மின்னிதழ் / நேர்காணல்.

ஏடி வரதராசன் என்பது தங்கள் பெயரா? புனைப்பெயரா?
.
எனது முழு பெயர் வரதராஜப்பெருமாள்… அதைச் சுருக்கி அழைப்பதற்கு இலகுவாக வரதராசன் என வைத்துக் கொண்டேன். ஏடி என்பது… அத்தியூர் எனது ஊர். தியாகராஜன் தந்தை பெயர்.

நடக்கப் போகும் பேட்டியைப் பற்றியும், பேட்டி எடுக்கும் என்னைப் பற்றியும் ஒவ்வொரு வெண்பா பாடுங்களேன்…
.
பார்காணப் பாவல்
பலரிருந்தும் வெண்பாவின்
சீர்காணும் இந்தச்
சிறுபயலை – நேர்காண
ஆதவனின் கேள்வி
அதற்கென்னுள் தாயிறைவா
பாதகமே இல்லா
பதில்.
.
பேட்டி எனும்பேரில்
பேசும் அமின்அவர்கள்
ஏட்டுலகில் பண்ணிற்(கு)
இறைவனாம் – நாட்டுக்குள்
ஏங்கும் கவிகள்
இவர்கரத்தைப் பற்றிவிட்டால்
தாங்கிப் பிடிப்பார்
தமிழ்.

மார்ச் 2022 / 88 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

தமிழில் பாவகைகள் நிறைய இருந்தாலும் வெண்பாவை மட்டும் தாங்கள் பிடித்துக் கொண்டது ஏனோ?

விருத்தம் என்றால் கம்பன்…
வெண்பா என்றால் புகழேந்தி…
அப்படி என்றால் இவர்களுக்கு வேறு பாவகை தெரியாது என்று பொருளல்ல…

இவர்களுக்கு இந்த வடிவம் பிடித்துப் போய் எளிமையாகக் கைவசப்படடு இருக்கலாம் அதனால் அதே வடிவத்தை அதிகபட்சமாக கையாண்டு இருக்கலாம்.

அதுபோலத்தான் எனக்கு நேரிசை வெண்பா எளிமையாகக் கைவசம் ஆனதா லும் இந்த பாவகைமேல் இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதாலும் இதை விட்டுப் போக மனமில்லை…..

மேலும் ஆதி புலவர்கள் தங்களின் புலமை யைக் காட்டுவதற்கு வெண்பாவைத் தான் பயன்படுத்துவார்கள்… அதனாலும் பிடிக்கும்…

அதுமட்டுமின்றி மற்ற பாவிலக்கணங் களை விட வெண்பாவின் இலக்கணம் சற்று கடினமாகவே இருக்கும். அதைத் தாண்டி நேர்த்தியுடன் ஒரு வெண்பாவை எழுதுவதே சவாலான ஒன்றுதான்.

ஒவ்வொரு சீராகக் கடந்து செல்லும் போதும் ஒவ்வொரு விதமான சிலிர்ப்பு இருக்கும். அதிலும் நேரிசை வெணபாவில் தனிச் சொல்லை கடந்து செல்வதே ஒரு தனிப்பட்ட பயம்கலந்த இன்பம்.

குறளின் குறள் எனும் நூலுக்காக நான் எழுதிய அணிந்துரைக்கு கவிஞர் வைரமுத்து அவர்களின் பாராட்டு பெற்ற போது
தமிழ்நெஞ்சம் சார்பாக வெண்பா கொண்டல் விருது வழங்கும் ஆளுமை அன்புவல்லி தங்கவேல் அவர்கள்.

வெண்பா மிகவும் சக்திவாய்ந்தது என்று சொல்கிறார்களே அப்படியா?

நேர்மையான குணம்…
வளைந்து கொடுக்காத குணம்…
யாரிடமும் எதற்கும் கை ஏந்தாத குணம்…
சிறு தவற்றை கூட உயிரிழப்பைப் போல நினைக்கும் குணம்…
தன் பாதையை விட்டு வேறு பாதைக்குச் செல்லாத குணம்…
தனது பாதையில் வேறு யாரையும் நடக்க விடாத குணம்…

இதுபோன்ற குணங்கள் எங்கே நிறைந்து கிடக்கிறதோ அந்த இடத்திற்கு நிச்சயம் ஒரு சக்தி இருக்கும்…

இவை அத்தனை குணங்களும் பொருந்தி இருக்கும் ஒரே பா வகை வெண்பா தான்…

அதனால் அதற்கு நிச்சயம் ஒரு சக்தி இருக்கிறது.

அறம் பாடுவதற்கு பழம் புலவர்கள் பயன்படுத்திய பா வகைகளில் வெண்பா வும் ஒன்றாகும்.

ஒரு ஏழையின் புலம்பலை வெண்பாவில் பதிவு செய்யும்போது அது ஒரு அர சாணைக்கு உரிய கம்பீரத்தைப் பெற்று விடுகிறது என்று கவிஞர் வைரமுத்து சொன்னதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இன்றளவும் கிராமங்களில் அடிக்கடி சொல்வார்கள். அவளிடம் சாபம் வாங்காதே உடனே பலித்துவிடும் என்று. உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு அதிர்வு உண்டு.

அந்த வார்த்தைகள் வெண்பா மூலம் வெளிப்படும்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் சக்தியைப் பெறுகிறது.

இந்த முகநூலில் பிறமொழி கலந்து (கிரந்தம், ஆங்கிலம் வட்டார வழக்கு) செய்யுள் எழுதுவது நான் பார்த்த வகையில் நீங்கள் தான் இது தமிழ்க்கொலை ஆகாதா….?
.
கொலையை தாங்கள் செய்துவிட்டுப் பழியை என்மேல் சுமத்துகின்றீர்
என்றுதான் சொல்வேன்…

எனது ஆரம்ப கால இடுகைகளில் மொழி கலப்பு செய்யாமல் நான் எழுதும்போது போற்றுவதற்கு வராத நீங்கள்…. இன்று தூற்றுவதற்கு மட்டும் கைகோர்த்து நிற்பது ஏன்.? நல்லது ஏதும் உங்கள் கண்களில் படவில்லையா?

சரி… கெட்வைகளே உங்கள் கண்ணில் படுவதாக வைத்துக் கொள்ளலாம்…

ஆனால்… ஒரு சிறுகதையில் தொடங்கி நாவல், கட்டுரை, அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாள் வரைக்கும் எல்லா இடங் களிலும் தமிழோடு பிற மொழிகள் கலந்து தான் இருக்கிறது….

ஆங்கிலப் பள்ளிகள் தோன்றியதைவிட மிகப்பெரிய தமிழ்க்கொலை ஏதும் உண்டா?

இவ்வளவு ஏன்? வங்கியில் காசோலை எழுவதில் கூட ஆங்கிலம் கலந்துள்ளது… இதெல்லாம் தமிழ்க்கொலை ஆகாதா? நான் எழுதினால் மட்டும்தான் அது தமிழ்க்கொலையா ? அங்கெல்லாம் சென்று கேள்வி எழுப்ப இயலாத உங்களுக்கு… என் மீது மட்டும் ஏன் இந்த ஆவேசம்?

முதலில் நடப்பு வாழ்கையில் உங்களை நீங்கள் திருத்திக் கொண்டு பிறகு எனக்கு அறிவுரை சொல்லுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கிரந்தத்தை சகோதர மொழி என்று சொன்னதும் ஒரு மாபெரும் தமிழ்ப் புலவன் என்பதை தங்களுக்கு ஞாபகப் படுத்துகிறேன்…..

மேலும் தனித்தமிழை மட்டுமே பேசி இதுவரை எதைக் கண்டோம்….?

கலந்து பேசும் இந்த காலத்தில் எதைக் காணாமல் இருக்கிறோம்?

தமிழைக் காப்பாற்ற கலைச்சொற்கள் சேகரிப்பது, அகராதி புதுப்பிப்பது, அதை நடைமுறைப் படுத்துவது என்று பல வழிகள் உள்ளது.

அதையெல்லாம் விட்டுவிட்டு குற்றம் சொல்வதற்கு உங்களுக்கு நான்தான் கிடைத்தேனா…..?

சற்று முன் வெண்பாவை பற்றி. அதன் புனிதமான குணங்கள் பற்றி தாங்கள் தான் சொன்னீர்கள்… ஆங்கிலச் சொற்களையும் கிரந்தச் சொற்களையும் கலந்து தாங்களே எழுதி அதன் புனிதத்தைத் தாங்களே கெடுக்கலாமா…?
.
வெண்பாவின் புனிதத்தைக் கெடுப்பது நானா? மீண்டும் மீண்டும் என்மீது ஏன் பழியை சுமத்துகின்றீர்?

ஏமிரா ஓரி என்றாள்
ஏந்துண்டி வஸ்தி என்றாள்
தாமிராச் சொன்ன தெல்லாம்
தலைக்கடை புரிந்த தில்லை
போமிரா சூழுஞ் சோலை
பொருகொண்டத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு
நமன்கையில் பாடு தானே

என்று காளமேகம் தெலுங்கைக் கலந்து செய்யுள் எழுதினானே இவ்விடத்தில் புனிதம் கெட்டுவிட்டதா ?

இவ்வளவு ஏன்?

சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலந்தேடி வீழ்ந்தேனே – நித்தம்
பிறந்தயிடம் தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்தயிடம் நாடுதே கண்.

என ஆன்மீகப் பாடலையே பாடினானே பட்டினத்தார் இவ்விடத்தில் புனிதம் கெட்டுவிட்டதா?

ஆங்கிலம் கலந்து எழுதுவதாக என்மேல் குற்றம் சுமத்துகின்றீர்…

இந்த பாடலை பாருங்கள்…
.
உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்
பவரா – அழுதுண்டு
ஏக்கருக்கு நூத்தியஞ்சி
எண்ணிப்பாத் தாத்தெரியும்
(ட்) ராக்டருக்கு வள்ளுவனா
ரே.

இது ஆகாசம்பட்டு சேஷாச்சலம் எழுதிய ஆங்கிலம் கலந்த வெண்பா… இவ்விடத்தில் வெண்பாவின் புனிதம் கெட்டு விட்டதா…?

நீங்கள் கெட்டுவிட்டது என்று சொன்னால்… அதே காளமேகம் வழியில் செல்லும் புலவனாக நான் இருந்துவிட்டுப் போகிறேன்…

கெடவில்லை என்று சொன்னால்…
மேற்கண்ட பாடல்களை ஒரு மேடையில் வாசித்துக் காட்டுங்கள். ஆனால் இவை இரண்டுமே தங்களால் இயலாது என்பது எனக்குத் தெரியும்.

இதே கோபத்தோடு நான் இன்னொன்றை சொல்லி விடுகிறேன்.

கிரந்தச் சொற்கள் என்னென்ன… அதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்னென்ன… என்பதை முழுக்க மனப்பாடம் செய்து கொண்டு. யார் யார்… எங்கெங்கே இடுகை பதிவிட்டாலும் அந்த இடத்திற்கு உடனே சென்று. தனித்தமிழ் பற்றி பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்.

தேனீர் என்பதற்கு பதிலாக tea என்று எழுதினாலும்… பூ எனபதற்கு பதிலாக புஷ்பம் என எழுதினாலும்… ஏதோ நான் தீவிரவாதிகள் உடன் சேர்ந்து சதி செயலில் ஈடுபடுவதைப் போல… என்மேல் ஆயிரம் குறைகளை வைக்கின்றார்கள்.

வெண்பாவை வேண்டாம் என ஒதுக்கி வெளிநாட்டு வடிவங்களைக் கையாள் வதை விட ஒரு அசிங்கம் உண்டா? அவர்களிடம் ஓரு வேண்டுகோள் வைக்கிறேன்…

நடப்பியலில் எத்தனையோ குறைகள் இருக்கிறது. அதை முதலில் சரிசெய்யச் சொல்லுங்கள்…

அல்லது….

அவர்களின் கண்களுக்கு நான் மட்டும் தான் தெரிகிறேன் என்றால்… அவர்களின் கண்களை ஒரு நல்ல கண்மருத்துவரிடம் காட்டி அதற்கான சிகிச்சையை மேற் கொள்ளச் சொல்லுங்கள்…

வழக்கமான வெண்பா நடையை தவிர்த்து புதிய கோணத்தில் எழுதுகிறேன்…

இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்கள்… இந்த விஷயத்தில் என்னை உரசிப் பார்த்தால்…..

உங்களிடம் கேள்விகளையும் புதிய கோணத்தில் கேட்கவேண்டி இருக்கும்….

‘‘ஒன்’’னென்று சொன்னால்
உனக்கென்ன? அஃதைநான்
ஒன்றென்று சொன்னால்
உனக்கென்ன? – இன்றளவில்
நாமென்று சொன்னால்
நயமில்லை; மாற்றியதை
டீமென்று சொல்வதுதான்
Depth.

கவியரங்கு ஒன்றில் கவிச்சிகரம் தங்க அன்புவல்லி அவர்களின் தலைமையில் கவிதை படித்த போது ...

சமீபத்தில் தங்களை மிகவும் பாதித்த நிகழ்வு எது?

ஒரு குறிப்பிட்ட விளையாட்டு பொம்மையை வாங்கித் தரச்சொல்லி என் மகன் விடாமல் அழுததும்… அந்த தருணத்தில் என் வறுமையை எண்ணி நான் துவண்டதும் தான். சமீபத்தில் என்னை பாதித்த நிகழ்வு….

கவிதை சோறு போடுமா?

நான்
கண்டெடுக்கப் பட்டால்
எனக்கு சோறு போடுவது
கவிதையாகக் கூட
இருக்கலாம்…..

இதுவரை நான்
உண்டது
மண்விளைத்த சோறு…
எப்போது கிடைக்கும்
என
தெரியாமல் காத்திருக்கிறேன்
பண்விளைத்த சோறு…

கவிதை சோறு போடுமா? என்ற அதே கேள்வியுடன் நானும் காத்திருக்கிறேன்..

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்கிறார்களே? உண்மையா?
.
என் விஷயத்தில் இது உண்மைதான் நான் ஒவ்வொரு மேடையும் ஏறும்போது ஏதோவொரு மேடை என் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா எனும் கற்பனை யோடு கவிதை பாடிவிட்டுக் கீழே இறங்குவேன்.

கைதட்டும் பார்வையாளர்கள் முகத்தில் சிரிப்பையும் ரசனையும் பார்த்தவுடன் விழிவரை சுரக்கும் கண்ணீர் வெளியே வராமல் உள்ளேயே பதுங்கி விடும்.

பதுங்கிய கண்ணீரை
ஒருநாள் விசாரித்தேன்
ஏன் வெளியே
வரவில்லை என்று…..

என்னை ஆனந்தக் கண்ணீர்
எனச்சொல்லி
அசிங்கப் படுத்துவாய்
அதனால்தான்
நான்
பதுங்கினேன் என்று
பதில் சொன்னது…

தமிழ்நாட்டில் தங்களுக்குப் பிடித்த இடம் எது ? ஏன்?

ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு திருச்சிராப் பள்ளியில் நடந்த பொருட்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அது பொன்னால் ஆன அணிகலன்கள் சம்பந்தப் பட்ட பொருட்காட்சி என்பதால் அவை அனைத்துமே விலையுயர்ந்த தாகும். என் போன்ற ஏழையோ. நடுத்தர வாசியோ அதை வாங்க முடியாது.

ஆனால் அந்த பொருட்களை அங்கேயே பயன்படுத்தி demo பார்ப்பதற்கு அனுமதி உண்டு. என் வாழ்வில் அதையெல்லாம் வாங்க முடியுமா என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பொருளையும் அங்கே பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். அந்த தருணத்தில் அளவில்லாத மகிழ்வில் ஆழ்ந்தும் இருக்கிறேன்.

குறிப்பாக அவ்விடத்தில் நான் அணிந்து பார்த்த. பிளாட்டினம் கழுத்துச் சங்கிலியும், வைர மோதிரமும்… இன்னும் என் நினைவில் நிற்கிறது.

அதுபோல பொருட்காட்சி இனியும் வருமா என நினைத்துக் கொண்டு இருப்பேன். அதனால் அந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாரதி என்ற கவிஞனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு நாட்டின் தலையெழுத்தைக் கூட கவிதை வரிகள் மாற்றியுள்ளது என்றால். அது பாரதியின் வரிகளை அன்றி வேறு எதையும் என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது,

ஒரு எழுத்தாளன் தன்னை update செய்துகொண்டு அன்றாட நிகழ்வுகளை எழுதும்போது தான் அந்த வரிகளுக்கு வலிமையும் ஆயுளும் கூடும் என்பதற்கு.

என்னைப் பொறுத்தவரை பாரதியை அன்றி வேறு யாரையும் சான்றாகக் கொள்ள முடியாது.

கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் பற்றி ஒவ்வொரு வெண்பா… பாடுங்களேன்…?
.
கம்பன் : –
.
எல்லையில்லா கற்பனையால்
என்கம்பன் பாட்டுக்குள்
இல்லையென்ற ஒன்றுமங்கே
இல்லையென்பேன் – சொல்லைத்
தமிழ்க்கடனாய்த் தந்ததோ;
தான்வாங்கிப் பின்னே
தமிழ்க்கடனாய்ச் சென்றானோ
தந்து.
.
வள்ளுவன் : –
.
காற்றே புகாவண்ணம்
கட்டிப் பிடிப்பதைநான்
நேற்றே அறியவைத்த
நேயனவன் – போற்ற
ஒருவாய்ப்பு அளித்தாலும்
உள்ளத்தே நிற்கும்
திருவாய்ப்பு அளித்தீர்தித்
தித்து.
.
இளங்கோவடிகள் : –
.
முத்தென்று கோவலனை
முண்டம் எனவாக்கப்
பத்தினியாள் ஆங்கே
பதறிவந்து – முத்தில்லை
மாணிக்கந் தானென்று
மண்ணெரித்த காப்பியத்தைக்
காணிக்கை யாயளித்தார்
கைக்கு.

நிலாமுற்றம் கவியரங்கில் படித்து, சான்றிதழும் விருதும் பெற்ற தருணம். உடனிருப்பவர்கள் சினிமா பாடலாசிரியர் விக்டர்தாஸ், , மற்றும் அரிமதி தென்னவன்
தமிழ்நெஞ்சம் புகழாரம் எழுதியதற்கு. வெண்பா கொண்டல் விருது பெற்ற போது.
புதுவை சட்டமன்ற உறுப்பினர் திரு ரவி அவர்கள் கையால் வெண்பா வேந்தர் விருது வாங்கிய போது.
தமிழ்நெஞ்சம் புகழாரம் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட தருணம்.

தற்காலக் கவிஞர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்? ஏன்?
.
ஆகாசம்பட்டு சேஷாச்சலம்… தான் என்னை மிகவும் கவர்ந்தவர். ஏனென்றால்.
வெண்பாவை ஏதோ ஒரு பயத்துடனும் மரியாதையுடனும் வாசித்த காலத்தில் சாதாரண மனிதர்களும் அதை வாசிக்கும் படி. அனைவருக்கும் எளிமையாக்கிக் கொண்டு சென்றவர். அதுமட்டுமின்றி சமகால மக்களின் அறிவாற்றலை உள்வாங்கி. பாமரனுக்கும் புரியும்படி தனது எழுத்தை எளிமையாகக் கொடுப்பவர்கள் எல்லாரும் என்னைக் கவர்ந்தவர்கள் தான்.

அவரின் பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிட விரும்புகிறேன்…

நாரா யணாயிண்ணு
நாங்கூப்டா உம்காதில்
தாரா யணாயிண்ணு
தான்விழுதா? – வாரேவாவ்!
இந்த மனுஷங்க
காதுதான் கேட்கலைண்ணா
உந்தன் செவியிரண்டு
மா?
.
அவுத்துவுட்டா எங்க
அபேஸ்ஆகு மோன்னு
கவுத்துவுட்டா கூடக்
களவு! – செவுத்துவொட்டாப்
போட்டாலும் போயிடுதே
கல்யாண வூடுகளில்
ஜோட்டாலும் வேதனைஅச்
சோ! 
.
இங்கிலீஸ்ல பத்து
தமிழில் இருவது
விஞ்ஞானத் தில் கணக்கில்
எவ்வேயாம் – அஞ்சி
புவியியலில் ஆறு
வரலாறில் எண்டா!
எவன்டாடே வாத்தி
ஒனக்கு?
.
இது நீங்கள் திருத்துவதற்கு அல்ல…
என்னைத் திருத்திக் கொள்வதற்கு…

முகநூல் குழும அரசியல் பற்றி…
.
பொதுச் செயலில் ஒருவர் ஈடுபட்டால் அவ்விடத்தில் அரசியல் இல்லாமல் ஒன்றும் நடக்காது. இதற்கு பல காரணங்கள் உள்ளது… தேவையான பொருளாதாரம்… தேவையான கூட்டம்… செயலின் முன்னெ டுப்புக்கு தேவையான ஆள் பலம்…

இவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பது சற்று கடினம் தான். அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நபரை நாடவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
ஆகவே இங்கு அரசியல் இல்லாமல் தெளிவான செயல்பாடுகள் இருக்காது. அரசியல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. இது முகநூல் குழும நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.

ஆனால் முகநூல் அரசியலைப் பார்த்தால் சற்று காமடியாகத்தான்இருக்கிறது.

ஏனென்றால்…
மொபைலில்
டேட்டா இருக்கும் வரைதான்
அவர்களின் கோட்டா…
அதுவும் காலாவதி ஆனால்…
டாட்டா…

இந்த இடைப்பட்ட
தருணங்களில்
திறமைசாலிகளை
கண்டெடுக்க
நேரத்தை செலவழித்தால்
அரசியல்
மறைந்து போகும்….

தமிழ்நெஞ்சம் புகழாரம் நூலை வெளியிட்ட போது

தமிழ்நெஞ்சம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பொதுவாக ஒரு நூல் வரிகளைத்தான் சுமக்கும்… ஆனால் தமிழ்நெஞ்சம் அவ்வப் போது என் வாழ்வையும் சுமக்கிறது… தமிழ் மட்டுமல்ல தமிழ்நெஞ்சத்திற்கு நானும் கடமைப் பட்டுள்ளேன்…

தாங்கள் வெளியிட்ட நூல்கள் வாங்கிய விருதுகள் பற்றி…
.
தமிழ்நெஞ்சம் இதழின் ஐம்பது ஆண்டு நிறைவுக்காக. வாழ்த்துப்பா எழுத ஒரு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு. தமிழ்நெஞ்சம் மின்னிதழையும் அதன் நிறுவனர் திரு அமின் அவர்களையும் வாழ்த்தி. எண்பது வெண்பாக்களால் புகழாரம் எழுதினேன். அதை திரு அமின் அவர்கள் தனி நூலாக வடிவமைத்து வெளி யிட்டார். அதுவே எனது முதல் நூலாக்கம் ஆகும்.

விருதுகள் என்று பார்த்தால் நான் மிகவும் விரும்பக்கூடிய வெண்பா வுக்காக கிடைத்த விருதுகள் தான்.

அந்த வகையில் புதுவையில் வாங்கிய வெண்பா வேந்தர் விருது, சென்னை தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் முன்னாள் பண்பாட்டுத் துரை அமைச்சர் திரு. மாபா, பாண்டிய ராஜன் கைகளால் வாங்கிய குறளரசு விருது.

மற்றும் தமிழ்நெஞ்சம் இதழுக்கான புகழாரம் எழுதியதற்கு மிகப் பெரிய ஆளுமையான அன்புவல்லி அம்மாவின் திருக்கரங்களால் வாங்கிய. வெண்பா கொண்டல் விருதும்தான். என் விருதுகளில் சிறந்த விருதுகள்.

தங்கள் வெண்பாக்களில் அதிகம் அகம் சார்ந்தவையாக உள்ளனவே ஏன் ?
.
ஆம் ஐயா…! இதை நான் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.

தமிழ்நெஞ்சத்திற்காக நான் எழுதிய செய்யுள் அனைத்தும் அகம் அன்றி வேறொரு கோணத்தில் அமைந்திருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். செலவழித்த நேரமும் சிந்தனையும், கற்பனையும் அளவில்லாதது.

என்னளவில் தமிழ்நெஞ்சம் புகழாரம் ஒரு குட்டி நளவெண்பா.

அதுபோல தளம் கிடைக்கும்போது அதற்காக நேரத்தை, சிந்தனையை செலவழித்து வேறு கோணத்தில் எழுதினால் அதில் ஒரு நியாயம் உள்ளது.

தளமும், களமும் அதற்கான அங்கீகாரமும் கிடைக்குமா என்ற சந்தேகத்தில். எனது சிந்தனையை விரயம் செய்ய நான் விரும்பவில்லை.

அப்படியான தருணங்களில் இயல்பாக எழுத முடிந்தது. அகம் சார்ந்த கவிதைகள் தான்.

மேலும் நான் இன்றுவரை விரக்தியிலேயே வாழ்ந்துகொண்டு இருப்பதால் எனது வரிகளும் அதையே பிரதிபலிக்கிறது.

இன்னும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கற்பனையை ஊக்குவிக்கும் இடம் கிடைத்து விட்டால் அவ்விடத்தில் சிந்தனையை கவலையின்றி இறக்கி வைக்கத் தயாராக இருக்கிறேன்.

விருதுகளை விற்பனை செய்பவர்களைப் பற்றி…?
.
மக்கள் மத்தியில் தான் யாரென்று அறியப் படாத எழுத்தாளன் ஒரு புதிய சிந்தனையை, புதிய தத்துவத்தை உலகிற்கு சொல்லவேண்டும் என நினைத்தால். அது கல்லுக்குள் இருக்கும் தேரைக்குச் சமமாக அதே இடத்தில் நிலைகொண்டு நிற்கும். அதனால், தனது பெயரை எழுத்துலகில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உண்டு.

அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வியாபாரம் ஆக்குகிறார்கள் சிலர்.

அப்படி செய்வது தவறுதான் என்றாலும். இங்கே இன்னொரு நன்மையும் புதைந்துள்ளது. புதிதாகக் களமிறங்கும் எழுத்தா ளர்களுக்கு சின்ன சான்றிதழ் சின்ன பாராட்டு சின்ன நினைவுப்பரிசு.

இவையெல்லாம் எழுத்தாளனின் சிந்தனையை இன்னும் ஊக்குவிக்கும் என நினைக்கிறேன்.

அதாவது… குடியிருக்க வீடும், வீட்டில் அடுப்படியும், அடுப்படியில் அடுப்பும் இல்லாமல் platform ல் குடியிருக்கும் ஒருவன் கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்க நினைக்க மாட்டான். அதுபோல்… எண்ணத்தில் கற்பனை இன்றி, எழுத்துக் கலையில் குறைந்த பட்ச ஆர்வம் கூட இல்லாத ஒருவன் பணம் கொடுத்தேனும் கொடுக்கும் விருதை வாங்க நினைக்க மாட்டான். அதனால்… இதை விற்பனை என்று சொல்வதை விட. ஊக்கப் பரிசு என சொல்வதே சாலப் பொருத்தம்.

இன்னும் புரியும்படி சொல்கிறேன்… விருதை பணம் கொடுத்து வாங்கும் எழுத்தாளனுக்கும். பணம் இல்லாமல் விருது வாங்கும் எழுத்தாளனுக்கும். இடையே திறமையில் தான் வேறுபாடு இருக்கும்.
அப்படி பார்த்தால் பணம் இல்லாமல் விருது வாங்கும் எழுத்தாளனைத் தவிர. இவ்வுலகில் வேறு யாருக்குமே திறமை இல்லை என ஆகிவிடும்.

விருதைக் கொடுத்து ஊக்கப் படுத்துங்கள். அதில் தொடக்கநிலை கவிஞனின் சந்தோஷம் இருக்கிறது ஆனால். பணம் கிடைக்கிறதே என்று புதுக்கவிதை எழுதும் ஒருவனுக்கு மரபு மாமணி விருதைக் கொடுத்து விடாதீர்கள். அப்படி ஏதாவது கொடுத்ததாக நான் கேள்விப்பட்டால்.

திருமொழியாம் செந்தமிழைத்
தீயிட்டாய் என்று
செருப்போடு வாரும்என்
சீர்.

தங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
.
மழைக் காலத்தில்
மழை பொழிவும்…
வெயில் காலத்தில்
கனல் பொழிவும்…
காட்டுக்குள் நடப்பதைப்
பார்த்திருப்பீர்…

ஆனால் இவை அனைத்தும்
வீட்டிற்குள் நடப்பதைப்
பார்க்க வேண்டுமென்றால்
என் வீட்டிற்கு
வாருங்கள்…

வீட்டில் படுத்தே
விண் பார்த்துத்
தூங்குவேன்…

விட்டத்தின் விளிம்பில்
நிலவின் அழகை
ரசிப்பேன்…

மேற்குரையின் இடைவெளியில்
மேகத்தோடு
உரையாடுவேன்…

வெயிலில்
வீட்டுக்குள் இருந்தாலும்
ஓட்டில் இருக்கும்
ஓட்டை வழியே
கதிர்கள் என்னோடு
கதை பேசும்…

மழையில்
போர்வைக்குள் இருந்தாலும்
சாரல் என்னோடு
சரிசமமாய்ப்
படுத்துறங்கும்…
என் மனைவி கூட
சாரலைப் பார்த்து
சக்களத்தியா என
என்னிடம் ஒருமுறை
சண்டைக்கு வந்தாள்…

அவளை நான்…
வளைத்து அணைத்தால்
வானம் பார்க்கும்…
முத்தம் கொடுத்தால்
முகில் பார்க்கும்…
சரசமாடும் நேரமெல்லாம்
சாரல் பார்கும் …
நேசத்தில் இடைகிள்ள
நிலவு பார்க்கும்…
விளம்பினால் காதல்
விண்மீன் பார்க்கும்…
பின்னிருந்து கட்டி அணைத்தால்
பிறை பார்க்கும்…
கன்னத்தில் முத்தமிட்டால்
கதிர் பார்க்கும்…

இன்னும் புரியவில்லையா…?
இவர்கள் யாருமே பார்க்காமல்
என் இல்லாளோடு…
நான் இன்பம் காண

என் வீட்டைக் கட்டுவதுதான்
எனது எதிர்காலத் திட்டம்
.
சொல்லைக் கொடுத்தமொழி
சொர்க்கம்போல் வீடுகட்டக்
கல்லை கொடுத்தால்
களிப்பேன்நான் – இல்லம்
ஒழுகிடினும் வெண்பாவால்
ஒண்டமிழை நாளுந்
தழுவுகிறேன் அன்றோ
தனித்து.?

வளரும் இளம் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் தாங்கள் கூறும் அறிவுரை என்ன?
.
நடப்புச் செய்திகளை எழுத்தாக்கம் செய்யுங்கள் அதுதான் பொதுவான, எல்லோருக்கும் ஆன அறிவுரை.
ஆனால்… கவிஞர்கள் என்று வரும்போது சற்று கவனம் தேவை…

பழம்பெரும் புலவர்கள் அனைவருக்கும் தமிழ் நிகண்டு முழுக்க அத்துப்படி ஆகியிருக்க வேண்டுமாம். அதுதான் அவர் களின் முதல் தகுதியாம்.

அப்படியான ஆற்றல் இப்போது இருப்பது சற்று கடினம் தான். ஓசை இல்லாமல் வசன நடையில் எழுதும் நண்பர்களை இலக்கணம் கற்கச் சொன்னால். அவர்கள் பாரதியார் மற்றும் அப்துல்ரகுமான் போன்றவர்களைக் காட்டி தப்பித்துக் கொள்கிறார்கள்.

பாரதி அப்துல்ரகுமான் போன்றவர்கள் மரபை அறிந்து அதை மீறியவர்கள். அவர்களிடம் ஒரு வெண்பாவோ விருத்தமோ பாடச்சொன்னால் உடனே பாட இயலும். உங்களால் இயலுமா?

கற்றபின் மீறுவதற்கு கல்லாமல் இருக்க லாமே என்று சிலபேர் கேள்வி எழுப்பக் கூடும்…

நானும் புதுக்கவிதையில் இருந்து மரபுக்கு வந்தவன்தான். ஆனால் இன்றுவரை மரபை விட்டு மாற மனம் வரவில்லை.

யாருக்கு தெரியும் உங்களுக் குள்ளும் ஒரு பாரதி ஒரு அப்துல்ரகுமான் இருக்கலாம். அவர்களை வெளியே கொண்டுவர மரபும் துணைநிற்க வாய்ப்புள்ளது.

பாவலன்நான் என்று
பயிலாது இலக்கணத்தை
ஆவலுடன் சொல்லி
அலையாதே – தூவல்
பிடியென்றோர் வெண்பாப்
பிழையின்றி என்முன்
வடியென்றால் உன்றனுக்கே
வம்பு.

வெண்பா இலக்கணம் மற்ற பா வகை களைக் காட்டிலும் மிகக் கடினமானது என்கிறார்களே… அப்படி இருந்தும் கேட்ட வுடன் வெண்பா பாடும் ஆற்றல் தங்களுக்கு எப்படி வந்தது?
.
இதற்கு பெரிதாகக் காரணங்கள் ஏதும் இல்லை. மரபு அறிய தொடங்கிய நாள்முதல் இன்று வரை வெண்பாவில் மட்டுமே பயணிப்பதால் வந்தது தான்.

நெருங்கிய நண்பர்கள் மற்ற பா வகையும் எழுதச் சொன்னார்கள். ஆனாலும் இதை எழுதும்போது ஏற்படும் மன நிறைவும், சந்தோஷமும் வேறெதிலும் இல்லை.

கடினமான இலக்கணம் என்பதால் எங்கோ ஒருசில இடங்களில் என்னையும் இது காலைவாறி விடும்.

கம்பன் வரிகளுக்கே எதிராக காளமேகம் பாடும்போது நானெல்லாம் எம்மாத்திரம்?

ஏதோ எழுதுகிறேன் அவ்வளவு தான்…

கவிதை என்பது….?
சந்தத்துடன் சொல்லும்சங்கதி…

புதுக்கவிதை என்பது…?
கால்கொண்டு நிற்கும் உரைநடை…

உரைநடை என்பது…?
எடையே இல்லாத பொருள்…

ஊடகம் என்பது…?
ஊதாமல் இருப்பது பலூனை…

தனித்தமிழ் என்பது…?
நிறைவேறாத கனவு.

கலப்பு மொழி என்பது…?
நிறைவேறிய வாழ்க்கை…

விமர்சனம் என்பது…?
காய்த்த மரத்திற்கான கல்லடி…..

பாராட்டு என்பது…?
உடனே கடக்க வேண்டிய வேகத்தடை…

உலகிலேயே சிறந்த கவிதை எது…?
இன்றுவரை எழுதப் படாதது…

உலகிலேயே சிறந்த புத்தகம் எது…?
வலி…

நாத்திகன் என்பவன்…?
கடவுள் பெயரை அதிகளவு உச்சரிப்பவன்…

ஆத்திகன் என்பவன்…?
துன்பத்தில் மட்டும் கடவுள் பேரைச் சொல்பவன்….

கனவு என்பது…?
தூக்கத்தில் கிடைக்கும்இன்பம்…

நினைவு என்பது…?
விழிப்பில் கிடைக்கும்துன்பம்…

காதல் என்பது…?
வாழ்க்கையின் அங்கம்…

வாழ்க்கை என்பது…?
ஆசையின் உடல்…

கவலை என்பது…?
விடைதேடும் கேள்வி…

சந்தோஷம் என்பது…?
விடைபெற்ற கவலை…

இளமை என்பது…?
சதந்திரப் பயணம்…

திருமணம் என்பது…?
தண்டவாளப் பயணம்…

பிரிவு என்பது…?
உறவால் ஏற்படும் காயம்…

உறவு என்பது…?
பிரிவால் கிடைக்கும் மருந்து…

இரகசியம் என்பது…?
பெண் வயிற்றில் வளரும் கரு.

நன்கொடை என்பது…?
ஆதாயம் தேடும் இருள்…

ஆதாயம் என்பது…?
களவுக்கு கிடைத்த வெளிச்சம்…

மழை என்பது…?
நம்மைச் சிரிக்க வைக்கும் வானத்தின் கண்ணீர்.

புயல், வெள்ளம் என்பது…?
நம்மை அழ வைக்கும் இயற்கையின்
கொண்டாட்டம்.

முதல் எதிரி யார்…?
தான் என்ற கர்வம்…

முதல் நண்பன் யார்…?
பணிவு…

பசி என்பது…?
உழைப்பின் நண்பன்…

உழைப்பு என்பது…?
வறுமையின் நண்பன்…

வரம் என்பது…?
கிடைக்காத இடத்தில் கேட்பது…

கடவுள் என்பது…?
அது ஒரு வார்த்தை…

பக்தி என்பது…?
போதை…

முக்தி என்பது…?
கோமா நிலை…

உண்மையான ஓவியன் யார்…?
விளக்கு அணைக்கப் பட்ட முதலிரவு அறையை வரைந்து காட்டுபவன்.

உண்மையான எழுத்தாளன் யார்…?
மொய் எழுதும்போது 101 ஐ பிழையின்றி எழுதுபவன்.

அரசாணையை மகிழ்வோடு மதிப்பவன் யார்…?
குடிகாரன்…

அரசு விற்பனை செய்யும் மது…?
மனதிற்கு கேடு விளைவிக்காதது…

அரசு விற்பனை செய்யும் குடிநீர்…?
உடலுக்கு கேடு விளைவிப்பது…

தொடங்க வேண்டியது…?
போராட்டம்…

முடிக்க வேண்டியது…?
தொடங்கிய போராட்டத்தை…

மதமாற்றம் என்பது…?
வணங்கும் முத்திரையின் இன்னோர் வகையைப் பின்பற்றுவது.

சிற்றின்பம் என்பது…?
மனதை ஒருநிலைப் படுத்தும்…

பேரின்பம் என்பது…?
புலம்பலின் வாழிடம்…

பயங்கரமான நோய் எது…?
பொறாமை…

நான் என்பது…?
நீங்கள் தான்…

நீங்கள் என்பது…?
நான் தான்…

விடைபெறுகிறோம். நன்றியும் வணக்கமும்!


3 Comments

செல்வம் பெரியசாமி · மார்ச் 3, 2022 at 8 h 21 min

மின்னிதழ் அருமை ஐயா

மாலதி. திரு · மார்ச் 4, 2022 at 0 h 00 min

வெண்பா…வேந்தருக்கு

வெற்றி நிச்சயம்.

செல்லமுத்து பெரியசாமி · மார்ச் 5, 2022 at 15 h 15 min

அருமை! அரும ஐயா! தமிழ்நெஞ்சம் இதழ் வழி வரதராஜனைப்பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தது ஐயா! மிக்க மகிழ்ச்சி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »