மின்னிதழ் / நேர்காணல்

சந்திப்பு :
பாவலர்மணி இராம வேல்முருகன்

கவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும். அத்தகைய உணர்வை, இன்பத்தை நமக்கு இப்போது ஒருவரின் கவிதை வழங்குமேயானால் அது இவரது கவிதைதான்.இவரது எந்தவொரு கவிதையை நாம் படித்தாலும் கண்ணதாசன் நமக்குத் தெரிவார். அது காதலானாலும் சோகமானாலும் தத்துவமானாலும் எல்லாவற்றிலும் கண்ணதாசனை நம் கண்முன்னே காட்டிச் செல்லும் அற்புதக்கவிஞர் இவர். ஆம் நாகை மாவட்டத்தில் பாப்பாக்கோயில் என்றதோர் அழகிய கடற்கரை உப்புக் காற்றை அன்றாடம் சுவாசிக்கும் ஊரில் வசித்து வரும் மூத்த கவிஞர் திருமிகு பொன்மணிதாசன் அவர்கள்தான் அந்தக் கவிஞர்.

நாடகக்கலைப் பின்னணி உடைய கலைக்குடும்ப வாரிசு. தன் தந்தையும் அண்ணனும் நாடகக் கலைஞர்கள். தாங்களே பாடல் எழுதி நாடகத்தில் பாடும் திறன்வாய்ந்தவர்கள். இவரும் பாடல் எழுதுவதில் வியப்பேதும் இல்லை தான். எனினும் எடுத்துக் கொள்ளும் தலைப்புகள் அனைத்திலும் இமைப்பொழுதில் கவிசமைக்கும் வேகம் அதிலும் எதுகை மோனை இயைபுகள் மின்ன ஒரு காட்டாற்று வெள்ளம் போல் பிரவாகம் எடுத்து ஓடும் அந்த ஆற்றோடு இப்போது தமிழ்நெஞ்சம் மின்னிதழுக்காக உரையாடச் செல்கிறோம் வாருங்கள்.

தமிழ்நெஞ்சம் - ஜனவரி 2021 இதழைத் தரவிறக்கம் செய்ய மேலுள்ள படத்தில் சொடுக்கவும்
திருமிகு ஆவடி குமார் அவர்களிடமிருந்து எழுத்தாளர்கள் தமிழ்கலை இலக்கியச் சங்கம் சார்பாக வழங்கப்பட்ட விருதினைப் பெற்றுக்கொள்ளும் தருணம்.
பேரறிஞர் அண்ணா விருதினைப் பெறும் தருணம்... உடனிருப்பவர்கள் தமிழ்நெஞ்சம் அமின், கவிச்செல்வா, தென்றல் கவி ஆகியோர்.

தங்கள் சொந்தஊர். மற்றும் பெற்றோர் குறித்து..

எனது சொந்தஊர் திருத்துறைப் பூண்டி அருகில் உள்ள மணலி (மணலி கந்தசாமி பிறந்த ஊர்) பெற்றோர் பொன்னுசாமி சிந்தாமணி. விவசாயக் குடும்பம். அம்மா வீட்டு நிர்வாகிதான். அப்பா பல்கலை வித்தகர் கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர, பாடகர் இன்னும் சொல்லலாம்.

தங்கள் இயற்பெயரே பொன்மணி தாசன்தானா?இல்லை புனைப்பெயரா?

இயற்பெயர் தேவதாஸ் சிறுவயதி லேயே பெயரை மாற்றிக்கொண்டேன்.பொன்மணிதாசன் என்று. அதுவும் ஒரு காரணப் பெயராக அமைந்தது. கல்கி அவர்கள் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரை தந்தையின் பெயரில் இரண்டு எழுத்தையும் தன் பெயரின் முதலெழுத்தையும் இணைத்து கல்கி என்று வைத்துக் கொண்டது போல; நான் தந்தை பெயர் தாயார் பெயரிலுள்ள மணி எனது பெயரில் உள்ள தாஸ் மூன்றையும் இணைத்து பொன்மணிதாசன் ஆனேன்.

தங்களுடையக் கவிதைகள் பெரும் பாலும் கண்ணதாசன் கவிதைகள் போலவே இருக்கிறதே? காரணம் என்ன?

கவியரசு கண்ணதாசன் அவர்களது கவிதைகள் மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரது கவிதைகள் ஏழு தொகுதியும் வாசித்தவன்.இன்னும் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம். அந்த பாதிப்புதான் காரணமாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்ல அவரையே மானசீக குருவாகவும் ஏன் தெய்வமாகவே ஏற்றுக் கொண்டுவிட்டேன். காலை அவரை தொழுத பின்பே எந்த வேலையும் தொடங்குவது வழக்கம்.

கண்ணதாசன்மேல் அப்படி என்ன பிரியம்?

களங்கமில்லாதொரு குழந்தை முகம் அவருக்கு.அதில் நான் காணும் தெய்வீகம்.அவரது எழுத்தின் வல்லமை எந்த கவிஞ னுக்கும் இல்லாதொரு தனித் தன்மை நான் அவருக்கு ரசிகன் என்பதைவிடவும் அவருக்கு ஒரு அடிமையாகிவிட்டேன் என்றே கொள்ளலாம். அவரது பெயரை என் ஒரு மகனுக்கு சூட்டியுள்ளேன். இன்னொரு மகனுக்கு காமராசன் என்று நா.கா மேல் உள்ள பிரியத்திலும் சூட்டியுள்ளேன்

வேலாங்கண்ணியில் நடைபெற்ற விழாவொன்றில் இயக்குநர் வினுபாரதி, கவிஞர் சாகுல், கவிக்கோ விக்டர்தாஸ், கவிஞர் நீரை அத்திப்பூ, கவிஞர் வெற்றிப்பேரொளி, கவிஞர் பாலு கோவிந்தராசன் ஆகியோருடன்...
கலைஞர் நினைவேந்தல் நிகழ்வில்..
நிலாமுற்றம் விழாவில் கவிஞர்கள் பாலு கோவிந்தராசன், வீரபாண்டியத் தென்னவன், புதூர் சீனிவாசன், முத்துலிங்கம் ஆக்ியோருடன்...

பெண்களை வருணிக்கும் கவிதை களே அதிகமாக எழுதுகிறீர்களே போரடிக்க வில்லையா?

பெண்களை வருணிக்கும் கவிதை கள் கொஞ்சம் அதிகம் எழுதுகிறேன் என்பதை மறுக்க வியலாது. நான் சமுதாயப் பார்வையோடு நிறையக் கவிதைகள் எழுதிக் கொண்டுதானிருக்கிறேன். முகநூலில் அதிக வரவேற்பு பெண்களை வருணிக்கும் கவிதைகளுக்கே கிடைக்கிறது. ரசிகர்களுக்காக எழுத வேண்டிய கட்டாயம் அவ்வளவுதான்.போரடிக்கவில்லையா என்ற தங்களின் கேள்விக்கு பதில் இல்லை என்பதே எனது பதில். தினமும் காலை இரவு இட்லிதான் சாப்பிடுகிறேன் இதுவரை போரடிக்கவில்லை.அதுபோலத்தான் என்று நினைக்கிறேன்.

பெண்களின் படத்தைப் போட்டு கவிதை எழுதுவதைச் சிலர் எதிர்க்கிறார்களே? அதுபற்றி தங்கள் கருத்தென்ன?

உண்மைதான் ஐயா. உங்கள் கேள்வியிலேயே சிலர் என்று குறிப்பிடு கிறீர்கள் அப்படியானால் பலர் விரும்பு கிறார்கள் என்ற பொருள் மறைந்து கிடக்கிறது சரிதானே? பல முன்னணி பத்திரிகைகள் பெண்களின் படத்தை அட்டைப்படமாகப் போட்டு விற்பனை செய்கிறார்கள். நீங்கள் சொல்லக்கூடிய அந்த சிலரது கைகளில் அந்த பத்திரிகைகள் இருப்பதை நானே நேரில் கண்டுள்ளேன். எதிர்ப்பவர்கள் ஒரு இடத்தில் அதை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்.? பல பெண்கவிஞர்கள் பெண்களின் படத்தைப் போட்டு முகநூலில் கவிதை எழுதுகிறார்களே அதற்கு என்ன பொருள்?

இணையத்தில் தங்களது புகைப் படம் வருவதை பெருமையாகக் கருதி எத்தனைப் பெண்கள் தங்களின் படங்களை தாங்களே பதிவு செய்கிறார்கள். அவர் களிடம் எதிர்ப்பைக் காட்டத் துணி வின்றி அதற்கு விருப்பக் குறியுமிட்டு அருமை என்று வேறு பாராட்டு.

இது எந்த வகையில் நியாயம் எதிர்ப்போர்களே சிந்திக்கட்டும்.

ஆனாலும் நான் தற்காலங்களில் வெகுவாக பெண்களின் படத்தை உபயோகிப் பதை நிறுத்திக் கொண்டுள்ளேன். அது எதிர்ப்பாளர்களுக்கு அஞ்சியல்ல.
என் அன்புக்குரிய கவிச்சக்ரவர்த்தி விக்டர்தாஸ் ஐயாவின் வேண்டுகோள் ஏற்று.எதிர்காலத்தில் முற்றிலும் பெண்கள் படத்தைப் போட வேண்டா மெனவும் எண்ணியுள்ளேன் ஐயா.

பாவலர்மணி இராம் வேல்முகனிடம் பொன்மணிதாசன் கவிதைகள் நூலை வழங்கி மகிழும் தறுணம்.
பேராசிரியர் முனைவர் க முருகன் அவர்களுடன் கவிஞர் பொன்மணிதாசன்

தங்கள் தந்தையார் நாடக நடிகர் என்பதால் தங்களுக்கும் நடிப்பின்மேல் ஆர்வம் இருந்ததா? மேடையில் நடித் துள்ளீர்களா?

மேடையில் நடித்தது இல்லை. மிகுந்த ஆர்வமுண்டு இப்போதும் கூட.அதற்கான வாய்ப்புகள் வரவேயில்லை.எனது தந்தை வேடமிட்டு மேடைக்கு வரும் தோரணையே அந்த ஆசையைத் தூண்டிவிட்டது எனலாம்.

திரைப்படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் உண்டா? எழுதும் எண்ணம் உள்ளதா? திரைப்பாடல்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?

அனுபவமுண்டு இரண்டு முறை பாடல்கள் எழுதியுள்ளேன் இயக்குனர் தம்பி பன்னீர் செல்வம் அவர்கள் இயக்குவதாக சொன்னார். பாடல்களும் பதிவாகின. டம்மி வாய்ஸ் போட்டு.ஆனாலலும் பல காரணங்கள் தடையிட படப்பிடிப்பு நின்று விட்டது. எழுத வேண்டுமென்ற எண்ணம் இப்பொழுதும் உண்டு. திரைப்படத்தின் மூலம் மட்டுமே விரைவில் நமக்க்கொரு அங்கீகாரம் கிட்டுமென்று நம்புவதால்.

தற்போது மரபுக்கவிதைகளையும் எழுத முற்பட்டுள்ளீர்கள். அந்த எண்ணம் எவ்வாறு எழுந்தது? ஆசிரியராக எவரேனும் உதவுகிறார்களா?

1976 ல் எனது முதல் கவிதை மாலை என்ற கையேட்டில் வெளியானது. அதன் ஆசிரியர் திருமிகு நீரை அத்திப்பூ அவர்கள் அந்த கவிதையைப் பாராட்டி எனக்கு அஞ்சலட்டை அனுப்பினார்.அந்த கவிதையே மரபு வடிவந்தான். சுத்தமாக இலக்கணம் அமையாதிருந்தாலும் இசைக்கேற்ப எதுகை மோனையோடு எழுதியிருந்தேன். இன்றும் அவ்வாறான கவிதைகளைத்தான் அதிகம் எழுதுவதுண்டு.

இப்பொழுது மரபுக்கவிதைகள் இலக் கண கட்டோடு எழுதக் கற்றுக் கொண்டு வருகிறேன். அதன் முயற்சியாக அவ்வப்போது முகநூலில் மரபுப்படி கவிதைகள் வெண்பா எழுதுகிறேன். ஆசிரியராக பலரும் எனக்கு உதவி செய்கிறார்கள் மறுக்கவியலா. அடிக்கடி எனக்கு எழும் சந்தேகங்களை தீர்த்துவைப்பது ஐயா பேராசான் அகன் (அனுராதா கட்டபொம்மன்) அவர்கள்.வெண்பா எழுதச் சொல்லி யாப்பை தெளிவுபடுத்தியது நண்பர்கள் ஐயா கவிச்சக்ரவர்த்தி விக்டர்தாஸும் கவிஞர் கண்ணதாசமுருகனுமாவர்.

தஞ்சைத்தமிழ் மன்றம் விழாவில், கவிஞர்கள் ஜொதிபாசு முனியப்பன், வா.சண்முகம், செல்வா ஆறுமுகம், கா.ந.கல்யாணசுந்தரம், இராம் வேல்முருகன், நா.பாண்டியராசன், முத்துவிஜயன், காந்தி கருணாநிதி ஆகியோருடன்.

இதுவரை எழுதியுள்ள நூல்கள் பற்றி…?

வானவில் சிறுகதைகள்

படம் சொன்னப்பாடம் (சிறுவர் சிறுகதைகள்)

மனிதம்

பார்வையின் பதிவுகள் (தனிக் கவிதை தொகுப்புகள்)

இதயப்பூவின் இதழ்கள்

உயிர்மேகம்

உறங்காத உணர்ச்சிகள்

தொகுப்பு கவிதை நூல்கள்

கவிஞர் பொன்மணிதாசன் கவிதைகள் (4 தொகுதிகள்)

இன்னும்,

(3 தொகுதிகள் அச்சேறும் தயார் நிலையில் உள்ளன.)

இவையின்றி சின்னச் சின்ன புத்தகங்கள் சில.
தலவரலாறும் தமிழ்வேதங்களும் ஆன்மீகத் தொகுப்பு
(108 திவ்யதேச வரலாறும்.பன்னிரு ஆழ்வார்களையும் சொல்லும் நூல்)

எதிர்காலத்தில் இன்னும் நிறைய நூல்களை எழுதவேண்டும் என்ற ஆசைகளை கோட்டைக்கட்டி வைத்துள்ளேன். பொருளா தாரம் முட்டுக்கட்டைப் போடுகிறது. பார்க்கலாம்.

இதுவரை வாங்கியுள்ள விருதுகள் பற்றி

நிறைய விருதுகள் பெற்றுள்ளேன்.அவைகளில் குறிப்பிடத் தக்க சில

கண்ணதாசன் விருது
பட்டுக் கோட்டையார் விருது
கம்பதாசன் விருது
திருவள்ளுவர் விருது
கவிச்சுடர் விருது
சங்கத்தமிழ் புலவர் விருது
தமிழ்ச்செம்மல் விருது
சுரதா விருது
தமிழக அரசின் அகவை முதிர்ந்த தமிழறிஞர் (ஓய்வூதியம்)

தாங்கள் செய்துவந்த தொழில் குறித்து…

தொடக்கக் காலத்தில் எனது தொழில் ஒரு சைக்கிள் மெக்கானிக்காகத் தான் இருந்தது. கவிதா டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில். பின்பு அதே நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றினேன் சில ஆண்டுகள். போதிய வருமானமின்மையால் ஒரு மீன் கம்பெனியில் கணக்காளராக சேர்ந்தேன்.பின்பு சுயமாக ஒரு இறால் மீன் விற்பனை நிலையத்தை நாகையில் தொடங்கினேன். அதில் பெரியதொரு பின்ன டைவை சந்திக்க நேர்ந்தது. பொருளாதார இழப்பை ஈடு கட்ட முடியாமல் எனது நிறுவனம் மூடுவிழா கண்டது. மிகுந்த சிரமத்தில் இருந்த வேளை ஒரு ஐந்து வருடங்கள் லாரி ஓட்டுனராக பணியில் சேர்ந்தேன்.
அதிலும் பல இன்னல்கள். அதையும் விட்டு விட்டு சில இறால் கம்பெனிகளுக்கு விற்பனைப் பிரதியாக பணியாற்றினேன். வெளி மாநிலங்களில்.

கம்பதாசன் விருதாளர்கள் கவிஞர்கள் வீரபாண்டியத் தென்னவன், பொற்கைப் பாண்டியன், அனுராதா கட்டபொம்மன், வெற்றிப்பேரொளி ஆகியோருடன்....
மதுரை சங்கப்புலவர்கள் விழாவில் கவிஞர் பொற்கைப்பாண்டியன் அவர்களிடம் பாராட்டுப் பெறும்போது...

தொழில் சார்ந்து பல மாநிலங்க ளுக்கும் பயணித்துள்ளீர்கள். அவற்றுள் தங்களுக்குப் பிடித்த மாநிலம் எது? ஏன்?

ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி கோவா என நான் பல மாநிலங்களிலும் தங்கி இருந்தாலும் எனக்கு பிடித்த மாநிலம் கேரளாதான். இயற்கை வளம் கொஞ்சும் எழில்மிகு தேசம்.

அங்குள்ள மக்களிடம் ஒரு நாள் பழகிவிட்டாலே போதும் தன் குடும்பத்து அங்கத்தினராகவே பாவிக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழுக்கு மரியாதை தரும் ஒரு மாநிலமென்றால் அது கேரளாவே.

நிலாமுற்றம் ஆண்டுவிழாவில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களிடம் விருது பெறும்போது...

தற்போது என்ன செய்கிறீர்கள்? கவிதை மட்டுமே பொழுது போக்கா?

கொரோனாவின் தாக்கத்தால் பணியில் தொய்வு ஏற்பட்டு விட்டது. வெளிமாநிலங் களுக்கு பயணிக்க இயலவில்லை.
என்ன செய்ய. தற்போது நாகை நகரில் பிரபலமான திருமண மண்டபத்தின் நிர்வாகியாக பணிசெய்கிறேன்.
கவிதை எழுத நேரமும் கிடைக்கிறது.கவிதை எழுதி பொழுதை போக்குகிறேன் என்று சொல்ல முடியாது. கவிதை எழுதி காலத்தை சேமித்து வைக்கிறேன் என்பதே நிதர்சனம்.

வீட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் பற்றி..

எனக்கு நட்பாக வீட்டில் உள்ளவர்கள் ஒரு மகனும் மனைவியுமே. அவர்களின் அன்பும் அரவணைப்பும் என் வளர்ச்சிக்கான உரம்

உங்கள் எதிர்காலத் திட்டம்?

திட்டமிடல் என்று பெரிதாக ஒன்று மில்லை. எழுத வேண்டும். என் தமிழ் வாழ்த்தும் வரை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்

.தமிழ்நெஞ்சம் இதழ் மற்றும் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் குறித்து ஒரு சில வார்த்தைகள்..


தமிழ்நெஞ்சம் இதழ் பற்றியும் அதன் ஆசிரியப் பெருந்தகை கவிஞர் அமின் பற்றியும் ஒரு சில வார்த்தைகளில் சொல்லிட இயலாது. தமிழ்நெஞ்சம் மின்னிதழ் வரலாற்றில் சொல்லத் தக்க ஒரு இடத்தை சொந்தமாக்கிக் கொண்டுள்ளது மிகையில்லை. தரமான இலக்கிய இதழான தமிழ்நெஞ்சத்தைப் பாராட்ட வார்த்தைகள் போதா.

அதன் ஆசிரியர் அமின் அவர்கள் ஒரு தலைசிறந்த இலக்கியவாதி. என் நண்பர்களுக்கும் நண்பரான இவரை இவர் பாடும் பறவை ஆசிரியராக இருந்த காலந்தொட்டு அறிவேன். 50 வருடகால தோழர். மனித நேய பண்பு மிக்கவர். வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் பலருக்கும் உதவி வருபவர். எல்லோரிடத்திலும் பாகுபாடின்றி பழகக்கூடிய நண்பர்.

இவரது உழைப்பு என் கவிதைத் தொகுதிகள் முழுதும் நிரம்பிக் கிடக்கிறது.அதற்கான விலை ஏது கொடுக்க இயலும்
சேவை நேயமிக்க வள்ளலுக்கு திடமான நலத்தை இறைவன்தான் தந்தருள வேண்டும். வாழ்த்தி வணங்குகிறேன்.

கவிஞர் பொன்மணிதாசன் அவர்களுடன் தமிழ்நெஞ்சம் அமின் மற்றும் பாவலர் சீனி பழனி விருதுபெறும் விழாவொன்றில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »