மின்னிதழ் / நேர்காணல்

 

சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர். தமிழை விரும்பிப் படித்து முதுகலைப் பட்டம் பெற்று மரபுக்கவிதைகளை யாக்கும் திறன் பெற்ற கவிஞர். ஏழைகளுக்கு அன்னமிடும் அன்னலட்சுமி. முகநூல்குழுமங்களை நேசிக்கும் புரவலர். இப்படிப்பட்ட பன்முகத் திறன் கொண்ட சகோதரி திருமதி இராணிலட்சுமி அவர்களைத்தான் நாம் இப்போது நேர்காணல்செய்கிறோம். அவரது அன்னசாய்பாபா ஆலயத்திலிருந்து…

நேர்கண்டவர் : பாவலர்மணி இராம வேல்முருகன்

மேல் காணும் தமிழ்நெஞ்சம் நவம்பர் 2020 மாத இதழ் அட்டைப்படத்தில் சொடுக்கி இம்மாத இதழை தரவிறக்கம் (DOWNLOAD) செய்துப் படித்து தங்களின் கருத்துகளைப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்
முகநூல் குழும ஆண்டுவிழாவில் தமிழ்நெஞ்சம் அமின் நூல் வெளியீடு செய்திட முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார் திருமதி இராணிலட்சுமி. உடனிருக்கும் கவிதாயினிகள் தென்றல் கவி, சக்தி, உஷா மற்றும் கவிஞர்கள் பால கோவிந்தராசன், செல்லமுத்து பெரியசாமி, ... ஆனந்த் உமேஷ்.

ராணி லட்சுமி என்ற பெயரைக் கேட்டாலே ஜான்சி ராணி லட்சுமி பாய்தான் முதலில் ஞாபகம் வருவார். தங்கள் பெயருக்கும் ஜான்சி ராணிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

எனது தந்தை வழி பாட்டியின் பெயர் இலட்சுமி, எனது தந்தையின் விருப்பப்படி வீட்டில் அனைவரும் அழைக்கும் பெயர் இராணி.. எனவே, முகநூலில் இராணி இலட்சுமி‌ என்று அறிமுகமானேன்.. மனதால் ஜான்சி ராணி இலக்குமிபாய் போன்று வீரத்துடன் இருக்கவே விரும்புவேன்.. எதற்கும் சோர்வுற மாட்டேன்..

தங்கள் சொந்த ஊர், பெற்றோர் பற்றிக் கூறுங்களேன்.

எனது பூர்வீகம் கேரளாவில் உள்ள கொடுங்கலூர்.. கொடுங்கலூர் பகவதியம்மன் விழாவின் போது தான் பிறந்தேன்.. பரணி நட்சத்திரத்தில்.. எனது நான்கு வயதில் குடும்பத்தினர் அனைவரும் வேலை நிமித்தமாக திருச்சிராப்பள்ளி வந்து விட்டார்கள்.. 1970 முதல் திருச்சிராப்பள்ளி தான் சொந்த ஊர் எனக் கூறுமளவில் இங்கேயே தங்கி விட்டோம்..

எனது தாய் சாந்தா.. மிகவும் அமைதியானதொரு குணம்.. 85 வயதா கிறது. அண்ணனுடன் சென்னையில் வசிக்கிறார்கள்..

தந்தை இராணுவப் படையிலிருந்து ஓய்வு பெற்ற சுபேதார் மேஜர்.. ஹவில் தாராகப் பணியில் சேர்ந்து சுபேதார் மேஜராகப் பணி ஓய்வு பெற்றவர்.. காங்கோ போர் முதல் 1965-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர்வரை பங்கு பெற்றுள்ளார்கள்..தந்தையின் பணியினைப் பற்றி மிகவும் பெருமை கொள்வேன்..

எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி.. மிகுந்த பாசமானவர்கள்.. அவர்களை விட அவர்களின் துணைவியர் எனக்கு ஒன்றெனில் துடித்துப் போவார்கள்.. அனைவரும் சென்னையில் வசிக்கின்றனர்..

தாங்கள் தமிழில் முதுகலை பட்டம் பெற்றுள்ளீர்கள்.அதனை விரும்பிப் படித்தீர்களா? அல்லது வேறுவழியின்றிப் படித்தீர்களா?

நான் 1981-ல் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் தமிழில் முதலாவதாக வந்தேன்.. அப்போதைய மாவட்ட ஆட்சியர் மேதகு.சாந்தா ஷீலா நாயர் அவர்களிடமிருந்து திருக்குறள் புத்தகம் ஒன்று பரிசாகப் பெற்றுள்ளேன்.. தமிழில் மிகுந்த ஆர்வம்..

விரும்பி எடுத்த பாடம் தான் இளங்கலை / முதுகலைத் தமிழ்.. கல்லூரிப் படிப்பின் போதே நான்கு ஆண்டுகள் தட்டச்சு / சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை முதலாம் வகுப் பில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.. ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் அதிமேல்நிலையிலும் (High Speed) தேர்ச்சி பெற்றுள்ளேன்..

திருமதி இராணிலட்சுமி

தமிழ் படித்துவிட்டு தொழிலாளர் நலத் துறையில் எப்படி பணிக்கு வந்தீர்கள்?

தமிழ் / ஆங்கிலம் ஆகியவற்றில் தட்டச்சு / சுருக்கெழுத்தில் நான்கு மேல்நிலைத் தேர்ச்சி பெற்றிருந்ததால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், 1989-ல் தொழிலாளர் துறையில் சுருக்கெழுத்துத் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன்.. கடந்த மே மாதத்துடன் 31 வருடங்கள் அரசுப்பணி முடித்துள்ளேன்..இன்னும் ஐந்து வருடங்கள் பணி எஞ்சியுள்ளன..

தொழிலாளர் நலத் துறையில் தங்கள் சாதனை என்று எதனைக் கருதுகிறீர்கள்?

தொழிலாளர்கள் என்பவர்கள் எப்போதும் எதற்காகவேனும் உரிமைகளைப் பாடுபட்டு பெறவேண்டிய நிலையிலேயே இருப்பவர்கள். எனவே, அவர்களுக்கான நலனில் முழு மனதோடு நிறைந்த ஈடுபாட்டுடன் எப்போதும் செயல்படுவேன்.. சாதனை என்றில்லா விடினும் முழு மனத்திருப்தி பெறும் வகையில் பணி புரிகிறேன் என்பதை உணர்கிறேன்..

தற்போது பதவி உயர்வில் தொழிலாளர் உதவி ஆய்வராக வருவதற்கு முன்னர் தொழிலாளர் இணை ஆணை யர் அலுவலகத்தின் கணக்கராக (அக் கவுண்ட்டண்ட்) இரண்டரை ஆண்டுகள் ஆற்றிய பணியினை எனது சாதனையாகக் கருதுவேன்.. ஏனெனில், அப்பணி பணியின் போது இறந்த / காயமடைந்த தொழிலாளர்களின் இழப்பீடு சம்பந்தமானது.. (வேலையாள் இழப்பீட்டுச் சட்டம், 1923) அப்போது மிகவும் நலிந்த குடும்பத்தினரின் சொந்தத் துயரங்கள் ஏராளமானது.. பணியினையும் தாண்டி அவர்களுக்கு மிகுந்த உதவியினைச் செய்ததால் அவர்களில் பலர் இன்னமும் அலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி நலம் விசாரிப்பதும் நன்றி கூறுவதும் தொடர்கின்றது..

ஒரு குடும்பத்திற்கு அவர்களது இயலாமையை உணர்ந்து இழப்பீடு உடனடியாகப் பெற்றுக் கொடுத்தபோது அவர்கள் என்னைவிட வயதில் பெரியவர் கள் என்பதையும் மறந்து காலில் விழுந்து அழுததையும், இன்னொருவர் நான் ஏதோ எனது சொந்தப் பணத்தை இழப்பீடாக அளித்தது போல பூ, பழ சீர்வரிசையுடன் எனக்கு நன்றி கூறியதையும் எனது வாழ்நாளில் மறக்கவே இயலாது.. இவ்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கு எப்போதும் நன்றி கூறுவேன்..

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் அரசு எவ்வாறு செயல்படுகிறது?

குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் வரைமுறைப்படுத்துதல்) சட்டத் தினை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி தமிழகத்தைக் குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக்க தீவிரமாக முயன்று வருகிறது.. ஆய்விற்கான அறிக்கையில் ஒரு நிறுவனத்தில் 18 வயதுக்குக் கீழ் எவரேனும் பணிபுரிகிறார்களா என்பதை முதலாவதாக விசாரிக்கவும், மாதத்திற்கு இருமுறைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் (National Child Labour Project) கீழுள்ள அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக (District Child Protection Office) அலுவலர்கள் ஆகியோருடன் சிறப்புக் கூட்டாய்வு மேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதைக் கண்டறிந்து, அவர்களை குழந்தைகள் நலக் குழுமத்தின் (Child Welfare Committee) வசம் ஒப்படைத்து அவர்களுக்கு படிக்க விருப்பமிருப்பின் பள்ளியிலும், விருப்பமான துறைகளிலும் சேர்த்து அவர்களது நலனைக் கருத்தில் கொண்டு செயலாற்றுகிறோம்..

வருமானம் இல்லாமல்தான் பெற்றோர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். குழந்தைகளை நீங்கள் தடுத்துவி்ட்டால் அவர்களுடைய பெற்றோருக்கு வருமானத் திற்கு ஏதேனும் வழி செய்கிறீர்களா?

இக்கருத்து தான் பெரும்பாலா னோரின் பொதுக் கருத்தாகும். அனைவரும் அப்போதைய குடும்பத்தின் வறிய நிலையை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர்.. குழந்தைத் தொழிலாளர் என்பவர்கள் 14 வயதிற்கும் குறைந்தவர்கள்.. இதை அரசு முழுமையாகத் தடுக்கிறது.. 15- 18 வயது வரை வளரிளம் பருவம் (Adolocent period) இவ்வயதினர் பணிபுரிவதை முறைப்படுத்த எண்ணுகிறது. நல்லது கெட்டதை ஆராயும் நிலையை 18 வயது நிறைவுற்றால் தான் பெறுவார்கள் என்பதால் தான் ஓட்டுரிமை பெறும் வயதை 18 என நிர்ணயித்துள்ளார்கள்.. அவ்வயது வரை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அப்போது தான் தனக்கும், குடும்பத்திற்கும் நிலையான வருவாய் பெறும் வகையில் ஒருவர் உருவாக முடியும்.. படித்தால் மட்டுமே அந்நிலையை ஒருவர் அடைய முடியும்..

பெற்றவர்கள் வருமானத்திற்காக குழந்தையின் எதிர்காலத்தைப் பாழாக்கு வது முறைப்படியும், சட்டப்படியும் தவறாகும்.. பணிபுரிவதிலிருந்து மீட் டெடுத்த குழந்தைக்கு அவர்களுக்கு ஈடுபாடுள்ள துறையில் சேர்த்து படிப்போ, தொழிற்கல்வியோ, பட்டயக் கல்வியோ தருவதற்கும், அதற் காகும் செலவை அரசே முழுமையாக ஏற்கவும் செய்கிறது.. பாதுகாப்பான தொழிலில் (Non-Hazardous) மட்டுமின்றி அபாயகரமான (Hazardous) தொழிலில் ஈடுபடுவதால் எதிர்கால சமுதாயமே கெடும்நிலை ஏற்படும்.. அக்குழந்தை 18 வயது நிறைவடைந்து வெளியே வருகை யில் நிச்சயமாக தனது எதிர்காலத்தை நன்முறையில் தானே வழிநடத்தும் திறனைப் பெற்றவர்களாகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதுண்டா?

வீட்டிலிருந்தே அக்குழந்தைகள் படிப்பதாக உறுதியளித்தால் அதற்கு அனுமதித்து, அதனைத் தொடர்ந்து கண்காணிப்பதும் அரசின் செயலாகும்.. அதோடு பள்ளியில் சேர்க்கவும், புத்தகங்கள் வாங்கவும், பள்ளியின் இடையில் அக்குழந்தை சேர்வதற்கான ஆட்சியரின் அனுமதியும் பெற்றுத் தரவும் வகை செய்யப்பட்டுள்ளது..

பெண்குழந்தைகளைக் குழந்தைத் தொழி லாளர்களாகக் காணும் போது தங்களுக்கு என்ன தோன்றும்?

மேற்கூறியவாறு ஆய்வின்போது கண்டறியப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் பெண்களெனில் பெரும்பாலும் அவர்களைக் குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைக்காது அவர்களின் பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தே பள்ளி செல்லவும், அவர்களது இல்லத்திற்கு அருகாமையில் உள்ள தொழிற்பயிற்சிப் பள்ளியிலோ, கைத்தொழில் கற்கும் விதத்திலோ தான் ஈடுபடுத்த முனைவோம்.

தனிப்பட்ட முறையில் பெண் குழந்தைகளை இவ்வாறு காணும்போது மனம் நெகிழும்.. உடனே அவர்கள் தங்களது சொந்த சோகத்தை / வறுமையை எங்களுடன் பகிரும்போது வேதனையுறுவோம்.. குடும் பத்தின் தொடர்பு எண் மற்றும் முகவரியைப் பெறுவதோடு எங்களது தொடர்பு எண்ணையும் நாங்கள் அளிப்பதால் அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை அலுவலக வேலைகளுக்கு அப்பாற்பட்டும் அவர்களுடன் தொடர்பில் இருந்து நல்லவை/கெட்டவைகளைக் கேட்டறிந்து உதவி புரியும் நிலையும் நிறைய இடங்களில் ஏற்பட்டுள்ளது..

தொழிலாளர் நல வாரியம் அதன் செயல் பாடுகள் பற்றி …

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் என்பது தனிப்பட்ட முறையில் செயல்படுவதாகும்.. தொழிலாளர் துறை யைச் சேர்ந்தது என்றாலும் செயல் பாடுகள் தனித்தன்மை கொண்டவை.. இவ்வாரியத்தின் மூலம் மாதமொருமுறை வெளியாகும் ‘‘உழைப்பவர் உலகம்’’ எனும் புத்தகத்தில் அனைத்து விவரங் களும் வெளியாகும்… அதோடு தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்யும் அதி காரிகள் ஒரு தொழிலாளிக்கு வருடத்திற்கு ரூ.30/- எனக் கணக்கிட்டு வேலையளிப்போர் அரசின் கணக்கில் செலுத்துகிறார்களா என்பதையும் கண்டறிவோம்..

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலா ளர் நல வாரியத்தின் அலுவலகங்கள் மூலம் நிறைய நபர்கள் தொழிற்கல்வி பெறுகின்றனர்.

இதைத்தவிர தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) நலவாரியம் / உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம் / ஓட்டுநர் நல வாரியம் என்பன போன்ற வாரியங்களின் மூலம் பல இலட்சக்கணக்கான அமைப்பு சாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள 64 வகையான வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களும் தமிழக அரசின் மூலம் நிறைவான பயன்களை அடைகிறார்கள்.

கொத்தடிமைகளிடம் விவரம் பெறும்போது
காப்பாற்ற வேண்டி காலில் விழுந்து கதறும் கொத்தடிமைகள்

எத்தனைத் தொழிலாளர்கள் ஒரு நிறு வனத்தில் இருந்தால் அந்நிறுவனம் தொழி லாளர்களுக்கான சட்டங்களுக்குள் வரும்?

தொழிலாளர் துறையும், தொழிற் சாலைகள் ஆய்வகத் துறையும் ஒருங்கே இணைந்த இரு அலகுகளாகப் பணி செய்கிறது. இயந்திரங்கள் வைத்து உற்பத்தியோ, வாணிகமோ செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் தொழிற் சாலைகள் ஆய்வகத் துறையின் கீழ் அடங்கும்.. இயந்திரங்கள் மூலம் பணி புரியாமல், ஒரு தொழிலாளி மட்டுமே வேலை செய்யும் மளிகைக்கடை முதல் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர் துறையின் கீழ் அடங்கும்.‌ அப்பணியாளரின் அடிப்படை நலன்கள் அனைத்தும் ஆய்வின்போது கண்டறிந்து இசைவு கட்டணத் தீர்வுத் தொகை விதிக்கப்படும்.

 

குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளர் களுக்கு வழங்காத நிறுவனத்தின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர்களுக்கான அகவிலைப் படியினை அரசு மாற்றி யமைக்கிறது.. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அடிப்படைச் சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதனை வழங்காத நிறுவனங்களை ஆய்வின்போது கண்டறிந்து குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ், வழங்கப்பட வேண்டிய வித்தியாசத் தொகையைக் கணக்கிட்டு தொழிலாளர் இணை ஆணையர் முன்பு ஆய்வு அலுவலர்கள் கேட்பு மனுக்கள் தாக்கல் செய்வர்.. நீதி சார்பு அதிகாரியாக அந்நீதிமன்றம் மூலம் அவரளிக்கும் தீர்ப்பை அந்நிறுவனம் வழங்க வேண்டும்.. வழங்க மறுக்கும் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வருவாய் கோட்ட அலுவலர்களின் மூலம், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் (Revenue Recovery Act) வசூல் செய்து தொழிலாளிக்கு வழங்கும் வரை கோப்பில் நடவடிக்கைத் தொடரப்படும்.

குழந்தைத் தொழிலாளர்களிடம் இனம் கண்டறிதல்

கொத்தடிமைகளை மீட்ட அனுபவம் உண்டா?

அவர்களை மீட்ட பிறகு அவர்களின் அன்றாட வருமானத்திற்கு என்ன மாதிரி யான உதவிகள் செய்துள்ளீர்கள்?

மிகவும் அரிதான வாய்ப்பாக அந் நிகழ்வு புதுக்கோட்டை, தொழிலாளர் உதவி ஆய்வராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கையில் கிடைத்தது. கந்தர்வக்கோட்டை எனுமிடத் தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பண்ருட்டியைச் சேர்ந்த 42 கொத்தடிமைத் தொழிலாளர்களை அம்மாவட்ட ஆட்சியர், வருவாய்க் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் மீட்டெடுத்தோம்.. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அவர்களைப் பணியிடத்தில் கண்டறிந்த போது அக் குடும்பத்தினர்கள் அலறியவாறு ஓடிவந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கோரி நெடுஞ்சாண்கிடையாக விழுந்த காட்சியும், வறிய நிலையில் இருந்த ஆறு இளந்தளிர்கள் பால் எனும் பெயரில் வெள்ளை நிறத்திலான தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து குடித்து பசியடங்காமல் அழுது கொண்டே இருந்ததும் இன்னமும் கண்ணில் நிழலாடுகிறது..

வெறும் 500, 1000 ரூபாய்கள் வாங்கி அதனை அடைக்க வழியின்றி அடிமைகளாக வேலை செய்வதும், அவ்வப்போது மருத்துவ சிகிச்சைக்கு வழங்கும் நூறு, இருநூறுக்காக அவ்வடிமைத் தொழிலானது கொத்தடிமைகளாக மாறுவதுமே இதற்குக் காரணம்.. மீட்டெடுத்த அன்றே ஆட்சியர் சான்று வழங்கியதும் சம்பந்தப்பட்ட அரசு வங்கி மூலம் ரூ.2000/- ரொக்கமாக வழங்குவதோடு ஒரு நபருக்கு ரூபாய். 20000/- அரசு நிவாரண உதவியாக வழங்குகிறது.. அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் செலவையும் பொறுப்பையும் அரசே ஏற்கிறது.. இரவு 11.00 மணிக்கு அத்தொழிலாளர்களுக்கு ஆட்சியர் அலுவல கத்தில் அமர வைத்து இரவு உணவு வழங்கியபோது அவர்கள் பசியாறிய வேகமும் என்றும் மறவாதவொன்று..

தங்கள் கணவரைப் பற்றி…

எனது கணவர் அவரது பெற்றோ ருக்கு ஒரே மகன்.. சகோதரிகளும் இல்லை.. மாமனார் ஓய்வு பெற்ற விவசாய அலுவலர்..தனது 84ம் வயதில் சென்ற வருடமும், மாமியார் 75 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள்.. மெடிமிக்ஸ் வழலைக் (Soap) கம்பெனியில் மாகாண விற்பனைப் பொறுப்பாளராக (Territory Sales Incharge) பணிபுரிகிறார்.. விற்பனையில் மாநிலத்தின் அலுவலர்களில் முதற் பத்து இடங்களுக்குள் தனது பெயரைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். மிகுந்த அன்பானவர்.. திருமணமாகி 32 வருடங்கள் ஆகிறது. கோபம் என்றால் என்னவென்றே அறியாதவர்.. எதற்காகவும் இதுவரை ஒருமுறை கூட கையை ஓங்கியது கூட இல்லை.. மிகவும் யதார்த்தமானவர்.. அவரிடம் குறையென்று (எனது நோக்கில்) கூற வேண்டுமெனில் பாரம்பரிய வழிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமே.. கடவுள் நம்பிக்கையில் மிகவும் அதீத ஈடுபாடு கொண்டவர்.

தங்கள் கணவருடன் இணைந்து சாய்பாபா கோயிலைப் பராமரித்து வருகிறீர்களே! அந்த எண்ணம் எவ்வாறு தோன்றியது?

அவர் சிறு வயதிலிருந்தே ஸ்ரீரடி சாய்பாபாவின் பக்தர்.. சென்னையிலிருந்து எனக்கு திருச்சிக்கு 2005-ல் பணிமாற்ற லான போது வாங்கிய 10,800 சதுர அடி (நாலரை கிரவுண்ட்) இடத்தில் கோவில் கட்டுவதற்கு இறைவனின் அருள் 2016-ல் தான் கிடைத்தது.. ஸ்ரீ அன்னசாய் ஆலயம் கட்டி, அப்போது முதல் இறைவனுக்கு வழிபாடுகளும், மக்களுக்கு நைவேத்தியமாக முழுமையான அன்னதானமும் வியாழனும், ஞாயிறும் வழங்கி வருகிறோம். வாரத்தின் ஏழு நாட்களும் வழங்கும் கருணையை /வாய்ப்பை இறைவன் நல்கிட வேண்டும் என்பதே எங்களது வேண்டுதல்.

தஞ்சைத்தமிழ் மன்ற ஆண்டுவிழாக் கவியரங்கில் கவிஞர்களுடன்...
தஞ்சைத்தமிழ் மன்ற ஆண்டுவிழாக் கவியரங்கில் கவிஞர்களுடன்...

தங்களை லட்சுமி என்பதை விட அன்ன லட்சுமி என்றே முகநூல் கவிஞர்கள் மத்தியில் ஒரு பெயர் உள்ளதே ? அது எப்படி வந்தது?

சென்னையில் பத்து வருடங்கள் பணியில் இருந்த போது எனது கணவர் ஒரு தரமான கோதுமை மாவு விற்பனை நிறுவனத்தில் பணியாற்றினார்.. அப்போது மாதமொரு முறை அங்குள்ள அனாதை ஆசிரமங்களுக்கு நேரில் சென்று இயன்ற அளவு கோதுமை மாவும், எண்ணையும் இயன்ற இதர உதவிகளும் செய்து வருவதில் ஆத்மதிருப்தி அடைந்துள்ளோம்.. இல்லாதவர்களுக்கு பசியாறக் கொடுக்கை யில் அவர்கள் அடையும் ஆனந்தத்தை நேரில் கண்டவர்கள் மட்டுமே இவ் வுணர்வைப் புரிந்து கொள்ள இயலும்..

கோவில் நிர்மாணம் செய்யும் வரையில் ஒவ்வொரு ஞாயிறும் தவறாது 35-40 சாப்பாட்டுப் பொட்டலங்களும், குடிநீரும் நான் தயாரிக்க, எனது பெரிய மகள் பொட்டலமிட, சிறிய மகளும் கணவரும் நேரில் சென்று நடமாட இயலாத நிலையில் உள்ள வறியவர்களுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அன்னமிடும் ஆவலால் எழுந்ததே அன்ன சாயிபாபா என்று பெயரானது.. வயிறு மட்டுமே போதும் என்று உரைக்கும் உறுப்பாகும்.. வயிறு நிறைந்ததும் கண்டிப்பாக வாய் ஆசிகளை வழங்கும். இதுவும் ஒரு சுயநலமே.

அன்னதானம் இடுவதில் அப்படி என்ன ஆர்வம்?

திருச்சிக்கு மாற்றலாகி வந்த 2005ம் வருட இறுதியில் எனது உயர் அலுவலர் ஒருவர் பொங்கலுக்கான தொடர் விடுப்பின் போது சீருந்து விபத்தில் பெரிய அளவில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. உடன் அவரது துணைவியார் மட்டுமே.. உணவகங்கள் இல்லாத நிலையில் பணம் கைவசம் நிறைய இருந்தும் உண்பதற்கு அவரின் துணைவியாருக்கு ஏதுமற்ற நிலை.. பத்து நாட்கள் மூன்று வேளையும் எங்களது இல்லத்தினின்று உணவு கொண்டு சென்று அளித்தேன்.. வசதிபடைத்தோர்க்கே இந்நிலை என்றால் வறுமையில் உள்ளவர் களின் நிலையை எண்ணி, சிலருக்காவது வாரத்தே ஒருநாள் / ஒரு வேளை உணவளிக்க எண்ணினோம்.. அதில் கிடைக்கும் திருப்தி அலாதியானது.. விவரித்துக் கூறத்தெரியவில்லை.

முதியோர் இல்லத்திற்கு தீபாவளி பொங்கலின் போதெல்லாம் சென்று வருகிறீர்களாமே அந்த அனுபவம் பற்றி…

நமது கோவிலைத் தொட்டதான இடத்தில் அமைந்தது ‘‘முதியோர் சரணா லயம்’’. இப்போது ஆண்களும், பெண்களுமாக 38 முதியவர்கள் அங்குள்ளனர்.. கோவில் பணிக்காகச் செல்கையில் பழக்கமானவர்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவக்கதை.. பெயர் கூறி அழைக்குமளவு உறவுகளாகவே மாறிப் போனார்கள். கோவிலால் அவர் களுக்கு பெரிய நிம்மதி கிடைக்கிறது.

வேறு பல இடங்களில் உள்ள இல்லங்களுக்கும் முடிந்தபோது சென்று அவர்களின் நலம் நாடுவது வழக்கம்.. புத்தூரில் உள்ள நம்பிக்கை இல்லம், இரட்டை வாய்க்கால் அருகில் உள்ள எச்ஐவி பாதித்தோர்களின் குடும்பங்கள், வயர்லெஸ் சாலையில் உள்ள ஒரு இல்லம் போன்றவை.

பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் போதும் புன்னகைமாறாது எவ்வாறு தங்களால் பயணிக்க முடிகிறது?

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இறைவன் மன அளவிலும், உடலளவிலும், பொருளளவிலும் நம்மை குறையின்றி வைத்துள்ளதை எண்ணுவோம். ‘‘தனக்கும் கீழே உள்ளவர் கோடி’’ யன்றோ? நினைத்துப் பார்த்து நிம்மதி அடைவோம். வாழ்வை மற்றவர்களுக்கு உதவும் வகையில் வாழ வேண்டும் என்ற ஆழ்மன எண்ணத்தினால் தான்.

கவிதை உலகில் தங்கள் பயணம் எப்படி உள்ளது?

புதுக்கோட்டையில் பணியாற்றிய போது ஒருமணிநேரப் பயணத்தில் நிறைய யோசிக்க/எழுத நேரமிருந்தது.. தற்போது இருசக்கர வாகனத்தில் அலையும் பணியானதால் எழுதப் போதுமான நேரம் கிடைப்பதில்லை என்பது மிகுந்த வருத்தமேயெனினும், வாசிப்பை மிகவும் அதிகமாக நேசிப்பதால் பிறரது எழுத்துக்களை தவறாமல் படித்து ஆனந்தம் கொள்வதாக நாட்கள் செல்கின்றன.

இதுவரை தாங்கள் நூல்கள் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. எழுதி யுள்ளீர்களா?

இல்லை.. இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.. ஆவல் நிறைய உள்ளது.. காலம் தான் கருணை காட்ட வேண்டும். புத்தகம் வெளியிடும் எண்ணம் உள்ளது.. பணி ஓய்விற்கு இன்னமும் ஐந்தாண்டுகள் உள்ளன.. பின்பு தான் இயலும் என்று எண்ணுகிறேன்.

தங்கள் முகநூல் பயணம் பற்றி..

மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒன்று.. எவ்வளவு பணிகள் இருப்பினும் முடிந்து இல்லம் திரும்புவது போல, இரவு அனைவரின் எழுத்துக்களைப் படிப்பது அவர்களுடனான தொடர்பில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கும். நிறைய, நிறைய உண்மையான உறவுகளை தந்துள்ளது. அதிகம் எவருடனும் அளவளாவ மாட்டேன் என்றாலும் அனைவரும் வேண்டும் என்று நினைப்பேன்.. நல்லவை கெட்டவைகளைப் பகிர்ந்து கொள்வதில் மனம் அமைதியுறும். அதிலும் பிறந்தநாள் /திருமணநாள் வாழ்த்துக்களை மறவாமல் குவிக்கையில் இவ்வளவு உறவுகளைப் பெற்றதை எண்ணி மனம் ஆகாயத்தில் மிதக்கும்.. ‘‘நல்லாயிரு’’ எனும் ஆசிகள் நிச்சயமாக நம்மை நல்வழியில் வாழ வைக்கும்..

முகநூல் கவிஞர்களுக்குத் தங்கள் அறிவுரை.

அறிவுரை வழங்குமளவு எனக்குத் தெரியாது. கூற விரும்புவதெனில், போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, புறம்பேசுதல் மற்றும் முக்கியமாக ஒருவரைப் பற்றி நன்கறியாமல் அவர்களைப் பற்றி பேசாமல் இருந்தால் நிறைந்த அன்பான உறவுகளை முகநூல் மூலம் அடையலாம்.. அன்றியும் அவ்வாறு நடப்பவர்களின் செயல்களை மறப்போம் – மன்னிப்போம் எனும் மனப்பாங்கைப் பெறுதல் சிறப்பு..

முகநூல்குழுமங்களில் தங்களைக் கவர்ந்த குழுமங்கள்

வேலைப்பளுவினால் நிறைய குழுமங் களில் பங்கேற்ற இயலுவதில்லை. நிச்சயமாக முதலில் இணைந்த குழுமமான நிலாமுற்றம் எனக்கு நிறைந்த உறவு களைத் தந்தது. அதற்கு எப்போதும் நன்றி யுடையவளாவேன்..

அதன் பின்னர் பல்வேறு குழும ங்களில் உறுப்பினரானேன். பலரது அன்புக்குப் பாத்திரமாக உள்ளேன். இப்போது பெண்களுக்கான குழுமமாகச் சிறப்பாகச் செயல்படும் யாதுமாகியவளின் உறுப்பினர் என்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

முகநூல் குழுமங்கள் வழங்கும் விருதுகள் பற்றி தங்கள் கருத்து.

ஆண்டுக்கொரு முறை ஆண்டு விழாவும், கவியரங்கமும் நடத்துவதில் ஆவலுடன் கலந்து கொள்வது உறவுகளாக மாறிய கவிஞர்களை நேரில் காண்பதற்கு மட்டுமேயன்றி விருதுகளைப் பற்றி பெரிதாக எண்ணுவதில்லை. அதில் ஆர்வமுமில்லை என்பதே எனது கருத்தாகும்.

மரபுக்கவிதை பற்றி.

நிச்சயமாக இந்தக் கேள்வியை நான் வரவேற்கிறேன். நான் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றது 1988-ல். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில் மரபு பற்றிய படிப்பறிவு மறந்தே போனதெனலாம்.. இப் போது தணியாத ஆர்வத்தின் காரணமாக, முறையாக மரபு பற்றிய பாடங்களைப் புகட்டும் குழுமங்களின் மூலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரபு பயில முயல்கின்றேன். விரைவில் முழுமையாகக் கற்றுத் தேர்வேன்.

தங்கள் ஆசானாக யார் யாரெல்லாம் இருந் துள்ளனர்? இருந்துவருகின்றனர்!

2016-ல் எனது ஆசானும், சகோதரரு மாகிய திரு.வேல்முருகன் சகோ.. பின்னர் மீண்டும் இடைவெளி.. பின்னர் எனதினிய சகோதரி திருமதி. சரஸ்வதி பாஸ்கரன், மகன் திரு.‌ஆனந்த் உமேஷ்.. இப்போது சிறப்புமிகு. அகன் ஐயா, இலக்கியப் பேராசான் பாட்டரசன் ஐயா அவர்களுடன் மரபு மாமணி பாவலர் மா. வரதராசன் ஐயா அவர்களிடம் கற்று வருகிறேன்.

தங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி.

ஓய்வு பெற்றதும் கண்டிப்பாக கவிதைகள் நிறைய எழுதுவது. அதை விடவும் முதன்மையானது முழுஅளவில் இயலாதோர்களுக்கு நாள்தோறும் இயன்ற அளவில், இயன்ற விதங்களில் உதவிகள் செய்வது…

பணியிடத்தில் இராணிலட்சுமி

தமிழ்நெஞ்சம் இதழ் பற்றி தங்கள் கருத்து.

தமிழ்நெஞ்சம் இதழைப் பற்றி அறிந் தபோது மிகவும் பெருமையாக இருந்தது.. தமிழுக்குக்காக உண்மையான உணர்வோடு சேவை செய்யும் நோக்கில் செயல்படுவது மிகவும் மகிழ்வைத் தருகிறது. கவிஞர்களைப் போற்று வதென்பது சிறப்பான செயலாகும். வாழ்த்து வதற்கும், பிறரது எண்ணங்களை வெளிக் கொணர்வதற்கும் கூட ஒரு பெரிய/அரிய மனதைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வகையில் தமிழ்நெஞ்சத்தின் பணி போற்றுதற்குரியது.. எனது சிரந்தாழ்ந்த பணிவான வணக்கம்.

நாமும் விடைபெறுவோம் நன்றி!


18 Comments

கோவிந்தராசன் பாலு · அக்டோபர் 30, 2020 at 2 h 30 min

அன்பின் சகோதரி திருமதி. ராணி லட்சுமி அவர்களின் பணிகளில் அரசுப் பணியில் தலைசிறந்தவர். அறப்பணியில் வள்ளுவர் காட்டும் வழியில் வாழ்பவர். பாபாவின் நல்லருள் பெற்றவர். தமிழ்ப் பணியில் சிறப்பானவர். இனிய இல்லத்தரசர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்.

கோவிந்தராசன் பாலு கும்பகோணம்.

வே.பூங்குழலி பெருமாள் · அக்டோபர் 30, 2020 at 10 h 26 min

புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் என்பதற்கேற்ப அமைந்த பேட்டி சிறப்பு வாழ்த்துகள்

நிறைமதி நீலமேகம் · அக்டோபர் 30, 2020 at 10 h 33 min

சிறப்புங்க சகோதரி, இனிய வணக்கத்துடன் நல்வாழ்த்துகள்.!💐💐💐

தென்றல் கவி · அக்டோபர் 30, 2020 at 11 h 03 min

மிகவும் சிறப்பானதொரு நேர்காணல்.. தகுதியான நபரை தெரிவுசெய்து நேர்காணல் செய்த பாவலர் இராமவேல்முருகன் அவர்களுக்கும் தமிழ்நெஞ்சம் இதழுக்கும் இனிய நல்வாழ்த்துகள்….அக்கா இராணி இலட்சுமி அவர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்…

மாரிசிவபாலன் · அக்டோபர் 30, 2020 at 17 h 05 min

வாழ்த்துகள் அம்மா
உங்கள் பணி தொடரட்டும்❤❤

க. மலர்வாணி ஜெயராஜ் · அக்டோபர் 30, 2020 at 23 h 26 min

அருமை. நேயம் மிகுந்த சேவை. வாசித்தேன். நெகிழ்ந்தேன். வாழ்த்துகள் சகோதரி.

ஆத்தூர் சாகுல் · அக்டோபர் 31, 2020 at 6 h 00 min

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் நேர்காணல். மனமார்ந்த வாழ்த்துகள்!

Panneerselvam Tamilpoet · நவம்பர் 2, 2020 at 19 h 14 min

Rani Lakshmi சகோதரி தங்களின் சிறப்பு நேர்காணல் கண்டு சிந்தை மகிழ்ந்தேன்! ஆழமான மன உணர்வுகளை அற்புதமாய் சொல்லி உள்ளீர்கள்! படித்துக் கொண்டே வருகையில் தாள் நகர்வதே தெரியவில்லை இன்னொரு பக்கம் இருக்குமா என்று மனம் தேடுகிறது! பணியின் மேன்மையைப் பகர்ந்தவிதம் தங்களின் உயர்ந்த உள்ளக்கிடக்கையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது! அருமையாய் படைத்து வெளியிட்ட தமிழ்நெஞ்சம் இதழாசிரியர் Nenjam Tamil அவர்களைப் பாராட்டுகிறேன் மகிழ்வான வாழ்த்துகள் மாண்புயர் சகோதரி அவர்களே!

Inthrani Rani · நவம்பர் 2, 2020 at 19 h 18 min

மிகச்சிறப்புங்க சகோதரி… தங்களின் இறைப்பணியும் இயலாதோரைக் காப்பாற்றும் செயலும் என்றும் தொடரவேண்டும். வாழ்த்துகள்.

Manimozhi Lingam · நவம்பர் 2, 2020 at 19 h 19 min

பாராட்ட வார்த்தைகள் இல்லை எனினும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் சகோதரி
நீண்ட ஆயுளுடன் இந்நானிலத்தில் நற்தொண்டுகள் புரிந்து புகழ்பெற வாழ்த்துகிறேன்

ஜோதிபாஸ் முனியப்பன் · நவம்பர் 2, 2020 at 19 h 21 min

ஆகா ஆகா சிறப்போ சிறப்பு அக்கா. கேள்வியும் பதிலும் அற்புதமாக இருந்தது
இவ்வாய்ப்பினை நல்கிய ஆசானையும், தங்களையும் வணங்கு கிறேன் அக்கா …

Janakiraman Subramanian · நவம்பர் 2, 2020 at 19 h 22 min

நீ வளர்கையில் நானும் கூட இருந்தேனென்று மனம் பெருமை கொள்கிறது லக்ஷ்மி. வாழ்த்துக்கள் பலபல

நெல்லை ஜெயா · நவம்பர் 2, 2020 at 19 h 24 min

கேள்விகள் தொடுத்த அழகு, அதற்கு தாங்கள் பதில் விடுத்த அழகு. அத்தனையும் அருமை அக்கா.
தங்களின் சுயசரிதம் சுருக்கமாக படித்தது போல இருந்தது. தங்களுடன் பேசிய நேரங்கள் மறக்கமுடியாதது.
மூன்று முறை சந்தித்தோம். முத்தமிழ் போல சித்தமதில் நிறைந்துள்ளது.
தங்களின் அம்மா பற்றி சொன்னீர்கள். அந்த சாந்தகுணம் மனதை ஈர்த்தது. அதுபோல நான் இருக்க
இறைவனிடம் வரம் கேட்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் தங்களையும் தங்களின் குடும்பத்தினர் அனைவரையும் சகல சௌபாக்கியங்களோடு
வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டி விரும்பி பிரார்த்திக்கிறேன் ராணி அக்கா.

Selvarany Kanagaratnam · நவம்பர் 2, 2020 at 19 h 26 min

உண்மையான பதிவை வழங்கிய கவிஞர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கு நன்றி
தோழி ராணிலட்சுமி அவர்களின் சேவைகள் பாராட்டுக்கு உரியதே
வாழ்த்துக்கள்

Sara Bass · நவம்பர் 2, 2020 at 19 h 28 min

ஆகா . மிகச் சிறப்பு . உங்களால் மலைக்கோட்டை மாநகரம் பெருமை கொள்கிறது .
நீங்கள் பல்லாண்டு நலத்துடனும் வளத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் மனதார வேண்டுகின்றேன் எனதினிய சகோதரியே .

Indirani Thangavel · நவம்பர் 2, 2020 at 19 h 29 min

அருமையான தெளிவானபேட்டி சகோதரிக்கும் தமிழ்நெஞ்சத்திற்கும்
வாழ்த்துகள்

முனைவர் வ.முகம்மது யூனுஸ் · ஜனவரி 27, 2021 at 17 h 14 min

தமிழுக்குக்காக உண்மையான உணர்வோடு சேவை செய்யும் நோக்கில் தமிழ்நெஞ்சம் இதழ் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சிக்குறியது.
வாழ்த்துகள்.

முனைவர் வ.முகம்மது யூனுஸ் · ஜனவரி 27, 2021 at 17 h 16 min

மகிழ்ச்சிக்கு உரியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்

I மின்னிதழ் I நேர்காணல் I கவிஞர் சையத் யாகூப்

தமிழுக்கு அது ஒரு சிறந்த மொழி என்பதைவிட  இனிமையான மொழி என்பதே சாலப் பொருந்தும். இல்லாவிடில் மதத்தைப் பரப்ப வந்த கான்ஸ்டான்டைன் நோபல் பெஸ்கி,

 » Read more about: பவானி ஆற்றங்கரையில் ஒரு பைந்தமிழ்ச்செம்மல்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »