நேர்காணல்
காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர். காளமேகப்புலவரைப் போலவே மதுரையில் 40 வருடங்களாக ஒருவர் பாக்கள் யாத்து அசத்தி வருகிறார். ஆம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் இவரது கணீர்க்குரலைக் கேட்கலாம். இவரது பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏராளம். அவற்றுள் திரைப்பட இயக்குநர்களும் உண்டு. மருத்துவர்களும் உண்டு. ஆம் அத்தகைய சிறப்பு மிக்க பாவலர் திருமிகு வீரபாண்டியத்தென்னவரின் நேர்காணலைத்தான் இப்போது காணப்போகிறோம்.
நேர்கண்டவர் : இராம வேல்முருகன்
வணக்கம் ஐயா
மதுரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றிவரும் கவிஞர்களுள் தாங்களும் ஒருவர். தங்களை தமிழ்நெஞ்சம் இதழ் சார்பாக வணங்கி மகிழ்கிறேன்.
வீரபாண்டியத் தென்னவன் என்பது தங்கள் இயற்பெயரா? புனைப்பெயரா?
இயற்பெயர்தான். ஆனால் பள்ளியில் வீரபாண்டியன் என்று பதிவு செய்யப் பட்டிருந்தது. பின்னாளில் பெயரை வீரபாண்டியத்தென்னவன் என்றே மாற்றிக் கொண்டு விட்டேன்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வங்கியிலே பணி யாற்றிய தாங்கள் தமிழில் வெளுத்து வாங்குவது எப்படி?
ஆங்கில இலக்கியத்தோடு வரலாற்றிலும் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். ஆனால் தமிழில் நான் வெளுத்து வாங்குவதற்கு இறையருளும் எனக்கு அமைந்த மதுரை தியாகராஜா கல்லூரி பேராசிரியர்களே காரணம். ஆங்கிலத்திலும் அதற்கிணை யாகத் தமிழிலும் அழகாக பாடம் நடத்தியதாலேயே தமிழில் என்னால் இவ்வாறு பயணிக்க முடிந்தது.
மதுரையே உங்கள் பூர்வீகமான ஊரா? பணிநிமித்தம் மதுரைக்கு வந்து மதுரையிலேயே தங்கிவிட்டீர்களா?
மதுரையே எனக்குப் பூர்வீகமான ஊர். பணியும் மதுரையிலேயே கிடைத்தது. எனவே நான் எப்போதும் மதுரைவாசிதான்.
5000 க்கும் மேற்பட்ட கவியரங்கங்கள் என்பது மிகப்பெரிய சாதனை என்று தாங்கள் கருதுகிறீர்களா?
சாதனை என்றெல்லாம் கருதவில்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு மதுரையில் வங்கியில் பணியாற்றிய போது எனது தமிழ் ஆர்வத்தைப் பார்த்து எனது மேலதிகாரி ஒவ்வொரு வாரமும் வங்கியிலேயே சனிக் கிழமைகளில் கவியரங்கம் நடத்த அனுமதி அளித்தார். அப்போதெல்லாம் சனிக்கிழமைகளில் 12 மணிவரை வங்கிப் பணி; 12-1 கவியரங்கம். இவ்வாறு தொடங்கியதே கவியரங்கப்பணி. மாதம் குறைந்தது 4 . வெளியூர் கவியரங்கங்களும் அவ்வப்போது செல்வதுண்டு. ஆயிரங் கணக்கான பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டுள்ளேன்.
மாமதுரைக் கவிஞர் பேரவை எவ்வளவு காலமாக நடத்தப்பட்டு வருகிறது?
சுமார் 40 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் வங்கி வளாகத்தில் செயல்பட்டு வந்த கவி யரங்கம் பின்னர் தெற்கு மாசிவீதி குஜராத் சங்கம் கிழக்கு மாசிவீதி நாடார் சங்கம் ஆகியவற்றைக் கடந்து இப்போது வடக்கு மா சி வீதி மணியம்மை பள்ளியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறுகளில் நடைபெற்றுவருகிறது.
முகநூல் என்ற சமூக ஊடகம் வழியாக இதுவரை தாங்கள் பயணிக்காதது ஏனோ?
சிறப்புக் காரணம் ஏதுமில்லை. அந்தத் தளத்தில் எனக்குப் பயணிக்கத் தெரி யாததே காரணம் ஆகும் கூடிய விரைவில் கற்றுக்கொண்டு பயணிக்க முயல்கிறேன்.
தங்குதடையில்லாமல் சரளமாகக் கவிபாடும் தங்கள் திறன் எவ்வாறு சாத்தியமானது? ஏதேனும் பயிற்சி எடுக்கிறீர்களா?
இறைவன் அருளைத்தவிர வேறு ஏதும் இல்லை. எனது குலதெய்வம் மூகாம்பிகை அம்மா மதுரையில் உள்ள மாரியம்மன் காளியம்மன் எனது தாய் மதுரை மீனாட்சி அம்மன் இவர்களது அருளன்றி வேறெதுவும் இல்லை. பயிற்சி எதுவும் எடுப்பதில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் இவர்களைச் சந்தித்ததுண்டா?
சந்தித்து உள்ளேன். காரைக்குடிக்கு அருகே திரு கமலாதியேட்டர்ஸ் சிதம்பரம் அவர்களின் இல்லத்திருமணவிழாவில் நடிகர் திலகம் அவர்களைச் சந்தித்து உள்ளேன். அவரைப் பற்றி நான் பாடிய ஆசுகவியைக் கேட்டுப் பாராட்டினார்.அடுத்து நடத்த ஒரு நிகழ்வை எனது அருகிலேயே சுமார் 50 நிமிடங்கள் வரை அமர்ந்து ரசித்துச் சென்றார்.
கல்லூரி நாள்களில் ஒரு நாடகம் நடித்த போது எங்கள் கல்லூரிக்கு ஒரு சுழல் கோப்பை கிடைத்தது. அதற்கு முந்தைய இரண்டு வருடங்களும் அதனைப் பெற்ற கல்லுரி என்பதால் அவ்வருடமும் அக்கோப்பையைப் பெற்றால் அதனை எங்கள் கல்லூரியிலேயே தக்க வைக்கலாம் என்பதால் மிகுந்த போட்டிகளுக்கிடையே நாங்கள் வென்றோம். அக் கோப்பையை வெல்ல நானும் ஒரு காரணம் என்பதால் என்னை நேரில் சந்திக்க எம் ஜி யார் அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவர் எம்ஜியார் என்று தெரியாமலேயே அவரிடம் அளவளாவிய அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
உலகத்தமிழ்ச்சங்கம் குறித்த தங்கள் கருத்து என்ன?
எம் ஜி யார் அவர்களால் தோற்று விக்கப்பட்ட உலகத் தமிழ்ச் சங்கம் அவராலேயே இடம் தேர்வு செயய்ப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களால் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள சங்கமாக உள்ளது. பலவகைகளில் கவிஞர்களுக்கு உதவிகரமாக உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தங்களுக்குமான தொடர்பு பற்றி..
நிறைய உண்டு. ஒருமுறை மழை வேண்டி பாடல்கள் பாடினோம். தொடர்ந்து 46 வாரங்கள் கோயில் பொற்றாமரைக் குளத்தருகே கவியரங்கங்கள் நடத்தி யுள்ளோம் பின்னர் அதே வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தில் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளோம்
கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வருவது ஏன்?
மூகாம்பிகை எங்கள் குலதெய்வம் என்பதால் வருடம்தோறும் அங்கே நான் குடும்பத்துடன் சென்று வருவது வழக்கம்.
செல்லும் போதெல்லாம் முடியிறக்கிவிட்டு வருவேன். மூகாம்பிகையின் அருளால் நிறைய பாடல்கள் பாடியுள்ளேன்.
தூயதமிழில்தான் பேசவேண்டும் கவிதை எழுத வேண்டும் என்கிறீர்களே? பேசும் சொல் தமிழ்ச்சொல்தான் என்பதை எப்படி அறிய இயலும்?
அப்படிக் குறிப்பிட்டு நான் சொல்வ தில்லை. தமிழில் இல்லாத சொற்கள் இல்லை. பேசும் பொழுதும் எழுதும் போதும் அந்நிய மொழி கலக்காமல் நாம் எழுதுவது நலம். வடமொழி எழுத்துகளை வடமொழிச் சொற்களைச் சேர்த்து எழுதும் மணிப்பிரவாள நடை இப்போது வேண்டாம் என்பதே எனது விருப்பம்.
தமிழ்ச் சொல்லை அறிய ஒரு எளிய வழி உண்டு. ஒரு சொல்லில் முதல் எழுத்தை நீக்கி விட்டு வேறொரு எழுத்தைச் சேருங்கள். புதிய சொல் கிடைக்கும். ஆனால் வேறு மொழிச் சொல்லில் கிடைக்காது.
எடுத்துக்காட்டாக சொல் என்ற சொல்லையே பாருங்கள். சொல்லின் முதல் எழுத்தை நீக்கி, வில் கல் பல் என்ற சொற்களைப் பெறலாம் இவ்வாறு எழுத்து அழுத்து கழுத்து பழுத்து வழுத்து… இப்படி அமைந்தால் அது தமிழ்ச் சொல் ஆகும்
நமஸ்காரம் ஜமக்காளம் இவற்றை மாற்றுங்கள் புதிய சொல் கிடைக்காது.
இவ்வாறு நாம் தமிழ்ச்சொற்களை அறிய முடியும்
தமிழன்னையே போற்றி என்ற ஒரு நூலை எழுதியுள்ளீர்களே அதன் காரணம் யாது?
தமிழன்னைத் தமிழ்ச்சங்கம் என்றவொரு அமைப்பு கருங்கல் கண்ணன் என்ப வரால் தொடங்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தமிழன்னைக்கு ஒரு ஆலயம் அமைப்பதே ஆகும். அவ்வாலயத்தில் தமிழன்னையைப் போற்றிப்பாட ஒரு நூல் வேண்டும் என அதன் நிறுவனர் கேட்டுக் கொண்டதால் 1000 போற்றிகள் கொண்ட அந்நூலை எழுதினேன். அது சிறப்பாகத் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களால் ஒரே இரவில் வடிவமைக்கப்பட்டு மதுரையில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.
தாங்கள் எழுதியுள்ள நூல்கள் பற்றி ஒரு சில வரிகளில்.
நிறைய நூல்கள் எழுதியுள்ளேன்.பெரும்பாலும் இறைவனுக்காக எழுதப்பட்டவை. 46 நூல்கள் எழுதியுள்ளேன். அவற்றுள் 26 நூல்கள் அந்தாதி நூல்கள்.
வளர்ந்து வரும் இளம்கவிஞர்களுக்குத் தாங்கள் கூறும் அறிவுரை.
தற்காலத்தில் மிகுந்த ஆர்வமுடன் நிறைய இளங்கவிஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளும் தளங்களும் இன்று உள்ளன. அவற்றைச் சரியாக அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்மொழியின் தரம் குறையாமல் எழுத வேண்டும். அந்நிய மொழிகளைக் கலக்காமல் எழுத வேண்டும்.
மரபுக்கவிதை குறித்து
மரபுக்கவிதை என்பது தாயைப் போன்றது. ஒரு பெண் காதலியாக, இளம்பெண்ணாக, தாயாக அனைத்து பரிமாணங்களிலும் ஒளிர வேண்டும். எல்லா பெண்களும் தாய்மை அடையும் போதுதான் முழுமை அடைகிறார்கள். எனவே ஒரு கவிஞன் மரபுக் கவிதை எழுதும் போதுதான் முழுமையான கவிஞன் ஆகிறான் . எனவே மரபுக் கவிதை ஒவ்வொரு கவிஞனும் பயணிக்க வேண்டிய தடம்.
புதுக்கவிதையின் போக்கு.
வரவேற்கத் தக்கதே. புதுக்கவிதை என்பது பாரதி காலத்திலேயே வசன கவிதை என்ற பெயரில் வந்து விட்டது. ஆனால் வெறும் புதுக்கவிதை மட்டும் எழுதாமல் கவிதையின் அத்தனை வடிவங்களிலும் கவிஞர்கள் கவிதைகள் படைக்க வேண்டும்.
தங்களுக்குப் பிடித்த சமகாலக் கவிஞர் களைப் பற்றி.
நிறைய கவிஞர்களைச் சொல்லலாம்.
என்னுடன் இளம்வயதில் பயணித்த மதுரைக் கவிஞர் கவிவித்தகர் பொற்கைப்பாண்டியன் அவர்கள்; என்னுடன் பயணிக்கும் ஹைக்கூ இரவி அவர்கள். குடந்தைக் கவிராயர் பாலு கோவிந்தராசனார் வலங்கைக் கவிஞர் இராம வேல்முருகன் இப்படி நிறைய கவிஞர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லோருமே சிறப்பாக எழுதக் கூடியவர்களே!
46 நூல்களை எழுதி இருக்கிறீர்கள். அவைகளில் சிலவற்றை குறிப்பிடுவதுடன் எதிர்கால இலக்கு குறித்தும் சொல்லவும்.
கற்பகவிநாயகர் அந்தாதி, மூகாம்பிகை அந்தாதி, மீனாம்பிகை அந்தாதி, அபிராமவல்லி அந்தாதி, எதுகவிதை, எண்ணும் எழுத்தும் ,தமிழின் கண்கள், தமிழை மறப்பவன் தமிழனா?, ……. மற்றும் தமிழன்னையே போற்றி (சமீபத்தில் வெளியீடுசெய்யப்பட்டது)
தனியான இலக்கு எதுவும் இல்லை. மாமதுரைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடர்ந்து நடத்துவது; தற்போதைய ஊரடங்கு காலத்திலும் இணையம் வழியாகக் கவியரங்கம் நடத்துவது.
தமிழ்நெஞ்சம் இதழ் மற்றும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களைப் பற்றி ஒருசில வரிகளில்…
உலகமெங்கும் வலம் வரும் இதழான தமிழ்நெஞ்சம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல்நாளே சிறப்பாக வெளியிடப்படுவதும், அவற்றில் உலக மெங்கும் உள்ள தமிழ்க் கவிஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கவிதையை வெளியிடுவதும் சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரியது. கதை கவிதை கட்டுரைகள் உலகத்தரம் வாய்ந்ததும் வாழ்த்துக்குரியதே!
தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் ஒரு தன்னல மற்ற தமிழ்த்தொண்டர். கவிஞர்களின் நூல்களை வடிவமைத்தல் நூலின் மேலட்டையை வடிவமைத்தல் போன்ற பணிகளை எந்த விதமான கைமாறும் இன்றிச் செய்து தருபவர். இரவு பகல் பாராது உழைப்பவர். எடுத்த செயலை விடாது முடிப்பவர், இப்படி எவ்வளவோ சொல்லலாம். இவரை மா மதுரைக் கவிஞர் பேரவை எதிர்வரும் ஆண்டில் அழைத்து நிச்சயமாகக் கவுரவிக்கும். என்பதைக்கூறி வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன்.
பாவலரிம் எண்ணங்கள் சிறப்பாகி சிறந்திட நாமும் வாழ்த்துக்கூறி விடைபெறுகிறோம். நன்றி!
11 Comments
வாசன் சாவி · செப்டம்பர் 1, 2020 at 10 h 04 min
ஐயாவை பற்றி எழுத அகவை காணாதவன். அவருடன் நெருங்கிப் பழகும் பொன்னான வாய்ப்பைப் பெற்ற பாக்கியசாலி. அவர் தலைமையில் கவியரங்கில் பங்கேற்று உள்ளேன்
ஐயா பல்லாண்டு வாழ்ந்து தமிழ்த் தொணாடாற்றிட இறைவனருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
….வாசன் சாவி
நிறைமதி நீலமேகம் · செப்டம்பர் 1, 2020 at 10 h 28 min
இனிய நல்வாழ்த்துகள்.
நிறைமதி நீலமேகம் · செப்டம்பர் 2, 2020 at 17 h 29 min
சிறப்புங்க ஐயா, இனிய நல்வாழ்த்துகள்.
Geetha · செப்டம்பர் 2, 2020 at 17 h 32 min
சிறப்பான நேர்காணல்.. வியக்கத்தக்க மனிதர்.. மிக்க நன்றி
பட்டுக்கோட்டை பாலு · செப்டம்பர் 2, 2020 at 18 h 21 min
ஐயா பாவலர் வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு.
தமிழுக்காக உழைக்கும் நல்ல உள்ளங்களை தமிழ்நெஞ்சம் அடையாளப் படுத்தி கெளரவிப்பது மிகச் சிறப்பு.
வாழ்த்துகள்.
Shanmugam Vanjilingam · செப்டம்பர் 9, 2020 at 18 h 29 min
அருமையான நேர்காணல் .நேர்காணல் கண்ட இராம.வேல்முருகன் வலங்கைமான் ஐயாவுக்கும், சிறப்பான பதில்கள் அளித்த மதுரை ஐயா அவர்களுக்கும், இதழாசிரியர் அமின் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துகள்.
கவிக்கோதுரைவசந்தராசன் · செப்டம்பர் 9, 2020 at 18 h 30 min
நேர்காணல் நேர்த்தி
Sara Bass · செப்டம்பர் 9, 2020 at 18 h 32 min
ஆகா . மிகச் சிறப்பான கேள்விகளும் ஐயா அவர்களின் பதில்களும் . இனிய வாழ்த்துகள் சகோ
வெற்றிப்பேரொளி · செப்டம்பர் 9, 2020 at 18 h 33 min
ஐயா வீரபாண்டிய தென்னவனாரின் மாமதுரை தமிழ்ச்சங்க நிகழ்வில் பங்கேற்றுக் கவிதைப் படைத்து, கேடயம் நினைவுப் பரிசாய் பெற்றதும் , ஃ தொகுப்பில் இடம் பெற்றதும் இந்த நேரத்தில் நினைவில் மேலெழுந்து வருகிறது.
வாழ்க பல்லாண்டு!
வெற்றிப்பேரொளி · செப்டம்பர் 9, 2020 at 18 h 34 min
விறல்மிக்கத் தமிழின் விரல் பிடித்து நடக்கும் திறல்மிகு கவிஞர் வீரபாண்டிய தென்னவனார் நேர்காணல் தந்த தமிழ்நெஞ்சம் இதழுக்கும் இதழாசிரியர் அமின் அவர்களுக்கும், நேர்காணல் கண்ட இராம.வேல்முருகன் வலங்கைமான் கவிஞர் பெருமகனாருக்கும் இனிய வாழ்த்துகள்!
உயர்ந்த பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட கோடையிடிக் கவிஞர் வீரபாண்டிய தென்னவனார் அவர்களுக்குப் பாராட்டுகள்.
அன்புவள்ளி தங்கவேலன் · செப்டம்பர் 9, 2020 at 18 h 36 min
மிக மகிழ்ச்சி அய்யாவை நிலாமுற்றம்நிகழ்வில் தான் கண்டேன்
இப்போது மேலும் அறியத்தந்தமை மகிழ்ச்சி!