நேர்காணல்  / மின்னிதழ்

இவரில்லாமல் தமிழக மரபுக்கவிதை வரலாற்றை எழுத இயலாது.கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் கவிஞராக வலம்வருபவர். இவருடைய கவிதைகள் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாடங்களில் வைக்கப் பட்டுள்ளன. மலேசியப் பள்ளிக் கூடங்களிலும் இவரது பாடல் பாடமாக உள்ளது. தமிழாசான் தலைமை ஆசானாகப் பணி செய்து ஓய்வு பெற்ற தமிழ்ச்செம்மல். எண்ணற்ற நூல்களை எழுதியவர்.நரேந்திரன் என்ற தனது இயற்பெயரை கருமலைத்தமிழாழன் என்று மாற்றிக் கொண்ட ஐயா கரு மலை த் தமிழாழன் அவர்களுடனான நேர்காணலை இப்போது காணலாம்

வணக்கம்

ஐயா ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியப்பயணத்தில் உள்ள தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வு ஐயா தமிழ்நெஞ்சம் மின்னிதழ் சார்பாகத் தங்களுக்கு எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

கருமலைத் தமிழாழன் என்ற பெயரோடு வலம்வரும் தங்கள்

l இயற்பெயர் என்ன?

என்னுடைய இயற்பெயர் கி.நரேந்திரன். உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தமிழாழன் என்ற பெயரைச் சூட்டினார்.

l தங்கள் பிறந்த ஊர் எது?

நான் பிறந்த ஊர் கிருட்டினகிரி. கிருட்டினகிரி என்பது வடமொழிப் பெயராக இருப்பதால் அதனைக் கருமலை எனத் தமிழ்ப் படுத்தினேன். அதனால் ஊர் பெயரைச் சேர்த்து கருமலைத்தமிழாழன் என்ற புனைப்பெயரில் எழுதலானேன்.

l தங்கள் பெற்றோர் பற்றி.

தந்தை பெயர் மு.கிருட்டினன், தாய் பெயர் ச.இராசம்மாள். தந்தை பொறியாளராகப் பணியாற்றியவர். தாய் இல்லத்தரசி.

tamilnenjam_202103
மார்ச் 2021 இதழை பதிவிறக்கம் download செய்ய இங்கே கிளுக்கவும்

l தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி குறித்து ..

பள்ளிக் கல்வி கிருட்டினகிரி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். புகுமுக வகுப்பு கிருட்டினகிரி அரசு கலைக் கல்லூரியில் படித்தேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வித்வான் (புலவர்) படித்தேன். குமாரபாளையம் பி,எட் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றேன். எம்.ஏ., எம்ஃபில் பட்டங்கனை மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்திலும் எம்.எட் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை களில் தொன்மம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்ஃபில் பட்டம் பெற்றேன்.

l பள்ளியில் தமிழாசிரியராகப் பணி யாற்றி தலைமைஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றுள்ளீர்கள் எந்தெந்த ஊர்களில் பணியாற்றி உள்ளீர்கள்?

தமிழாசிரியராக தருமபுரி, கிருட்டினா புரம், ஒசூர் ஆகிய ஊர்களிலும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக மத்தகிரி, காமன்தொட்டி, சூளகிரி, பேரண்டபள்ளி ஆகிய ஊர்களிலும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக இராயக் கோட்டையிலும் மொத்தம் 36 ஆண்டுகள் பணியாற்றினேன்.

l தங்களிடம் கல்வி பயின்ற மாணவர் களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் இரண்டு பேர் மட்டும் குறிப்பிட வேண்டுமென்றால் யாரைக் குறிப்பிடுவீர்கள்? ஏன்?

திரு. மாதேசுவரன் என்ற மாணவன் படிக்கும் காலத்திலேயே கவிதைகள் எழுதுவான். இலக்கிய மன்றக் கூட்டங்களில் அதிகம் பங்கு பெறுவான். பிற்காலத்தில் பொதுத்தொண்டில் ஈடுபாடு கொண்டு ஒசூர் நகராட்சித் தலைவராகத் தேர்வு பெற்று சிறந்த முறையில் நிர்வாகம் செய்தான்.

திரு. பாலாசி என்ற மாணவன் அறிவுக் கூர்மை உடையவன் . படிக்கின்ற காலத்திலேயே சிறந்த பேச்சாளனாகத் திகழ்ந்தான். கவிதைகளை எழுதுவான். தற்பொழுது கணிதப் பட்டதாரி ஆசிரி யராகப் பணியாற்றி வருகிறான். சிறந்த கவிஞனாகத் திகழ்கிறான். முகநூல் குழுக்கள் பலவற்றில் சிறப்பாகக் கவிதை கள் எழுதிவருகிறான்.

l கவிதைஎழுதும் ஆர்வம் எவ்வாறு வந்தது? அதற்கான தூண்டுகோல் எதுவாக இருந்தது?

பள்ளியில் படிக்கின்ற பொழுதே கவிதைகள் எழுதி வந்தேன். அதற்குக் காரணம் என்னுடைய ஆசிரியர்கள் திரு.பெருமாள் ராசு அவர்களும், திரு.இராமானுசம் அவர்களும் ஆவார்கள். அவர்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள், செய்யுள் நடத்திய விதம் என்னைக் கவிதை எழுதத் தூண்டியது.

l முதல் கவிதை எப்போது பிரசுர மானது எந்த இதழில் பிரசுரமானது?

நான் புகுமுக வகுப்பு படிக்கின்ற காலத்தில் 1969 இல் முதல் கவிதை வெண்பா வாக முதலில் அச்சில் வந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் இதழை அவருக்குப் பின்னால் திண்டிவனத்திலிருந்து கவிஞர் வஃகாப் அவர்கள் நடத்தி வந்தார். அந்தக் குயில் இதழில் தான் முதல் கவிதை வெளிவந்தது.

l தாங்கள் மரபுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன?

என்னுடைய ஆசிரியர்கள் திரு.பெருமாள்ராசு, திரு.இராமானுசம் ஆகி யோர் நான் தொடக்கக்காலத்தில் எழுதிய கவிதைகளைத் திருத்தி யாப்பில் எழுதினால் தான் சிறப்பாக இருக்கும் எனச் சொல்லிச் சொல்லி எழுதவைத்ததால் மரபில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது. அதுவும் அப்பொழு தெல்லாம் பல இதழ்களில் வெண்பா ஈற்றடி கொடுத்து எழுதச் சொல்வார்கள் அதனால் வெண்பாக்கள் எழுதி எழுதி பழகியதால் மரபின் மீது பிடிப்பும் பற்றும் ஏற்பட்டு அதுவே பழக்கமாகிவிட்டது.

தமிழக அரசு வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது பெறும் தருணம்

l நிறைய இதழில் தங்கள் வாசகர் கடிதங்களைக் காணமுடிகிறது? எவ்வாறு தங்களுக்கு நேரமுள்ளது?

படைப்பாளனுக்கு அவனுடைய படைப்பைப் பற்றிய பாராட்டு தான் மேலும் மேலும் எழுதத் தூண்டும். அதனால் எந்த இதழைப் படித்தாலும் இரண்டு வரி அதைப்பற்றி எழுதிவிடுவேன். இந்தப் பழக்கம் இதழ்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கிறது.

l புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் குயில் பத்திரிகையில் தங்கள் கவிதை வெளிவந்துள்ளது. அவரை நேரில் சந்தித்துள்ளீர்களா? அந்த அனுபவம் பற்றி.

