ஜூலை 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!


கோவை ஞானி போன்றோர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமையும் மகிழ்வும் தருகின்றது. ஆம்!, ஞானி, வேந்தவாம், பண்பாளர், அன்பாளர், நட்பாளர், நற்சிந்தனையாளர், தன்னம்பிக்கை நெஞ்சினர், மனித நேயர், இதழியலாளர் எனப் பன்முகச் சிறப்பினர்! எத்தகைய சிறியவரிடமும் தமக்குத் தெரியாத ஏதேனும் இருக்கும் எனக் கொண்டு் அவர்களிடம் கற்றுக் கொள்ளத் தயங்காதவர்.

1982 ஆம் ஆண்டு இயற்கை இவருடைய கண்களைப் பறித்துக் கொண்டது! அதனால் மனமுடைந்து ஒதுங்கி விடாமல், பார்வை இல்லாதது நல்லதே எனக் கூறும் ஞானி எண்ணற்ற, பல்துறை நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது என்று வியப்பில் ஆழ்த்துகிறார்.

மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், தமிழ்த்தேசியம், பெண்ணியம், கவிதையியல், அரசியல் குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் பெருநூல்கள் பல ஐம்பதுக்கும் மேல் எழுதி உள்ளார்! வானம்பாடி இயக்கத்தின் தூண்களுள் ஒருவரான இவர் ‘‘நிகழ்’’, ‘‘பரிமாணம்’’, ‘‘புதிய தலைமுறை’’, ‘‘தமிழ் நேயம்’’ முதலிய சிற்றிதழ்களின் ஆசிரியர்; சிறந்த பேச்சாளர்.

இன்னும் எண்ணற்ற பல சிறப்புகளைக் கொண்ட இவரே கூறுவது போல் அவரது நெஞ்சுக்கு நெருக்கமானவர்களுள் நானும் ஒருவரானது எப்படி? நினைத்துப் பார்க்கின்றேன்!

2004 ஆம் ஆண்டு கல்லூரிப் பேராசிரியப் பணி நிறைவுற்றபின் எஞ்சிய நாட்களை எவ்வாறு கடத்துவது என்ற சிந்தனையில் சிக்குண்டிருந்தேன்! கற்பித்தலும், படிப்பதும், எழுதுவதுமே என் பொழுது போக்கு! நூலகங்களுக்குச் சென்று புதுப்புது நூல்களைத் தேடிப் படிப்பதற்கு உடல் நலம் ஒத்துழைக்கவில்லை!

ஒருநாள் தமிழ் நேயம் இதழ் நடத்தும் மகளிருக்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பை நாளிதழ் ஒன்றில் கண்டு கதை ஒன்றை அனுப்பினேன்! அதற்குப் பரிசு கிடைத்தது.

நன்றி சொல்லி மடல் எழுத அப்படியே எங்களிடையே மடல் தொடர்பு ஏற்பட்டு இன்று வரை தொடர்கின்றது.

என் எழுத்தும், நடையும், கருத்தும் அவருக்கு ஏனோ பிடித்துப் போய்விட்டன. எனக்குள் இருந்த ஆய்வுத்தேடலை உணர்ந்த அவர் இடைவிடாத மடல்களாலும், அச்சு மணம்மாறாத புதிய புதிய பல துறை நூல்களாலும் செம்மை செய்து நெறிப்படுத்தினார். அவர் எழுத விரும்பிய நூல்களை என்னை எழுத வைத்தார். கால் ஆய்வு நூல்கள் புதிய பார்வையில் எழுதினேன்!

அவரை நேரில் பார்க்க விரும்பி என் தந்தையுடன் கோவை சென்றேன்! வாசலில் காத்திருந்து வரவேற்றார். வீடா? புத்தகக் காடா? என வியக்கும்படி எங்குப் பார்த்தாலும் புத்தகங்கள்! புத்தகங்கள்! தமிழக, இந்தியப் படைப்பாளர், வெளிநாடு வாழ் தமிழர்கள் அவரின் அணிந்துரை, கருத்துரைக்காகவும், அன்பளிப்பாகவும் அனுப்பியவையும் அவரே வாங்கிக் குவித்தவையும் அவை! அவருடைய இணையரின் விருந்தோம்பலுடன் அன்றைய நிகழ்வு முடிந்தது!

90 வயதிலிருந்த என்தந்தையை அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு வலியுறுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய இணையர்கடும்நோய்வாய்ப்பட்டு மறைந்த பின்னர் சூழ்ந்த வெறுமையையும், தனிமையையும் எதிர் கொண்டு தம் உதவியாளர் துணையுடன் படிப்பதைத் தொடர்ந்தார். உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் வந்த வண்ணமிருக்கும் நண்பர்களோடு எப்போதும் உரையாடல்!

இளவயதில் நக்சல்பாரியாகத் துடிப்புடன் இயங்கியவர் முதுமையாலும், மனக் கவலையாலும் வருத்தும் நோய்களாலும் நடைப்பயிற்சி, ஆய்வரங்கம், கருத்தரங்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாமற்போனது! எனினும் படிப்பதையும், இதழ்களுக்கு எழுதுவதையும் தொடர்ந்தார்! பல நாடுகளிலும் வாழும் தமிழ் அன்பர்கள், ஆய்வாளர்கள் அவரை வந்து பார்த்த வண்ணம் இருப்பார்கள்! நண்பர்களை எதற்காகவும் யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார். இரண்டாவது முறையாகச் சந்தித்த போது அவருடைய இணையர் இல்லை! சென்னையில் அவர் மருத்துவ மனையிலிருந்த போதுகூட எனக்கு மடல் எழுதுவார்.

தொல்காப்பிய இலக்கிய மரபே இன்றுவரை தொடர்கின்றது என்பது அவர் கருத்து! இதனை அரண்செய்யும் வகையில் என்னை நூல் எழுதுமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே நானும் தொல்காப்பியம் முதல் இன்றைய புதுக் கவிதை வரை அதே மரபு தொடர்வதை ‘‘தமிழ் இலக்கியம் மரபும் புதுமையும்’’ எனும் நூல் எழுதினேன்! மிகவும் மகிழ்ந்தார்

இதுவரையிலான இலக்கிய வரலாற்று நூல்கள் நூல்களின் பட்டியல், ஆசிரியர் சிறப்பு என்றே உள்ளன.

எனவே இலக்கியங்களின் வரலாறும் இலக்கியங்களின் வழி வரலாறும் எழுதுவது தமிழின் தேவை என்று கூறி நான் அதை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இரண்டு ஆண்டுகள் முயன்று எழுதினேன்! ஒவ்வோர் இயலையும் படித்துத் திருத்தம், மாற்றம் செய்து உடனுக்கு உடனே தூதஞ்சலில் அனுப்பி விடுவார்.

‘‘படைப்பிலக்கியப் பார்வையில் தமிழ் இலக்கிய வரலாறு’’ எனும் இந்நூல் உடனடியாக மொழி பெயர்க்கப்பட்டு மேலை அறிஞரிடம் கொண்டு செல்லப் படவேண்டும் எனப் பேராசிரியர். மருத நாயகம் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழப் படைப்பாளர் எஸ்.பொன்னுத்துரை ஞானியின் உற்ற நண்பர். அவர் தன்னுடைய படைப்புகள் குறித்து எழுதுமாறு ஞானியைக் கேட்டுக் கொண்டார். தம்மால் எழுத இயலாத நிலையில் என்னைப் பரிந்துரைத்தார்! அவருடைய அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கி ‘‘இலக்கியப் போராளி எஸ்.பொ.வின் படைப்பாளுமையும் பன்முகப் பார்வையும்’’, எனும் திறனாய்வு நூல் மலரந்தது.

நூல் வரைவை. எஸ்.பொ. படித்தபோது என் கையெழுத்தை அவரால் படிக்க இயலவில்லை! ஈழப்போரின் தாக்கத்தால் உடல் நலம் குன்றிய எனக்கு இரண்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப் பெற்றன!
இதனால் மேசைமீது தாளை வைத்து எழுத முடியாமற்போய் வயிற்றின் மேல் அட்டையை வைத்து எழுதநேரிட்டதால் அழகான என் கையெழுத்து சிதைந்து விட்டது.

ஞானிக்கும் எஸ்.பொ.வுக்கும் நண்பரான சித்தன் நூல் சிறப்பாக இருப்பதால் தான் படி எடுத்துத் தருவதாக வாங்கிச் சென்றார். பல திங்களாகியும் தரவில்லை; ஆளையும் கண்டு பிடிக்க முடியவில்லை!

மனம் வருந்திய ஞானி பெரிதும் முயன்று சென்னையில் எஸ்.பொ.வின் நண்பர் இளம்பிறை ரஹ்மானிடம் நூலின் படி இருப்பதாக அறிந்து பெற்றுத் தந்தார். நூலை விரும்பிய எஸ்.பொ. தானே தன் செலவில் வெளியிடுவதாகச் சொல்லி இருந்தார். இந்தச் சிக்கலால் அது இயலவில்லை அவரும் மறைந்து விடவே நானே வெளியிட்டேன்! ஆஸ்திரேலியாவில் உள்ள அன்னாரின் இணையர் 20நூற் படிகள் வாங்கிச் சென்றார்!.

ஒரு நூலை முடிக்கும் நிலையில் அடுத்த நூலுக்கான நூலுக்கு அச்சாரம் இட்டு விடுவார். கட்டாயப் படுத்த மாட்டார். ஆனால் மறுக்க இயலாத வண்ணைம் செய்யத் தூண்டுவது அவருடைய இயல்பான திறமை!

என்னுடைய வாழ்க்கைப் போராட்டம் தனி வகையிலானது. என்னைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர் ஆகையால் அதை வரலாற்றுப் புதினமாக எழுத வேண்டும் என ஓயாது அறிவுறுத்தினார்! பெண்ணியச் சிந்தனை என்னுள் பண்பட்ட முதிர்ச்சியை «நெஞ்சக் கதவை மெல்லத் திறந்து» எனும் ஒளிவு மறைவற்ற அந்நூல் கூறுவதை மனதாரப் பாராட்டினார்!

தமிழ் இலக்கியங்களைப் பற்றுக்கு அப்பால் வரலாற்று ஆய்வு நோக்குடன் படிப்பவர் ஞானி! புறநானூறுதான் தமிழரின் பேரிலக்கியமாகும்! தமிழுக்குப் பேரிலக்கியமாகக் கம்ப ராமாயணம் இருந்து விட்டுப் போகட்டும் என்பது அவரது கருத்து! இதனை வலுவாக என்னால் நிறுவ முடியும் என்பது அவர் நம்பிக்கை! அவரது இந்த நம்பிக்கையை என்னால் இயன்றவரை ‘‘புறநானூறு-தமிழரின் பேரிலக்கியம்’’ எனும் நூலில் நிறைவேற்றி உள்ளேன்.

ஈராயிரமாண்டுக் கவிதைகள் குறித்து அவர் எழுதி உள்ள 800 பக்க அளவிலான கவிதையியல் ஆய்வு நூலை அடிப்படையாக வைத்து ‘‘ஞானியின் கவிதை இயல் கொள்கைகள்’’ நூலை எழுதினேன். அவர், 15 ஆண்டுகளாக அவர் எனக்கு எழுதிய பல துறைக் கருத்துகளைச் சுருக்கி மறைந்து விட்ட மடல் எழுதும் கலையின் சிறப்பை நினைவு கூறும் வண்ணம் ’’நட்பிற் பெருந்தக்க யாவுள’’, எனும் நூலாக்கி மகிழ்ந்தேன் !

பின்னர் தமிழ் இலக்கிய வரலாற்றை இளந் தலைமுறை சுருக்கமாக அறிந்து கொள்ளும் வகையில் உரைக் கவிதையாக்க வேண்டும் என அவர் விரும்பிய வண்ணம் எழுதி அச்சாக்கத்தில் உள்ளது! (நடந்தாய் வாழி தமிழே)

பழந் தமிழ் இலக்கியங்களை அவற்றின் ஆழ அகலத்துடன் கற்றுணர்ந்த போதும் புத்திலக்கியங்களையும் வெகுவாக வர வேற்பவர்! நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதி உள்ள அவர் பார்வை இழப்புக்குப்பின் கவிதை எழுதி விட்டதாகச் சொல்லும்போது நம் மனம் வலிக்கின்றது.

சில கவிதைகளைத் தொகுத்து அதற்கு அணிந்துரை வழங்குமாறு கேட்டுக் கொண்ட அவரது பெருந்தன்மை போற்றுதற்குரிய ஒன்று. அந்நூலைப் புதுப்புனல் வெளியிட்டுள்ளது!

தமிழ் பக்தியின் மொழி எனக் கூறப்படுகிறது. ஞானி இதை மறுத்துத் தமிழ் கவிதையின் மொழியே என்பார். தனது இந்தக் கருத்தை அரண் செய்து எழுதுமாறு கூறி உள்ளார். எழுதிக் கொண்டிருக்கின்றேன் !

சங்க இலக்கியம் பற்றிய அறிமுகம் காலத்தின் கட்டாயத்தேவை என்பது உணர்ந்து தம் மகன் மூலம் பதிப்பிக்க வேண்டும் என்கிறார்! அதை நான் எழுத வேண்டும் என்பது அவரது மனமார்ந்த விருப்பம்! அது தொடங்கிய நிலையில் உள்ளது. விரைந்து முடித்து அவர். கைகளில் தர வேண்டும்!

தனி மனித வரலாறே சமுதாய வரலாறு .ஆகையால் என் தந்தை ஞானி கேட்டுக் கொண்ட வண்ணம் எழுதத்தொடங்கிய நிலையில் (2017) மறைந்து விட்டார்! அவர் தொடங்கி உள்ளதை நான் சுருக்கமாக முடித்துள்ளேன்.

ஞானியின் வரலாற்றை எழுத நான் அனுமதி கேட்ட போது தன்னைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை என்று மறுத்து விட்டார்! பல அறிஞர்களின் நூல்கள், ஆய்வுகள் விருதுகள், பட்டங்கள் அவருடைய வாழ் நாள் அருஞ் செயல்களை ஆவணங்களாக்கி உள்ளேன்

என் தமிழ்ப் பணிகளை ‘‘நானும் என் தமிழும்’’ எனும் தலைப்பில் தமிழ் நேயம் முதல் இதழாக்கித் தொடர்ந்து பல அறிஞர்களை எழுத வைத்தார்! சில காரணங்களால் அவ்விதழைப் பெரு வருத்தத்துடன் நிறுத்த நேர்ந்தது.

பலருக்கும் அறிமுகப்படுத்திப் புதிய புதிய நூல்கள் அனுப்பி ஆய்வுரை, கருத்துரைகள் எழுத வைப்பதே அவருடைய நட்பின் சிறப்பு! எனினும் என் அளவிலான இந்த அரிய நூல்கள் உரிய வகையில் அறிமுகமாகவில்லை என்பது அவரது வருத்தம்

ஆயிரக்கணக்கான நூல்கள், கவிதை கள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பிழிவுகள், சொற் பெருக்குகள், நண்பர்கள், மாணவர்கள் என அறிவும் அன்பும் நிறைந்த வாழ்வினர்! உடற் குறையுடன் இவர் போல் வாழ்வாங்கு வாழும் அறிஞர் இனி அரிது! எல்லா இதழ்களிலும் என்னை எழுத வைத்த பேரன்பினர்.!

என் ஆய்வுப் பார்வையை ஆழமாக்கி அகலப்படுத்தியவர்.

இப்போது எல்லாம் துறந்து எதுவும் இயலாமல் தான் பல்லாண்டுக் காலம் பற்றுடன் கற்றுத் துய்த்த தமிழ் மெய்யியலுக்கு எடுத்துக்காட்டாகப் பல நலிவுகளுடன் நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளார். தந்தை, ஆசிரியர், தோழர் என்ற உறவுகளுக்கு அப்பாற்பட்ட உறவுடையர்.

தான் நிறுத்த நேர்ந்த எனக்கான நூலாக்கத் துணையை வ.ஆரூர் தமிழ் நாடனிடம் மடை மாற்றி உள்ளார்! ஒரு கதவு அடைக்க நேர்ந்தால் மற்றொரு கதவு திறக்கும் தானே?

விரைவில் மீண்டு தமிழ்த் தேசியம் மலரக் காண்பார்!

ஆம்! அதுவே அவரது மூச்சு! வாழ்த்த்துவோம் வாருங்கள்!

அவர் வாழ்வு தமிழின் வாழ்வே!


3 Comments

குடந்தை பரிபூரணன் · ஜூலை 4, 2019 at 13 h 55 min

தமிழ் நெஞ்சம் மின்னிதழ் அருமையாக வடிவமைக்கப் Uட்டுள்ளது.நன்னிலம் இளங்கோவனின் சிறுகதை நன்றாக இருந்தது. பாலமுருகனின் ஹைகூ கவிதைகள் அருமையாக இருந்தன..

மைதிலி ஸ்மபத், செகந்திராபாத்-15 · ஜூலை 4, 2019 at 14 h 04 min

“இதற்குமா நல்ல நாள்” என்ற எனது சிறுகதையை ஜூலை மாத இதழில் வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒரு பக்கக் கதைகளை அனுப்பலாமா?

LinkedIN Scraping · ஏப்ரல் 16, 2025 at 16 h 37 min

I’m really impressed along with your writing abilities as neatly as with the layout
in your blog. Is that this a paid theme or did you customize it
your self? Either way keep up the nice quality writing, it is rare to look a great weblog
like this one nowadays. Instagram Auto comment!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »