யாரையும் சொல்ல முடியுமா?

என் இலக்கிய எழில்வனப் பயணத் தின் அருவ ஆர்வமாய் உந்து சக்தியாய் எழுதுகோல் ஏந்த உணர்வலைகளை ஏற்படுத்தியதே பராசக்தி அல்ல! அந்த படவசன கர்த்தா கலைஞர் கருணாநிதியே ஆவார்!

நீங்கள் மலேசிய அரசின் கவிதை நூல் போட்டியில் பரிசு பெற்ற அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங் களேன்…?

நான் மலேசிய பாரதிதாசன் குழுவும் – மலேசிய பாவலர் மன்றமும் இணைந்து நடத்திய உலகநிலை காவியப் போட்டியில் முதல் பரிசாக ம.வெ. 2000.00 கிடைக்பெற்றேன்!

நண்பர்களின் கணிப்பின்படி 3வது பரிசே எனக்கு நிச்சயம் என்றார்கள் போட்டி அறிவிக்க கூடிய. கல்லூரியே அமைச்சர் பெருமக்களாலும் நாட்டின் முக்கிய இலக்கிய சாம்ராட்டுகளாலும், கல்லூரி மாணவ செல்வங்களாலும் நிரம்பி வழிந்தது!

குறிப்பிட்ட அறிவிப்பு நேரம் வந்ததோ இல்லையோ? எனக்கு ஒருவித சொல்ல தெரியாத படபடப்பு! குளிரூட்டி செய்யப் பட்ட மண்டபமே எனக்கு வெட்டவெளி வெயில் காடாக வியர்த்து கொண்டியது!

நண்பர்கள் நிர்ணயத்து சொன்ன 3 வது பரிசுக்கான வெற்றியாளரை அப்பொழுது அறிவிப்பாளர் சொன்ன போது நான் நண்பர்களோடு நின்று கொண்டிருந்தவன் தொப்பென்று இருக்கையில் குந்தினேன்!

ஆம் மூன்றாம் பரிசு எனக்கு இல்லை!

நண்பர் தைரியம் சொன்னார்! சிமா நிச்சயம் இரண்டாம் பரிசிற்கு வாய்ப்பிருக்கிறது தைரியமாக இருங்கள் என்றார்! பாவி இந்த அறிப்பாளருக்கு என்ன நோக்காடு வந்தது! படுபாவி இப்படி இழுக்கிறானே? மனம் சபித்தது!

கொதிநீர்மேல் உட்கார்ந்தவன் போல் அந்த இரண்டாம் பரிசுக்கான வெற்றியாளர் பெயரும் வந்தது! அந்த அதிஷ்டசாலியும் நான் இல்லை!

நண்பர்களிடம் ஓய்வறைக்கு போய் வருவதாக என் கார் இருக்கும் இடம் தேடி சென்றேன்! ஆமாம் வீட்டுக்கு கிளம்பத்தான்!–

அப்பொழுது மண்டபத்தின் ஒலி பெருக்கி வெளியேயும் கேட்டது!

முதல் பரிசு ‘மருதி’காவிய நூலுக்கு என்று சொல்லி எழுதியவர் பெயரை சொல்லி முடிப்பதற்குள் என் நண்பர் மலேசிய நாடாளு மன்ற மேலவை உறுப்பினர் டத்தோ சி.கிருஷ்ணன் அவர்கள் பரபரக்க ஓடிவந்து என்னை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டார்!.

மலேசிய ஜோகூர் மாநில எழுத்தாளர் இலக்கிய மன்றம் ‘இளங்கோவடிகள்’ விருது தந்துச் சிறப்பித்தத் தருணம்!
மலேசிய எழுத்தாளர் மாநிலசங்க பேராளர்களோடு திருச்சி மாநகர் வரவேற்பின் போது நூற்களை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதரிடம் வழங்கியத் தருணம்.
புதுச்சேரியில் மலேசிய இலக்கிய வாதிகள் - நாவலாசிரியர் பிரபஞ்சனோடு!--

மரபுக் கவிதையில் கொடியேற்றும் அதேநேரத்தில் புதுக்கவிதைப் படைப்பி லும் முன்னணியில் இருக்கிறீர்கள். அந்தப் புதுக்கவிதைத் தொடர் பற்றி விளக்குங்கள்…. ?

மரபுக் கவிதையில் வெற்றி கொடி நாட்டிய நான் –

புதுக்கவிதை துறையில் ஈடுபாடு கொள்ள மூலாதாரமாக முன்நின்றதே கவிஞர் மேத்தாவின் நூற்களும்..கவி பேரரசுவின் நூற்களும்… கவிக்கோ அப்துல் ரஹ்மானின் நூற்களும்தான் என்றால் மிகையாகாது!

மரபு மாளிகைவாசியாய் இருந்தா லும் மண்குடிசை பொற்கொடியாள் ‘புதுக்கவிதைப் பொற்கொடியாளின் புன்னகைப்பூ பூப்பில் புத்தி சுருண்டு போயிவிட்டது! அதன் காதலாலேயே,,,

1. பாதைகள் பயணங்களுக்காக அல்ல!’
2. ‘முற்றுப் புள்ளிகள் முடிவுகள் அல்ல!’
3.நெருப் பாற்றுப் படகுகள்!’
4. ‘வில்லம்பும் சொல்லம்பும்!’
5. அடியப்பா அடி அரிகிருஷ்ண சுவாமிகள்!’ 12 அவதாரங்களாக புதுக் கவிதைதொடர் காவியமாக புனையப்பட்டது!

என ஐந்து புதுக்கவிதை பிள்ளைகளையும் பெற்று பெருமை கொண்ட சித்தப்பனாகவும்

1. ‘இளங்கோ கவிதைகள்!’
2. ‘போர்ட்டிக்சன் மகாமாரியம்மன் புகழாஞ்சலிப் பூக்கள்!’
3. ‘மருதி’ காவியம்!’
4. ‘கொலைகாரி!’
குறுங்காவியம்!
5. ‘கவியரங்கில் கவிமணி!’
என்ற மரியாதைக்குரிய மரபு கவிதைகளின் அப்பனாகவும்!–

‘ஒரு தாய் (சாபம்) பெறுகிறாள்!’ என்ற சிறுகதை தொகுப்பு நூலையும்!’

‘இன்று முதல்!’ என்ற நாவலையும்!

‘கண்ணதாசன் கவிதைகள்’ சொல்லும் சுவையும்!’ என்ற. இலக்கிய கட்டுரை நூலையும்!’

எழுதிய மேக வேகத்தில்… ‘யாழின் மௌனமொழிகள்’! என்ற மரபு தணல் கவிதைகள் தாங்கிய ஏவு கணையாய் மரபின் தொகுப்பு நூல் (210 பக்கங்கள்) 4.4.(1943) எனது பிறந்தநாள் திங்களில் அமைச்சர் தாண்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் வெளியீடு காண விருக்கும் இலக்கிய விண்கலமாகும்!

இந்த சிறிய அளவே எனது இலக்கிய பயணத்தில் நான் பெற்ற பேறு!

ஜோகூர் அரசு ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ அசோகன் அவர்கள் தமிழறிஞரின் நூலை அரசு நூலகத்திற்கு பெற்றுக் கொண்ட இனியத் தருணம்.
கவிபேரரசு வைரமுத்து பிறந்த நாளின் போது ‘கவிஞர் விருதும்’ 2000.00 மலேசிய வெள்ளியும் தந்து பாராட்டி கௌரவித்த தருணம்!-
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கப் பேராளர்கள் கலைஞரின் அழைப்பின் பேரில் மூதறிஞரை கோட்டையில் சந்தித்த தருணம்!

தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்த படி இலக்கியம் செய்யும் அனுபவம் எப்படி?

தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்தாலும்…

1958 ஆம் ஆண்டு தொடங்கி தமிழக இலக்கிய சூரியர்களின் இணைந்த தவத்தால் குந்தியைபோல் சில எழுச்சிகர்ணன்களை என்னால் ஈன்றெடுக்க முடிந்து!

மலேசிய சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள், இலக்கியவாதிகளுடன் உங்கள் தொடர்பைக் குறித்து தெரிந்து கொள்ள ஆவல்… ?

1980 களில் சிங்கப்பூர் எழுத்தானர் சங்கத்தின் அந்நாள் தலைவர் கவிஞர் அமலதாசன் கவிஞர் தங்கராசு போன்ற நண்பர்களும் அதன்பின் தலைவராக வந்த கவிஞர் நா.ஆண்டியப்பன் அவர்களும் எனது சிங்கை மண்ணுக்கு சீர்பாதை அமைத்தவர்கள்!

இப்பொழுது அந்த உறவுகள் எனது வயதின் காரணமாக சற்று மந்தப்பட்டே இருக்கிறது!

எனினும் இலக்கிய பாச நேசம் பனிக்குகையாகத்தான் குளிர்ந்திருக்கிறது!

சென்னையில் அண்ணன் மூவேந்தர் முத்து அவர்களின் வீட்டில் விருந்தினராக தங்கிய தருணம்!
1987 ஆம் ஆண்டு மலேசிய பாரதிதாசன் குழுவினர் நடத்திய நூற்றாண்டு விழாவில் சிறப்பிக்கப் பட்டபோது!
தஞ்சாவூர் பல்கலைகழகத்திற்கு அன்றைய துணைவேந்தரிடம் நூற்களை வழங்கியத் தருணம்.

தமிழ்நாட்டில் உள்ள இலக்கிய வாதிகள் கவிஞர்களுடனான உறவை எப்படிப் பேணி வருகின்றீர்கள்?

தமிழ்நாட்டின் கவிமேகங்களின் கனிந்த உறவும், நாவலாசிரியர்களின் நாணயநட்பும் அன்றுபோல் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காரணம் நான் கரூர் தொக்குப் பட்டிக்காரன் திருச்சி என் மாமியார் தலவாசம்! அப்புறம் என் தொடர்பு இன்னும் பூந்தென்றல் காற்றாகவே தொட்டுத் துலாவுகிறது!

புதிதாக படைப்பு, நூல்வெளியீடு திட்டம் ஏதும் உள்ளதா?

அடுத்தத் திங்களில் எனது மரபுகவிதை தொகுப்பு நூல் வெளியீடு காண இருக்கிறது!

புதுவையில் உலக பாவலர் தமிழன்னை தமிழ்ப் பேரவை ‘சங்கப்புலவர்’ விருது வழங்கி பாராட்டிய தருணம்!
பிறந்தநாளின் போது பேரன் பேத்திக ளோடு மகன் முருகதாசன் மருமகன் சத்திய சீலனோடும் மகிழ்ந்திருந்தத் தருணம்!

பிரான்சிலிருந்து ஐம்பது ஆண்டு களாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘‘தமிழ்நெஞ்சம்’’ இதழ், அதன் ஆசிரியர் கவிஞர் அமின் .. பற்றிய உங்கள் கருத்து….?

எனது மரியாதைக்குரிய ‘‘தமிழ்நெஞ்சம்’’ இதழாசான் கவிஞர் தமிழ்தகை பலநூறு சூரிய காந்தி பூக்கள் தரிசிக்கும் இலக்கியச் சூரியனாக… ஐயா அமின் என்கிற தமிழ் ஆல ஆல விருட்சம் என்பேன் நான்! அன்னார் வானமழை மிஞ்சும் வள்ளல் பெருந்தகை! என்முகம் பார்க்காமலேயே உதவிய உத்தமர்!

எனது ‘‘யாழின் மௌனமொழி’’ கவிதை தொகுப்பின் அட்டைபட அலங்கரிப்பே அன்னாரின் கைவண்ணமே!

கவிஞர் கண்ணதாசன் முருகன் அவர்களின் இணைப்பே ஐயா அமின் அவர்கள் என்னுள் பிணைப்பு!

விடைபெறுவோம். நன்றி!