பாவேந்தர் பாரதிதாசன் அவர் களை நேரில் சந்தித்ததில்லை. அவர் இறந்த போது நான் ஏழாம் வகுப்பு படித்து வந்தேன். நான் புகுமுக வகுப்பில் படிக்கும் பொழுது எனக்கிருந்த பேராசிரியர் திரு. கண்ணன் அவர்கள் தான் குயில் ஏட்டை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்தான் என் கவிதையைக் குயில் ஏட்டிற்கு அனுப்பியும் வைத்தார். அதற்குப் பின் பாரதிதாசனாரின் மகன் மன்னர் மன்னனுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் அப்பொழுது பாண்டிச்சேரி வானொலியில் பணியாற்றி வந்தார். பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில் கவிதை வாசிக்கும் வாய்ப்பை எனக்களித்தார். பல முறை என்னுடைய கவிதைகள் ஒலிபரப்பாயின.

l உவமைக் கவிஞர் சுரதா அவர் களுடன் நட்பு கொண்டவர் தாங்கள். அவருடனான நட்பு பற்றிக் குறிப் பிடுங்களேன்.

1970 ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு இலக்கிய நிகழ்வில் ஐயா சுரதா அவர்களைச் சந்தித்தேன். அவருடனே அவர் வீட்டிற்குச் சென்று அதுவரை நான் எழுதிய கவிதைகளைக் காட்டினேன்.

கவிதைகளைப் படித்துப் பார்த்து நல்ல ஓட்டம் இருக்கிறது, தொடர்ந்து பாவேந்தரின் கவிதைகளை ஊன்றிப் படி, சங்க இலக்கியங்களைப் படி என்று அறிவுறுத்தினார். தமிழை நீ ஆழமாகப் படிக்க வேண்டும் தமிழாழ என்று கூறினார். அவர் கூறிய அந்த தமிழாழ என்ற பெயரையே நான் புனைப்பெயராக வைத்துக் கொண்டேன். தமிழை ஆழமாகப் படிக்க வேண்டும் என்று கூறியதற் கேற்ப நான் தமிழைப் படிக்கப் புலவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தேன். என்னுடைய திருமணமும் அவரின் தலைமையில் தான் ஐயரை வைத்து மந்திரங்கள் ஓதாமல் சீர்திருத்த முறையில் நடந்தது. ஓசூரில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஆண்டு விழாவில் ஒவ்வொரு ஆண்டும் அவரை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவோம். அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டிலேயே தங்குவார். இரவெல்லாம் அவருடன் நண்பர்களோடு கவிதைப் பற்றியும், இலக்கியம் பற்றியும் உரையாடுவோம். நான் சென்னை செல்கின்ற போதெல்லாம் அவருடைய வீட்டிற்குச் சென்று உரையாடி மகிழ்வேன். அவரின் இறுதிக் காலம் வரை தொடர்புடன் இருந்தார்.

மனைவி, மகன், மருமகள், பேர்க்குழந்தையுடன் கருமலையார்.

l தாங்கள் கவிஞர் கம்பதாசன் அவர்களுடன் பழகிய அனுபவம் உண்டா?

கவிஞர் கம்பதாசனாருடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

l மரபுக்கவிதை புதுக்கவிதை இரண் டுக்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

மரபுக் கவிதையை ஒரு கட்ட மைப்புடன் தான் எழுத வேண்டும். புதுக்கவிதை அப்படி இல்லை. எப்படி வேண்டு மானாலும் எழுதலாம். அசை, சீர், அடிகள் கட்டுப்பாடு இல்லை. எதுகை, மோனை, சந்தம் அமையவேண்டிய அவசியமில்லை.

அது உரைநடையின் மற்றொரு நிலை. மரபுக் கவிதை என்பது யாப்பமைதி யோடு அமைவது. மரபுக் கவிதையைப் படிக்கின்ற போதே அதன் கட்டமைப்பு மிகுந்த இன்பத்தை அளிக்கும். மரபைக் கற்றுக் கொண்டால் புதுக்கவிதையை விடச் சிறப்பாக மரபுக் கவிதையை எழுதலாம்.

l முகநூலில் எழுதிவரும் கவிஞர் களைப் பற்றி தங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முகநூலில் எழுதுபவர்கள் தாங் கள் எழுதுவதெல்லாம் கவிதை என்று நினைத்துக் கொள்கிறார்கள். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் முறைப்படித் தமிழைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லை. குறைந்தது பாரதியார், பாவேந்தர் பாடல்களையாவது படிக்க வேண்டும். சங்க இலக்கியங்களைத் தொட்டாவது பார்க்க வேண்டும். அப் பொழுது தான் எழுத நினைக்கும் கருத்திற்கு வடிவம் கிடைக்கும். ஒரு கருத்தை எப்படி சொல்ல வேண்டும் என்ற ஆழம் கிடைக்கும். எழுதுகின்றவை இன்று எழுதி நாளை மறைவதாக இருக்கக் கூடாது. நம்முடைய பெயரைச் சொல்வதாக இருக்க வேண்டும். கணியன் பூங்குன்றனாரின் ஒரு கவிதையே அவரை உலகமெல்லாம் அறியவைத்தது. அது போன்று முத்திரைக் கவிதைகளைப் படைக்க முயலவேண்டும். புதுக்கவிதை எழுதுபவர்கள் யாப்பை அறிந்து எழுதினால் மேலும் மெருகேறும்.

l முகநூல் குழுக்கள் தமிழ்ப் பணியை உண்மையிலேயே செய்து வருகின்றனவா?

முகநூல் குழுக்கள் ஓரளவு தமிழை வளர்த்து வருகிறது என்றே சொல்லலாம். தமிழைப் படிக்காதவர்கள் கூட கவிதை எழுதுகிறார்கள்.

அது கவிதையா இல்லையா என்பது வேறு. ஆனால் எழுதுகின்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

வாரி வாரி வழங்குகின்ற பட்டங் கள், விருதுகளால் ஒரு கவிதை எழுதியவ ரெல்லாம் கவிச்சக்ரவர்த்தி, கவிக்கோமான் ஆகிவிடுகிறார்கள். தகுதியே இல்லை யென்றாலும் முகநூல் குழுக்கள் தங் களை விளம்பரப்படுத்துக் கொள் வதற்கும், உறுப்பினர்களை அதிகமாகச் சேர்ப்பதற்கும் இவ்வாறு தகுதியே இல்லா தவர்களுக்கெல்லாம் விருதுகளை வாரி வழங்குகிறார்கள். ஒட்டக்கூத்தரும், பிள்ளைப் பாண்டியனும் இருந்திருந்தால் முகநூல் குழுக்களை நடத்துபவர்களின் தலைகளை அறுத்தே போட்டி ருப்பார்கள். இன்னொன் றையும் சொல்லியே ஆக வேண்டும். முகநூல் குழுக்கள் நடத்தும் கவியரங்குகளெல்லாம் கேலிக் கூத்தாகவே உள்ளன. நூறு, இருநூறு என்று கவிஞர்களை வைத்து கவியரங்கை நடத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒருவர் படிப்பதை யாருமே கேட்பதில்லை. சந்தைக் கடையைப் போலத்தான் நடக்கிறது.

ஆம்பூரில் நடைபெற்ற ஊலழளா கவியரங்கில் சக கவிஞர்களுடன் கருமலைத் தமிழாழன்

l முகநூல் வழியாக மரபுக்கவிதை பயிற்சி அளிப்பது பற்றிய தங்களுடைய கருத்து என்ன?

வரவேற்கக் கூடிய முயற்சியாகும். யாப்பே அறியாதவர்கள் இன்று இப் பயிற்சியின் மூலம் இலக்கணம் கற்று எழுதுவதைப் பாராட்ட வேண்டும். வெண் பாப் போட்டி, விருத்தப்பா போட்டி என்று விதிமுறைகளைக் கூறி நடத்துவதால் அறியாதவர்களும் விதிமுறைகளை அறிந்து எழுதுவது உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.

l தாங்கள் பெற்ற விருதுகளில் சிறந்த தாக தாங்கள் எதை கருதுகிறீர்கள்?

கவிதை எழுதத் துவங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ளேன். தமிழக அரசு வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது,

கம்போடியா அரசு வழங்கிய ஏழாம் செயவர்மன் விருது, என்னுடைய 50 ஆண்டு கால இலக்கியப் பணியைப் பாராட்டி இந்திய அரசு வெளியிட்ட ரூ.5 மதிப்பிலான சிறப்பு அஞ்சல் தலையைச் சிறந்ததாகக் கருதுகிறேன்.

l தங்கள் சென்று வந்த வெளிநாடுகள் பற்றி..

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். மலேசியாவிலும், சிங்கப்பூரி லும், இலங்கையிலும் கலப்பில்லாத தமிழில் பேசுகிறார்கள். நாம் இதைக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். நம்முடைய நூல்களை இலவசமாகக் கொடுத்தாலும் வாங்க மறுத்து விலை கொடுத்தே பெற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் நம்மிடத்தில் வர வேண்டும். அப்பொழுது தான் படைப்பாளர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

l தாங்கள் எழுதியுள்ள நூல்கள் பற்றி

இது வரை 25 நூல்கள் வெளிவந் துள்ளன. மரபின் வேர்கள் என்ற சொல் லாக்கக் கவிதை நூலை இந்திய அரசின் இந்திய மொழிகள் நிறுவனம் தேர்ந் தெடுத்து இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் கொடுத்துள்ளது. அதுமட்டுமன்றி அந்த நூலை இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கவும் தேர்ந்தெடுத் துள்ளது. செப்பேடு என்ற கவிதை நூல் மலேசியாவில் நடைப்பெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட உலக அளவிலான மரபுக் கவிதை நூல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. வீணை மத்தளமாகிறது என்ற கவிதை நூலைப் படித்து விட்டு மறைந்த குடியரசுத் தலைவர் சிறந்த நூல் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். வீணை மத்தளமாகிறது,

மரபின் வேர்கள் ஆகிய நூல்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சிறந்த நூல் களாகத் தேர்ந்தெடுத்து விருதும் பொற் கிழியும் வழங்கியது. வேரின் விழுதுகள் என்ற நூலை உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து விருதும் பொற்கிழியும் வழங்கியது. கல்லெழுத்து என்று நூலைக் கவிதை உறவு என்ற மைப்பும், கரூர் திருக்குறள் பேரவையும் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுத்து விருதும் பொற்கிழியும் வழங்கின. செப்பேடு, அகமுகம், கால்முளைத்த கனவுகள் ஆகிய நூல்களை சென்னை உரத்த சிந்தனை அமைப்பு சிறந்த நூல்களாகத் தேர்ந்தெடுத்து விருதும் பொற்கிழியும் வழங்கியது. சிகரம் இலக்கிய இதழ் 2019 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலாகப் பசிவயிற்றுப் பாச்சோறு நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் பொற்கிழியும் வழங்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மலர்விழி என்ற காவிய நூலைப் படித்து மிகச் சிறந்த சீர்திருத்த நூல் என்று பாராட்டி அணிந்துரை வழங்கியுள்ளார். என்னுடைய அனைத்து நூல்களும் தமிழக அரசின் நூலகத் துறையால் தேர்வு செய்யப்பட்டு அனைத்து அரசு நூலகங்களிலும் இடம் பெற்றுள்ளன.

50 ஆண்டு கால இலக்கியப் பணியைப் பாராட்டி இந்திய அரசு வெளியிட்ட ரூ.5 மதிப்பிலான சிறப்பு அஞ்சல் தலை

l தங்களின் வாழ்க்கைத்துணைவர் மற்றும் குழந்தைகள் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

என்னுடைய வாழ்க்கைத் துணைவி யாரின் பெயர் வசந்த குமாரி. அவர் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமணத்தின் போது அவருக்குத் தமிழ் தெரியாது, எனக்குக் கன்னடம் தெரியாது. திருமணத்திற்குப் பின்பு அவருக்கு நான் தமிழ் கற்றுக் கொடுத்தேன். அவரிடமிருந்து நான் கன்னட மொழியைக் கற்றுக் கொண்டேன். என்னுடைய இலக்கியப் பணி சிறப்பாக நடைபெறுவதற்கு அவர் தான் மூலம். இரு பெண் குழந்தைகள் தென்றல், முல்லை.

இருவரும் கணினித் துறையில் பட்டம் பெற்று பணியாற்றுகிறார்கள். ஒரு ஆண் குழந்தை பிரதீப். நிர்வாகத் துறையில் பட்டம் பெற்று தொழிற்சாலையில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மூவருக்கும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

l தமிழ்நெஞ்சம் இதழ் மற்றும் அதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்…

பழகுதற்கு இனிய நண்பர். தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அயல் நாட்டில் தமிழை வளர்த்து வருபவர். தமிழ்நெஞ்சம் மின்னிதழ் வாயிலாகப் பல கவிஞர்களை உலகறியச் செய்தவர். தளராமல் தமிழ்த் தொண்டாற்றி வருபவர். அவர் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

கருமலைத்தமிழாழன்

எண்சீர் விருத்தத்தால் நமைக்கவரும் ஆழன்
எந்நாளும் தமிழ்மணக்கும் கவிசுரக்கும் தோழன்
வண்ணத் தமிழ்த்தாய்க்கு வளம்சேர்க்கும் பிள்ளை
வாய்க்கின்ற இதழிலெலாம் முத்தமி்டும் கிள்ளை
எண்ணம் செயல்யாவும் கவிதையென்றே வாழும்
இவரன்றோ தமிழ்ச்செம்மல் கருமலையின் கீதம்
பண்ணில் தமிழெடுத்துப் பாடிடுவோம் வாழி
பார்புகழும் கருமலையார் தமிழாழன் வாழி! 

இராம.வேல்முருகன் வலங்கைமான்


9 Comments

ஈழவேங்கை தம்பியின் தம்பி · பிப்ரவரி 27, 2021 at 19 h 59 min

போற்றுதற்குரியப் பெரும்பாவலர்
வணக்கமும், வாழ்த்துகளும் ஐயா

பாவலர் மாலதி திரு · பிப்ரவரி 27, 2021 at 23 h 23 min

சிறப்பான நேர்காணல் ஐயா.

கருமலை தமிழாழன் ஐயாவுக்கு இனிய வாழ்த்துகள் .

பொலிகையூர்க் கோகிலா · பிப்ரவரி 28, 2021 at 0 h 05 min

தமிழின் புதையல்… சிறப்பு படைப்பு ஐயா..

இரா.பேச்சியம்மாள் · பிப்ரவரி 28, 2021 at 9 h 15 min

அருமையான ஒரு தமிழறிஞர் பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது..
அறியத்தந்த தமிழ்நெஞ்சம் ஆசிரியருக்கு
நன்றி

நிறைமதி நீலமேகம் · பிப்ரவரி 28, 2021 at 11 h 36 min

சிறப்புங்க அய்யா, வணங்குகின்றேன்💐💐💐

நிறைமதி நீலமேகம் · மார்ச் 1, 2021 at 18 h 29 min

சிறப்புங்க அய்யா, இனிய நல்வாழ்த்துகள்💐💐💐

கண்ணதாச முருகன் · மார்ச் 1, 2021 at 20 h 38 min

அழகான நேர்காணல்.தமிழ்ச் செம்மல் கருமலை ஐயா அவர்களை முழுமையாக அறிந்துகொள்ள உதவிய தமிழ் நெஞ்சம் இதழுக்கு நன்றி. மிகச்சிறப்பாக பேட்டி கண்டு நிறைவாக அளித்த தமிழ்ச் செம்மல் வேல் முருகன் அவர்களை வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன் கருமலைத் தமிழாழன் ஐயா.

Chellamuthu · ஏப்ரல் 28, 2021 at 11 h 10 min

Arumaiyana nerkanal. Mikachirappu

A.Alagiah · ஜூன் 14, 2022 at 9 h 26 min

அருமையான பேட்டி மிக்கமகிழ்ச்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »