மின்னிதழ் / நேர்காணல்

பாவேந்தர் பரம்பரை விழுது என புலவர் புலமைப்பித்தன் அவர்களால் அடையாளப் படுத்தப் பட்டவர் கவிக்கோ துரைவசந்தராசன் அவர்கள். தந்தைப் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைவழி ஈர்க்கப்பட்டு இன்றும் புரட்சிகரமான எழுத்துகளால் தன்னை நிலை நாட்டிக்கொண்டிருப்பவர்.தாம் வசிக்கும் மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் 1984ல் தொடங்கப்பட்ட பண்ணைத் தமிழ்ச்சங்கம் மூலம் எண்ணற்ற இலக்கியவாதிகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துகளை ஏந்தாத ஏடுகளே இல்லை எனலாம். பல்வேறு விருதுகள் புதுச்சேரி அரசு விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்திருப்பது இவரது எழுத்துக்கு கிடைத்திருக்கும் மரியாதை. ஐயாவிடம் தமிழ்நெஞ்சத்திற்கு பேட்டி என்றவுடன் முகம் மலர வரவேற்று தனது பதில்களை சிறப்பாக தந்து அனுப்பினார் வாழ்க கவிக்கோ வளர்க தமிழ்த்தொண்டு

 

நேர்காணல்
பொன்மணிதாசன்

நக்கீரன் கோபால் அவர்கள் கவிக்கோவை சிறப்பிக்கும் காட்சி
டிசம்பர் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
பாவேந்தர் விருது பெற்றபோது கவிஞர் சுரதா மற்றும் வி.ஜி.சந்தோஷம் அவர்களுடன் கவிக்கோ
தோழர் பேரா நல்லக்கண்ணு அவர்களுடன் கவிக்கோ துரை வசந்தராசன் அவர்கள்
புதுச்சேரியில் சங்கத்தமிழ்ப் புலவர் விருது பெற்ற தருணம் கவிக்கோ விருது வழங்கி சிறப்பிப்பவர் புலவர் அனந்தசயனம் அவர்கள்
பாவேந்தர் விருது வழங்குபவர்: தமிழ்க்குடிமகன் உடன்: மன்னர்மன்னன்
கவிக்கோ தன் துணைவியாருடன்

ஓர் இலக்கியவாதி எந்த ஒன்றோடும் சமரசம் செய்துகொள்வதில்லையே ஏன்?

இலக்கியம் என்பது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதல்ல.கண்டு, கேட்டு, அனுபவித்த உணர்வு களின், ஆழ் மனத்துள் அமர்ந்து அமர்க்களம் செய்யும் சிந்தனைகளின் சிலைவடிப்பு. பிசிறில்லாத உளவடிவம். இலக்கை நோக்கிய ஈர்ப்பு விசை. தனக்குச் சரியெனப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கிற சத்தியம்.
சத்தியங்கள் சமரசம் செய்து கொள்வ தில்லை. செய்து கொண்டால், அது சத்தியமு மில்லை.
சேவேறிய மரத்தின் செதில்கள்கூட செல்களுக்கு உணவாவதில்லை.உணவா னால் அது சேவேறியதுமில்லை.
நல்ல இலக்கியவாதி சேவேறிய ,நுனிவரை நிமிர்ந்திருக்கும் குறிஞ்சித் தேக்கு. எளிதில் வளைவதில்லை! தனக்குச் சரியெனப்பட்டால் ஏற்பதற்கும் தயங்காத் தன்மையாளன். ஓர் இலக்கியவாதியாய் என்னியல்பும் இதுதான். நான்

‘‘குளிருக்கும் கைகட்ட மறுப்பவன்!
குனியாமல் கால்சொறியக் கற்றவன்!
நெளியாத ஒன்றைப்போல் செங்குத்து!
என்றன்
நிழல்கூட எவர்காலிலும் விழுவதில்லை!’’

கொள்கைப் பிடிப்பும் தன்மானமும் தான் ஒரு இலக்கியவாதியின் உயிர்மூச்சு. அதனால்தான் அவன் எதனோடும் எளிதில் சமரசம் செய்துகொள்வதில்லை. இது நல்ல இலக்கியவாதிகளுக்கு! நகல் இலக்கியவாதிகளுக்கல்ல!

தாங்கள் மரபுக்கவிஞர். ஆனாலும் புதுக் கவிதை,நவீனம், ஹைக்கூ என எல்லா மும் எழுதுகிறீர்கள். எதை எழுதும்போது ஆத்மார்த்தம் உணருகிறீர்கள். ஏன்?

மரபு என் தாய்வீடு! மரபு,நான் உருண்டுபுரண்ட மண். உலகின் எந்த மூலைக்கும் போய்வரலாம்.சொந்த ஊரின் சுகம் சொந்தவீட்டின் சுகம் எந்த நாட்டிலும் கிடைக்காது.
என் மகன்கள், மகள் வெளிநாடு களிலிருத்து வற்புறுத்தி அழைப்பார்கள். அவர்களுக்குச் சொல்வேன் ‘’நான் தூங்கு வதற்கு மாதவரம் போகவேண்டுமே! என்ன செய்வது?’’
அதே விடைதான் தங்கள் வினா வுக்கும்.
நான் புதுக்கவிதை, நவீனம், ஹைக்கூ என்று கவிதையின் பலபரப்புகளிலும் பறக் கிறேன். காரணம், ‘’மரபுக் கவிஞர்களுக்குத் தேமா புளிமா விட்டால் வேறெதுவும் தெரியாது. அவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு தேங்கிக் கிடப் பவர்கள்.’’ என்ற பலரின் எண்ணத்தை உடைக்கவேண்டும் என்பதற்கே. நான் பலமேடைகளில் சொல்லியிருக்கிறேன்
‘’மரபுக்கவிதை தன் மரணப் படுக்கை யில் கிடப்பதாக பலபேர் மல்லாந்து துப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்னைப் படிக்காதவர்கள்» என்று..
‘’புதுக்கவிதைகளின் சொல்லாட்சி, ஹைக்கூவின் உள்ளடக்கம், நவீனத்தின் படிமம் குறியீடு உருவகங்கள் என அனைத்தையும் உள்ளடக்கி மரபில் புதுமை செய்கிறீர்கள்’’ எனப் பல தமிழறிஞர்கள் சொல்கிறபோது பூரிப்பது உண்மை.
கவியாளுமைகள் நிறைந்த அவை யில் என்னைக் குறிப்பிடும்போது‘’ அவர் மரபுக்கவிஞரல்லர். நவீனமரபின் நாயகன்.அவர் எல்லாத் திடலிலும் விளை யாடுவார். அவர் விளையாடிய திடலில் மீண்டும் போய் நாம் விளையாட முடியாது!’’ என்று சகபடைப்பாளிகளால் பாராட்டப்படுவதற்குக் காரணமே என் மரபுதான். எல்லாக் கவிதை களிலும் என் ஆத்மார்த்தம் உணர்கிறேன். மரபில் ஆத்மார்த்தமாய் உறைகிறேன்.

ஒரு கவிதையை எழுதும்போது ஏற்படும் உத்வேகம், அது பேசப்படாத போது எழுவதில்லை.அதற்கான காரணம் என்ன?

எல்லாக் கவிதைகளும் பேசப் படுமென்பது இயலாதவொன்று.படைப்பாள னின் உத்வேகமும் படிப்பாளியின் உத்வேக மும் எப்போது ஒரே புள்ளியில் இணைகி றதோ ,அப்போது தான் அது பேசப்படும். எல்லாக் கவிதைக்கும் அது சாத்தியமன்று. நகை களெல்லாமே தங்கம் தானென்றாலும் தனக்குப் பிடித்ததைத் தேடியெடுக்கிற உளவியல்தான் இதுவும். அதற்காக கவிஞன் தன்னை மாற்றிக்கொள்ளவியலாது.முக நூலில் என்கவிதையைப் படித்தவர்களில் வெகுசிலர் உரிமையோடு ‘‘எல்லாக் கவிதைகளும் அருமையாக இருக்கின்றன.ஒன்றிரண்டு கவிதைகள் சாதாரணமாக இருக்கின்றன. சாதாரணமாக உள்ள வற்றைத் தவிர்த்தால் எப்போதும் உச்சி உங்களுக்கானதாகவே இருக்குமே’’ என்ற னர். அவர்களிடம் சொன்னதே தங்களுக்கும் ஒருவகையில் விடையாக அமையலாம். நான் சொன்னது இதுதான்
‘’சிறந்த கவிதைகள் என்பதற்காக மட்டுமே நான் பதிவுசெய்வதில்லை. எனக்குப் பிறந்தகவிதைகள் என்கிற பெருமிதத்தோடு பதிவுசெய்கிறேன்!’’.
எனவே ஒருகவிதை பேசப்படாத போது தொய்வடைவதில்லை. நாளை அந்தக் கவிதையே காலத்தின் கைரேகை யாகலாம், போட்டியில் பங்குபெற்றுப் பரிசுபெறாத பாரதியின் கவிதையைப் போல. ஆனாலும் சிறப்பின்பாலால் தாயும் மனம்திரியும் என்பதாகவும் இருக்கிறது.

மொழிச்சிறப்பைப் பலரும் பாடியுள் ளார்கள். ஏன் தாங்களும் பாடியிருக்கி றீர்கள். இதில் தங்களைக் கவர்ந்தவர் யார்? எதனால்?

மொழிச்சிறப்பைப் பாடாத புலவர் கள், கவிஞர்களே இல்லை என்னு மளவிற்குப் பல நூறாண்டுகளாகப் பாடிவருகின்றனர். அவர்கள் அனைவரை யும் நான்படித்தவனல்லன்.
‘’நீராருங் கடலுடத்த….’’ என்ற சுந்தரம்பிள்ளையின் பாடலைத் தமிழக அரசே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக வைத்துப் போற்றுகிறது.
‘’வாழ்வினில் செம்மை செய்பவள்நீயே’’ என்ற பாவேந்தரின் பாடலே புதுவை அரசின் தமிழ்வாழ்த்துப்பாடல்.

‘’கனியிடை யேறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!’’

என்றும் ‘’தமிழெங்கள் உயிருக்கு நேர்’’ என்றும் தமிழைப்பாடிய பாவேந்தரே என்னைக் கவர்ந்தவர்.
‘’ஏன் தாங்களும் பாடியிருக்கி றீர்களே’’ என்று என்னையும் இணைத்த பிறகு என்னைக்கவர்ந்தவர் கவிக்கோ துரைவசந்தராசன்தான்.
எதனாலென்றால், தமிழின் தோற் றத்தைச் சொன்னதிலேயே உச்சம் ‘’கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே’’ என்பதுதானே. அதற்கும் முன்பே தோன்றியது நெருப்பே என்கிற அறிவியலைத் துணைக்கழைத்துக்கொண்டு ‘’தீப்பிறந்த நாளுக்கு முன் பிறந்த தமிழே’’ என்றும், பிரபஞ்சம் என்கிற பெரிய முட்டையைத் தானே உடைத்துக்கொண்டு வெளிவந்தவள் என்தாய் என்றும் உலகமொழிகளுக்கெல்லாம் தன் பனிக்குடத்தவள் என்தாய் என்ற பொருளிலும் நம் அன்னைத்தமிழை ஆராதித்திருக்கிறேன். அந்தக் கவிதை இதுதான்….

‘’வானைத்தன் கால்விரலில் வைத்திருக்கும் பேரண்ட
மோனப் பெருவெளியின் முன்முட்டை ஓடதனைத்
தானே உடைத்துவந்த தன்மானத் தாய்த்தமிழே!
கூனல் சிறிதின்றிக் குத்தீட்டி போல்நிற்கும்
மானத் தமிழ்மறவர் மன்றம் வருபவளே!
சீனப் பெருஞ்சுவரைச் சின்னதாய்க் காட்டுகின்ற
ஞானச் செருக்குகளின் நாற்றங்கால் ஆனவளே!
ஏனமாய் பூவிருந் தேந்திப் பரிமாற
மோனையாய் முந்துகின்ற முத்தமிழே! சங்கத்தின்
மானத் தமிழ்மடியாய் மல்லர்கள் தோள்நின்று
நாணச் சுரப்பிகளின் நாவிருந்த காதலுக்கு
மோன மொழிகொடுத்து முத்தமழை பெய்தவளே!
ஊனம் சிறிதுமின்றி உயிர்ப்பாட்டில் தீவளர்த்துக்
கான மொழிமழையில் காதல் நனைத்தவளே!
வீணர் விரலெழுத்தில் விற்கத் துடிக்கையிலும்
பாணர்தம் பாட்டெனவே பாய்ந்தே எழுந்துவந்து
ஆனமட்டும் கீழடியின் ஆழப் புதையலெனக்
காணக் கிடைத்திருக்கும் காலத்தின் கையெழுத்தே!
கோணல் உலகத்தின் கோடாய் உயர்ந்தவளே!
நாணல் உலகின் நரம்பறுத்து நிற்பவளே!
வீணில் விருந்தாக்க வேற்றுமொழி தான்கலந்து
வானில் பருந்தெனவே வாய்பிளந்து நிற்போரைத்
தேனில் விடம்கலந்து திண்ணைகளில் விற்போரைச்
சாணைப் பிடித்துவை! சந்ததியைக் கூர்தீட்ட
வாநீ! தமிழே!வளர்பிறை நாளினியே!
ஆணை! தமிழே! அறி!’’

இது இருபத்தாறு அடிகளாலான பஃறொடை / கலிவெண்பா. இருபத்தாறடிகளும் ஓரெதுகை / இனவெதுகையே பயின்றுவரும். நான் சொல்கிற இக்கருத்து நானறிந்தவரை மட்டுமேயன்றி வேறல்ல.

தன்மானத் தமிழர் கி.வீரமணியுடன் கவிக்கோ
இம்மாத இதழ் தரவிறக்கம் செய்ய
சுப.வீ அவர்களுடன் கவிக்கோ

ஏதோ ஒரு கவிதையின் தாக்கம் தங்களைத் தூங்கவிடாது செய்திருக்கும். அது யாருடையது? அதன் சிறப்பென்ன?

எந்தக் கவிதையும், அது பிறப்பதற்காக, படைப்பாளனைத் தூங்கவிடாமல்தான் செய்யும். என்னுடைய பெரும்பான்மையான கவிதைகள், அவை பிறப்பெடுக்க, என்னைத் தூங்கவிடாமல்தான் செய்திருக்கின்றன. பிறந்தபின் எவரையாவது தூங்க விடாமல் செய்திருக்கும். பாலூட்டிதான் தீரவேண்டும் என்கிற நிலையிலுள்ள ஒருதாயின் மார்பக வலியைப்போல், நிறைவயிற்றுக் கர்ப்பம்போல் கருக்கொள் ளும் கவிதைகள் அனைத்துமே தூங்க விடாமல் செய்வனவே.
முதன் முதலில் எனைத் தூங்க விடாமல் செய்தது ஒரு ஒற்றைவரிக் கவிதை. அதன் தாய் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்.
1973 ஆகஸ்டு 15 ஆம் நாள். என் கல்லூரி மாணவப்பருவம். நான் படித்த திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி யில் கவியரங்கம். உரிமைக்குரல் எனும்தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமை. அக் கவியரங்கத்தில் என் உரிமைக்குரல்

‘‘காம்பில்லாக் குடையான வானத் திற்குள்
கதிரவனைச் சுற்றிவரும் பூமி யாகிக்
காம்புடைய குடையேயுனைச் சுற்று கின்றேன்
காதலுக்குக் குரல்கொடுத்து வாடி ராணி!

சாம்பல்நிலை யடைந்தாலும் ராணி உன்னைச்
சதமாகப் பெற்றிடவே சந்து பொந்தில்
ஓம்புகிறேன்! உரிமைக்குரல் எழுப்பு கின்றேன்!
உரிமைக்குக் குரல்கொடுத்து வாடி ராணி’’

என்று காதலாக ஒலித்தது. கவிக்கோ கைதட்டிப் பாராட்டினார். கவியரங்கம் நிறைவுற்றபின் தனியாக அழைத்துப் பாராட்டி ஒரு தலைப்பு தந்து அவருடைய கல்லூரியில் நடைபெறவிருந்த ஒரு கவியரங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். அந்தத் தலைப்புதான் என்னைத் தூங்கவிடாமலல்ல, புரட்டிப் போட்ட தலைப்பு. அதுதான் எனக்குத் திருப்பம்தந்த தலைப்பு.
அது – ‘’எரியும் வயிறும் எரியாத அடுப்பும்!’’.

தங்களின் இனிய நண்பர் கவியரசு விக்டர்தாஸ் திரைத்துறையில் வலம்வருபவர். அவரது துறையில் என்றேனும் நுழைய விருப்பப்பட்டு அவரிடம் பேசியதுண்டா?

இல்லை. நான் 1982 இல் ஒரு முறையும் 1984 இல் ஒருமுறையும் திரைத் துறையில் நுழைய முயன்றேன். படங்களின் பெயர்கள் நினைவிலில்லை. சூழலைச்சொல்லி தத்தகாரத்திற்குப் பாட் டெழுதச் சொன்னார்கள். எழுதினேன். நன்றாக இருந்ததாகப் பாராட்டினார்கள். சில சூழல்கள் காரணமாகத் திரைத்துறை எனக்கு விருப்பமில்லாமல் போனது. இப்பொழுது அந்த எண்ணமே இல்லை.
வித்தகக் கவிஞர் விக்டர்தாஸ் என்னை அகம்நிறைய அப்பா என்றழைக் கக்கூடிய நண்பர். அவரே ஓரிருமுறை என்னைத் திரைப்படத்துறைக்கு அழைத் தார். ஆயினும் எனக்கு விருப்பமில்லை என்றவுடன் விட்டுவிட்டார்.

கவிமணி விருது தமிழ்நாடு கவிமணி மன்றம் வழங்கியது
திரைப்பட இயக்குனர் முத்துராமன் அவர்களுடன்
ஓவியப்பாவலர் அமுதோன் அவர்களுடன் கவிக்கோ
கண்ணதாசன் கலைஇலக்கிய மன்றத்தின் பாரிட்டு மழையில் கவிக்கோ

சங்க இலக்கியம் – தற்கால இலக்கியம் வேறுபாடு!

இலக்கியம் என்பதே காலத்தின் கண்ணாடிதானே! அந்தக் காலத்தின் சூழல்வேறு.இன்றைய சூழல்வேறு. அந்த வேறுபாடுகள் இலக்கியத்திலும் வெளிப் படுகிறது.
வேறுபாடுகள் புறவடிவத்திலும் உள்ளன. சங்க இலக்கியங்களின் வடிவம் பெரும்பான்மை அகவல்.
சிலப்பதிகாரம் உரையிடைபட்ட பாட்டுடைச்செய்யுள்.திருத்தக்கதேவர் விருத்தம். வள்ளுவம் வெண்பா. வடிவ மாற்றங்கள் காலம்தோறும் பெற்று பரந்து விரிந்து நிற்கிறது.
சங்க இலக்கியங்களின் அகவடிவம் காதலும் வீரமும். பெயர்சுட்டப்படாத காதல் பாடல்கள் அகமாயின. பிற புறமாயின.
இக்காலத்திலும் வடிவ, உள்ளீடுகள் பரந்து விரிகின்றன. புதுக்கவிதைகள், ஹைக்கூ, நவீனம், லிமரைக்கூ, தன்முனை என்று வடிவமாற்றத்திற்குட்பட்டே வளர் கின்றன. ஆனாலும் அவையும் மரபின் வேரிலிருந்தே கிளைத்து வருகின்றன என்பது என்துணிபு.
இணைக்குறள் ஆசிரியப்பாதான் புதுக் கவிதை.
மூவடியில் வரும் சிந்துதான் ஹைக்கூ.
ஈரடி ஆசிரியப்பா அல்லது ஈரடி கொச்சகம்தான் தன்முனை.
எதுகைகள், மோனைகள் வைப்பு முறையை யொட்டி லிமரைக்கூ, எதுகைக்கூ, மோனைக்கூ என்றெல்லாம் வகைபிரிக்கப்படுகிறது.
படிமங்கள் குறியீடுகளாலான உரை வடிவம் நவீனம்.
எல்லாமே மரபின் வேர்களிலிருந்து கிளைத்த மாற்று வடிவங்களே!
உள்ளீடுகளும் அகமும் புறமும்தான்.
சங்க இலக்கியங்களின் தாக்கம் இன்னும் இருக்கிறது என்பதே உண்மை. சங்க இலக்கியங்களில் அடைச் சொற் களில்லாத பெயர்ச்சொற்கள் மிகக் குறைவே. குதிரையை, ஆடுநடைப் புரவியென்றது. காற்றை, அசைவளி என்றது. ஒழுகு நீரென்றும் தீஞ்சுவைதண்ணுறையென்றும் நீரைச்சொல்லியது.
‘’ஒழுகுநீர் ஆரல்பார்க்கும் குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே’’ என்ற குறுந்தொகைக் கருத்து இன்றைய நவீன இலக்கியங்களிலும் கையாளப்படுவதைக் காணலாம்.
மழலை என்பதே சொற்களின் கனிந்தநிலை. இக்கருத்தை வள்ளு வரின் மழலைச்சொல்லொடு பொருத்திப் பார்க்கலாம். நம் காலத்துக் கண்ணதாசனோ ‘கனியக்கனிய மழலைபேசும் கண்மணியே’ என்று ஓரடி உயரப்பார்க்கிறார்.
மொத்தத்தில் சங்க காலக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தொகுப்பு. அங்கேயும் சொத்தைகள் இருந்திருக்கும். இக்காலத்திலும் விருப்பு வெறுப்பின்றித் தேர்ந்தெடுத்தால் நாளைய சங்க இலக்கியமாகும் தகுதியுடையனவே.

புரட்சிக்குயில் பொன்னடியான் அவர்கள் விருது வழங்கிப் பாராட்டுகிறார்
சிலம்பொலி செல்லப்பனாருடன் கவிக்கோவும் துணைவியாரும்

தாங்கள் எழுதிய கவிதை வரிகளைப் படித்து, இது தானெழுதியது தானா என்று ஐயம் வந்ததுண்டா?

இதுவரை இல்லை. எத்தனை வயதானாலும் குழந்தைகளின் முகம் மறந்துவிடாது. பல கவிதைகளை முழுமை யாகவே சொல்லுவேன். சில கவிதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே மற்ற வரிகள் நினைவில் வந்துநிற்கும். கவிதைகள் மட்டுமல்ல… எந்தச் சூழலில்… எங்கு எழுதினோம் என்பதும் நினைவில் வரும்.

ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குமேல் பண்ணைத்தமிழ்ச்சங்கம் தொடங்கி தொய் வின்றி பல இலக்கியவாதிகளை அடையாளம் காட்டி வருபவர் தாங்கள். இச் சாதனையை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு சார்பில் ஏதேனும் உதவிகள்?

இல்லை. தமிழக அரசு சிறந்த இலக்கிய அமைப்புகளுக்கு தமிழ்த்தாய் விருதும் ஐந்து இலட்சம் அளவில் விருதும் வழங்கிவருவதை அறிவோம். ஆயினும் அதற்கான முயற்சிகளை எடுக்காதது எங்கள் தவறுதான்.
1984 ஜுன் 10 ஆம்நாள் தொடங்கப் பட்டது. தொடர்ந்து இடைவிடாது திங்கள் தோறும் நிகழ்வுகள் நடத்தி வருகிறோம். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் பங்கேற்றி ருக்கிறார்கள். பல தமிழறிஞர்கள், தமிழ்த்தொண்டர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் எவரும் பரிந்துரைத்தார்களா என்பதறியோம். பரிந்துரைகேட்டு நாங்க ளும் யாரையும் அணுகவில்லை.
தானாக வராது. விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து விருதுபெறு வதில் ஆர்வம் காட்டவில்லை.
பொருளாதாரத்தைப் பெரும்பாலும் அமைப்பாளர்களே ஏற்றுக்கொள்கின்றனர். கோவைநாவரசன், தஞ்சை மயிலரசன், தேனீ தமிழ்ச்சிம்மன், த.செயராமன், வ.தட்சிணாமூர்த்தி, வெண்முகிலனார், பா.சிவாஜி, பா.இராமசாமி, சீனிபழனி, ஞால ரவிச்சந்திரன், ஆனந்திபரிமேலழகன் எனப் பலரும் தோள்கொடுக்கின்றனர்.
வருகைதரும் பங்கேற்பாளர்களுள் சிலரும் தாமாக முன்வந்து செலவுகளை ஏற்றுக்கொள்கின்றனர். அதனால் உதவி களைத்தேடி அணுகுவதில்லை. நாங்கள் கேட்டால் தரும் நட்புகள் நிறைய உண்டு என்பதனால் முயலவில்லை.

அண்மையில் முகநூல் பதிவு ஒன்றில் வாழும் கவிஞர்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையெனும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். அவர்களுக்கான அங்கீகாரத்தை அரசு எப்படிச் செய்யலாம்?

அரசு செய்யவில்லை என்று சொல்ல வில்லை. அரசு பல்வேறு வகைகளிலும் அங்கீகரிக்கிறது. அகவைமுதிர்ந்த தமிழ றிஞர், தமிழ்ச்செம்மல், தூயதமிழ்ப் பற்றாளர், நற்றமிழ்ப்பாவலர், முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் என விருது த்தொகையுடனும் கட்டணமில்லாப்பேருந்து,மருத்துவச்செலவுக்குத்தொகை என தாராளமாகவே பாராட்டுகிறது. ஆனால் தேர்வுசெய்யும் முறையில் மாற்றம் தேவை.
விண்ணப்பித்து விருதுபெறுவது என்னைப்போன்றவர்களுக்கு ஏற்புடையதல்ல.
தன்விவரக் குறிப்புகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசே பொருத்தமான விருதுகளை வழங்கலாம்.
என் முகநூல் பதிவு இதனைப் பற்றியது அல்ல.
தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் வாழும் கவிஞர் களை அடையாளப்படுத்தவேண்டும். வாழும் கவிஞர்கள் ஆய்வுக்கு உட் படுத்தப்படவேண்டும். வாழும் கவிஞர் களின் கவிதைகளும் மக்களுக்குப் போய்ச்சேரவேண்டும். வாழும் கவிஞர்கள் என்றால் திரைப்படக்கவிஞர்கள் மட்டுமே அல்ல என்பதை உணரவேண்டும். வாழும் கவிஞர்கள் வெளிச்சப்படுத்தப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
பல்கலைக்கழகங்கள் ஆவனசெய்ய அரசு அறிவுறுத்தவேண்டும்.

பாவேந்தர் விருது வழங்குபவர் புதுவை முதல்வர் ப.சண்முகம். 29.4.2000 புதுவை. தமிழகம் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் கவிக்கோ மட்டுமே விருது பெறுகிறார்
திரைப்படப்பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தனுடன் கவிக்கோ
நெருப்புக்கவிஞர் விருது வல்லிக்கண்ணன் வழங்குகிறார்
இம்மாத இதழ் தரவிறக்கம் செய்ய

நீங்கள் பல்வேறு அமைப்புகளால் விருதுவழங்கிச் சிறப்பிக்கப் பட்டிருக்கிறீர் கள். ஆனால் அரசுவிருது எதுவும் பெறவில்லையே. ஏன்?

தரவில்லை! அதனால் பெற வில்லை!
1981 பாரதி நூற்றாண்டு விழாவில் புதுவை அரசு பாரதி பட்டயம் வழங்கிச்சிறப்பித்தது.
பொதுவாகவே,விண்ணப்பித்து விருது பெறுவதை விரும்பாதவன் நான். அரசியல் செல்வாக்கு, அதிகாரிகள் செல்வாக்குகளை முயன்றால் என்னால் பெறமுடியும். முயல்வதையே விரும்பா தவன் நான்.
இலக்கிய அமைப்புகள் விரும்பித் தருகிற விருதுகளே பெருமை எனக்கு. இதுவரை ஐம்பது விருதுகளுக்குமேல் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒன்றைக்கூட நான் கேட்டுப் பெற்றதில்லை.குறிப்பால் கூட உணர்த்தியது கிடையாது.
விருதுகள் என்பவை வெக்கை நேரத்து விசிறிகள். அன்பின் பெரும் பகுதியாலும் விருதுக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகளாலும் தான் பெரும்பாலான விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதென்கருத்து.
படைப்புகளால் பேசப்படவேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். நானும் பேசப்படுவேன் என்ற நம்பிக்கை எனக் கிருக்கிறது. காலம் என்னைக் கட்டாயம் பேசும்.

தாங்கள் தமிழ்நெஞ்சம் வாசகர் என் பதில் பெருமைப்படுகிறோம். தமிழ்நெஞ்சம் பற்றிய தங்கள் பார்வை?

தமிழ்நெஞ்சம் வாசகன் என்ற பெரு மிதத்தோடே பேசுகிறேன். ஐம்பதாண்டு கால இதழ்ப்பணி, இலக்கியப்பணிகளால் தலைகனக்காத் தமிழ்நெஞ்சம் அமின் வாழ்த்துதலுக்கு மட்டுமல்ல வணக்கத் திற்கும் உரியவர்.

கடல்கடந்த தேசத்திலிருந்தும் தமிழ்த்தாகம் தணியாத தமிழ்நெஞ்சம் அமின்!

ஒரு படைப்பாளி சகபடைப் பாளியை மனம்திறந்து பாராட்டுவ தென்பது உலக அதிசயத்தின் உச்சம். அந்த உச்சத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறார் அமின்.
கூர்ப்பாட்டுக்களால் குவிந்திருக்கும் பக்கங்கள். ஆர்ப்பாட்டமான அழகிய வடிவமைப்பு! வயல்வணங்கும் முற்றிய கதிர்களாய் வாசகர்கள்.எல்லாவற்றையும் உள்ளடக்கிய எளிமையாய் அமின்.

என்னையும் நேர்காணல் செய்யும் அவரது அன்பு. இத்தனையும் ஒருங்கே அமைந்துள்ள புதையலையும் சக வாசகர்களையும் வணங்கி வாழ்த்துகிறேன்.


8 Comments

Tamil · நவம்பர் 30, 2021 at 12 h 32 min

//இலக்கியம் என்பது போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போவதல்ல.கண்டு, கேட்டு, அனுபவித்த உணர்வு களின், ஆழ் மனத்துள் அமர்ந்து அமர்க்களம் செய்யும் சிந்தனைகளின் சிலைவடிப்பு. பிசிறில்லாத உளவடிவம். இலக்கை நோக்கிய ஈர்ப்பு விசை. தனக்குச் சரியெனப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கிற சத்தியம்.
சத்தியங்கள் சமரசம் செய்து கொள்வ தில்லை. செய்து கொண்டால், அது சத்தியமு மில்லை.

அற்புதமான, உண்மையான வரிகள், வாழ்த்துக்கள் ஐயா

மக்கொனையூராள் பர்ஹானா அப்துல்லாஹ் · நவம்பர் 30, 2021 at 13 h 59 min

.தமிழ்நெஞ்சம் மின்னிதழின் ஒவ்வொரு நேர்காணலையும் பெருவிருப்புடன் வாசித்து வருகிறேன். அந்த வகையில் இம் மாத நேர்காணலும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.
#சிறந்த கவிதைகள் என்பதற்காக மட்டுமே நான் பதிவுசெய்வதில்லை. எனக்குப் பிறந்தகவிதைகள் என்கிற பெருமிதத்தோடு பதிவுசெய்கிறேன்!’’.
எனவே ஒருகவிதை பேசப்படாத போது தொய்வடைவதில்லை. நாளை அந்தக் கவிதையே காலத்தின் கைரேகை யாகலாம், போட்டியில் பங்குபெற்றுப் பரிசுபெறாத பாரதியின் கவிதையைப் போல. ஆனாலும் சிறப்பின்பாலால் தாயும் மனம்திரியும் என்பதாகவும் இருக்கிறது.#

இத்தகைய பதில் உண்மையிலே உள்ளத்தில் உள்ள கவிதையின் வேட்கையை நன்குணரச் செய்கின்றது.
வாழ்த்துக்களும் நன்றிகளும்

செல்வம் பெரியசாமி · நவம்பர் 30, 2021 at 14 h 33 min

இதழ் மிகவும் அருமை
ஐயாவை பற்றி அறிந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி

சேகர் · நவம்பர் 30, 2021 at 14 h 53 min

நல்ல படைப்பு.அருமை.நன்றி ஐயா

முனைவர்.கிருஷ்ண திலகா · நவம்பர் 30, 2021 at 17 h 00 min

எங்கள் தன்மானத் தலைவரின் எழுத்துகள் ஒவ்வொன்றும் பொன்னேட்டில் பறிக்கப்பட வேண்டியவையாகும். இத்தகைய சிறப்புடையக் கவிப்பெருமகனாருக்குத் அரசு எந்தவித சிறப்பும் செய்ய வில்லை என்பது வருத்தத்துக்குரிய செயலாகும்.

பாவலர்.கருமலைப் பழம் நீ · டிசம்பர் 1, 2021 at 9 h 58 min

மிகச்சிறப்பான நேர்காணல் இது.
நெருக்கமான நண்பர் கவிக்கோ.துரைவசந்தராஜன்
மிகச் சிறந்த படைப்பாளர்.
மாமனிதர்.அவரது எழுத்தின் வீச்சு
ஒப்பனை இல்லாதவை.
தேடிவரும் பல விருதுகள் அந்தப் பாடிவரும் குயிலை நாடி இனி.வாழ்த்துகள்.

செ.புனிதஜோதி · டிசம்பர் 1, 2021 at 14 h 54 min

வசந்தராஜன்ஐயாவின் கவிதைகளின் ,செறிவை அழகாக தமிழ்நெஞ்சம் வெளிப்படுத்தியுள்ளது

Dr ஜலீலா முஸம்மில் · டிசம்பர் 3, 2021 at 6 h 44 min

“ஜென் ஒரு ஹைக்கூ பார்வை”
திருமதி ஷர்ஜிலா யாகூப் அவர்களால் அருமையாக விளக்கப்படுத்தப் பட்டுள்ளது. ஜென் தத்துவங்களின் உதயமும் அதன் பரவலும் உலகத்திற்கு ஹைக்கூ வடிவ கவிதைகளை பரிசளித்துள்ளது.
“ருசிக்க ஒரு கோப்பைத்தேநீரோடு-
ரசிக்க சிறு கவிதை”
அதுவே ஹைக்கூ…

அழகாகக் கூறியிருக்கிறீர்கள் சகோதரி வாழ்த்துக்கள். இவ்வாறான
சிறந்த பதிவுகளை வழங்கும் தமிழ் நெஞ்சம் சஞ்சிகைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தமிழ் நெஞ்சத்தின் பிரிய வாசகி
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »