எண்ணமும் – வண்ணமும்
ஓவியர் அருண்குமார் நேர்காணல்
ஓவியர் அருண்குமார் தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரது முழுநேர எண்ணமும் உழைப்பும் ஓவியம் வரைவது மட்டும்தான். அவரிடம் நேர்காணல் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இனி அவரிடம்…
ஓவியங்களில் உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றி?
நான் சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவது உண்டு. எனது பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியை என் ஓவியங்களைப் பார்த்து, பள்ளியில் நடந்த ஓவியப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைத்தந்து ஆர்வத்தைத் தூண்டினார். அவற்றில் கலந்து கொண்டு, முதல் பரிசு வாங்கியுள்ளேன். அதிலிருந்து எனக்கு ஓவியத்தின் மேல் மிகுந்த ஆர்வம் உருவானது. என் தந்தையும் என்னை மிகுந்த அளவில் ஊக்குவித்தார். எனது ஓவியப்பயணம் தொடங்கிய நாட்கள் இவையே!
ஓவியத்தின் வகைமைகள் எவை?
ஓவியத்தில் பல வகைமைகள் உள்ளன. பென்சில் ஓவியம் (ஸ்கெட்ச்), வாட்டர் கலர் ஓவியம், ஆயில் கலர் ஓவியம், அக்ரலிக் கலர் ஓவியம், தஞ்சை பாணி ஓவியம், மாடர்ன் ஆர்ட்(நவீனகலை)ஓவியம் முதலிய வகைமைகள் உள்ளன. மற்றும், பல ஓவியர்கள் தன் தனித்தன்மைகளால் பல வகைகளில் ஓவியங்களைப் படைத்து வருகிறார்கள்.
ஓவியம் வரைய முறையாகக் கற்றீர்களா?
ஆமாம்! முறையாகக் கற்றுள்ளேன். தலைச்சிறந்த ஓவிய ஆசிரியர்களிடம் ஓவிய நுணுக்கங்களை கற்றுள்ளேன்.
இதுவரையில் கலந்து கொண்டுள்ள ஓவியப் போட்டிகள் பற்றி?
இதுவரை பல போட்டிகளில் கலந்து கொண்டி ருக்கிறேன். முக்கியமாக, இந்திய அளவில் நடைபெற்ற ஒரு ஓவியக் கண்காட்சியில், பல தலைசிறந்த ஓவியர்களும் கலந்து சிறப்பிக்க அதில் நானும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றேன்.
உங்கள் ஓவியங்களில் அதிக பாராட்டைப் பெற்றது எது?
எனது ஓவியக்கலைமுறை முழுவதும் தமிழ் கலாச்சாரத்தைப் பின்தொடர்ந்து இருக்கும்.தமிழ்ப் பெண் குழந்தையை வரைந்த ஓவியம் மிகவும் பாராட்டுப் பெற்றது. சென்னையில் உள்ள லலிதகலா அகடமி என்னும் தலைசிறந்த ஓவியக்கூடத்தில் அக்கண்காட்சி நடந்தது. அதற்குப் பின் என் ஓவியத்தைப் பார்த்த ஊடகங்கள், என் ஆக்கத்தை ‘காமதேனு’ எனும் பத்திரிகை வாயிலாக வெளியிட்டன. அது என் ஓவியத்திற்கும், உழைப்பிற்கும் கிடைத்த பாராட்டு என்று மகிழ்ச்சி அடைந்தேன். அதன்பின் பல விருதுகளையும் வாங்கியுள்ளேன். சேலம் மாவட்டம் களப்பண்பாட்டுத்துறை எனக்கு ‘ஓவியச் சுடர்’ எனும் விருதை வழங்கி கௌரவித்தனர். பின் வடச்சென்னை தமிழ்ச் சங்கம் என் ஓவியத்திறமையைப் பாராட்டி ‘ஓவியக்கலைமணி’ விருதை வழங்கியது.
உங்கள் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் எப்படி அமைந்தன?
என் ஓவியங்களைக் கர்நாடகாவில் உள்ள ஓவியக்கலைக் கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சியில்தான் முதன்முதலில் காட்சிப்படுத்தினேன், பல ஆயிரக்கணக்கான ஓவியர்கள் பங்கேற்ற அந்த நிகழ்வில் என் ஓவியமும் இடம்பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். பின், பல ஓவிய கெலரிகளில் என் ஓவியங்களைக் காட்சிப் படுத்தியுள்ளேன்.
உங்கள் ஓவியங்களின் தனிப்பாணி பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் தனிப்பாணியாக பரிணாமம் பெறு வதற்கு முக்கிய காரணகர்த்தா, தலை சிறந்த ஓவியர் திரு. இளையராஜ சுவாமிநாதன் அவர்களிடம் ஓவிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட போது, அவரிடம் எனக்கென தனிப்பாணியை உருவாக்குவ தெப்படி என வினவினேன். அதற்கவர் ‘‘நீங்கள் குழந்தைகளை மையக் கருவாகக் கொண்டு ஓவியம் வரையலாம்’’ என்றார். நானும் அதைப் பின் பற்றி வரையத் தொடங்கினேன்.
ஓவியத்தில் புது உத்திகள் எவையேனும் கையாளுகிறீர்களா?
எனது ஒவ்வொரு புதிய ஓவியத்திலும் பல மாறுபட்ட உத்திகளை, ஓவியத்தைப் பொறுத்து உட்புகுத்தி வருகிறேன். அவை கள் எனக்கு கைகூடியும் வருகிறது.
உங்களை மிகவும் கவர்ந்த ஓவியக் கலைஞர் யார்?
ஓவியர் ‘ராஜா ரவிவர்மா’. பண்டைக்கால ஓவியர் அவர். அவருடைய ஓவியக்கலை நுணுக்கங்களை நான் பார்த்து ரசித்த துண்டு. பின் இன்றைய காலகட்டத்தில், எனக்கு மிகவும் பிடித்த ஒவியர் ‘இளையராஜ சுவாமிநாதன்’. இவருடைய ஓவிய நுணுக்கங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கும். நான் அவரிடம் சகல ஓவிய நுணுக்கங்களையும் கற்று, என் ஓவியங்களில் பயன்படுத்தியுள்ளேன்.
ஓவியங்களின் மூலம் சமூகத்துக்கு ஏற்படுத்தக்கூடிய விழிப்புணர்ச்சி பற்றி?
ஆம்! சமீபத்தில், இன்று சமூகத் தொற்றாகப் பரவிவரும் கொரோனாவிலிருந்து பாது காத்துக் கொள்ள முகக்கவசமணிந்து, வெளியே செல்ல வேண்டுமென்பதை வலியுறுத்தும்ஓவியமொன்றை வரைந்தேன். அது பெரியளவில் புகழ் பெற்றுத் தந்தது. ‘நியூ 7’ தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது இவ்வோவியம்.
சமூகச் சீர்கேடுகளில் இருந்து இச் சமூகத்தைக் காக்கும் விதமாக ஓவியங்கள் வரைவதுண்டா?
காலத்திற் கேற்றவாறு ஓவியங்களின் மூலம் நிச்சயமாக சமூகச் சீர்திருத்தத்தைக் கொண்டு வரலாம். எங்களைப் போன்ற ஓவியர்களால் ஓவியங்கள் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, பாரிய மாற்றங்களை உருவாக்கலாம். கொரோனா போன்ற விஷயங்களாக மக் களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும் வகையில் ஓவியங்களைத் தீட்டி வருகின்றார்கள். இதை உணர்ந்து மக்கள் அவர்களின் சமூக கடமைகளைக் கடைப்பிடிப்பார்கள் என்று உணர்கிறேன்.
மாடர்ன் ஆர்ட் செய்வதில்லையா?
மாடர்ன் ஆர்ட் சில ஓவியர்கள் தங்களின் எண்ணங்களை மாடன் ஆர்ட் ஆக வரைந்து வருகிறார்கள். நான் இதுவரை மாடர்ன் ஆர்ட் செய்ய முயற்சித்தது இல்லை. என்னுடைய ஓவியப்பாணியில், நான் வேறு வடிவில்தான் செய்து வருகிறேன். எனது ஓவியங்களைப் பார்த்தால் புரியும்.
பத்திரிகை ஓவியம் பற்றி… ?
ஆம். முன்பெல்லாம் புத்தகங்களின் அட்டைப்படத்தை ஓவியங்களாக அச்சிட்டு வருவார்கள். இப்பொழுது அது மிகவும் குறைந்து விட்டது.
கணினி வாயிலாக .புகைப்படங்களை உருவாக்கி அச்சிட்டு வருகிறார்கள். ஓவியர்களை வளர்க்கும் வகையில் பத்திரிகைகளில் வாய்ப்பளிக்குமாறு பத்திரிக்கை யாளர்களைக் கேட்டுக் கொள்கி றேன்.
உங்கள் எதிர்கால இலட்சியம் ?
நான் என் வாழ்க்கையில் ஓவியத்தால் சாதிக்க வேண்டுமென பல முயற்சிகள் எடுத்து வருகிறேன். என் ஓவியங்கள் உலகம் அறியும் வண்ணம் இருக்க வேண்டுமென்பதில் தெளிவான சிந்தனையோடு இருக்கிறேன். அதன் வாயிலாகத்தான் தமிழ்க்கலாச் சாரத்தை மையமாகக் கொண்டு அமையும் என் ஓவியங்கள், உலகப்புகழ் பெற முடியும்.’ வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை’ என்ற கொள்கையோடு என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென இருக்கிறேன்.
தங்களின் குடும்பம் பற்றி?
எனக்கு ஓவியத்துறையில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருப்பதைப் புரிந்து கொண்ட என் தந்தை என்னை ஊக்குவித்து துணை நின்றார்.என் தந்தை பற்றிய ஒரு சிறப்புக் குறிப்பை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவர் பெயர் V.G.சேட்டு.அவர் சிறந்த நாதஸ்வரக் கலைஞராவார். அவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவிலும் கலந்து கொண்டு நாதஸ்வரம் வாசித்துள்ளார்.அவருக்கு தமிழக அரசினால் (நாதஸ்வர)கலை சுடர்மணி எனும் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
ஓவியம் தவிர்ந்த ஏனைய ஈடுபாடுகள்?
*எனக்குத் தெரிந்தது பிடித்தது எல்லாமே ஓவியம் மட்டுமே! அது தவிர, கர்நாடக இசையை ரசித்துக் கேட்பேன்.
தமிழ்நெஞ்சம் குறித்து?
நான் முதற்கண் தமிழ்நெஞ்சம் நிர்வாகத்திற்கு வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள் கிறேன். என்னைப் போன்ற கலைஞர் களை சிறப்பிக்கும் வகையில் அடையாளம் கண்டு, எங்களை கௌரவிப்பதற்கு நன்றிகள்! இன் னும், பல துறைகளில் எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர் களையும் தமிழ்நெஞ்சம் இனம்கண்டு ஊக்குவிக்கத் தவறாது என நம்புகிறேன். மேலும் இதழ் சிறப்பாக வளர்ந்திட வாழ்த்துகள். நன்றி!
நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின்
5 Comments
Selvakumarik041 · ஜூலை 31, 2020 at 14 h 06 min
நேர்காணல் சிறப்பு
ramalingam velmurugan · ஜூலை 31, 2020 at 14 h 06 min
மிக அருமையான நேர்முகம்
இனிய வாழ்த்துகள்
பட்டுக்கோட்டை பாலு. · ஜூலை 31, 2020 at 14 h 18 min
வாழ்வில்..அர்ப்பணிப்போடு செய்யும் தொழிலுக்கு விமர்சனமும் பாரட்டும் கிடைப்பது என்பது…மிகவும் அத் தொழிலை இன்னும் வேகத்தோடு..விருப்பத்தோடு..விவேகத்தோடு செய்வதற்கு வலுவூட்டும் என்பதில் ஐயமில்லை.அந்த வகையில். தமிழ்நெஞ்சம் ஒரு சிறப்பான நேர்காணலை எங்களின் கண்களின் பார்வைக்கு தந்தது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று .
தமிழ் நெஞ்சத்தின் ஆசிரியர் அமின் அவர்களுக்கும்,ஓவியர் அருண் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
Geetha M · ஜூலை 31, 2020 at 14 h 19 min
அருமையான நேர்காணல் ஓவியங்கள் தத்ரூபமாக இருந்தது மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வதிலை பிரதாபன் · ஜூலை 31, 2020 at 18 h 10 min
அருமையான பேட்டி.
திறனாளரைக் கண்டறிந்து அறியாதோரையும் அறியவைக்கும் சிறப்புமிகு பணி.
ஓவியரும் போற்றப்படக்கூடியவர்.
அவரை வெளிக் கொணர்ந்த தங்களது தமிழ்நெஞ்சம் இதழ் தாயுள்ளம் கொண்டது என்பதனை மகிழ்வோடு உணர்கின்றேன்.
தங்களது பணிகள் தொய்வின்றித் தொடர இனிய வாழ்த்துகள்.