மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 7  இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டியால் தட்டி அல்லது டச் செய்து இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

பெயர்ச்சொல்லே ஈற்றடி

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும்.

அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி

‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

ஹைக்கூவின் முதல் இரு வரிகளும் ஒரு கூறாகும். எடுத்துக் காட்டாக

மரண வீட்டில்
புகைந்து கொண்டிருக்கிறது

இவ்விரு வரிகளையும் படிக்கும்போதே வாசகராகிய நம் மனக்கண் முன் மரணவீடு வந்து நிற்கும். கூடவே ஆங்காங்கு புகையும் மணக்குச்சியும் வந்து நிற்கும்.

இது அடிக்கடி நாம் காணும் காட்சிதான்! சில காரணங்களுக்காக பல்வேறு வாசனை உள்ள சந்தனக் குச்சிகளை தீயிட்டுக் கொளுத்தி புகைய விடுவார்கள்.

இவ்வாறு நாம் சிந்திக்க…

கவிஞனோ நாம் சற்றும் எதிர்பாராதபடி

மரண வீட்டில்
புகைந்து கொண்டிருக்கிறது
சொத்து விவகாரம்

~ அனுராஜ்

என்று போட்டு நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடுகிறான். அப்பக்கம் சிந்தித்தால் உறவினரின் கிசுகிசுப்பு, பின் கைகலப்பு, அதன் பின் போலிஸ் வருகை என விரிந்து கொண்டு போகும்.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன் இக் கவிதையைப் படித்தேன். எழுதியவரின் பெயரோடு நன்றாக ஞாபகமிருக்கிறது. இப்போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவ்வாறு ஞாபகமிருப்ப தில்லை காரணம் உப்புச்சப்பில்லாமல் இருப்பதுதான்.

கவிஞர்கள் இங்கு நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு இனி சிறப்பாக எழுதி – ஒரு கவிதையாயினும் – அதை உருப்படியாய் எழுதி வாசகராகிய எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

இவண்,
என்றும் தங்கள் தோழமையுள்ள
சத்தார் எம். அஸாத்