5 Comments

மாலதி. திரு · ஏப்ரல் 30, 2022 at 13 h 05 min

நெஞ்சம் விரும்பும் இதழ்.

அனைத்தும் அருமை

அ.முத்துவிஜயன் · ஏப்ரல் 30, 2022 at 14 h 55 min

உலகலாவிய தமிழர்களை இணைக்கும் தமிழ் நெஞ்சத்தின் பணி மகத்தானது. உலகமுழுவதுமுள்ள பல்வேறு தமிழ் ஆளுமைகள் மற்றும் அவர் தம் படைப்புகளை உலக அரங்கில் அறிமுகம் செய்யும் இந்த மகத்தான பணியை என்ன சொல்லிப்பாராட்டுவது. வார்த்தைகள் இல்லை. என்னைப்போன்ற புதிய முகங்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய தமிழ்நெஞ்சம் இதழுக்கும் ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் மற்றும் பொன்மனிதாசன் அய்யாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்

சிமா. இளங்கோ · ஏப்ரல் 30, 2022 at 16 h 22 min

உலக இலக்கிய வானில் வெற்றி உலாவில்–
சோராத தமிழ்விழா சுகந்த விழா நடைபோட்டுக் கொண்டிருக்கும் தமிழ்இமயமே!–
தளரா உளங்கொண்ட சிங்கமே எங்களின் தங்கமே!–

உங்களின் திசைகண்டு
அசைகண்டு
தித்திக்கும் தமிழ்தொண்டின் தீரம் கண்டு மகிழ்ந்து– இறைதந்த வரம்கண்டு வணங்கி மேதகு ஐயா அமின் அவர்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மிகிழ்கிறேன்!–

அன்புடன் சிமா.இளங்கோ!
மலேசியா!
30/4/2022

Selladurai Sinnadurai · மே 1, 2022 at 15 h 19 min

அன்பால் எமையாட் கொண்டு
பண்பால் நமை வழி நடத்தும்
தமிழ் நெஞ்சம், தமிழ்ப் பஞ்சம்
கொண்டோருக்கெல்லாம்
தமிழ்க் கொடை வள்ளல்
அவர் நீண்டகாலம் உயர்ப்புடன் வாழ்ந்து
உதவும் பல சேவைகள் செய்ய வேண்டும்!

அப்துல் வதுத் · மே 5, 2022 at 9 h 31 min

பாவலர்.தமிழறிஞர் சிமா.இளங்கோ அவர்களின் 80 ஆண்டுகால தமிழ்த்தொண்டு போற்றத்தக்கது. அவரது பதில்கள் இளந்தலைமுறையினருக்கு தமிழ் மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், புதிய உத்வேகம் அளிக்கும் விதமாகவும் உள்ளது. இத்தகு பேராளுமைகளை உலக தமிழ் உறவுகளுக்கு அறிமுகம் செய்யும் ‘தமிழ்நெஞ்சம்’ இதழுக்கு நன்றி தெரிவித்து
தொடரட்டும் தமிழ் தொண்டு என சிமா.இளங்கோ அவர்களை வாழ்த்துவோம்.

Comments are closed.

Related Posts

நேர்காணல்

மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்

இலங்கை திருநாட்டில் எழில் கொஞ்சும் மலையகத்தில் கம்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்மா டீன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். கலைக்குடும்பத்தின் வாசனையில் பூத்த இவர் இலங்கையின் முதல் தினசரியான “தினதபால்” ஆசிரியர் காலஞ்சென்ற மீரா மொஹியிந்தீன் அவர்களின் பேத்தியாவார்.

 » Read more about: மலையகத்தின் பெண் ஆளுமை அஸ்மா டீன்  »

நேர்காணல்

ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்

  1. உங்களை பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்.

1997 ஜனவரி மாதம் 30ஆம் திகதி இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் ஹெம்மாதகமை எனும் ஊரில் பிறந்தேன்.

எனது தந்தையின் பெயர் முஹம்மத் ஹூசைன்,

 » Read more about: ஏட்டுலா கனவாக்கம் – ஆஷிக் ஹூசைன்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »