மின்னிதழ் / நேர்காணல்

வணக்கம் ஐயா

மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் பொதுவாக மற்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள். தாங்கள் ஒரு பன்முகக் கலைஞராகப் பரிணமித்துள்ளீர்கள். தமிழ்சார்ந்த பணிகளாகட்டும் சமுதாயம் சார்ந்த பணிகளாகட்டும் ஆன்மீகம் சார்ந்த பணிகளாகட்டும் திரைப்படத் துறை சார்ந்த பணிகளாகட்டும் எல்லாவற்றிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறீர்கள். அதற்கு முதற்கண் தமிழ்நெஞ்சம் இதழ் சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திப்பு 

தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன்

மே 2021 இதழை பதிவிறக்கம் download செய்ய மேலுள்ள இதழ் அட்டைப்படத்தில் கிளிக் செய்யவும்

தங்கள் பெற்றோரைப் பற்றிக் கூற இயலுமா?

பெற்றோர் : தந்தையார் நினைவில் வாழும் சா.ஜெயராமன் எம்ஏ பிஎட்.ஓய்வுபெற்றத் தலைமை ஆசிரியர். எனது தந்தை என்றாலும் நண்பராகவும் தாயுமானவராகவும் இருந்தவர். சிறந்த பண்பாளர் .தாயார் நினைவில் வாழும் தனஜோதி .

தாங்கள் பிறந்த ஊர் மற்றும் அதன் சிறப்பைப் பற்றிக் கூறுங்களேன்!

பிறந்த ஊர் திருவெண்காடு. சீர்காழி வட்டம். சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய ஊர். நால்வர் பாடிய தலம். பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற தலம் .சிவஞானபோதம் அருளிய மெய்கண்டார் அவதரிக்கக் காரண மான ஊர். நாயன்மார்களில் சிறுதொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கை எமது ஊர். காவிரிக் கரையோர சோழ மண். நாதஸ்வர சக்கரவர்த்தி திருவெண்காடு டி.பி. சுப்ரமணியப் பிள்ளை அவர்கள் வாழ்ந்த ஊர் இப்படிப் பல சிறப்புகள் கொண்ட ஊர் இன்று நவக்கிரகங்களில் புதன் ஸ்தலமாக போற்றப்படுகிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞருடன்
திராவிடர்கழகத் தலைவர் கி வீரமணி கவிஞர் வைரமுத்து ஆகியோருடன்

தங்களுக்குத் தமிழ்மேல் பற்று வர ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா? யார் உங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தார்கள்?

தமிழ்மேல் பற்று வரக் காரணம் எனது தமிழாசிரியர்களான திரு மா. இராமானுஜம், திரு மு. அப்புக்குட்டி, புலவர் சொ. தாண்டவமூர்த்தி ஆகியோர் .

இளம் வயதில் கலைஞரின் கவி யரங்கமும் அவரது மேடைப் பேச்சும் எழுத்தும் முழுமையாக தமிழை நோக்கி ஈர்த்தது. புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் கவிதைகளும், வள்ளலாரின் திருஅருட்பாவும் எம்மை செதுக்கியது எனலாம்

தமிழில் தாங்கள் ஏதும் நூல் எழுதி யுள்ளீர்களா? அதனைப் பற்றிக் கூற இயலுமா?

நான் எழுதியுள்ள நூல்கள். ‘‘எனது அம்பறாத்தூணியிலிருந்து’’ கவிதை நூல். ‘‘புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை’’.உரைநடை நூல், ‘‘நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்’’ கவிதை நூல், ‘‘வள்ளலாரும் பெரியாரும்’’ ஒப்பாய்வு நூல், ‘‘வைகுண்டர் : வள்ளலார் ஓர் பார்வை’’ உரைநடை நூல், ‘‘குறள்வழியில் அருட்செல்வர்’’ சிலப்பதிகாரத்தில் அறம்
ஆகியவையாகும்.

பேச்சு கவிதை இரண்டிலும் சரளமாக நடைபோடும் தாங்கள் பாடவும் செய்கிறீர்களே எப்படி? அதற்கு ஏதும் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளீர்களா?

பேச்சுப் போட்டியில் பள்ளிநாட்களில் கலந்து கொண்டதும் கவிதை எழுத தமிழாசிரியர் தந்த அறிவும் பேச எழுத துணை புரிகிறது .

பாடல் முழுக்க கேள்வி ஞானத்தால் தான். கேட்டு கேட்டு பாடப் பயின்றதால் ஓரளவு பாடுவேன். கர்னாடக இசையில் ஓரளவு ஈடுபாடு உண்டு .

தமக்கையார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களுடன் மருத்துவர் ஜெய இராஜமூர்த்தி
பாமக நிறுவனர் திரு இராமதாஸ் அவர்களுடன் மருத்துவர் ஜெய இராஜ மூர்த்தி அருகில் ஜி கே மணி
குழந்தகளோடு விளையாடும் மருத்துவர்

தமிழ் இலக்கியங்களில் தங்களைக் கவர்ந்த இலக்கியம் எது ? ஏன்?

தமிழிலக்கியத்தில் எம்மைக் கவர்ந் தது வள்ளலாரின் திருஅருட்பா. கவிதையை எளிமை யாக முதலில் தந்தவர். இனிமையும் பக்தியும் இணைந்த எளிய பாடல்கள். பக்தி இலக்கியம் மட்டுமல்ல பாமரரும் உணர்ந்த இலக்கியம். மகேசன் இலக்கியம் மட்டுமல்ல மக்கள் இலக்கியம். சமய இலக்கியம் மட்டுமல்ல சமுதாய சீர்திருத்த மறு மலர்ச்சி இலக்கியம் என்பதால் திருவருட்பா எம்மைக் கவர்ந்தது.

கீழடியைப் பற்றியும் பூம்புகாரைப் பற்றியும் ஒருசில வார்த்தைகள்.

கீழடி தமிழ் பண்பாட்டின் தாய்மடி. தமிழரின் தொன்மையான பண்பாடு நாகரிகம், மொழியறிவு ஆகியனவற்றை வெளிக் கொணர்ந்த காலக் கண்ணாடி. சிந்துசமவெளி நாகரிகத்தோடு ஒத்துள்ள எழுத்துகள், ஆதாரங்கள் தமிழர்களின் பரந்துபட்ட நிலப்பரப்பை உலகுக்கு காட்டுவன. நான் நேரடியாகச் சென்று அங்கிருந்தவற்றை பார்வையிட்டு மெய் சிலிர்த்தேன் .

பூம்புகார் சிலப்பதிகாரக் காப்பிய மண். கண்ணகி கோவலன் மாதவி ஆகி யோர் வாழ்ந்த மண். புகார்க் காண்டத்தில் இளங்கோவடிகள் பூம்புகாரின் பெருமை களைக் காட்டியிருப்பார். மாதவியின் அரங்கேற்றம் நடந்த இடம். இந்திரவிழா, பட்டினப் பாக்கம், மருவூர் பாக்கம், நாளங்காடி, அல்லங்காடி போன்றவை பூம்புகாரை நினைவுபடுத்தும் தமிழரின் பண்டைத் துறைமுகம். காவிரிப் பூம்பட்டிணம் பட்டினத்தார் வசித்த மண்ணும் கூட.

வள்ளலார் மன்றம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருக்கிறீர்கள். திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்த தாங்கள் ஒரு ஆன்மீக அமைப்புக்குத் தலைவராக உள்ளதில் முரண்பாடு இல்லையா?

வள்ளலார் தமிழ் மன்றம் என்ற அமைப்பு தமிழையும் சன்மார்க்கத்தையும் வளர்க்கும் அறிஞர் பெருமக்கள் மன்றமாகும்.

வள்ளலாரைப் பிடிக்காத மனிதர் களே உலகில் இருக்க முடியாது. ஆத்திக வாதிகளும், நாத்திகவாதிகளும் ஏற்கும் ஆன்மிகவாதியே வள்ளலார். பக்தியுடன் சமுதாய சீர்திருத்தத்தையும் தொண்டையும் வலியுறுத்தியவர். திராவிட இயக்க சிந்தனை களின் முன்னோடி வள்ளலார் என்பதை மறுக்க இயலாது

தஞ்சைத்தமிழ்மன்ற் இரண்டாம் ஆண்டு விழாவில் தமிழ்ப்பணிச்செம்மல் விருது பெற்றபோது அருகில் இயக்குநர் சிவா ஜி, சிந்தை வாசன், இராம் வேல்முருகன் மற்றும் ஏவிஎஸ் தேவநாதன்.
ஒரு விழாவில் மருத்துவர், பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம் அவர்களுடன்
தளபதி ஸ்டாலின் மற்றும் திருமதி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன்
எட்டயபுரம் பாரதி இல்லத்தில் மருத்துவர் ஜெய இராஜ மூர்த்தி

வள்ளலார் பாடல்களையெல்லாம் மிகச் சரளமாகப் பாடுகிறீர்கள் அவரைப் பற்றிய சொற்பொழிவைத் தங்கு தடை யின்றி ஆற்றுகிறீர்கள். இது எப்படி? எவ்வாறு வள்ளலார் மீது தங்களுக்குப் பற்று வந்தது?

புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுள்ள எனக்கு 1999 ஆம் ஆண்டு ம.பொ சிவஞானம் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். அதைப் படித்பிறகு வள்ளலார் கொள்கைளில் ஈடுபாடு வந்தது. பிறகு வள்ளலார் தொடர்புடைய நிறைய நூல்களைப் படித்தேன் .

அருட்பாக்கள் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிதாக இருப்பதால் எதுகை மோனை சந்தநயங்களுடன் எழுதப்பட்ட இனிய பாடல்கள் ஆதலால் படிக்கப் படிக்க மனதில் பதிகிறது

வள்ளலார் மன்றம் வழியாக எந்த மாதிரியான பணிகளை ஆற்றி வருகிறீர்கள்? எவ்வளவு காலமாக இதனைச் செய்து வருகிறீர்கள்?

வள்ளலாரை அந்தக் காலத்துப் பெரியார் எனப் பேராசிரியர் அவர்கள் ஒருமுறைக் குறிப்பிட்டதாக ஞாபகம். இது பற்றி தங்கள் கருத்து.

வள்ளலாரும் பெரியாருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனது வள்ளலாரும் பெரியாரும் என்ற நூலில் தெளிவாக எழுதியுள்ளேன்.

மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமுதாய சமத்துவம், சமூக நீதி, அன்பும் அறிவுமே கடவுள்தன்மை வாய்ந்தவை, மனிதநேயம் என்ற இடங்களில் இருவரும் ஒரே களத்தில் நின்று குரல் எழுப்பினர் எனலாம்

நடிகரும் மருமகனுமான திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் மருத்துவர் ஜெய இராஜ மூர்த்தி

வள்ளலாரின் ஒளிவழிபாடு இக்காலத் திற்கு ஏற்றது எனக் கருதுகிறீர்களா?

உருவ வழிபாட்டைவிட உயர்ந்த வழிபாடு ஔிவழிபாடு. ஔிவழிபாடு செய்யாத சமயங்களே இல்லை. ஔியில் இறைவனைக் காண்பது என்பது அறிவு அல்லது ஞான ஜோதியில் கருணை உள்ளத்தோடு கடவுளை நமக்குள் உணர்வது என்பதாகும். பக்குவம் வந்தபிறகு அது கூடதேவையில்லை அவரவர் புருவமத்தியில் அந்த ஔியைக் காணலாம் என்பதே வள்ளலாரின் நிலைப்பாடு.

திரைப்படங்களில் நடித்துள்ளீர்கள். ஒரு திரைப்படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளீர்கள் எனக் கருதுகிறேன். எவ்வாறு திரைப்பட ஆர்வம் வந்தது?

நட்பு முறையில் நான்கு திரைப்படங் களில் நடித்துள்ளேன்.

பழனியப்பா கல்லூரி ‘‘தங்கம்’’, கலைஞரின் ‘‘பெண்சிங்கம்’’, ‘‘தீ’’. இதில்தான் முதல்வராக நடித்தேன். நடிப்புத்துறைப் பற்றி தெரிந்துகொள்ள சென்றேன். திரைப்படத்துறை இப்போது சோதனையான காலகட்டத்தில் உள்ளது .

வருங்காலத்தில் திரைப்படத் தயாரிப்பு ஏதும் செய்ய ஆர்வம் உள்ளதா?

தயாரிப்பு செய்யும் அளவு வசதியும் இல்லை. ஆர்வமும் இல்லை

தாங்கள் தற்போது செய்து வரும் மருத்துவ அலுவலர் பணியில் சவாலானது என எதை எண்ணுகிறீர்கள்?

மருத்துவத்துறையில் சவாலானது அரசு மருத்துவராக காலம் முழுதும் இருந்து பணி நிறைவு செய்வது.

மருத்துவச் சேவையில் மனநிறைவு அடைந்துள்ளீர்களா?

மருத்துவச் சேவையில் மனநிறைவு அடைந்துள்ளேன். 30 வருடங்கள் பணியில் லட்சத்திற்கும் நோயாளிகளைப் பார்த்துள்ளேன்.

நள்ளிரவில் எழுப்பும் அவசர நோயா ளிகள் பற்றி …

கிராமங்களில் நள்ளிரவில் பெரும் பாலும் தேள்கடி, பாம்புகடி அல்லது நெஞ்சுவலி வயிற்றுவலி போன்றவற்றிற்கு எழுப்புவார்கள். எனக்கு 45 வயது ஆனவரைப் பார்த்தேன். பிறகு எனது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மிக அவசரம் எனில் மட்டும் பார்ப்பது உண்டு .

மருத்துவத் துறையில் தங்களுக்கு நேர்ந்த மறக்க இயலாத சம்பவம் ஏதாவது ஒன்றை நினைவு கூற இயலுமா?

1990 ல் திருவெண்காட்டில் அரசு மருத்துவராக சேர்ந்த போது ஒரு பெண்மணி்க்கு நள்ளிரவில் பிரசவம் பார்த்தேன். பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு 2014 ஆம் ஆண்டு திருமணம் ஆகி அந்தப்பெண் குழந்தை பெற்று தன்குழந்தையை முதலில் என்னிடம் காட்ட எடுத்து வந்தது தனது தாயுடன். மூன்று தலைமுறைக்கு மருத்துவம் பார்த்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது .

அரசு மருத்துவமனைகளுக்கு வசதி யானவர்கள் வருவதில்லையே ஏன்?

அரசு மருத்துவமனைகளை இன்னும் தனியார் மருத்துவமனைகள் போல உயர்த்த வேண்டும்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடனான தங்கள் உறவு பற்றி …

கலைஞர் என் மீது மிகுந்த பாசத்தைப் பொழிந்த மாபெரும் தலைவர். என்ன ‘‘அருட்பெருஞ்ஜோதி’’ எப்படியா இருக்க என்று கேட்டதுண்டு. தமிழ் சம்பந்தமாக எப்போது சந்திக்கச் சென்றாலும் சந்திக்கும் மகத்தான மாமனிதர்.

வடலூரில் வள்ளலாரின் சுத்தசன் மார்க்க முறைபடி வழிபாடு நடத்த நீதிமன்றம் மூலம் சென்று நடைமுறைப் படுத்தியதில் கலைஞருக்குப் பெரும் பங்கு உண்டு. அப்போதெல்லாம் வள்ளலார் குறித்து பலவற்றை தெளிவுபடுத்திக் கொண்டார் புத்தகங்கள் மூலமாகக் கலைஞர். எதையும் தாங்கும் இதயம் என்பது அண்ணா சொன்னது. அதைப் பெற்றிருந்தவர் கலைஞர்.

அவரது மறைவு அன்று ஒருநாள் முழுதும் சாப்பிடாமல் துக்கத்தில் இருந்தேன்.

தளபதி ஸ்டாலின் என்ற மாபெரும் ஆளுமையுடனான தங்கள் உறவு பற்றி..

க ஸ்டாலின் எனது அக்கா கணவர். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் அவர்மீது மிகுந்த மரியாதை எனக்கு உண்டு. அதிகம் யாருடனும் பேசமாட்டார். அவரது சுபாவம் அப்படி. கடினமான உழைப்பாளி. நேர்மையாளர் என்பதை மாற்றுக் கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

தங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? அரசியலா இலக்கியமா ஆன்மீகமா?

எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. ஆன்மிக மற்றும் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு. பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு பேசிக் கொண்டுள்ளேன்.எதிர்காலத்தில் ஒரு சிறந்த பட்டிமன்ற நடுவராக விருப்பம்.

தமிழ்நெஞ்சம் இதழ் பற்றி…

தமிழ்நெஞ்சம் சப்தமில்லாமல் தமிழ்ப் பணி செய்யும் ஒரு இதழ். பிரான்சிலிருக்கும் தமிழன்பர் திருவாளர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களின் கடும் உழைப்பினால் ஐம்பதாவது ஆண்டில் நடைபோடும் இதழ் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

தற்போதைய கொரானா தீநுண்மி காலத்தில் மக்கள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் தடுப்புமுறைகள் பற்றி ஒரு மருத்துவராகத் தாங்கள் சொல்லவிரும்புவது…

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். வீட்டை விட்டு வெளியில் மிக அவசியம் எனில் மட்டும் முகக்கவசத்துடன் சென்று வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் . இலேசான அறிகுறி இருந்தாலும் டெஸ்ட் செய்து பார்த்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் .

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புரதச்சத்து உள்ள உணவு, பழங்கள், காய்கறி கீரைகள் உண்பதோடு விட்டமின்கள் எடுத்துக் கொள்ளலாம் .

கவிஞர் வைரமுத்து அவர்களுடன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »