மின்னிதழ் / நேர்காணல்
இலங்கைப் பாடகர்கள் வரிசையில் தனக்கென ரசிகர்கள் கூட்டமொன்றையும் ஈர்த்தெடுத்து வலம் வரும் ஓலு வசந்தி ஒரு சிங்கள மொழிப்பாடகியாக மட்டுமல்லாமல் ஒரு ஓவியராகவும் மிளிர்கிறார். பன்முகத் திறமைகள் கொண்ட அவர், தமிழ்நெஞ்சத்துக்காக மனம் திறந்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தருணம்.
வாருங்கள் ஓலு வசந்தியை அறிந்துகொள்வோம்…
நேர்கண்டவர்
வஃபீரா வஃபி
உங்களைப் பற்றிய அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிக்கலாம். சொல்லுங்கள்!
எனது சொந்த ஊர் இலங்கையின் எழில் கொஞ்சும் மலைப்பிரதேசமான கம்பளை.தாய் பத்ரா எதிரிசிங்க.தந்தை தேகிஸ் வில்சன் தசநாயக. அக்கா ஜயமாலி நிஸன்சலா. கல்வி கற்றது கம்பளை புனித ஜோஸப் மகளிர் வித்தியாலயத்தில். தொழில்ரீதியாக நான் ஒரு பாடகி. ஓவியம் வரைவதையும் தொழிலாகக் கொண்டிருக்கிறேன்.
இசை, ஓவியக்கலை இவற்றுடன் எந்தளவு ஈடுபாட்டுடன் இணைந்துள்ளீர்கள்?
இதுவரை இக்கலைகளுடன் தான் பெருமளவில் என் வாழ்க்கை நகர்ந்து வந்துள்ளது. ஓவியக்கலையையும் இசையை யும் நான் நிறையவே நேசிக்கிறேன். ஓவியம் வரைவதென்பது என்னைப் பொறுத்தவரை தியானமாகும். ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை சிந்தையை ஒருமுகப் படுத்துவதன் மூலமே இதற்கான சிறந்த பெறுபேறைப் பெறமுடியும். மனத்தெளிவு இதில் பிரதான பங்கு வகிக்கிறது.
இசைத்துறையில் உங்கள் அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?
TV 1 நடத்திய ‘அழகிய மனைவி’ (சிங்களம்) நிகழ்ச்சிக்கான குரல் தேர்வில் கலந்து கொண்டது தான் என்னை இசைத்துறைக்குள் நுழைய வித்திட்டது.இத்தருணத்தில் அண்மையில் எம்மை மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்ற சிரச தொலைக்காட்சி சேவையில் புகழ்பெற்ற சிட்னி சந்திரசேகர எனும் ஜாம்பவானை நன்றியுடன் நினைவு கூருகிறேன். அவரது ஆலோசனைகளும் அறிவுரைகளும் என்னை வளப்படுத்திக் கொள்ள பெரிதும் உதவின. புதுமுகங்களுக்கும்,மூத்த கலைஞர் களுக்கும் அவரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் உறுதுணையாய் இருந்ததை,வரப்பிரசாதமாய் அமைந்ததை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.எதிர்காலத்திலும் அவர்கள் அவற்றைப் பின்பற்றி வழிநடப்பார்கள் என்பது என் அபிப்பிராயம்.
உங்கள் பொழுதுபோக்குகள்/ திறமைகள் எவை?
புகைப்படங்கள் எடுப்பது, வாத்தி யக்கருவிகள் இசைப்பது (ட்ரம்ஸ் வாசிக் கவும் கீ போட் வாசிக்கவும் தெரியும்), நடனம் ஆடுவது, பாடல் எழுதுவது என்பவற்றை பொழுதுபோக்காக கொண் டிருக்கிறேன். திரைக்கதை வசனம் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளதால், அது தொடர்பான கற்கைநெறியொன்றை கற்று வருகிறேன்.
உங்கள் கனவு / அபிலாஷைகள் பற்றி சொல்லுங்களேன்!
ஆமாம்! நிறைய உண்டு. அவற்றுள் முதன்மையானது, எதிர்காலத்தில் என் போன்று திறமையுள்ள ஓவியக் கலைஞர் களுக்காக உணவகத்துடன் கூடிய ஒரு கலைக்கூடம் அமைப்பது தான். அபிலாஷைகள் எனக் குறிப்பிட விரும்புவது கோவிட் 19 ஆல் தடைப்பட்ட எனது ‘வர்ஷாவ’ எனும் மழை பற்றிய பாடலின் ஒளிப்பதிவை (மியூசிக் வீடியோ) செய்து முடிப்பது தான். அத்துடன் ஒலிப்பதிவு செய்யப்பட்ட என் பாடலொன்றையும் வெளியிட உத்தேசித்துள்ளேன்.
இலங்கையில் இசைத்துறையில் இருக்கும் திறமைசாலிகளுக்கு அவர்களுக் கான அங்கீகாரம் வழங்கப்படுவதாக நினைக்கிறீர்களா?
ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல கலைஞர்கள் தமக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட மக்களின் அன்பையே பெருத்த அங்கீ காரமாக நினைப்பார்கள். சமூக சூழல்களாலும், வேலைப்பளு காரணமாகவும் சிற்சில விடயங்களில் சிலர் கவனிக்கப்படாமலே போவதும் இங்கு விதிக்கப் படாத விதியாகவே உள்ளது.
உங்கள் முதல் பாடல், இதுவரை பங்களிப்பு செய்த பாடல்கள் பற்றி சொல்லுங்கள்!
என் முதலாவது பாடல் ‘சரஸ்வதி சந்திரா’ என்ற சிங்கள தொலைக்காட்சி நாடகத்துக்காக பாடிய ‘ரகசின் வகே ரகசின் வகே (රහසින් වගේ රහසින් වගේ) என்ற பாடலாகும். அதை இசையமைத்து என்னோடு பாடியவர் அஷான் பெர்னாண்டோ (අශාන් ප්රනාන්දු). அப்பாடலை எழுதியவர் மறைந்த சிட்னி சந்திரசேகர அவர்களாவார். இத்தருணத்தில் அந்த தொலைக்காட்சி சேவையின் பிரதானியாய் இருந்த புத்திக (බුද්ධික) விக்ரமாதர அவர்களையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
நான் பல பாடல்கள் பாடியுள்ளேன்.அவற்றுள் தொலைக்காட்சி நாடகங்களுக் கான டைட்டில் பாடல்கள், சிறுவர் காட்டூன் கதைகளுக்கான டைட்டில் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள் என்பன அடங்கும். மக்களின் வரவேற்பைப் பெற்ற பல பாடல்களுக்கு நான் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பெருமிதமும் கொள்கிறேன்.
அண்மையில் ஒரு பாடலுக்காக விருது பெற்றிருந்தீர்கள். அதைப் பற்றி கொஞ்சம் பேசலாமே!
l கோவிட் 19 தொற்று முழு உலகையே வீழ்ச்சியடைய வைத்திருந்த நேரம், மக்களுக்கு நம்பிக்கையூட்டி தெம்புடன் மீண்டு வர ‘எழுந்திடுவோம் ஸ்ரீலங்கா’ (නැගිටිමු ශ්රී ළංකා) எனும் ஒரு எழுச்சிப் பாடலை உருவாக்கி, இலங்கையின் முன்னணிப் பாடகர்கள் அனைவரும் இணைந்து பாடினார்கள். அதில் நானும் பங்களிப்பை வழங்கியிருந்தேன். அதில் எனக்கு மட்டுமல்லாமல் பங்கு கொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் விருது கிடைத்தது. விருதைவிட எனக்கு அதில் பாடக் கிடைத்த வாய்ப்பு, விருதுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு. எல்லோருமே ரொம்பவே லயித்து இதயபூர்வமாக ஒன்றிப் பாடிய பாடல் அது.
உண்மையில் எனக்குக் கிடைத்த உயரிய விருதாக நான் கருதுவது, மிக சுதந்திரமாக செயல்படும், தன்னடக்க மான, உயர்ந்த இரு பண்பாளர்களான கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவரான ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் ஆலோசகராகப் பணிபுரிந்த சிட்னி சந்திரசேகர ஆசிரியர் அவர்களினதும் ஆலோசனைகளையும் ஆசிர்வாதங் களையும் பெறுமளவிற்கு நான் புண்ணியம் செய்திருக்கிறேன் என்பது தான்.
தமிழில் பாடியுள்ளீர்களா? பாட சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?
l நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். சொந்த மெட்டில் ஒரு தமிழ்ப்பாடலைப்பாடி என் கைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். என்னை ரொம்பவே ஈர்த்த அழகிய மொழி தமிழ் என்பேன்.
லொக்டவுனில் என்ன செய்தீர்கள்?
நிறைய ஓவியங்கள் வரைந்தேன். நிறைய உணவு வகைகள் சமைக்கக் கற்றுக் கொண்டேன்.
இலங்கையின் இசைத்துறையில் பாடகர்களுக்கிடையில் போட்டி நிலவுகிறதா? நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?
போட்டியில்லாத துறைதான் ஏது? எல்லாத்துறைகளில் உள்ளவர்களும் முகம் கொடுக்கும் பிரச்சினை இது. இப்பெரும் தொற்று பாடாய்படுத்தும் இந்நேரத்தில் இவற்றைப் பேசுவது உசிதமில்லைதான். இருப்பினும் சொல்கிறேன்.எதிர்காலத்தில் இன்னும் போட்டிகள் அதிகரிக்கக்கூடிய மோசமான சூழல் உருவாகலாம்.
உங்கள் இலக்குகள் எவை? அவற்றை அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?
இலக்குகள் இல்லாமல் இல்லை.ஆயினும், வாழ்க்கை நதியோட்டத்தில் சேர்ந்தே பயணப்பட்டு இதுவரை வந்திருக்கிறேன். விரும்பியோ விரும்பாமலோ, எதிர்பாராமல் வரும் அனைத்தையும் எதிர்கொண்டு, இனிவரும் வாழ்க்கையை நல்லவைகளால் பூரணப் படுத்திக் கொள்வதையே இலக்காகக் கொண்டிருக்கிறேன்.
உங்களால் மறக்கவே முடியாத நிகழ்வென எதைக் குறிப்பிடுவீர்கள்?
நான் தமிழ்நெஞ்சம் இதழுக்காக தந்த புகைப்படங்களில் ஒரு கறுப்பு வெள்ளை நிழற்படமொன்று உள்ளது. ஒலிப்பதிவுக் கூடமொன்றில் என் குரலில் பாடல் பதிவான முதல்நாள் அந்த நிழற்படம் எடுக்கப்பட்டது.
அன்றைய நாளில் மனதில் பொங்கிய சந்தோஷத்தை வார்த்தைகளில் வடிக்க வியலாது. என்னை நானே நேசித்த அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.
தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உண்மையில் இந்த இதழ் பற்றி முன்பு அறிந்திருக்கவில்லை. ஆயினும் நீங்கள் சொன்ன பின்பு இணையதளம் சென்று பார்த்தேன். ஆற்றலுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். திறமையானவர்கள் எங்கிருந் தாலும் அவர்களைக் கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்யும் இதழாசிரியரின் பணி கண்டு வியந்து என் நன்றிகளையும் தெரிவிக்கிறேன். இந்தப் பத்திரிகையின் சிறப்பும் பெருமையும் இந்த நேர்காணல் மூலம், சிங்கள மொழி பேசுபவர்களையும் சென்றடையும் .
உங்கள் ரசிகர்களுக்காக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆரம்ப காலத்திலிருந்தே என்னை அறிந்து கொண்ட ரசிகர்கள் இன்றும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களை நான் ரொம்பவே நேசிப்பதால் சொல்ல விரும்புவது, நோயற்ற வாழ்வே உயர்ந்த செல்வம் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு தொற்றுடன் கூடிய இக்காலக் கட்டத்தில், சுத்தத்தைக் கடைப்பிடித்து பத்திரமாக இருங்கள்! புதிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள்! காலத்தின் மற்றும் வாழ்க்கையின் பெறுமதி எம் பாதுகாப்பில் தான் தங்கியுள்ளது என்பதை மறவாதீர்கள்! எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்! அனைவரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ்க!
தமிழ்நெஞ்சம் ஓலு வசந்திக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.