மின்னிதழ் / நேர்காணல்
நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின்
வணக்கம் பிரவந்திகா. உங்களைப் பற்றி கூறுங்கள்.
வணக்கம் ஐயா. நான் சு.பிரவந்திகா. மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். பெற்றோர் விமலா, சுரேஷ் கண்ணன் ஆவார்கள். சென்னையில் வசித்து வருகிறேன். புதுக்கவிதைகள், தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான கதைகள், நூல் விமர் சனங்கள் எழுதிக் கொண்டு வருகிறேன்.
எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
எனது மூன்றரை வயதில் ஆச்சி அன்புச்செல்வி சுப்புராஜூ, தாத்தா சுப்புராஜூ அவர்களுடன் ஒரு கவியரங்கம் சென்று இருந்தேன். அங்கு உழவர்களைப் பற்றி எல்லோரும் கவிதை வாசித்தார்கள். அதைக் கேட்டதும் எனக்குத் தோன்றிய கவிதையை நானும் கூறினேன். அங்கிருந்த பெரியவர்கள் ‘‘வரகளகவி’’ என்று பாராட்டினார்கள். அதனால் ஏற்பட்ட ஆர்வத்தில் தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். தமிழில் புதுக் கவிதைகள் எழுதி கவியரங்கங்களில் வாசித்து வந்தேன். எனது புதுக்கவிதைகளில் ஒன்று ‘‘கவிமலர்கள் 1130 கவிதைகளின் சங்கமம்’’ என்ற உலகசாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
புதுக்கவிதையுடன் வேறு என்ன எழுதி வருகிறீர்கள் மா?
புதுக்கவிதைக்கு அடுத்ததாக தன்முனைக் கவிதைகள் எழுதுவதில் எனக்கான ஆர்வம் பெருகியது. எனது ஆச்சி அன்புச்செல்வி சுப்புராஜூ அவர்கள் «அன்பின் சங்கமம் சிறுவர் உலகம்» வழியாகக் குழந்தைகளுக்குத் தன்முனைக் கவிதைகள் எழுதும் பயிற்சி அளித்து வருகிறார்கள். என் ஆர்வத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
எனது ஏழு வயதிலிருந்து தன்முனைக் கவிதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். நான் எழுதிய தன்முனைக் கவிதைகள் ‘‘மலர்கள் தீட்டிய வரைவுகள்’’ தொகுப்பு நூலிலும், முகநூல் குழுமங்களிலும், இணைய வெளிகளிலும் வெளிவந்துள்ளன. ‘‘இங்காவின் ஆலாபனைகள்’’ மற்றும் ‘‘அரும்புகளின் ஊர்வலம்’’ போன்ற தொகுப்பு நூல்களில் வெளிவரவிருக்கின்றது. பல கவியரங்குகளில் கலந்து கொண்டு தன்முனைக் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறார் படைப்பாளர்கள் கலந்து கொண்ட தன்முனைக் கவியரங்கம் ஒன்றிற்கு தலைமை தாங்கி நடத்தித் தந்துள்ளேன். பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ‘‘தன்முனைக் கவிதைகள் எழுதிய முதல் குழந்தை’’ என்ற சிறப்பு எனக்குண்டு.
மகிழ்ச்சி பிரவந்திகா. வாழ்த்துகள். சிறுவர் இலக்கியத்தில் சிறப்புடன் செயல் பட்டு வருகிறீர்கள் அதனைப் பற்றி கூறுங்கள்.
நன்றிங்க ஐயா. ஊரடங்குக் காலத்தில் ‘சிறுவர் இலக்கியச் செம்மல்’ கன்னிக்கோவில் இராஜா மாமா, தமிழ்ச்செம்மல் உமையவன் மாமா இவர்களின் கதைகளைக் காணொளி வழியாகக் கூறி வந்தேன். அந்த சமயத்தில் சிறுவர்களுக்கான பல அமைப்புகள் இயங்கி வருவதை அறிந்தேன். உழவுக்கவிஞர் உமையவன் மாமா மூலமாக ‘‘புத்தக நண்பன்’’ சிறுவர் அமைப்பில் ‘‘கதை சொல்லியாக’’ அறிமுகம் ஆனேன். தொடர்ந்து பல அமைப்புகளின் வழியாகப் பன்னாட்டுக் குழந்தைகளுக்கும் கதை சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
கதைசொல்லியான நீங்கள் கதை எழுத ஆரம்பித்தது எப்பொழுது?
‘‘லாலிபாப் சிறுவர் உலகம்’’ சிறுவர் குழுமத்தில் நிறுவனர் கன்னிக்கோவில் இராஜா மாமா குழந்தைகளுக்கு கதை எழுதும் பயிற்சி தந்து கொண்டுள்ளார். அதில் கலந்து கொண்டு கதை எழுதும் நுணுக்கங்கள் அறிந்து கொண்டு எழுதத் தொடங்கினேன்.
நான் எழுதிய கதைகளும், நூல் விமர்சனங்களும் ‘‘அந்தியில் மலர்ந்த மொட்டுகள்’’ , ‘‘சுக்கா…. புக்கா… முக்கா…’’ ‘‘குட்டி மேகங்கள் தூவிய தூறல்கள்’’, ‘‘வாண்டுகள் சொன்ன கதைகள்’’ போன்ற தொகுப்பு நூல்களிலும் வெட்சி இலக்கிய இதழிலும் பல மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன.
எனது சிறுவர் கதைகளில் சிலவற்றைத் தொகுத்து ‘‘சிறகடிக்கும் பட்டாம்பூச்சி’’ என்னும் சிறார் கதை நூலாக ‘‘லாலிபாப் சிறுவர் உலகம்’’ பதிப்பகம் வாயிலாகச் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
உங்களின் புத்தகம் வெளியான மைக்கு எங்களின் வாழ்த்துகள். மேலும் எம்மாதிரியான நிகழ்வுகளை வழங்கி வருகிறீர்கள்?
மனமார்ந்த நன்றிங்க ஐயா. ‘‘தமிழாழி தொலைகாட்சி – கனடா’’ வழியாக ஒளிபரப்பாகும் ‘‘பல்சுவைக்களம்’’ நிகழ்வில் பன்னாட்டுத் தோழமைகளுடன் இணைந்து கதைகள் கூறுவது, கவிதைகள் வாசிப்பதுடன் இணைத் தொகுப்பாளராகவும் பயணித்து வருகிறேன்.
நீங்கள் பெற்ற சான்றிதழ்கள், விருதுகள் ?
எழில் இலக்கியப் பேரவை, கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்கம், தமிழ்ப்பட்டறை, உலகத்தமிழ் ஹைக்கூ மன்றம், தன்முனைக் கவிதைகள் குழுமம், கவியுலகப் பூஞ்சோலைக் குழுமம், தமிழ் அமெரிக்கா சிறுவர் பேரவை, தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவை, புத்தக நண்பன், லாலிபாப் சிறுவர் உலகம், கிட்ஸ் தமிழ் ஸ்டோரீஸ், அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் உள்ளிட்ட உலகளவிலான பல அமைப்புகளின் வாயிலாகக் கதைகள் சொல்வதிலும், கவிதைகள் எழுதுவதிலும், வாசிப்பதிலும் பல சான்றிதழ்களையும் ‘‘இளங்கவி’’, ‘‘வளருங்கவி’’, ‘‘இளம் எழுத்தாளர்’’ உள்ளிட்ட சில விருதுகளையும் பெற்றுள்ளேன்.
சிறப்பு. உங்களின் எதிர்கால கனவு என்ன?
வாசிப்பதும், எழுதுவதும் மிகவும் பிடிக்கும். நிறைய வாசிக்க வேண்டும். எழுத வேண்டும். சொந்தமாகத் தொழில் தொடங்கி நடத்த வேண்டும் என்ற ஆர்வமுள்ளது.
உங்களின் கனவுகள் நிறைவேற எங்களின் வாழ்த்துகள்.
நேர்காணல் கண்டு வெளியிட்டு ஊக்கம் தரும் உங்களுக்கும் எனது வணக்கங்களும் நன்றியும் ஐயா.
1 Comment
அ.முத்துவிஜயன் · மார்ச் 1, 2022 at 1 h 18 min
மழலை கவிஞர் பிறவிப்படைப்பாளி பிரவந்திகா வியக்கவைக்கும் ஆற்றல் வாழ்த்துகள்.