மின்னிதழ் / நேர்காணல்

நேர்முகம் கண்டவர்
அன்புச்செல்வி சுப்புராஜூ

தங்களைப் பற்றி சிறு அறிமுகம் தாருங்கள்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா காவனூர் கிராமம் எனது பிறப்பிடம். பள்ளிக்கல்வி முடித்து வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் எனது பட்டப்படிப்பு. பின்னர் மதுரை காமராசர் பல்கலையில் முதுகலை பொருளாதாரம், அண்ணாமலை பல்கலையில் மனிதவள மேம்பாடு பட்டயப் படிப்பு. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து 2015ல் மேலாளராக ஓய்வு பெற்றுள்ளேன். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நிரந்தர வாழ்விடமாகக் கொண்ட நான் தற்போது சென்னை நகர வாசியாக உள்ளேன் மேலும் முழுநேர தமிழ் இலக்கியப்பணியில் ஈடுபட்டுள்ளேன்.

ஏப்ரல் 2021 இதழை பதிவிறக்கம் download செய்ய மேலுள்ள இதழ் அட்டைப்படத்தில் கிளிக் செய்யவும்

வங்கிப்பணியுடன் இணைந்து இலக்கியப் பணியாற்றி வருவது வியப்பிற் குரிய விசயம்… இரண்டையும் தாங்கள் எப்படி பகுத்துக் கையாண்டீர்கள்?

எனது உயர்நிலை மற்றும் கல்லூரி வாழ்நாளில் கவிதைகள், வானொலி மெல்லிசைப்பாடல்கள் எழுதி வந்தேன். வங்கிப் பணியில் தலைமை எழுத்தர் பணி யிலிருக்கும்போதே செய்யாறு தமிழ்ச் சங்கம் நிறுவி தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நிறுவனத் தலைவராக பணியாற்றி எண்ணற்ற தமிழ்ப்பணி ஆற்றி வந்தேன். வங்கியில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கப்பட்டது. என்னுடன் இணைந்து செய்யாறில் எழுத்தாளர் வலசை வீரபாண்டியன், பேராசிரியர் வல்லம் வெங்கடபதி, கவிஞர் கருணாநிதி, தங்கம் வேதபுரி, சிலேடைக் கவிஞர் இராதாகிருட்டிணன் மற்றும் கவிஞர் மகா மதிவாணன் போன்றோர் தமிழ்ப்பணியாற்றினர் .

வங்கிப் பணியின்போது வங்கிக் காகவே முழுக்கவனமுடன் பணியாற்றி அங்கும் விழாக்களில் சேமிப்பின் முக்கியத்துவம் மற்றும் வங்கிச்சேவைகள் குறித்த கவிதை மற்றும் உரையாற்றல் நிகழ்த்துவதுண்டு. எனது ஹைக்கூ கவிதைகளை யூனியன் தாரா எனும் வங்கி காலாண்டிதழில் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர். வங்கியில் அலுவலர் பதவி ஏற்றதும் தமிழ் அமைப்புகளில் ஆற்றிவந்த பொறுப்புகளில் இருந்து விலகி வங்கி வளர்ச்சிக்காக பணியாற்றி வந்தேன். நாளேடுகள், மாத இதழ்கள் போன்றவற்றில் கவிதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். மாணவர்களுக்கு தமிழ் வகுப்புகளும் இலவசமாக நடத்தி ஊக்கப்படுத்தியுள்ளேன்.

மரபு, புதுக்கவிதை இரண்டிற்கு மான வேறுபாடுகள் என்ன? இவ்விரண்டில் தங்களின் ஈடுபாடு எதில் அதிகம் ஐயா?

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மரபு இலக்கணவழி நமக்கு கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம். இலக்கண வரம்புக்கு உட்பட்டு எழுதப்பட்ட மரபுவகை செய்யுட் களாக வடிவம் பெற்றது. இவ்வடிவம் ஐயாயிரம் ஆண்டுகால தொன்மையுடையது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகியன குறித்த இலக்கணங்களை தொல் காப்பியம் எடுத்துரைக்கின்றது. இவற்றைக் கொண்டே பக்தி இலக்கியம் மரபுவழி பிறந்தது. வெண்பா மற்றும் விருத்தங்கள் அதிக அளவில் பக்தி இலக்கியத்தில் காணலாம்.

‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என மயிலை சீனிவேங்கடசாமி, இவ்வகை நூல்கள் குறித்துத் தனியொரு நூலே எழுதியுள்ளார். இந்நூலைப் படித்தால் மரபுக்கவிதைகளின் தொன்மத்தை அறிந்துகொள்ளலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை செய்யுள் வடிவமாக இருந்த தமிழ் இலக்கிய வடிவம் யாப்பு உருவத்திலிருந்து மாறுபட்டு புதிய கவிஞர்கள் உரைநடை சாயலில் கவிதைகள் படைக்கத் தொடங்கினர். இதற்கு முன்னோடியாக அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் புல்லின் இலைகள் என்ற தலைப்பில் தமது கவிதைகளை படைத்தார். இதனை நம் மகாகவி பாரதியாரும் வால்ட்விட்மன் எதுகை மோனையின்றி கவிதைகளைக் கொடுத்துள்ளார் என மகிழ்ச்சியோடு கூறி தாமும் புதுக்கவிதைப் பாணியில் பல கவிதைகளை படைத்தார்

இதைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி, கா.நா.சு.,கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், மு.மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், கண்ணதாசன், ந.காமராசன், மீரா போன்றோர் புதுக்கவிதைகளை எழுதினர். ஆக…. எதுகை மோனையின்றி, இலக்கண வகைமைகளைக் களைந்து போட்டு பாமரனும் அறியும் வண்ணம் எழுதப்பட்டவை புதுக்கவிதை வடிவங்களாயின. புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த கவிஞர் வல்லிக்கண்ணனின் புத்தகம் அற்புதமான படைப்பு. அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய நூல். புதுக் கவிதையில்தான் எனக்கு அதிகமான ஈடுபாடு. பாவேந்தர் அடியொற்றி எழுதிய புதுக்கவிதைகளைப் பாராட்டி பாவேந்தரின் புதல்வர் மன்னர் மன்னன் எனக்கு பாவேந்தர் பட்டயத்தை 1991 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கினார். புதுக்கவிதைகள் தொகுப்பு “வெளிச்சமொழியின் வாசிப்பு“ திருக்கோவிலூர் தமிழ்ச்சங்கம் சிறந்தநூலாகத் தேர்வு செய்துள்ளது. மேலும் கவிஓவியா கலை இலக்கிய மன்றமும் இந்நூலினை சிறந்த நூலாக 2020 ஆம் ஆண்டு தேர்வு செய்தது.

சங்க இலக்கியம் சார்ந்த நூல்களில் எதாவதொன்றை புதுக்கவிதை வடிவில் மாற்றம் செய்து உள்ளீர்களா?

ஆகா… தாங்கள் இதுபற்றி செய்தி அறிந்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர் கள் என நினைக்கிறேன். அண்மையில் முகநூலில் மற்றும் தமிழ்நெஞ்சம் இணை யத்திலும் எளிய தமிழ் வார்த்தைகளால் எழுதிய “மூன்றடிகளில் மலர்ந்த புறநானூறு“ தேர்ந்த ஐம்பது புறநானூற்றுப் பாடல்களைக் கொண்டது. புறநானூறு பாடல்களையும் அதற்கான பொழிப்புரையை மூன்று மூன்று வரிகளாகப் பகுத்து விளக்கவுரையை எளிமை யாக கொடுத்துள்ளேன். இந்நூலினை சென்னை கவி ஓவியா பதிப்பகத்தார் அச்சிட்டு வெளியிட இறுதி கட்டப் பணியில் உள்ளனர். இது இலக்கியம் சார்ந்த எனது முதல் முயற்சி.

13.07.2019 அன்று பண்ணைத் தமிழ்ச்சங்கத்தின் 36 ஆவது ஆண்டு விழாவில் "விதைப்பந்து " தலைப்பில் நடைபெற்ற கவியரங்கை தலைமையேற்று நடத்திய கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பொதுஉடைமைச் சிந்தனையாளர் ஐயா இரா.நல்லக்கண்ணு அவர்கள் நினைவுப் பரிசு வழங்குகிறார். அருகில் பண்ணைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிக்கோ துரை வசந்தராசன்.
26/01/2019 ல் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கவிஞர் ஜென்சி அவர்களின் நூலினை பிரான்சு தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் வெளியிட கவிஞர் கா.ந.க.பெற்றுக்கொள்கிறார்.

கவிதையிலக்கியத்தில் உள்ள பலவித வடிவமைப்புகளில் தேர்ந்தவர் தாங்கள்.. இதில் ஹைக்கூ கவியமைப்பின்பால் தனி ஈர்ப்பு வருவதற்கான காரணம் என்னவென்று கூறுங்கள் ஐயா?

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஹைக்கூ கவிதைகள் எழுதி வருகிறேன். மரபுக் கவிதை, புதுக்கவிதை, மெல்லிசை என எழுதி வந்த நான் 1992 ல் செய்யாறில் வசிக்கும் போது கவிஞர் மகா.மதிவாணன் அவர்களை சந்தித்தேன். அவர் சிறந்த ஹைக்கூ கவிஞர். அவரது சந்திப்பும் அவரது ஹைக்கூ கவிதைகளும்தான் எனக்கு ஒரு திருப்பு முனையைத் தந்தது. அன்று முதல் ஹைக்கூ கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். புதுக்கவிதைகளில் புதிய பரிமாணம் மற்றும் அதிவேக இயந்திர உலகுக்கு ஏற்ற மூவடிக் கவிதை வடிவம் என்னை மிகவும் ஈர்த்தது. அப்போதே தமிழ் கவிதைச் சிற்றிதழ்கள், மாத வார இதழ்கள் எனது ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டன. எளிதில் சொல்லவரும் கருத்தினை மூன்றே வரிகளில் மக்களுக்கு கொண்டு செல்லும் வலிமை உடையன ஹைக்கூ கவிதைகள் என்பதை உணர்ந்தேன்.

ஹைக்கூ கவிதை என்றால் என்ன? அதன் தோற்றம் இலக்கணம் பற்றிக் கூறுங்கள் ஐயா..

ஹைக்கூ கவிதை தோற்றம் வளர்ச்சி பற்றி கூறவேண்டுமானால் அதன் நீண்ட நெடிய வரலாறு பல பக்கங்களைக் கொண்டது. சுருங்கக் கூற வேண்டுமானால் முனைவர் இரா.மோகன் அவர்கள் “கீழ்த்திசைப் பௌத்தச் சிந்தனையில் முகிழ்த்து, சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து மணம் வீசிய இக்கவிதை 1916 ஆம் ஆண்டு ‘ஹொக்கு’ என்ற பெயரால் தமிழுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதியார்” என்று குறிப்பிடுகிறார்.

ஜப்பானிய மண்ணின் மைந்தர் “பாஷோ அவர்கள் ஹைக்கூ கவிதைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஜப்பானிய இலக்கணப்படி 5/7/5 என்ற அசைகளோடு மூன்று வரிகளில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளில் மூன்றாம் வரி எதிர்பாராத ஒரு மின்னல்வெட்டென திருப்புமுனையைக் கொடுக்க வல்லது. கற்பனை உவமைகள் ஏற்கப்படாதவை ஹைக்கூ கவிதைகள். நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். வார்த்தைச் சுருக்கமுடன் இருத்தல் அவசியம். இறுதிச்சொல் பெயர்ச்சொல்லோடு முடித்தல் வேண்டும். முதல் அடிக்கும் மூன்றாவது அடிக்கும் தொடர்பு இருக்கவேண்டும். ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பிடல் கூடாது. ஹைக்கூ கவிதைகளில் வன்மம் இல்லாமல் உயிர் இரக்கச் சிந்தனையுடன் எழுதப்படவேண்டும் என்பதே விதி.

ஜப்பானிய மண்ணில் ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் ஜென் பௌத்தத் துறவிகளால் எழுதப்பட்டவை. இவை மரபுவழி ஹைக்கூக்கள் (Traditional Haiku) என அழைக்கப்பட்டது. பின்னர் காலத்தால் பல பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு இலக்கண வரம்புகளை உடைத்தெறிந்து விட்டு கவிஞர்கள் நவீன உத்திகளோடு (Modern Haiku Poetry ) ஹைக்கூ கவிதைகளை உலக அரங்கில் படைத்தனர். தற்போது தமிழில் ஹைக்கூ கவிதைகள் வளமான சிந்தனைகளுடன் / நவீன உத்திகளோடு தமிழ் மண் , மரபு, சமூகச் சூழலோடு ஹைக்கூ கவிதைகளை நூற்றுக்கணக்கான கவிஞர்கள் படைத்து வருகின்றனர். மிகப் பெருமையாக உள்ளது.

டிசம்பர் 2016 ல் மனசெல்லாம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நூலினை மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் வெளியிட பொறியாளர் கவியரசு ஜோதிகுமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அருகில் நூலாசிரியர் கா.ந.கல்யாணசுந்தரம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவன் ஆகியோர்.

ஜென் தத்துவம் என்பதினை இன்னும் சிறிது விளக்கமாகக் கூறுங்கள் ஐயா?

“நீ நீயாக இரு“ என இயல்பின் தன்மையை எடுத்துக்கூறுவது. மனிதம் வேறுபாடு இன்றி சமமாக இருக்க வேண்டும். உயர்ந்தோர் தாழ்ந்தோர் நிலை அகற்ற வேண்டும். செய்யும் செயல்கள் மற்றவாறு எவ்வித இடையூறும் இன்றி இருத்தல் வேண்டும். உயிர் இரக்கச் சிந்தனை வேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் சிந்தனையும் மனிதத்தில் மேலோங்கி இருத்தல் வேண்டும், செய்யும் செயல்களில் முழுமையான ஈடுபாடு வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனைகளைச் சிதறவிடாமல் ஒவ்வொரு நகர்விலும் தவம் மேற்கொள்ளவேண்டும். இப்படி மனதை லேசாக்கி செயற்கையான உந்துதல் இல்லாத இயற்கையான வாழ்வினை அளிக்கும் வலிமைமிக்கது ஜென் ஆகும். அமைதியான சூழல் ஜென் வாழ்க்கையின் அங்கமாக விளங்குகிறது. ஜப்பானிய பௌத்த துறவிகள் ஜென் தத்துவத்தை உள்வாங்கி தமது வாழ்க்கைப்பயணத்தை மேற்கொண்டவர்கள். இறைத்தன்மையை இயற்கைவழி அனுபவித்து சிந்தனைகளில் தேக்கி வைத்தவர்கள்.

தாங்கள் எழுதிய ஹைக்கூக்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த இரசித்தவைகள் சிலவற்றைக் கூறுங்கள் ஐயா?

விட்டுக்கொடுக்கும் /
பண்பை வளர்த்தன /
ஒற்றையடிப் பாதைகள்

பஷீர்வீட்டு /
முருங்கைக் கீரை /
 மாரியாத்தா கூழுக்கு

அடுத்தவேளை /
உணவில்லை /
சமைந்தாள் மகள்

பாலில் நெல் /
கலந்தபோது /
பதறியது பாலாடை

எடை மேடையில் நின்றபோது /
அகற்ற முடியவில்லை /
இதயச் சுமைகளை

தன்முனைக் கவிதைகள் குழும நிர்வாகி கவிஞர் சாரதா சந்தோஷ் அவர்கள் ஹைதராபாத் இலக்கியக் கூட்டத்தில் கம்போடியாவில் வெளியிடப்பட்ட " வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள் " நூலினை அறிமுகப்படுத்திப் பேசுகிறார்.

ஹைக்கூ வகைமைகளில் தாங்கள் வெளியிட்டு உள்ள நூல்கள் பற்றியும் எந்தெந்த மொழிகளில் தங்களின் ஹைக்கூ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்பதையும் விவரியுங்கள்

1998 ல் மனிதநேயத் துளிகள் எனும் எனது ஹைக்கூ முதல் நூல் வெளியிடப்பட்டது. இதனை செய்யாறு தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்போடு தமிழ் ஹைக்கூ வரலாற்றில் வெளியிடப்பட்ட முதல் இருமொழி நூல் என்ற பெருமை கொண்டது.

ஆங்கில மொழிபெயர்ப்பான இக் கவிதைகள் பின்பு “The Smile of Humanity“ என தனிநூலாக வெளியிடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. குறிப்பாக இந்த நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகள் முதன் முதலில் ஜப்பானிய மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டன. பின்பு மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் உருது மற்றும் அரபு மொழிகளிலும் சில ஹைக்கூக்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்குப்பின் 2016ல் எனது தெரிவு செய்யப்பட்ட ஹைக்கூக்கள் “மனசெல்லாம்“ என்கிற நூல் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. மனசெல்லாம் நூலுக்கு ஒரே ஆண்டில் மூன்று விருதுகள். இலங்கை நாட்டில் நுட்பம் குழுமத்தினர், சிகரம் இலக்கிய அமைப்பு மற்றும் படைப்பு இலக்கிய குழும விருது அளிக்கப்பட்டது. கவிமணி கவிநுட்பம் அவர்கள் நுட்பம் ஆண்டுவிழாவில் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் கவிஞர் அமின் ஐயா அவர்கள் முன்னிலையில் சிறந்த புத்தக விருதினை மனசெல்லாம் நூலுக்கு வழங்கியது மறக்கமுடியா தருணம். தற்போது லிமரைக்கூ நூல் ஒன்று தயாரிப்பில் உள்ளது.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் என்ற அமைப்பினை உருவாக்கும் எண்ணம் எவ்வாறு தோன்றியது? அதன் மூலம் தாங்கள் செய்வது என்ன?

முகநூலில் கவிஞர்கள் தங்களது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு குழுமங் களில் எழுதிய வேளையில்… ஹைக்கூவிற்கு என தனியாக ஒரு முகநூல் குழுமம் தொடங்கவேண்டும் என நினைத்தேன். மேலும் உலகின் பல்வேறு இடங்களில் வாழும் ஹைக்கூ கவிஞர்கள் இந்தக் குழுமத்தில் தங்களது ஹைக்கூ கவிதைகளை பதிவிட நல்வாய்ப்பாகவும் இருக்குமென இக்குழுமம் தொடங்கினேன். இன்றைக்கு ஐந்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆரம்ப நிலையில் கருப்பொருள், சூழல் போன்றவைகளைக் கொண்டு ஹைக்கூ போட்டிகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கி வந்தோம். கவிஞர் மு.முருகேஷ், கவிஞர் இளையபாரதி கந்தகப்பூக்கள், கவிஞர் முகமது ஆசாத், கவிஞர் அனு ராஜ் போன்றோர்களால் அவ்வப்போது ஹைக்கூ குறித்த கட்டுரைகளும் விளக்கமும் பதிவிட்டு வந்துள்ளோம்.

நூற்றுக்கணக்கானக் கவிஞர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் தந்து வரும் தாங்கள் தங்கள் அமைப்பின் மூலமாக நூல் ஏதும் வெளியிட்டு உள்ளீர்களா? ஆம் எனில் அதற்கான காரணம் என்ன?

ஆமாம்… தாங்கள் மிகச்சரியான கேள்வியை முன்வைத்துள்ளீர்கள். உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்.. கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளைப் பெற்று “பனிவிழும் மலர்வனம்“ எனும் ஹைக்கூ தொகுப்பினை முதன் முதலில் வெளியிட்டோம். இத்தொகுப்புக்கு கவிஞர்கள் அனுராஜ், சாரதா க.சந்தோஷ், அன்புச்செல்வி சுப்புராஜூ, இளவல் ஹரிஹரன் மற்றும் ஜென்ஸி ஆகியோர் பேருதவி புரிந்தனர். இனிய உதயம் பொறுப்பாசிரியர் கவிஞர்ஆரூர் தமிழ்நாடன் ஐயா, மகாகவி ஈரோடு தமிழன்பன், கவிஞர் அமுதபாரதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஹைக்கூ கவியரங்கம் அமுதபாரதி ஐயா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தங்களின் «பனி விழும் மலர்வனம் நூலுக்கு எங்களது பாராட்டுகள் ஐயா… நூல் வெளியிட விரும்பும் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்து வரும் தங்களின் பணி போற்றத்தக்கது… மேற்கொண்டு கவிஞர்களுக்கு எந்தெந்த வகையில் ஊக்கம் தருகிறீர்கள்?

மாதந்தோறும் குழுமத்தில் பதிவா கும் சிறந்த ஹைக்கூ கவிதைகளை தேர்ந் தெடுத்து “ஹைக்கூ திண்ணை“ மின்னிதழில் வெளியிடுகிறோம். மேலும் “ஹைக்கூ 2020“ தொகுப்பு நூல் வெளியீட்டை பிரான்சு தமிழ்நெஞ்சம் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிட்டப் பெருமை உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்துக்கு உண்டு. பிரான்சிலிருந்து தமிழ்நெஞ்சம் இலக்கிய இதழின் ஆசிரியர் கவிஞர் அமின் அவர்கள் சென்னைக்கு வந்து நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தார்கள். மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு உயரிய “பாஷோ விருது “ கொடுக்கப்பட்டது. ஈழத்து கவிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவிலும் கவிஞர் அமுதபாரதி அவர்களின் தலைமையில் ஹைக்கூ மகா கவியரங்கம் நடத்தப்பட்டது. கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் ஒருமணிநேரப் பேருரை விழாவில் பங்குபெற்றோரை நகரவிடாமல் கட்டிப்போட்டது ஒரு சரித்திர நிகழ்வு.

காஞ்சீபுரத்தில் நடந்த பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் அவரது மகன் கவிஞர் மன்னர் மன்னன் அவர்கள் 02/03/1991 ல் கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பாவேந்தர் பட்டயம் வழங்குகிறார். அருகில் செய்யாறு வழக்கறிஞர் கவிஞர்
செப். 2019 ல் அங்கோர் தமிழ்ச்சங்க பன்னாட்டு கவிஞர்கள் மாநாட்டில்
தமிழ் நெஞ்சம் பிரான்சும் உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றமும் இணைந்து பிப்ரவரி 2020 ஆம் ஆண்டில் ஹைக்கூ 2020 நூல் சென்னையில் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்களால் வெளியிடப்பட்டது. அருகில் கவிஞர்கள் (இடமிருந்து வலம் ) மயிலாடுதுறை இளையபாரதி , தமிழ்நெஞ்சம் அமின் , அனுராஜ், அமுதபாரதி, கா.ந.கல்யாணசுந்தரம், குமரன் அம்பிகா, ஆரூர் தமிழ்நாடன், அன்புச்செல்வி சுப்புராஜ் , பாரதி பத்மாவதி மற்றும் நெல்லை உலகம்மா ஆகியோர். பண்ணைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிக்கோ துரை வசந்தராசன்.

ஹைக்கூ உள்பட பல்வகை தளங்களில் பயணித்த தாங்கள் தன்முனைக் கவிதைகள் என்ற புதியதோர் வடிவமைப்பை உருவாக்கியது எவ்விதம் ஐயா?

சிறப்பு… எதிர்பார்த்த கேள்வி தங்களி டமிருந்து வந்துவிட்டது. மகிழ்ச்சி. அக்டோபர் 2017 ல் எழுத்தாளர் வதிலைபிரபா அவர்கள் தமது மகாகவி இலக்கிய மாத இதழில் ஹைதராபாத் எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் “நானிலு“ பற்றிய கட்டுரையை வெளியிட்டார். தெலுங்கில் பிரபலமான கவிதைவடிவத்தை கவிஞர் சாந்தா தத் தமிழில் மொழிபெயர்த்து எழுதியிருந்தார். இக்கட்டுரையைப் படித்ததும் ஏற்கனவே தமிழில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் குறுங்கவிதைகள் எனக்கு நினைவுக்கு வந்தன. நாம் ஏன் நல்லதொரு குறுங்கவிதை நானிலு போல் நான்கு வரிகளில் தமிழுக்கே உண்டான கட்டமைப்போடு வடிவமைக்கக் கூடாது?… என சிந்தித்து எளிய இலக்கணத்துடன் முற்றிலும் நானிலு இலக்கணத்திலிருந்து மாறுபட்ட அமைப்புடன் “தன்முனைக் கவிதைகள்“ எனப் பெயர் சூட்டியும் நவம்பர் 2017 ல் அறிமுகப்படுத்தி குழுமத்தையும் தொடங்கினேன். இவ்வடிவம் பிறப்பெடுக்க சாந்தா தத் அவர்களின் கட்டுரை எனக்குத் தாக்கத்தைக் கொடுத்தது என்றே கூறலாம். இக்கவிதை வடிவத்துக்கான பெயர் என்னுள் 12.11.2017 அன்று விடியலில் சிந்தனையில் மலர்ந்ததை மறக்க முடியாது. தமிழன்னையின் பரிபூரண அருளாசி என்றே நினைக்கிறேன்.

தன்முனைக் கவிதைகள் எப்படி அமையவேண்டும்? அதன் இலக்கணம் என்ன?

தன்முனைக் கவிதைகளில் முதலி ரண்டு வரிகள் முற்றுப்பெற்று அடுத்த இரண்டு வரிகள் முதலிரண்டு வரிகளுக்கு ஏற்ப அல்லது முரணாகவோ இருக்கலாம். ஆனால் ஹைக்கூ கவிதைகள் பொதுவாக சுருங்கச் சொல்லி மாபெரும் கருத்துக்களை உணர்த்துவதே ஹைகூவோடு தொடர் புடைய தன்மையைக் கொண்ட தன்முனைக் கவிதைகள்.

சிறப்புற எளிமையாக அனைவருக்கும் புரியும் படி கூறியுள்ளீர்கள்… தன்முனைக் கவிதைகள் என்று பெயரிடக் காரணம் என்ன?
நமது எண்ணங்களில் முகிழ்த்து முனைப் புடன் எழுதப்படும் குறுங்கவிதை வடிவம். குறிப்பாக தம்மை ஈடுபடுத்திக் கருத்தினைச் சொல்லும் பாங்கு இக்கவிதை வடிவத்தின் முக்கிய அம்சம். இயற்கை, சமுதாயம், வாழ்வியல், அவலம் போன்ற பாடுபொருளில் கவிஞர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கருத்தினை முன்வைக்க வேண்டும். மேலும்

இவ்வடிவமைப்பை கவிஞர்களிடம் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க தாங்கள் எடுத்த முன்னெடுப்புகள் என்னென்ன? அவை எளிதாக இருந்ததா?

அடடா,,, உங்களது கேள்விகள் அழுத்தமாகவும் தன்முனைக் கவிதைகள் குறித்த உள்ளார்ந்த பார்வையும் கொண்டது. எனது நன்றியும். தன்முனைக் கவிதைகள் எனப் பெயரிட்டதும் முகநூல் குழுமம் தொடங்கி கவிஞர்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. குழுமத்தின் நிர்வாகிகளாக கவிஞர்கள் அனுராஜ், சாரதா க. சந்தோஷ், அன்புச்செல்வி சுப்புராஜூ (தாங்கள்), இளவல் ஹரிஹரன், ஜென்ஸி ஆகியோர் பொறுப்பேற்று அற்புதமாக அயராத பணியாற்றி தன்முனைக் கவிதை களை வெளி உலகிற்கு கொண்டு சென்றார்கள். இந்த முன்னெடுப்பில் மாதம் இரண்டு தன்முனைக் கவிதைகள் போட்டி நடத்தினோம். தொடர்ந்து தன்முனைக் கவிதைகள் குழுமம் அல்லாது பல்வேறு குழுமங்கள் தன்முனைக் கவிதைப் போட்டிகளை நடத்தி வருகின்றன. முதன் முதலில் “ழகரம்“ குழுமம் போட்டிகளை நடத்தி கவிஞர்களை ஊக்கப்படுத்த, உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவை போன்ற பல குழுமங்கள் தொடர்ந்து இன்றளவும் நடத்தி வருகின்றன. பிரதிலிபி, தமிழ்நெஞ்சம் இணைய இதழிலும் தன்முனைக் கவிதைகள் தொடர்ந்து வெளி வந்துக் கொண்டிருக்கின்றன.

தன்முனைக் கவிதைகள்» முகநூல் குழுமத்தின் மூலம் தாங்கள் செய்து வரும் பணிகள் / செயல்பாடுகள் என்னென்ன?

தன்முனைக்கவிதைகள் குழுமம் கவிஞர் களின் தன்முனைக் கவிதைகள் பதிவிலிருந்து சிறந்தவற்றை தேர்ந் தெடுத்து “தன்முனைக் கவிதைகள்“ மின்னிதழில் வெளியிட்டு வரு கிறோம். நூல் வெளியிடுவோருக்கு வழிகாட்டல் செய்வதில் நிர்வாகிகள் துணை நிற்கின்றனர். சாதனையாளர்களுக்கும் படைப் பாளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி அவ்வப்போது சிறப்பிக்கி றோம். கவிஞர்கள் பலர் எம்மைத் தன்முனைக் கவிதைகளின் தந்தை என்றழைக்கும்போது… இச்சிறப்பெல்லாம் தமிழன்னைக்கே உரித் தானது என எண்ணுகிறேன்.

ஜூலை 2018 ல் அமெரிக்கா நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தில் பேச வந்திருந்த கவிஞர் அறிவுமதியை சந்தித்தபோது கவிஞர் கா.ந.க அவருக்கு தன்முனைக் கவிதைத் தொகுப்பு நூல் " நான் நீ இந்த உலகம் " கொடுத்தார்.
செப். 2019 ல் அங்கோர் தமிழ்ச்சங்க பன்னாட்டு கவிஞர்கள் மாநாட்டில் கம்போடியாவின் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் செபீப் ( சொக்கையா) அவர்களுடன் கவிஞர்கள் தர்மாம்பாள், சுமதி சங்கர், கா.ந.கல்யாணசுந்தரம் மற்றும் அன்புச்செல்வி சுப்புராஜூ ஆகியோர்

மகிழ்ச்சி ஐயா… தங்களின் முன்னெடுப்புகள் வியப்பைத் தருகிறது.. வளரும் கவிஞர்களுக்கு தாங்கள் பெரும் ஊக்க சக்தி என்பதில் சிறிதும் ஐயமில்லை..
தன்முனைக் கவிதை வகைமையில் முதல் நூல் பற்றி கூறுங்கள்?

01/07/2018 ல் “நான் நீ இந்த உலகம்“ – 31 கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் சென்னை இக்சா அரங்கில் வெளியிடப்பட்டது. இனிய உதயம் பொறுப்பாசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்கள் வெளியிட புரவலர் குமரன் அம்பிகா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தமிழ் அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த இவ்விழாச் செய்திகள் இனிய உதயம் மற்றும் பல இதழ்களில் வெளிவந்தன. தன்முனைக் கவிதைகள் இந்நாள் வரை அபார வளர்ச்சி பெற்றுள்ளதென்றால் இந்நூல் அடித்தளமாக விளங்கியது என்றே கூறலாம். இந்த நூலின் முதல் விமரிசனம் கவிஞர் சு.கணேஷ்குமார் அவர்கள் start / cut / action… என்கிற இணையத்தில் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதிவெளியிட்டார். மகாகவி, இனிய உதயம், தினத்தந்தி போன்று பல பத்திரிகைகளில் இந்நூல் பற்றிச் சிறப்பான கட்டுரைகளும் வெளிவந்தன.

முதல் அடியே முத்தான அடியாக நல்லதொரு தொகுப்பு நூலாக வெளிவந்ததில் உளம் மகிழ்கிறேன்.. அடுத்ததாக வந்த தொகுப்பு என்னங்க ஐயா?

கம்போடியா நாட்டில் அங்கோர் தமிழ்ச்சங்கம் தன்முனைக் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்தவும் நூல் ஒன்றினை வெளியிடவும் எமக்கு அழைப்பு விடுத்தது. தன்முனைக் குழும கவிஞர்கள் 52 பேருடைய 780 தன்முனைக் கவிதைகளைத் தொகுத்து “வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்“ நூலினை ஓவியா பதிப்பகம் – தமிழ்ச்செம்மல் வதிலை பிரபா அவர்களின் சிறந்த வடிவமைப்போடு அச்சிட்டு கம்போடியா அங்கோர் தமிழ்ச்சங்கம் நடத்திய பன்னாட்டு கவிஞர்கள் மாநாட்டில் வெளியிட்டோம். இந்நூலுக்கு திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கினார். இனிய உதயம் பொறுப்பாசிரியர் ஆரூர் தமிழ்நாடன், எழுத்தாளர் சாந்தா தத்,, அங்கோர் தமிழ்ச்சங்கத் தலைவர் த.சீனிவாசராவ், செயலர் ஞானசேகரன், துணைத்தலைவர் இரமேஷ்வரன் ஆகியோர் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. நூலினை கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் மோர்ன் செபீப் (சொக்கையா) அவர்கள் வெளியிட மலேசியா எழுத்தாளர் சங்கத் தலைவர் இராசேந்திரன் பெற்றுக்கொண்டார். தமிழகத்திலிருந்து பல்வேறு கவிஞர்கள் மத்தியில் எம்முடன் வந்த கவிஞர்கள் சுமதி சங்கர், அன்புச்செல்வி சுப்புராஜூ, ஓசூர் மணிமேகலை, முனைவர் தர்மாம்பாள் ஆகியோர் தன்முனைக் கவிதைகள் குழுமத்தின் சார்பில் கலந்து கொண்டனர். இந்த நூல் குறித்து விரிவாக இனிய உதயம் இலக்கிய இதழிலும் தமிழ்நெஞ்சம், தினமணி இதழ்களிலும் வெளிவந்தன.

அயல்நாட்டில் அரசு அங்கீகாரத் துடன் நூல் வெளியிடுவது ஆகச்சிறந்த நிகழ்வு.. ‘‘வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்’’ தலைப்பே ஈர்ப்பு.. அன்பின் வாழ்த்துகள் ஐயா.. கம்போடிய நாட்டில் நூல் வெளியிடக் காரணம் என்ன?அங்கு கிடைத்த அனுபவங்கள் என்ன?

ஆம்… அங்கோர் தமிழ்ச்சங்க நிர்வாகி கள் இக்கவிதை வடிவத்துக்கு அங்கீகாரம் அளித்து அங்கு தொகுப்பு நூலினை வெளியிட அழைத்தமையே முதல் ஈர்ப்பு மட்டுமல்ல தன்முனைக் கவிதைகளுக்கான மகுடமாக விளங்கியது. 12 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த அங்கோர்வாட் கோவிலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ராஜா சூரியவர்மன் அவர்களால் கட்டப்பட்ட கலைநயம் மிக்க சரித்திர இடங்களை அங்கோர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அழைத்துச் சென்று காண்பித்தனர். சரித்திர ஆய்வாளர் தினத்தந்தி முன்னாள் ஆசிரியர் அமுதன் அவர்கள் உடன் வந்திருந்தார். மேலும் மறைமலை இலக்குவனார் போன்ற அறிஞர்களை சந்திக்க பெரும் வாய்ப்பாக இருந்தது. பன்னாட்டுக் கவிஞர்களின் அறிமுகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தன்முனைக் கவிதைக்கான ஆங்கிலப் பெயர் என்ன? மொழிபெயர்ப்பு கவிதைகள் வந்துள்ளதா? அவை பற்றி கூறுங்கள்.

தன்முனைக் கவிதைகளை ஆங்கிலத் தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் முனைவர் வே. புகழேந்தி ஆவார். பலரது தன்முனைக் கவிதைகளை மொழி பெயர்த் தவர். தன்முனைக் கவிதைகளுக்கு ஆங்கிலத்தில் Self Assertive Verses எனும் பெயரினை இவரது கருத்தினை ஏற்று பெயர் சூட்டப்பட்டது. நமஸ்தே இந்தியாவில் கவிஞர் சாரதா க.சந்தோஷ் அவர்களுடன் இணைந்து தமது மொழிபெயர்ப்பு தன்முனைக் கவிதைகளை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் கவிஞர் ராஜு ஆரோக்கியசாமி, பொம்மிடி மோகன்தாஸ் ஆகியோரும் தன்முனைக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள்.

தன்முனைக் கவிதைகளில் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பு நிறைவாக உள்ளதா? அவர்களின் ஈடுபாடு எவ்வித மாக உள்ளது என்று கூறுங்கள் ?

ஆம்… சிறப்பான பங்கெடுப்பில் பெண் படைப்பாளிகள் தன்முனைக் கவிதை களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதில் தாங்களும் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். தன்முனைக் கவிதைகள் புலனத்தை உருவாக்கி கவிஞர்களுக்கு பயிற்சி அளித்து வருவது மிகச் சிறப்பு. அதுமட்டுமல்ல அண்மையில் தாங்கள் தொகுத்த 26 பெண் கவிஞர்களின் நூல் “மகரந்தம் தூவும் மலர்கள்“ வெளியிடப்பட்டது. இதுவே முதல் பெண் கவிஞர்களின் தொகுப்பு நூலாகும். மேலும் கவிஞர் சாரதா சந்தோஷ் அவர்கள் நமஸ்தே இந்திய எனும் ஆங்கில இதழில் தன்முனைக் கவிதைகள் குறித்த நேர்முகம் முதன்முதலில் ஆங்கிலத்தில் வழங்கியது குறிப்பிடத் தக்கது. அதேபோல் கவிஞர் காரை இரா. மேகலா அவர்கள் சுவரோரச் செம்பருத்தி எனும் முதல் பெண்கவிஞர் தனியர் நூல் வெளியிட்டுள்ளார். இப்படி பல பெண் கவிஞர்கள் தன்முனைக் கவிதைகளை தமிழ் இலக்கிய உலகில் முன்னெடுத்துச் சிறப்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இப்புதிய வடிவமைப்பிற்கு பொது வெளியில் பத்திரிகை மற்றும் இணைய வெளிகளில் எவ்விதமான வரவேற்பு கிடைத்தது?

இது அதிமுக்கிய கேள்வி…ஒரு புதிய கவிதை வடிவம் அறிமுகப்படுத்துகிறோம் என்றால் பத்திரிகை, இலக்கிய இதழ்கள் போன்ற ஊடகங்கள் ஆதரவு நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த வகையில் முதல் நூல் “நான் நீ இந்த உலகம்“ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இனிய உதயம் பொறுப்பாசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் இந்த புதிய வகை கவிதைவடிவம் பற்றிய சிறப்புச் செய்தியை நக்கீரன் குழும இணையத்திலும் இனிய உதயம் இதழிலும் விரிவாக வெளியிட்டார். மேலும் தினத்தந்தியில் குறுஞ்செய்தியும் வந்தது. தொடர்ந்து பிரான்சிலிருந்து வெளியாகும் தமிழ்நெஞ்சம் இதழில் விரிவான செய்தியும் கவிஞர்களது கவிதைகளும் தொடர்ந்து வெளிவந்தன. இதுமட்டுமல்ல இன்றளவும் இனிய உதயம், இனிய நந்தவனம், பாக்கியா, கவிதைஉறவு, மகாகவி, கவிஓவியா, பொதிகை மின்னல், காணி நிலம், தமிழ்நெஞ்சம் போன்ற பல இலக்கிய முன்னணி இதழ்களிலும் கவிதைப்பெட்டகம், முத்தமிழ்க் கலசம், தன்முனைக் கவிதைகள், படைப்பு, ஆக்கம், பூஞ்சோலை மின்னிதழ், வல்லமை, வானம் வசப்படும், தமிழ் ஆத்தர்ஸ்.காம், சுவடு, நேர்படப்பேசு, கொலுசு, அக்கினிக்குஞ்சு, நமஸ்தே இந்தியா போன்ற மின்னிதழ்களும் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகளை வெளியிட்டு பெருமை சேர்த்து வருகின்றன.

01.03.2021 மாலை 6.30 மணியளவில் சென்னை புத்தக காட்சியில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய " மூன்றடிகளில் மலர்ந்த புறநானூறு " புத்தகத்தினை இனிய உதயம் இணையாசிரியர் கவியருவி ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் வெளியிட வடசென்னை தமிழ்ச்சங்க தலைவர் எ.த.இளங்கோ பெற்றுக்கொண்டார்.அருகில் கவி ஓவியா பதிப்பகம் மயிலாடுதுறை இளையபாரதி, நெல்லை முத்து, மு.முருகேஷ், உதய கண்ணன், அருள்செல்வி கல்யாணசுந்தரம், அன்புச்செல்வி சுப்புராஜூ ஆகியோர்.உலகம்மா ஆகியோர். பண்ணைத் தமிழ்ச்சங்கத் தலைவர் கவிக்கோ துரை வசந்தராசன்

உங்களைத் தவிர வேறு யாரேனும் நூல்கள் வெளியிட்டு உள்ளார்களா? அதைப் பற்றி கூறுங்கள்?

தன்முனைக் கவிதை வரலாற்றில் முதல் தனியர் நூலாக கவிஞர் இளவல் ஹரிஹரன் அவர்கள் “குழந்தை வரைந்த காகிதம் “ எனும் நூலினை வெளியிட்டார். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் காரை இரா.மேகலாவின் சுவரோரச் செம்பருத்தி, வானும் மண்ணும் நம் வசமே ஏராவூ ர் நஸீரா ஆபிதீன் – தயாரிப்பில் – (தமிழ்நெஞ்சம் பதிப்பகம் பிரான்சு); உணர்வுப் பூக்கள்- கவிஞர் வா.சண்முகம் (தமிழ்நெஞ்சம் பதிப்பகம்); நிலவைத் தாலாட்டும் இரவுப் பாடகன் – ஆசிரியர் : கவிஞர் ஜென்ஸி – (தமிழ்நெஞ்சம் பதிப்பகம்); மகரந்தம் தூவும் மலர்கள் – தொகுப்பு நூல்- தொகுப்பாசிரியர்: அன்புச்செல்வி சுப்புராஜூ (நிவேதிதா பதிப்பகம்); பட்டாம் பூச்சிச்சிறகுகளில் நீ – முனைவர் மரியதெரசா; தன்னைத்தானே வரையும் தூரிகை – கவிஞர் கவித்தா சபாபதி – இந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும்… கரை சேரும் காகிதக் கப்பல்கள்- தொகுப்பு நூல் – ஓவியா பதிப்பகம்; வண்ணத்துப்பூச்சி யின் மடியில் சில மின்மினிகள் – கவி நிலா மோகன் – கவிக்குடில் பதிப்பகம் மஞ்சள் பூசிய வானம்- கவிஞர் சீனுசெந்தில்; மௌனக் கீறல்கள் – ஆசிரியர் – அன்புச்செல்வி சுப்புராஜூ; ‘‘இங்கா பாடும் தாலாட்டு’’ மழலைகள் குறித்த தன்முனைக் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் தொகுப்பாசிரியர்கள் : அன்புச்செல்வி சுப்புராஜூ, கன்னிக்கோவில் இராஜா…போன்ற நூல்கள் தயாரிப்பில் உள்ளன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கவிதை வகைமை ஈர்த்திருப்பது மகிழ்வைத் தருகிறது.. அதிகம் கவிதைகள் எழுதியுள்ளது யார்? எத்தனை வயது முதல் குழந்தைகள் எழுதி வருகின்றனர்?

தன்முனைக் கவிதை அறிமுகமாகி இன்றளவில் 3000 க்கும் மேற்பட்ட தன்முனைக் கவிதைகளைப் படைத்த படைப்பாளி கவிஞர் ஜென்ஸி அவர்களின் தேர்ந்த கவிதைகளை தமிழ்நெஞ்சம் பதிப்பகம் “நிலவைத் தாலாட்டும் இரவுப் பாடகன்“ எனும் நூலினை தஞ்சைத் தமிழ் மன்றத்தில் வெளியிட்டது மிகச் சிறப்பு. இதே விழாவில் கவிஞர் வா.சண்முகம் அவர்களின் “உணர்வுப் பூக்கள்“ நூலினையும் தமிழ்நெஞ்சம் பதிப்பகம் வெளியிட்டது பாராட்டுக்கு உரியது.

தன்முனை எழுதும் குழந்தைகள் இப்போது உருவாகி வருகிறார்கள்.

முதன் முதலில் தன்முனை வரலாற்றில் தடம் பதித்துள்ள சிறுமி மழலைக் கவி சு.பிரவந்திகா .. 7 வயது (முதலில் எழுதியவர்) கவிச்சிறுவன் பா.அனிஷ்குமார்… பத்து வயது மற்றும் சிறுமி தோ.ம. மோனிகா.. 7 வயது. இவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

செப்டம்பர் 2019 ஆண்டு கம்போடியா அங்கோர் தமிழ்ச் சங்க பன்னாட்டு கவிஞர்கள் மாநாட்டில் பாடலாசிரியர்கள் அஸ்மின், இந்துமதி, கவிஞர்கள் ஓசூர் மணிமேகலை சுவிஸ் நாட்டு ஈழக் கவிஞர் பாமினி ஆகியோருடன் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்

தங்களுடைய நேர்காணல் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதிக்கின்ற நிகழ்வுகளைக் கொண்டது. எமது கேள்வி களுக்கு சிறப்பான பதிலளித்து அனைவரது மனங்களில் இடம் பெறுகிறீர்கள். இறுதி யாக தன்முனைக் கவிதைகள் சிலவற்றை இங்கே பகிருங்கள்.

கவிஞர்கள் அனைவரும் சிறப்பாக தன்முனைக் கவிதைகள் எழுதி வருகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என நினைத் தாலும் எந்தக் கவிதையை எடுப்பது?…எதனை விடுப்பது எனத் திண்டாடுகின்றேன்…அனைத்துக் கவிஞர்களும் சிறப்பாக எழுதி தடம் பதித்துள்ளனர். தொடர்ந்து கவிஞர்களின் தன்முனைக் கவிதைகளை வெளியிட்டு வரும் தமிழ்நெஞ்சம் இதழுக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் உதித்து மண்ணில்
தவழ்ந்தது தன்முனைக் கவிதைகள்…
இலக்கிய இன்பமாய் கவிஞர்களோடு
என்றும் கைகுலுக்கி மகிழட்டும் !

சிறப்பான நேர்முகம் கண்ட அன்புச் சகோதரி தங்களுக்கும் (கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ) நல்லதோர் வாய்ப்பு நல்கிய தமிழ்நெஞ்சம் இலக்கிய இதழின் ஆசிரியர் கவிஞர் அமின் மற்றும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகூறி விடைபெறுகிறேன்..வணக்கம்.


3 Comments

ஈழவேங்கை தம்பியின் தம்பி · மார்ச் 31, 2021 at 3 h 13 min

சிறப்பு, வாழ்த்துகள் ஐயா

Selvakumari Djeyabalan · மார்ச் 31, 2021 at 3 h 57 min

சிறப்பான நேர்காணல்

ஆத்தூர் சாகுல் · ஏப்ரல் 2, 2021 at 4 h 54 min

சிறப்பான நேர்காணல்.
இலக்கியம் சார்ந்த ஐயாவின் வரலாற்றை அறிய முடிந்தது.
தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துகள் 🌹

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »