ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.
உயர்ந்த பாறை
ஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்
கடலலைகள்.

 04.
காலை வெயில்
யன்னல் திரையில் ஆடும்
பூனையின் நிழல்.

 05.
குறி வைக்கும் கவண்
சட்டென நகர்ந்து மறையும்
மாலைச் சூரியன்.

06.
இலையுதிர்க்காலம்
மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்
கொக்குக் கூட்டம்.

07.
கொட்டும் அருவி
கற்பாறையில் துவைக்கப் படும்
பௌர்ணமி நிலவு

08.
குளக்கரையில் முதியவர்
கூடவே நடை பயிலும்
ஒற்றை நாரை.

09.
ஆற்றோரத் தென்னை
அங்குமிங்குமாய் நடை பயிலும்
தென்னங்கீற்றின் நிழல்.

10.
கொள்ளை போன மணல்
தேடி ஊருக்குள் வரும்
காட்டாற்று வெள்ளம்

11.
உதிரும் பூ
விழாமல் தாங்கிப் பிடிக்கும்
சிலந்திவலை.

12.
பூசாரியை முந்திச் சென்று
கர்ப்பக்கிரகத்துள் நுழையும்
காலை வெயில்.

13.
மரத்தடியில் கைம்பெண்
பூவைத்துப் பொட்டிட்டுச் செல்லும்
வீசிய காற்று.

 14.
பௌர்ணமி இரவு
அலையோடு  சேர்ந்தே கரைபுரளும்
பின்னிரவின் நிலவொளி.

15.
ஊர் சுற்றிப் பார்த்து/
தன் ஆயுள் முடிக்கும்
நீர்க்குமிழி.

16.
எங்கிருந்து புறப்பட்டதோ
ஊர் சுற்றிப் பார்க்கும்
வண்ண நீர்க்குமிழி.

17.
கொதிக்கும் உலை
கீற்றிடை விழுந்து வேகும்
சூரியன்.

18.
கரையில் நெருப்பு
அச்சமின்றி  ஊடறுத்துச் செல்லும்
குளத்து மீன்.

19.
வீசிய தூண்டில்
ஏரியெங்கும் வண்ணங்களைப் பரப்பும்
மாலைச் சூரியன்.

20.
அவசர நகர்வு
நின்று ரகசியம் பேசும்
எறும்புக் கூட்டம்..