மின்னிதழ் / நேர்காணல்
நேர்கண்டவர்
பாவலர்மணி இராம வேல்முருகன்
தமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல. தமிழால் வளர்பவர்களைவிட தொடக்கக் கல்வியைக்கூட நிறைவுசெய்யாத ஒரு வரைத் தமிழ் தெரிவுசெய்து கொண்டது வியப்புக்குரியதே. சிறுவயதில் மேடைப் பேச்சுகளைக் கேட்டதாலும் திரைப்பட வசனங்களை மனப்பாடம் செய்து பேசியதாலும் தமிழால் ஈர்க்கப்பட்டுத் தான் வளர்ந்தபிறகு அந்தத் தமிழ்மொழிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணித் தமிழுக்கென ஒரு சங்கம் அமைத்து தமிழ்வளர்க்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவரே இம்மாத நமது சிறப்பு விருந்தினர். 30 ஆண்டுகளுக்குமுன் ஒரே ஒரு சிறிய கடையுடன் தொடங்கிய ஜெனிபர் இனிப்பகம் இன்று பலகிளைகளுடன்மயிலாடுதுறையில் பரிணமித்துள்ள ஜெனிபர் அடுமனை மற்றும் இனிப்பகம் என்ற மாபெரும் குழுமத்தின் நிறுவனர் மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தின் காவலர் நிறுவனர் தமிழ்ஆர்வலர் திருமிகு ஜெனிஃபர் பவுல்ராஜ் அவர்களை அவரது நிறுவனத்திலேயே காணச்செல்கிறோம்.
மயிலாடும் துறையில் காவிரிக்கரை யில் காவிரிக்குச் சிலை வைத்த அந்த மாமனிதர் மிகவும் எளிமையாகத் தனது நிறுவனத்தில் நம்மை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார். இதோ அவருடனான பேட்டி….
வணக்கம் ஐயா
தமிழ்நெஞ்சம் சார்பாகத் தங்களுக்கு இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
l தங்கள் பிறந்த ஊரைப்பற்றியும், பெற்றோரைப் பற்றியும் சொல்லுங்களேன்!
நான் பிறந்தஊர் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்ட – கழுகுமலைக் கருமைந்த கே.சுப்ரமணியபுரம் என்னும் சிற்றூர். எனது தந்தையார் திருமிகு பி. சங்கரப்பன் அவர்கள் தாயார் ச.வேங்கடம்மாள்
l தாங்கள் மயிலாடுதுறைக்கு வந்து எத்தனை ஆண்டுகள் இருக்கும்? முதன்முதலில் மயிலாடுதுறையில் என்ன தொழில் செய்தீர்கள்?
நான் மயிலாடுதுறைக்கு வருவதற்கு முன்பு கும்பகோணம் வந்ததைச் சொல்லியாக வேண்டும்.எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும்போது கும்பகோணம் தற்போது பழைய பேருந்து நிலையத்திற்கருகே இருந்த ஒரு கடலைக் கடையில்தான் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். சாதாரண கூலித் தொழிலாளியாகத் தொடங்கிய எனது வாழ்க்கை ஏன் முதலாளியாகக் கூடாது என்று எண்ணி ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகு மிகவும் சொற்பமான தொகையுடன் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள மங்கைநல்லூர் என்ற ஊரிலே ஒரு கடலைக்கடையைத் தொடங்கினேன். வாடகை இடத்தில் தொடங்கிய கடலைக்கடை பின்னாளில் ஒரு இனிப்புக் கடையாக மாறியது. பின்னர் 1990 ல் மயிலாடுதுறையில் ஒரு இனிப்பகத்தைத் தொடங்கினேன். முப்பது வருடங்கள் ஆகி்றது நான் மயிலாடுதுறை வந்து; இனிப்பகம் தொடங்கிய நான் பின்னாளில் எனது மகனின் தூண்டுதலால் அடுமனையையும் தொடங்கினேன் .இன்று ஜெனிபர் பேக்கரி மற்றும் இனிப்புகள் என்ற பெயரே பிரபலமாகியுள்ளது.
l இன்று மயிலாடுதுறையில் பல கிளைகளைத் தொடங்கியுள்ளீர்களே எங்கு பார்த்தாலும் ஜெனிபர் அடுமனை என்றே தெரிகிறதே? இது எப்படி சாத்தியமாயிற்று?
சிறிய ஆர்வம்தான். நான் தொழி லாளியாக இருந்தபோது என் முதலாளிகள் என்னைச் சரியாகக் கவனிக்க வில்லை. நான் அவ்வாறு இருக்க எண்ணவில்லை. என்னை நம்பி வந்த தொழிலாளர்களை நான் தொழிலாளியாக எண்ணுவதில்லை ஒரு சக குடும்ப உறுப்பினராக சகோதரனாகவே எண்ணுகிறேன். அவர்களின் ஒத்துழைப்பால் தான் இத்தனை கிளைகளைத் தொடங்க முடிந்தது. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு வர் பொறுப்பில் விட்டதாலும் இது சாத்தியமாகியுள்ளது.
l தாங்கள் ஒரு முதலாளியாக மட்டும் இல்லாமல் ஒரு தொழிலாளியாகவும் இருக்கிறீர்களே அது எவ்வாறு முடிகிறது?
எந்த ஒரு தொழிலைச் செய்யும் போதும் அந்தத் தொழிலைப் பற்றிய அறிவு ஒவ்வொரு முதலாளிக்கும் சிறிதளவேனும் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவ்வாறு இல்லாவிடில் உணவுப் பொருட்கள் தொடர்பான இந்தத் தொழிலைச் செய்வது சற்றே கடினம். ஆரம்ப காலங்களில் இனிப்பு செய்யும் திறனாளிகளை வைத்தே இனிப்புகளைத் தயார்செய்தேன். சிலநேரங்களில் அவர்கள் ஒழுங்காகப் பணிக்கு வராத போது அதனை ஏன் நாமும் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்டேன். எனவேதான் நான் தொழிலாளியாகவும் செயலாற்ற முடிகிறது.
l தாங்கள் ஒருமுறை ஜாங்கிரி என்ற இனிப்பு வகையைச் செய்வதைப் பார்த்தேன். ஜாங்கிரி பிழிதல் என்பது சற்றே கடினமான செயல். அதை எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?
உண்மைதான் ஜாங்கிரி செய்வது சற்றே கடினம்தான். ஜாங்கிரி செய்வதற்கான பருப்பை ஊறவைத்து அதனை அரைத்துக் கொண்டே ஜாங்கிரியைப் பிழிதல் வேண்டும். மாவை அரைத்து வைத்துக் கொள்ள முடியாது. ஜாங்கிரி செய்யும் ஆற்றல் கொண்ட திறனாளிகள் குறைவு. வருவதாகச் சொல்லும் திறனாளி காரணம் சொல்லாமல் நின்று விடுவதும் வராமல் தவிர்ப்பதும் நிறைய நடைபெறும். அப்போது ஊறவைத்த பருப்பு வீணாகி விடும். அப்போதுதான் எனக்கு நாமே அந்த இனிப்பைச் செய்தால் என்னவென்று தோன்றியது. எத்தனையோ முறை முயன்று தோற்று ஜாங்கிரி போல முயன்று வீணான பொருட்களை அடுப்புக்கு இரையாக்கி அதன் பின்னர் மெல்ல கற்றுக் கொண்டேன். தற்போது நானே நன்றாக ஜாங்கிரி செய்வேன்.
l இனிப்புவகைகளில் தங்களைக் கவர்ந்த இனிப்பு எது? ஏன்?
வேறெது? நானே கிண்டிய அல்வாதான். கோதுமையிலிருந்து பால் எடுத்து அல்வா செய்வது என்பது ஒரு கலை. அதனை பல திறனாளிகள் செய்யும்போது அதனைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.இதற்காகத் திருநெல்வேலிக் கெல்லாம் சென்று அல்வா சுவையை அறிந்து பிறகு கற்றுக் கொண்டேன். நானே அல்வா செய்து அதனை எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சூடாக ஒரு வாழை இலையில் வைத்துத் தருவேன். எப்படி இருக்கிறது என்று கேட்பேன். மிக அருமை என்று அவர்கள் சொல்லி விட்டு எனது கடையில் அந்த அல்வாவை தங்கள் வீடுகளுக்கு வாங்கி எடுத்துச் செல்லும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எந்த ஒரு இனிப்பும் நான் சுவைத்துப் பார்த்து நன்றாக இருந்தால்தான் விற்பனைக்கு வைப்பேன்
l தங்கள் தொழிலைத்தாண்டித் தமிழ்ப் பணி ஆற்றும் எண்ணம் தங்களுக்கு எப்படித் தோன்றியது?
நான் அதிகம் படித்தவன் இல்லை. ஆனால் நிறைய மேடைப்பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். நான் தொழில்சார்ந்து எனது கடலைவண்டியைப் பொதுக்கூட்டங் கள் நடக்கும் மேடைகளின் அருகில் கொண்டு செல்லும் போதெல்லாம் தமிழ் உரைகளைக் கேட்டு மயங்கிப் போயி ருக்கிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர், வை.கோ, காளிமுத்து போன் றோரின் பேச்சுகளில் சொக்கிப் போயிருக்கி றேன். நடிகர் திலகத்தின் வீர வசனங்களை யெல்லாம் தெருவில் நடக்கும் போதே பேசிக்கொண்டே நடப்பேன். படிக்க வில்லை என்றாலும் செவிவழியாகத் தமிழைக் கற்றுக் கொண்டேன். அதன் காரண மாகவே தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி தமிழ்ச்சங்கம் ஒன்றைத் தொடங்கினேன். கடந்த 2018 ல் அதற்கு மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் என்று பெயரும் வைத்து என்னாலான தமிழ்ப் பணிகளைச் செய்துவருகிறேன்.
l மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி…
இப்போதுதான் தொடங்கியிருக்கி றோம். தமிழ் அறிஞர்களின் பிறந்தநாள் நினைவுநாளில் அவர்களது சிலைகள் உருவப்படங்களுக்கு மரியாதை செய்து சிற்சில நிகழ்வுகளை நடத்துகிறோம். காவிரி அன்னைக்குக் காவிரிக் கரையில் பத்து லட்ச ரூபாய் செலவில் ஒரு சிலை வைத்துள்ளோம். பாரதிவிழா நடத்தி கவி யரங்கம் கருத்தரங்கம் நடத்தியுள்ளோம். எங்களது விழாவில் மதுரைக் கவிஞர் பொற்கைப் பாண்டியன், அரசு அதிகாரி சகாயம் ஐஏஎஸ் போன்றோரை வைத்து விழாக்கள் நடத்தியுள்ளோம். கொரானா காலத்தில்கூட காணொளி வழியாக இளம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தி பணப்பரிசுகளை வழங்கியுள்ளோம். அடுத்து மேலும் சில திட்டங்கள் உண்டு . காலம் வரும்போது செயல்படுத்துவோம்
l தமிழ்நிகழ்வுகள் எந்த மாதிரியான மாற்றங்களைத் தமிழில் ஏற்படுத்துமெனத் தாங்கள் கருதுகிறீர்கள்?
தமிழைத் தமிழன் மறக்காமல் இருக்க வேண்டுமே. அந்த மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும். இன்று உலகில் உள்ள மிகப்பழமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. இத்தகையத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் அதனைச் சரியாகப் பேசவோ எழுதவோ செய்வதில்லை. எங்களது நிகழ்வுகள் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் தமிழ்மொழி பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன்.
l மூத்த தமிழ்அறிஞர்கள் எழுத்தாளர் கள் கவிஞர்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
மயிலாடுதுறையையே ஒரு தமிழ் வளரும் பூமியாகத்தான் நான் பார்க்கிறேன். தருமபுரம் ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம் வழியாகத் தமிழறிஞர்களைப் போற்றி வளர்க்கும் பூமியிது. மாயவரம் முன்சீப்பாக இருந்த வேதநாயகம்பிள்ளை வாழ்ந்த பூமியிது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த மண் இம்மண்; இங்கு இப்போதும் தமிழ்அறிஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களால்தான் தமிழ் மறக்கப்படாமல் உள்ளது
l இளம் எழுத்தாளர்கள் கவிஞர்களின் பங்களிப்பு தமிழ்வளர்ச்சிக்கு எவ்வாறு உள்ளது? அதனை அதிகப்படுத்துவதற்குத் தாங்கள் ஏதேனும் முயற்சிகள் எடுத்துள்ளீர்களா?
இளம் எழுத்தாளர்கள் கவிஞர்களுக் கான இடம் குறைவாகவே உள்ளது. அவர்களைச் சரியாக ஊக்குவித்தால் நிறைய படைப்பாளிகளும் கவிஞர்களும் பேச்சாளர்களும் உருவாக வாய்ப்புள்ளது. அரசும் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. நாங்களும் எங்களது தமிழ்ச்சங்கம் வாயிலாகப் பேச்சாளர்களை உருவாக்க முனைந்துள்ளோம். பள்ளி கல்லூரி மாணவ மாணவியரில் சிறந்த பேச்சாளர்களைக் கண்டறிந்து அவர் களுக்கான வாய்ப்புகளை வழங்கி ஊக்கப் படுத்துகிறோம். இளங் கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்குக் கவியரங்கங்கள் பயிற்சிப் பட்டறைகளை நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்.
l ஒரு தமிழ்ச்சங்கம் எந்த மாதிரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
தமிழ் நமது தாய்மொழி. அம்மொழியில் நாம் பேசவும் எழுதவும் செய்தாலே தமிழ் அழியாது. ஒரு தமிழ்ச்சங்கம் என்பது புதிய இலக்கியங்களை உருவாக்கவும் ஏற்கனவே தமிழில் உள்ள இலக்கியங்களை இப்போதுள்ள இளைஞர்களிடம் கொண்டு செல்லவும் வேண்டும். இவ்விரண்டைச் செய்தாலே மற்றவை தானே நடக்கும்.
l தங்கள் குடும்பம் குழந்தைகள் பற்றி..
எனது மனைவியார் என்னுடன் அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் பங்குபெற்று ஒரு வேலைக்காரியாகவும் ஒரு மகாராணியாகவும் உள்ளவர். ஒரு மகள் பிரியதர்சினி திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது ஒரு மகன் திருமணமாகி அவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஜெனிபர் குழுமம் எனது மகனின் கவனிப்பில்தான் உள்ளது. அன்பான இனிமையான குடும்பம் அடுத்து எனது தொழிலாளர்கள் அனைவருமே எனது குடும்பத்தார்களே. அவர்கள் ஒவ்வொருவருடைய வளர்ச்சியும் எனக்கு மகிழ்வு தருவதுவே.
l பெரும்பாலும் ஒரு தந்தை தான் செய்த தொழிலைத் தன் மகன் செய்ய விரும்புவதில்லை. ஆனால் தங்கள் மகன் தங்கள் தொழிலைச் செய்ய முன்வந்து அதனைச் சிறப்பாகச் செய்துவருகிறாரே?
இது பற்றித் தங்கள் கருத்து.
உண்மைதான். ஒருசில தொழில் களைத் தவிர மற்ற தொழில்களைத் தன் மகன் செய்ய எந்தத் தந்தையும் விரும்புவதில்லை என்பது உண்மையே.எனது மகனும் பட்டப்படிப்பு வணிக மேலாண்மை போன்றவற்றை முடித்தவு டன் ஒரு வேலைக்கு அனுப்பவே முடிவு செய்தேன். ஒரு வேலைக்குச் சென்றால் அவருக்கு ரூ 10000 – 15000 மாதமொன்றுக்கு ஊதியமாகக் கிடைக் கலாம். அதைவிட அதிகமாக என்னிடம் வேலைபார்ப்பவர்களுக்கு நான் தருகிறேன். அப்படியிருக்க எதற்கு இன்னொருவரிடம் வேலைக்குச் செல்ல வேண்டும் நமது நிறுவனத்திலேயே வேலை செய்யலாம் என எண்ணி நமது நிறுவனத்திலேயே வேலை செய்யத் தொடங்கிவிட்டார்
தற்போது ஜெனிபர் குடும்பத்தின் உடைய முழு பொறுப்பும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளது ஜெனிபர் குழுமத்தின் தற்போதைய லோகோ அவரது வடிவமைப்பு; அவரால் உருவாக்கப்பட்டது. எனவே தந்தை செய்த தொழிலை மகன் செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை என்பதே எனது கருத்தாக இருக்கிறது
l தங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி..
எதிர்காலத் திட்டம் என்று எதுவும் இல்லை.ஒரு கடையோடு தொடங்கப்பட்ட ஜெனிபர் பேக்கரி அன்ட் இனிப்பகம் தற்போது 12 இடங்களில் தனது கிளையை விரித்து உள்ளது வெளி நகரங்களுக்கு ஜெனிபர் இக்கிளையை வைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை த காலத்தின் போக்கிலே நான் சொல்கின்றேன் காலமே அதனை முடிவு செய்யும்
l தாங்கள் எழுதியுள்ள நூல்கள் பற்றி
இதுவரை நூல்கள் எதுவும் எழுத வில்லை எனினும் எனது வாழ்க்கை வரலாற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் ஒரு சில மாதங்களில் அதற்கான வேலைகள் நிறைவு பெறும் அதன் பிறகு ஒரு விழா நடத்தி அந்த நூலை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்
l தங்களுக்குப் பிடித்த நூல்கள் பற்றி
பிடித்த நூல்கள் என்றால் எல்லா இலக்கிய நூல்களும் எனக்கு பிடிக்கும் என்றாலும் எவற்றையும் நான் தனியாக படித்ததில்லை; அதற்கான வாய்ப்பும் எனக்கில்லை. திருக்குறளை பெரும்பாலும் படித்திருக்கின்றேன். திருக்குறளை எனக்கு பிடித்த நூலாக கருதுகின்றேன். மேலும் மகாபாரதம் கம்பராமாயணம் போன்ற நூல்களும் எனக்கு பிடித்த நூல்களே.
l இலக்கியக் கதாபாத்திரங்களில் தங்களைக் கவர்ந்த கதாபாத்திரம் எது? ஏன்?
இலக்கியக் கதாபாத்திரங்கள் என்றால் எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன். கர்ணன் எனக்கு பிடித்த கதா பாத்திரமாக கருதுகின்றேன். ஏனெனில் கர்ணனுடைய கொடைத்தன்மை குறித்து நான் இங்கே ஒரு நிகழ்வினை சொல்ல விரும்புகின்றேன். ஒரு முறை தர்மனிடம் ஒரு சமையல் செய்வதற்கான விறகுகள் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது பெரும் மழை. அங்கே கொண்டு வந்த விறகுகள் அனைத்தும் மழையில் நனைந்து விட்டன. அங்கு சமையலை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமே இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கர்ணனை அழைத்து விறகு வேண்டும் என்று கேட்ட பொழுது கர்ணன் உடனே தனது அரண்மனையில் இருந்த ஜன்னல் கதவுகள் நிலை போன்றவற்றை எல்லாம் உடைத்துக் கொடுத்து அதனை வைத்துச் சமையலை மேற்கொள்ள வழி செய்தான் ஏனென்றால் அந்த விறகுகளாக அவனுடைய அரண்மனையில் இருந்த அந்த ஜன்னல் கதவுகளும் நிலைகளும் இருக்கும் என்று அவன் கருதினான். அதனை எந்தவித தயக்கமும் இன்றி உடனே கொடுப்பதற்கான முயற்சிகள் செய்ததால்தான் கர்ணன் கொடைத் தன்மை நிறைந்தவன் என்று போற்றப்படுகின்றான். தர்மன் சிறந்த தர்மவானாக இருந்தபோதும் கர்ணனுடைய கொடைத் தன்மை முன்னிலை வகிப்பதால் எனக்கு கர்ணன் கதாபாத்திரமே மிகவும் பிடிக்கும். நானும் கர்ணனைப் போல கொடுப்பதற்கு முயல்கின்றேன்
l தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றியும் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் அமின் அவர்களுடனான தங்கள் நட்பு பற்றியும் ஒரு சில வார்த்தைகள் ..
தமிழ்நெஞ்சம் அமின் மிக இனிமை யானவர். அவர் மயிலாடுதுறையின் வடகரையைச் சேர்ந்தவர் என்பது மகிழ்வைத் தருகிறது. இன்று பிரான்ஸ் நாட்டை வாழ்விடமாகக்கொண்டிருக்கிறார். நண்பர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் நீடூர் அஷ்ரப்அலி அவர்களுடன் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பழகுவதற்கு இனிமையான மனிதர். அவர் செய்யும் தமிழ்த் தொண்டு அளப்பரியது உலகத்தினுடைய எந்த மூலையிலிருந்து தமிழ் நூல்களை வடிவமைத்து, வெளியிட்டுத் தர வேண்டும் என்று வழியாக கேட்டாலும் மறுப்பின்றி உடனே அதனை செய்து தரக்கூடியவர். நீண்ட காலமாகத் தொடர்ந்து தமிழ்நெஞ்சம் இதழை அவர் நடத்தி வருகின்றார் எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்யக் கூடியவர் அவர் நீண்ட நெடுங்காலம் தமிழ்ப் பணியாற்றி தன்னுடைய தமிழ்நெஞ்சம் இதழ்களையும் உலகமெங்கும் அனுப்புவதற்கு முயற்சிகள் தொடர வேண்டும் என்பது எனது அவா. அவர் நீடூ வாழ இறைவனை வேண்டுகின்றேன்.
5 Comments
நிறைமதி நீலமேகம், பெண்ணாடம். · நவம்பர் 30, 2020 at 10 h 01 min
வெகு சிறப்புங்க ஐயா, வணங்கி மகிழ்கின்றேன்.
Selvakumari Djeyabalan · நவம்பர் 30, 2020 at 10 h 08 min
சிறப்பான நேர்காணல்..
தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு மிக்க நன்றிகள்..
R.VELMURUGAN · நவம்பர் 30, 2020 at 13 h 05 min
VERY NICE
வெற்றிப்பேரொளி · டிசம்பர் 15, 2020 at 17 h 04 min
ஜெனிஃபர் இனிப்புகள் மற்றும் அடுமனை உரிமையாளர் ஜெனிஃபர் பவுல் ராஜ் அவர்களின் நேர்காணல் நெஞ்சத்தை நிறைத்தது.
இனிய வாழ்த்துகள்.
வெற்றிப்பேரொளி · டிசம்பர் 20, 2020 at 16 h 27 min
தமிழ்நெஞ்சம் 2020 திசம்பர் இதழில் வெளிவந்த மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் நிறுவுநர் இலக்கியப் புரவலர் ஜெனிஃபர் பவுல்ராஜ் அவர்களுடனான நேர்காணல் நெஞ்சத்தை நிறைத்தது.
தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்தவர் இன்று ஜெனிஃபர் இனிப்பகம் மற்றும் அடுமனையின் பன்னிரு கிளைகளை முருகனின் பன்னிரு கரங்கள் போல் விரித்திருக்கிறார் என்பது சாதனை; சாதாரண சாதனையல்ல; சரித்திர சாதனை.
அடித்தளத்திலிருந்து ஒரு மனிதன் தன் ஊக்கத்தால் உழைப்பால் விடாமுயற்சியால் படிப்படியாக முன்னேறி வெற்றிச் சிகரத்தைத் தொட்ட கதை. இதை மிகவிரைவில் முழுமையான நூலாக வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. உறுதியாக அந்தப் புத்தகம் வாழ்வில் உயரத்துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டிப் பாடமாக இருக்கும் என்ற வலிமையான நம்பிக்கை எனக்கு உண்டு.
ஒன்றுமில்லை என்பதிலிருந்து உச்சம் சென்றவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் தம்மிடம் பணிபுரிந்தவர்களை வெறும் வேலையாட்களாக நடத்தாமல் தங்கள் தொழிலின் உழைப்புப் பங்குதாரர்கள் போல் நடத்தியிருப்பதைக் காணலாம். உழைப்புச் செல்வர் பவுல்ராஜ் ஐயாவும் அதே தடத்தில் நடந்து வருவதை இந்த நேர்காணல் நெருங்கிக் காட்டுகிறது.
தானே அடுப்படியில் ஜாங்கிரி மாஸ்டர் ஆகப் பரிணமித்த செய்தியில் உழைப்பின் உப்பும் தன்னம்பிக்கையின் இனிப்பும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதை நாம் சுவைத்தறிய முடியும்.
மனைவியை வேலைக்காரி மகாராணி என்ற இரட்டைத் தளத்தில் அவர் விவரித்திருப்பது, இல்லத்தரசியின் பங்கு ஒரு வெற்றி உழைப்பாளியின் வாழ்வில் எந்த அளவுக்கு உரியது என்பதைக் காட்டுகிறது.
படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு நிகராக, முறையாக பள்ளி சென்று பயிலாத ஒருவர், இன்று திருக்குறளையும், கம்பராமாயணத்தையும், மகாபாரதத்தையும் அலசுகிறார், கர்ணன் என்ற கொடையாளியைத் தன் வாழ்வின் முன்னோடியாகக் கொண்டு இயங்குகிறார் என்றால் அவரின் தமிழ்க் காதலைத் தலைமேல்தாங்கிக் கொண்டாடத் தோன்றுகிறது.
இளைய தலைமுறையினரை தமிழின் பால் ஈர்க்கும் அவரின் முயற்சிகள் முகமலர்ந்து வரவேற்க வேண்டியவை. ஆர்வமுள்ள இளையவர்களைக் கவிஞராக மலர்ந்த கவியரங்கங்கள் எடுப்பதுடன், கவிதைப் பட்டறைகள் காணவேண்டும் என்ற திட்டம் அவரின் வெற்றித் தடத்தைப் பறைசாற்றுகின்றது.
தமிழர்களுக்குத் தமிழ் வேறு…காவிரி வேறா….? அதனால் தான் காவிரித்தாய்க்குப் பத்து இலட்ச ரூபாயில் திருவுருவச் சிலையை நிறுவமுடிந்தது. நம்மைப் போன்றோர் காவிரித் தாய் உருவில் கன்னித் தமிழ்த்தாயையும் சேர்த்தே காண்கிறோம்; சிந்தையாலும் சிரத்தாலும் வணங்குகிறோம்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.” என்பார் வள்ளுவ வாழ்வியல் பேராசான்.அஃது அன்று அரசை முன்னிறுத்திக் சொல்லியிருப்பினும் இன்று ஒவ்வொரு தனிமனிதனின் குடும்ப நிதி மேலாண்மைக்கானதாகவும் அது மாறிவிட்டது.
அந்த வகையில் தான் ஈட்டியச் செல்வத்தைத் தானும், தன் குடும்பமும், சுற்றமும் மட்டும் அனுபவிக்கும் எண்ணம் இல்லாமல், ” செல்வத்துப் பயனே ஈதல்” என “ஈத்துவக்கும் இன்பத்தில்” திளைக்கும் வரத்தை வாழ்வாகக் கொண்டுள்ளார்.
இலக்கியவாதிகளின் இனிய புரவலாக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் வாழ்க! வளர்க! சங்கம் கண்ட இலக்கியப் புரவலர் ஜெனிஃபர் பவுல்ராஜ் அவர்கள் பணி வெல்க!
இந்த இனிப்பக மனிதரை தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தும் நேர்காணலை எடுத்துள்ள பாவலர்மணி வலங்கைமான் இராம வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துப் பூச்செண்டு.
மிகவும் அழகிய முறையில் நேர்காணலை வாசகர்களுக்கு வழங்கியுள்ள தமிழ்நெஞ்சம் இதழுக்கும், இதழாசிரியர் கவிஞர் அமின் அவர்களுக்கும் பாராட்டுத் தேரோட்டம்!
வற்றா அன்புடன்,
வெற்றிப்பேரொளி,
திருக்குவளை.